இஸ்லாம் கூறும் நாம் பேண மறந்த உறவுகள்.!

இஸ்லாம் எனும் பூரணமான மார்க்கத்தினை நாம் எல்லோரும் மனதார நம்பியிருக்கின்றோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , அவர்களது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்றாக உள்ளது. அவ்வாறு எமது ரஸூல் (ஸல்) அவர்கள் அயலவர்கள் உறவைப் பற்றி கூறவும் மறக்கவில்லை.

எல்லா மனிதர்களும் தங்களது தினசரி செயற்பாடுகளில் பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறார்கள். அவ்வாறு மிகவும் முக்கியமான உறவுதான் எமது அண்டை வீட்டாரின் அற்புதம் மிக்க உறவு. எமக்கு மிகச்சிறந்த நெருங்கிய சொந்தங்கள் பல்லாயிரம் இருந்தாலும், எமது அயலவர்களே எம்மை அண்டி வாழ்பவர்கள். அவசரத் தேவைகளுக்கு அவர்களே உதவுவார்கள்.

அதுபோன்றே, அயலவர்கள் மட்டுமே அயராது எப்பொழுதும் எமது அனைத்து கஷ்ட, நஷ்டங்களிலும் பங்கு கொள்வார்கள். இவ்வாறான அண்டை வீட்டாரைப்பற்றி இஸ்லாம் மிகவும் அழகாகவும் கண்ணியமாகவும் கூறியுள்ளது.

அயலவர்கள் பற்றி அல்குர்ஆன் கூறுகையில்:

“மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.” (அந்-நிஸா-36)

இந்த அல்-குர்ஆன் வசனம் அண்டை வீட்டாருக்கு நல்லுதவி செய்யுமாறு கூறுகிறது. அதனை நபி(ஸல்) அவர்கள் எமக்கு சிறந்த வழி முறைகளில் அவருடைய வாழ்வில் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.

“அபூ ஷுறைஹ் அல் குஷாயி ( ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் தனது அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்” (புஹாரி, முஸ்ஸிம்).


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அண்டை வீட்டாருடன் சிறந்த முறையில் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். 
அவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்ளவும் எம்மைப் பணித்துள்ளார்கள்.

இருந்தும், இக்கால எமது சமூகத்தவர் முன் சென்ற காலத்தில் வாழ்ந்த அறியாமை சமூகம் போல் அற்பமான காரணங்களுக்காக இவ் அற்புத உறவினைக் கொச்சைப்படுத்துகின்றனர். தனது அயலவர்களுடன் கேவலமான முறையில் நடந்து கொள்கிறார்கள். தனது பக்கத்து வீட்டு மரத்திலிருந்து ஒரு சிறு இலை விழுந்தால் கூட சண்டை என்று கிளம்பி விடுகிறார்கள். சிறு குழந்தை சண்டைகளை கூட ஊதிப் பெரிது படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் சண்டையிட முடியுமோ அப்படியெல்லாம் சண்டையிடுகின்றார்கள்.

மற்றும் கேவலமான சினிமா பாடல்களை மிகுந்த சத்ததுடன் ஒலி பெருக்கியில் போட்டு அவர்களின் நிம்மதியையும் கெடுக்கிறார்கள், கழிவுகளையும், குப்பைகளையும் அவர்களின் வீட்டின் அருகில் போட்டு அவர்களின் சாபத்தை பெற்று கொள்கிறார்கள். கழிவு நீர் வடிந்து ஓடும் இடமாக அயலவர்களின் வளவுகளை பயன்படுத்துகிறார்கள். 
தமது வீட்டு புகை மற்றும் நெருப்புகளை அவர்களுக்கு தீங்கு செய்யும் வகையில் திருப்பி விடுகிறார்கள்.

ஏன் சகோத, சகோதரிகளே ! எமக்கு இவ்வாறான குறுகிய சிந்தனைகள் வருகிறது. அல்லாஹ்வும் , அல்லாஹ்வின் தூதரும் எமக்கு காட்டி தந்த வழிமுறை இதுதானா ? சிந்திபோம் ! இனிமேலாவது இவ்வாறான நோவினைகளில் இருந்து எமது அயலவர்களை காப்போம் இன்ஷா அல்லாஹ்.
நாம் யாருடன் சண்டையிடுகிறோம்? என் அன்பு சகோதர, சகோதரிகளே!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அண்டை வீட்டார் எனக்கு வாரிசாக ஆகிவிடுவார் என்று நான் எண்ணுமளவு அண்டை வீட்டார் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்கள் எனக்கு உபதேசம் செய்து கொண்டே இருந்தார்கள்” (புஹாரி, முஸ்லிம்)

அண்டை வீட்டுக்காரர்கள் என்றால் யார் என்பதை புரிந்து கொண்டு , அவர்களது சிறப்புக்களையும் அறிந்து கொண்டு, நாம் இந்த உறவை புதுப்பித்து கொள்ள வேண்டும்; மேலுள்ள ஹதீஸ் அதனையே தெளிவு படுத்துகின்றது. ஆனால் எமது சமூகம் அதனை மறந்ததன் விளைவாக அவர்களை கண்ணியப்படுத்த தவறி கைசேதப் பட்ட சமுதாயமாக மாறி வருகிறது.

உலகமயமாக்கம் விஞ்ஞான வளர்ச்சி எனக் கூறிக்கொண்டு லேப்டாப், மொபைல் போனுடன் மட்டுமே நாம் உறவாடி கொண்டிருக்கின்றோம். நவீன உலகம் என்று கூறிக்கொண்டு பேஸ்புக், வாட்சப் என்று ஏதோ உலகத்தில் ஒரு மூலையில் இருப்பவருடன் நாம் உறவு வைத்து கொண்டிருக்கிறோம், அவர்களது நலன்களை விசாரித்து கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்கள் அவர்கள் இணையத்தில் இல்லை என்றால் மனம் உடைந்து போகிறோம்.

ஆனால் அண்டை வீட்டாரின் சுகம், நலம் தெரியாமல் இருக்கிறோம். எமது அண்டை வீட்டில் என்ன சமையல் என்று தெரியாது, அவர்களிடம் நல்ல முறையில் உறவாடுவது கிடையாது. அவர்களுக்காக ஒரு சின்ன விடயத்தில் கூட விட்டு கொடுப்பது கிடையாது.

என் அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே ! சகோதரர்களே ! எமது பொக்கிஷமான அண்டை வீட்டு உறவினை அற்ப காரணங்களுக்காக புறக்கணித்து நடந்து கொள்ளாமல் எமது இறை தூதரின் வழியில் அவர்களை மதித்து நடக்க எம்மை நாமே தயாராக்கி கொள்வோம்.

அண்டை வீட்டாரின் உறவை சிறந்த முறையில் பேண சில இலகுவான வழிமுறைகள்:

01.அவர்களை கண்ணியப்படுத்துதல்

“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட ஒருவர் தன் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்” (புஹாரி, முஸ்லிம்)

02.அவர்களுடன் நல்ல வார்த்தை பிரயோகங்களை எப்போதும் பாவித்தல்.

“;அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்” (புஹாரி, முஸ்லிம்)

03. அவர்களுக்கு நோவினை, துன்பம் தரும் வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளாமல் இருத்தல்.

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் தன் அண்டை வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம்” (புஹாரி, முஸ்லிம்)

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் முஃமினல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் முஃமினல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் முஃமின் அல்ல” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம்: “இறைத்தூதர் அவர்களே! எவர்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு எவனது தீங்கிலிருந்து அவனது அண்டை வீட்டான்பா துகாக்கப்படவில்லையோ அவன் தான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றைய அறிவிப்பில் “தன் தீங்கிலிருந்து அண்டை வீட்டானைப் பாதுகாக்காதிருப்பவன் சுவனம் நுழையமாட்டான்”

04. நாம் விரும்புவதை எமது அண்டைவீட்டாருக்கும் விரும்புதல்

“தனக்கு விருப்பமானதை தனது சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் முஃமினாகமாட்டார்” (புஹாரி, முஸ்லிம்).

05. அவர்களுக்கு சிறந்த அன்பளிப்புகளை வழங்குதல்

அன்பளிப்பு என்றாலே எமது சமூகம் தவறாக புரிந்து வைத்திருக்கிறது. திருமணம், சுகயீனம் மற்றும் ஏனைய இவ்வாறான முக்கியமான நிகழ்வுகளை மையமாக வைத்து எதிர் பார்ப்போடு எம் சமூகம் காலம் காலமாக இதனை செய்து வருகின்றது. இவ்வாறான நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என்று நாம் இங்கு கூறவறவில்லை தாராளமாக நீங்கள் வழங்கலாம்; ஆனால் அவ்வாறு கொடுக்கும் பொது அவர்கள் திருப்பித்தர வேண்டும் என்ற ஒரு சிறிய எதிர்பார்ப்பு கூட அந்த அன்பளிப்பில் வந்து விட கூடாது, அவ்வாறு அது வந்து விட்டது என்றால் நாய் வாந்தி எடுத்ததை மீண்டும் சாப்பிட்டதை போன்றாகி விடும்.

எனவே, இங்கே நாம் குறிப்பிடும் அன்பளிப்பானது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் திருப் பொருத்ததோடு உங்களது அயலவர்களுக்கு தினந்தினம் நீங்கள் சமைக்கும் உணவுகளை கொடுத்து பரிமாறிக்கொள்வது, மற்றும் அவர்களின் குடும்ப நிலையை அறிந்து சிறு பண உதவிகளை அன்பளிப்பாக வழங்குதல் மற்றும் அவர்களின் வீட்டுக்கு தேவையான அவர்களிடம் இல்லாத சிறிய பொருட்களை அன்பளிப்பாக வழங்குதல்.
இதன் மூலமாக அயலவர் உறவு மாத்திரமல்லாமல் எமது ஏனைய நெருங்கிய உறவுகளும் பலமடையும்..

எனது அன்பான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! சிறந்த நன்மையான காரியங்களில் எவற்றை எல்லாம் நாம் செய்யலாமோ அவற்றை எல்லாம் மறவாது செய்து எமது அண்டை வீட்டு உறவை பேணிப் பாதுகாத்து கொள்வோம். அதுவே எம்மை அல்லாஹ்விடமும் சமுதாயத்திடமும் சிறந்த மனிதர்களாக அடையாளப் படுத்துவதற்கான சிறந்த திறவு கோல் ஆகும்.


                                                 மௌலவியா:- முஜீபா அஷ்ஷரயிய்யாஹ்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget