மைய்யவாடிக்குள் செருப்பணிந்து செல்லலாமா.?

ஜனாஸாக்களை எடுத்துக் கொண்டோ, அல்லது கப்ருகளை சந்திக்கும் நோக்கிலோ மைய்யவாடிகளுக்குள் செல்லும் போது செருப்பணிந்த நிலையில் உள்ளே செல்ல வேண்டுமா ? அல்லது செருப்புகளை கழட்டி வைத்து விட்டு மைய்யவாடிகளுக்குள் செல்ல வேண்டுமா ? என்பதை ஹதீஸை முன் வைத்து பார்ப்போம்.

ஒரு சாரார் செருப்பணிந்து செல்லலாம் என்றும், மற்றொரு சாரார் செருப்பணிந்து செல்லக் கூடாது என்றும், சொல்லி வருவதை காண்கிறோம்.
செருப்பணிந்து செல்லலாம்…
மைய்யவாடிக்குள் செருப்பணிந்து செல்லலாம் என்று சொல்லக் கூடியவர்கள் முன் வைக்கும் ஆதாரத்தை முதலில் பார்ப்போம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். 

அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான்.

அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி விளங்கியதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.'  அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி-1338, முஸ்லிம்-5505)

மைய்யவாடிக்குள் செருப்பணிந்து சென்றதினால் தான் அடக்கப்பட்ட மைய்யத்திற்கு நமது செருப்பு சத்தம் கேட்டுள்ளது. எனவே தாராளமாக செருப்பணிந்த நிலையில் மைய்யவாடிக்குள் போகலாம் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

செருப்பணிந்து செல்லக் கூடாது…
மைய்யவாடிக்குள் செல்லும் போது செருப்பை கழட்டி விட்டு தான் செல்ல வேண்டும் என்ற கருத்தை முன் வைக்க கூடியவர்கள் பின் வரும் ஹதீஸை முன் வைக்கிறார்கள். 

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அவர்கள் முஸ்லிம்களின் மண்ணறைகளுக்கு அருகில் வந்த போது இவர்கள் (உலகில் வாழும் போது) அதிகமான தீங்குகளை (சந்தித்து இப்போது நல்வாழ்வின் பால்) முந்திச் சென்று விட்டனர் என்று கூறினார்கள். பிறகு இணைவைப்பாளர்களின் மண்ணறைகளுக்கு அருகில் அவர்கள் வந்தபோது இவர்கள் (உலகில் வாழும் போது) அதிகமான நன்மைகளை (அடைந்து தற்போது தீய வாழ்வின் பால்) முந்திச் சென்று விட்டனர் என்று கூறினார்கள். 

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரைப் பார்க்க நேரிட்டது. அவர் செருப்பு அணிந்து கப்றுகளுக்கிடையே நடந்து சென்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடி களையப்பட்ட தோல் செருப்பு அணிந்திருப்பவரே! அதைக் கழற்றுவீராக! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: பஷீர் (ரழி) அவர்கள். (ஆதாரம் தபரானீ, நஸாயீ)

இந்த ஹதீஸின் அடிப்படையில் மைய்யவாடிக்குள் செல்பவர்கள் செருப்பணிந்து செல்லக் கூடாது என்று கூறி வருகிறார்கள். என்றாலும்
இந்த ஹதீஸில் “யா ஸாஹிபிஸ் ஸப்தியீன்” முடி களையப்பட்ட, தோல் செருப்பு அணிந்திருப்பவரே! என்று வந்துள்ளதால், பெருமதியான, உயர் ரக செருப்பு அணிந்தவர்களை தான் இந்த ஹதீஸ் குறிக்கும் மற்ற பெறுமதியற்ற செருப்புகளை அணிந்து கொண்டு செல்லலாம் என்று முதல் சாரார் பதில் சொல்கிறார்கள்.

இப்படி இரண்டு சாரார்களும் மாறி, மாறி தங்களது ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். இந்த இரண்டு ஹதீஸ்களை ஒன்றிணைத்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது. உயர் ரக செருப்பு அணிந்தவர்களை தான் இந்த ஹதீஸ் குறிக்கிறது என்றால், உயர் ரக செருப்பென்று எதை வைத்து நாம் மட்டிடுவது ?

அன்றைய காலத்தில் பதனிடப்பட்ட, முடி களைந்த வகை செருப்பு தான் உயர் ரகம். அந்த வகை செருப்பு அணிந்தவரை பார்த்து தான் நபியவர்கள் கூறினார்கள் என்றால், இன்றைய காலத்தில் எதை வைத்து உயர் ரக செருப்பு என்று சொல்வது ? அந்த நேரத்தில் அந்த தோழர் அந்த வகை செருப்பு அணிந்திருந்தார். எனவே அந்த செருப்பின் வகையின் பெயரை சொல்லி நபியவர்கள் தடை செய்கிறார்கள்.

இன்று ஒவ்வொரு வகை உயர் ரக செருப்பும் காலத்திற்கு காலம் வந்து கொண்டே இருக்கிறது.
உதாரணமாக 2018ல் உயர் ரக செருப்பை அறிமுகப்படுத்தி இருப்பார்கள். இப்போது இந்த உயர் ரக செருப்பை அணிந்து கொண்டு மைய்யவாடிக்குள் செல்லக் கூடாது என்றால்,இந்த வருடம் 2019ல் அதை விட மற்றொரு உயர் ரக செருப்பு வரும் இப்போது ஏற்கனவே உயர் ரக செருப்பாக இருந்தது, தரம் குறைந்த நிலைக்கு வந்து விடுகிறது.

அதே போல் எது உயர் ரக செருப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் காலத்திற்கு காலம் வந்து கொண்டே இருக்கிறது.
உயர் ரக செருப்பை தெரிவு செய்வதே பெரும் குழப்பமாகி விடும்.
எனவே இந்த இரண்டு ஹதீஸ்களையும் ஒன்றிணைத்து ஹதீஸ்கலை அறிஞர்களும், தற்கால அறிஞர்களும் பொருத்தமான விளக்கத்தை விளக்குகிறார்கள்.

அதாவது ஒரு ஹதீஸ் அனுமதியும், அடுத்த ஹதீஸ் தடையும் வந்துள்ளதால் எந்த ஹதீஸ் ஆரம்ப காலத்தில் சொல்லப்பட்டது, எந்த ஹதீஸ் பிறகு சொல்லப்பட்டது என்பது தெரியாததினாலும் பின் வரும் விளக்கத்தை தருகிறார்கள்.  

இன்று மைய்யவாடிகளுக்குள் செல்வதற்காக சிறு, சிறு பாதைகள் உள்ளே போடப்பட்டுள்ளன. எனவே அந்த பாதைகளில் செல்லும் போது, அவரவர் அணிந்திருக்கும் செருப்போடு உள்ளே செல்லலாம். அதாவது செருப்பை அணிந்த நிலையில் மைய்யத்தை தூக்கி கொண்டும், மைய்யத்திற்கு பின்னாலும், முன்னாலும் அந்த சிறிய பாதைகளில் செல்லலாம், ஆனால் மைய்யத்தை அடக்கும் கப்ருக்கு அருகில் செருப்போடு செல்லக் கூடாது.

அந்த சிறிய பாதையின் கடைசியில் கழட்டி வைத்து விட்டு செல்லலாம் என்ற விளக்கத்தை காணலாம். இந்த விளக்கம் இரண்டு ஹதீஸ்களுக்கும் முரண் படாமல் பொருத்தமாகவே உள்ளது. கப்ருகளுக்கு இடையில் செருப்பணிந்து செல்வதை தான் நபியவர்கள் தடை செய்கிறார்கள்.

எனவே கப்ருகளுக்கு இடையில் செருப்புகளோடு செல்லாமல், மைய்யவாடிகளுக்குள் இருக்கும் சிறு, சிறு, பாதைகளின் வழியே செருப்புகளோடு செல்லலாம் என்பதை விளங்கி நடந்து கொள்வோம்.

அதே போல் சில மைய்யவாடிகள் சிறு, சிறு பாதைகளின்றியும், கற்களும் முற்களும் உள்ள பகுதியாக இருந்தால் நிர்பந்தம் என்ற அடிப்படையில் செருப்பை இறுதி வரை அணிந்து செல்ல வேண்டி வரும்.
“அல்லாஹ் மிக அறிந்தவன்”.

                                                                                    மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget