கல்முனை கடற்கரை தர்ஹாவும் பறிபோகும் ஈமானும்

இலங்கையின் கிழக்கு மாகாணம் – கல்முனை கடற்கரையில் அமைந்துள்ள தர்ஹாவிலும் இந்துக்களின் கோயில்களிலும் உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள் இன்னும் ஒரு சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளன.
கல்முனை கடற்கரை தர்காவுக்கு ஏன் செல்ல கூடாது.
கல்முனை கடற்கரை தர்காவில் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டிய வணக்கங்களான நேர்ச்சை பிரார்த்தனை செய்தல் அறுத்துப்பலியிடுதல் உதவிதேடுதல் நோய் நிவாரணம் தேடுதல் போன்றவை அல்லாஹ் அல்லாத இறந்து மண்ணோடு மண்ணாகிப் போனவர்களிடம் செய்யப்படுகின்றன. இது முழுக்க முழுக்க குறைசிக் காபிர்களின் கொள்கைகளை ஒத்ததாகும்.
இஸ்லாத்தில் பிரார்த்தனையின் போதோ ஸியாரத்தின் போதோ ஊதுபத்தி பழம் தேங்காய் சர்க்கரை பூ படையல்களுக்கு எந்த வேலைகளும் கிடையாது. இந்துக்களின் மத அனுஸ்டானங்களின் போதுதான் இவைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இது யாருடைய கலாச்சாரமென நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
நபிமார்களின் கப்ர்களை கூட வணக்கஸ்தலங்களாக ஆக்க முடியாது:
‘தங்கள் நபிமார்களின் அடக்கஸ்த்தலங்களை வணக்கஸ்த்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும் கிறிஸ்த்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரிரி 436 437)
நபிமார்களின் கப்ர்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களையே அல்லாஹ் சபிக்கின்றான் என்றால் முகவரியற்ற இவ் அவ்லியாக்கள் எம்மாத்திரம்? எனவே சபிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுகின்ற இடத்திற்கு ஒரு இறைவிசுவாசி செல்லமாட்டான்.
படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்று கூடும் தளமே தர்ஹா
‘அறிந்து கொள்ளுங்கள்! மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ (அறிவிப்பவர் : அபூ உபைதா (ரலி) நூல் : அஹ்மத் -16781)
நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்களே படைப்பினங்களில் மோசமானவர்கள் என்றால் முகவரியற்ற அவ்லியாக்களுக்குப் பின்னால் செல்பவர்களை என்னவென்று சொல்வது?
தரைமட்டமாக்க வேண்டிய தர்ஹாக்கள்
‘அலி (ரலி) அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனை தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் அல் அஸதி நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1609)
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.’ (அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி) நூல்: அஹ்மத் -22834)
பிரார்த்தனை தான் வணக்கம்
‘பிரார்த்தனை தான் வணக்கமாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூற்கள்: அஹ்மத் திர்மீதி அபூதாவூத்)
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்க ‘பிரார்த்தனை’ என்கின்ற வணக்கம் கல்முனை தர்ஹாவில் அல்லாஹ் அல்லாதோரிடம் நிறைவேற்றப்படுகின்றது. அல்லாஹ்வை மட்டும் வணங்கும் முஸ்லிம் அல்லாஹ்வின் வசனம் கேலிசெய்யப்படும் இந்த தர்ஹாக்களுக்கு செல்லமாட்டான்
பதில்தரமுடியாத தர்ஹா அவ்லியா
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன் 7:194)
தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1610)
செவியேற்காத தர்ஹா அவ்லியா
‘அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே; அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தித்து அழைக்கின்றீர்களோ அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்து அழைத்தாலும் அவர்கள் உங்கள் பிரார்த்தனையை அழைப்பைச் செவியேற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 35:13இ14)
தீங்கை தடுக்க முடியாத தர்ஹா அவ்லியா
‘வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: ‘அல்லாஹ் தான்!’ என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: ‘அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?’ (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம் அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.’ (அல்குர்ஆன் 39:38)
அவகாசம் தேவையற்ற அல்லாஹ்
‘அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து எனக்குத் தீங்கு செய்திட சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்’ என்று.’ (அல்குர்ஆன் 7:195)
தமக்கு தாமே உதவி செய்ய முடியாத அவ்லியாக்கள்
‘அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.’ (அல்குர்ஆன் 7:192)
பதில்தர முடியாத அவ்லியாக்கள்
‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!’ (அல்குர்ஆன் 7:194)
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அவ்லியாக்கள்
‘எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும் அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!’ (அல்குர்ஆன் 7:191)
முயற்சி வீணாக்கப்பட்ட அவ்லியா பக்தர்கள்
‘நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களைத் தம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். ‘(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று (நபியே!) நீர் கேட்பீராக! யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்’ (அல்குர்ஆன் 18:102-104)
அவ்லியாக்களை வணங்கவில்லை என்று கூறும் பொய்யர்கள்
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க வழிபாடு யாவும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 39:03)
நன்மை தீமை செய்ய முடியாத தர்ஹா அவ்லியாக்கள்
‘தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள் ‘இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை’ என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்’ என்று கூறும்.’ (அல்குர்ஆன் 10:18)
வணக்கஸ்த்தலமாக்கப்படாத அடக்கஸ்த்தலம்
‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் அவர்களது கப்ர் பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றிருந்தால் நமது தர்ஹா பக்தர்கள் அன்னாரது கப்ரடியிலும் 12 நாட்கள் மௌலீது வைபவம் நடாத்தி ஊதுபத்தி பழம் தேங்காய் சகிதம் அபிசேகம் செய்திருப்பார்கள். அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்.
ஈ பறித்ததை மீட்க முடியாத தர்ஹா அவ்லியா
‘மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும் தேடப்படுவோனும் பலஹீனர்களே!’ (அல்குர்ஆன் 22:73)
பரிந்துரை செய்யமுடியாத தர்ஹா அவ்லியாக்கள்
‘அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைத் தங்களுக்குப் பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ‘அவை எந்த சக்தியையும் அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று.) ‘பரிந்து பேசுதல் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:43-44)
மரணித்துவிட்ட படைப்பினமே தர்ஹா அவ்லியாக்கள்
‘அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களால் பிரார்த்திக்கப்படுபவர் களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன – மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 16:20-22)
தர்ஹா அவ்லியாக்களும் அல்லாஹ்வின் அடிமைகளே!
‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!’ (அல்குர்ஆன் 07:194)
அவ்லியாக்களை அழைத்துப் பிராத்திக்காதீர்!
‘உமக்கு (எவ்வித) நன்மையையோ தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். (அல்குர்ஆன் 10:106)
உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்
‘நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 46:04)
கியாமத் நாள் வரை பதிலளிக்காத தர்ஹா அவ்லியாக்கள்
‘கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.’ (அல்குர்ஆன் 46:05)
நரகத்தை தங்குமிடாக பெறும் தர்ஹா வழிபாட்டாளர்கள்
‘நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களைத் தம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 18:102)
சுருக்கமாக சொல்லப் போனால் இந்துக்கள் சிலையை நிறுத்தி வைத்து வணங்க இவர்கள் சமாதியை படுக்க வைத்து வணங்குகின்றார்கள்.
அங்கே சிலைக்கு பட்டுத்துணி போர்த்த இவர்கள் இங்கு சமாதிக்கு பட்டுத்துணி போர்த்துகின்றார்கள்.
அங்கே பூமாலை ஊதுபத்தி ஆராதனை நடக்க இங்கும் பூமாலை ஊதுபத்தி ஆராதனை நடக்கின்றது.
அங்கேயும் குத்து விளக்கில் எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது. இங்கேயும் எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது.
அங்கே சிலைக்கு முன் செய்யப்படுகின்ற சாஷ்டாங்கம் அபிஷேகம் இங்கே கப்ருக்கு முன் செய்யப்படுகின்றது.
அங்கே பக்திப் பாடல்கள் இங்கே மவ்லீதுப் பாடல்கள்
அங்கே கோயில் தொட்டிலில் குழந்தை இங்கே அவ்லியா கப்ரின்மீது குழந்தை
இவர்களுக்கிடையில் எவ்வளவுதான் ஒற்றுமை
இதோ அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் இறுதி எச்சரிக்கைகள்
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.’ (அல்குர்ஆன் 4:48 )
‘எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான் மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும் அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.’ (அல்குர்ஆன் 5:72 )
‘அன்றியும் உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால் ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால் உம் நன்மைகள் (யாவும்) அழிந்து நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்).’ (அல்குர்ஆன் 39:65)
‘யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனைச் சந்திக்கிராறோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராகச் சந்திக்கின்றாரோ அவர் நரகம் புகுவார். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஆதாரம்: புஹாரி-1238)
                                                                                 SLM அர்ஷாத் காத்தான்குடி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget