கொடியேற்றுவோம் வாருங்கள்..!

உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்.” ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஐவேளை தொழுகையிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதிக்கொண்டிருக்கும் வாசகம் இது ...

அதாவது “ உன்னை மட்டும் தான் வணங்குவேன், வேறு யாரையும் வணக்கத்திற்கு தகுதியான இறைவனாக எடுத்துகொள்ளமாட்டேன் ; உன்னிடம் மட்டுமே உதவி தேடுவேன்; எனது எந்தத் தேவையையும் யாரிடமும் கேட்கமாட்டேன்” என்று எமது தொழுகையில் அல்லாஹ்விடம் வாக்களித்து விட்டு, இந்த மாதம் வந்தால் அதாவது கல்முனை கடற்கரைப் பள்ளி கொடியேற்றம் வந்தால் மட்டும் எதற்காக ஓடுகிறோம்.. ?

இத்தனை காலமும் செய்த எங்களின் அனைத்து அமல்களையும் அழித்துக்கொண்டு அல்லாஹ் வெறுத்த, பெரும் பாவம் எனக் கூறிய இணைவைப்பை அரங்கேற்ற அங்குள்ள கப்ரடிக்கு போகிறோம், நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் அவனுடைய திருமறையில் கூறும் போது: அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணைவைக்காதீர்கள் (நிசா: 36)
, ஈமான் கொண்டவர்களே! நீங்களும், உங்களுக்கு முன் இருந்தவர்களும் படைத்த இறைவனை வணகுங்கள் (பகரா : 21,22)
உனது இரட்சகனுக்காகவே தொழு, அவனுக்காகவே அறுத்துப் பலியிடு,
அவர்களே படைக்கப்பட்ட நிலையில் எதையும் படைக்க முடியாதவர்களையா அவர்கள் வணங்குகிறார்கள். (அல் அஃராப்: 191)

(குர்ஆனில் இன்னும் பல வசனங்கள் இதைப் பற்றியே கூறுகின்றன)
வணக்கத்தில் மிகப் பெரிய வகைதான் துஆ கேட்பது ; அறுத்துப் பலியிடுவது ; உதவி தேடுவது போன்றவை .இத்தகைய வணக்கங்களை கப்ரில் அடங்கப்பட்டவர்களிடம் சென்று செய் பவர்களே !!! சிந்திக்க வேண்டாமா ????

அவர்களும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களே; எங்களைப் போன்றே சாப்பிட்டார்கள், மலம்களித்தர்கள், எங்களைப் போன்றே தூங்கினார்கள், திருமணம் முடித்தார்கள், கவலைப் பட்டார்கள், சந்தோசப்பட்டார்கள், பிள்ளைகளைப் பெற்றார்கள், சந்தைக்குச் சென்றார்கள் இன்னும் பல. இப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி வணங்கப்பட முடியும்? இவர்கள் அவ்லியாக்களா ??? இல்லையா ??? என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த விடயம் .

இவர்களை விடவும் ஈமானாலும், வணக்கத்தாலும், குணத்தாலும் தூய்மையான; அவ்லியாக்கள் என்று அல்லாஹ்வால் முத்திரை குத்தப் பட்ட நபிமார்களே இவ்வாறு வணங்கப்படவில்லை, வணங்கப்படவும் முடியாது.(18:110), (23:33)

எனவே , எப்படிப்பட்ட அற்புதங்களும் இல்லாத, சாதரணமாக இறைவனுக்கு செலுத்த வேண்டிய சில கடமைகளைக் கூட செய்யாத, அவர்களையே இறைவனிடமிருந்து காப்பாறிக் கொள்ள முடியாத சில மரணித்த மனிதர்களை அவ்லியாக்கள் என்றும் மகான்கள் என்றும் வழிப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றால் எந்த வகையில் நியாயமாகும் சிந்தியுங்கள்!

எத்தனையோ அற்புதங்களை செய்த நபிமார்களை அழைத்து பிரார்த்திப்பதைக் கூட அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான். அப்படி பிரார்த்திக்க மார்க்கத்தில் இடமளிக்கப்பட்டால் முற்றிலும் தகுதியானவர்கள் நபிமார்கள் அல்லவா?

கல்முனை கொடியேற்றப் பள்ளியில் நடப்பது என்ன?
கப்ரில் அடக்கப் பட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் அவ்லியாவுக்கு கொடியேற்றி காணிக்கை செலுத்துதல்,( உண்மையில் அந்த இடத்தில் குறிக்கப் பட்ட அவ்லியாவின் உடலே இல்லை . மாறாக அவர் வந்து போன இடத்தை வைத்தே கப்ர் கட்டினார்கள் ) மாடு, ஆடு, கோழி போன்றவைகளை நேர்ச்சைப் பொருளாக செலுத்துதல், பாவாக்களின் கூத்துக்கும்மாளம், வெட்டுக்குத்து; ஆண், பெண் கலக்கப்பட்டதால் பல காதல் கோலாகலங்கள்.... இன்னும் பல அனாச்சாரங்கள் ...

முஸ்லீம்களின் அட்டகாசம் போதாததற்கு வேற்று மதத்தினரும் அழைக்கப்படுகின்றனர். இக் கொடியேற்ற நிகழ்வில் இறைவனுக்கு பொருத்தமான நிகழ்வு நடக்கிறதா? அனைத்தும் பெரும் பாவங்களில் உள்ளவைதான். இப்படியான சமூகச் சீர்கேட்டை வரவேற்கின்ற சில அறிவீனர்களும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இறைவனிடத்தில் கேட்கவேண்டிய பிரார்த்தனையை அவனுடைய படைப்புகளிடத்தில் கேட்பது, அவனுடைய படைப்புகளாகிய அவ்லியாக்கள், மகான்களிடத்தில் சென்று அவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது, அவர்களை இறைவனுடைய அந்தஸ்த்தில் புகழ்வது, அவர்களிடத்தில் பரகத் தேடுவது, இப்படி எதைச் செய்தாலும் அது இணைவைப்பையே சாரும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

எனவே , சில மனிதர்கள் தங்களின் சுயலாபத்தினை அடைவதற்கு எமது ஈமானை அடகுவைக்க அழைக்கிறார்கள் .. . சில மனிதர்களின் சுய லாபத்திற்காக எம்மவர்கள் தாங்கள் வாழ்நாள் பூராகவும் செய்த அமல்களை பலியாக்குகிரார்கள்.

மேலும் தங்கள் அலங்காரங்களை காட்ட வேண்டும் என்பதற்காக பெண்களும் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆண்களும் படையெடுத்து வந்து தம் வெட்க உணர்வை தொலைக்கிறார்கள் .
இவர்கள் எல்லோரும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் ஒரு எட்டு கூட நகரமுடியாது.

அவ்லியாக்களால் உங்களை காப்பாற்ற முடியுமா ?
அல்லாஹ் அனுமதிதவர்களுக்கே தவிர எந்த மனிதனுக்கும் எந்தப் பரிந்துரையும் மறுமையில் யாரும் செய்யமுடியாது. ஒருவரின் பிரார்த்தனைக்கு மரணித்த ஒருவர் பதிலளிக்கவும் முடியாது. இறுதி நபி முஹம்மத் (ஸல் ) அவர்கள் தான்; இனி நபியும் வரப் போவதில்லை . , வஹியும் இல்லை என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.

தன் மகனையும் மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை. தன் மகன் காணாமல் போவதை யஃகூப் நபியால் தடுக்க முடியவில்லை.. சிறைக்குச் செல்லாமல் யூசுப் நபியால் தன்னை காப்பாற்ற முடியவில்லை. அய்யூப் நபியால் தன்னை காப்பாற்ற முடிடவில்லை.யூனுஸ் நபி நினைத்தது நடக்கவுமில்லை,.லூத் நபியால் தன் மனைவியை காப்பாற்ற முடியவில்லை.

எந்த நபியாலும் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் போது கல்முனை கொடியேற்றப் பள்ளியில் அடக்கம் செய்யப்பட்ட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் அவ்லியாக்கு என்ன செய்ய முடியும்? சிந்தியுங்கள்!..

நேர்ச்சை இல்லாமல் செல்லலாமா?
எம்மில் பெரும்பாலானவர்கள் கூறும் காரணம் , “ நாங்கள் அங்கு நேர்ச்சை செய்வதற்கோ அறுத்துப் பலியிடவோ செல்லவில்லை, நாங்கள் வெறுமனே அங்கு நடக்கும் களியாட்டங்களை காண்பதற்கும் குழந்தைகளை சந்தோசப் படுத்துவதற்கும் ,பொருட்கள் வாங்குவதற்கும் தான் செல்கின்றோம். எங்களுக்கு எந்தப் பாவமும் கிடைக்காது தானே?

யார் கூறியது? உங்களை படைத்த அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
அல்லாஹ்வுடைய வசனங்களை அவற்றை நிராகரிக்கப்படுவதையோ அல்லது பரிகசிக்கப்படுவதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விசயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம் என நிச்சயமாக அவன் வேதத்தில் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றான். அவ்வாறு உட்கார்ந்தால் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான்........ (சூராஹ் அந்நிஸா – 140)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு பாவத்தைக் கண்டால் அதை அவருடைய கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் அவருடைய வாயால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் அவருடைய மனதால் வெறுக்கட்டும் அதுவே அவருடைய ஈமானின் மிகச் சிறிய நிலையாகும் .
( ஹதீஸ் ).

எனவே அங்கு நடக்கும் இணைவைப்பையும் அங்கெ அரங்கேறும் ஹராமான காரியங்களையும் நாம் பகிரங்கமாக பகிஸ்கரிப்பு செய்யவேண்டும். எம்மால் அங்கு செல்வோரை தடுக்க முடியாவிட்டாலும் ஆகக் குறைந்தது அங்கு செல்வதையும் செல்வோரையும் வெறுத்திருப்பதே ஈமானின் இறுதிக் கட்ட வெளிப்பாடாகும் .

இந்த பாவத்தைப் பார்க்கச் செல்வது ; அல்லது ஒரு பாவம் நடக்கும் இடத்தில் அறிந்து கொண்டே நாம் வேறு ஏதாவது காரியங்களை செய்யச் செல்வதும் ; இவை அனைத்துமே பாவமான காரியம். தண்டனையில் அவர்களும் நாங்களும் சமமானவர்கள் தான்.

எனவே கொடியேற்றப்படும் இக் காலங்களில் அந்தப் பகுதியில் நாம் செல்வதும், வெறும் பார்வைக்காகவோ, பொருள் வாங்கவோ செல்வதும் நாம் அதனை ஆதரிப்பதாகவே ஆகிவிடும் என்பதால் முற்றிலும் அதை தவிர்ந்து கொள்வதே நல்லது.

எனவே அங்கு நடக்கின்ற அத்தனை பாவத்திற்கும் அதை நடத்துபவர்கள், அதைச் சுற்றியிருப்பவர்கள், அங்கு செல்பவர்கள், அதைத் தடுக்காமல் கண்டு களிப்பவர்கள் அனைவரும் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகள்.

எனவே இந்த முஸ்லிம் சமூகம் ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ள வேண்டும்; நாம் இந்த உலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கம் அல்லாஹ் எமக்கருளிய அல்குர்ஆன் கூறும் ஏகத்துவக் கொடியை இந்த பூமியில் நிலை நாட்டவே அன்றி வேறில்லை.

எனவே இவ்வாறான குர்ஆன், ஹதீத் தடுக்கக்கூடிய பாவமான எந்தக் காரியமாக இருந்தாலும் எம் சமூகத்திலிருந்து அவை ஒழிந்து விட நாம் முற்று முழுதாக முயற்சிக்க வேண்டும் .

அல்லாஹ் இந்த முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பானாக!

                                                                                     மௌலவியா ஷர்மிளா ஷரஇயா

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget