March 2019

நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்வையே சதமென மதித்து, தன் இச்சைகளையே பின்பற்றினான். அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கை தொங்க விடுகிறது அல்லது அதை விட்டு விட்டாலும் நாக்கை தொங்க விடுகிறது. இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணம் ஆகிறது. ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெரும் பொருட்டு இத்தகைய வரலாறுகளை கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:175,176)

                                            மௌலவி றஸ்மி மூஸா ஸலபி 

ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத்தக்ககதாகும். வழிப்பபறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ஊர் முக்கியஸ்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)

                                                           மௌலவி  அப்துல் அஸீஸ் சஹ்வி

கல்வி பற்றிய குர்ஆன் வசனங்கள் ஓரிரண்டை சொல்லி நபி மொழிகளில் சிலவற்றை எடுத்தியம் புவதோடு இஸ்லாத்திற்கும் கல்விக்குமுள்ள சம்பந்தத்தை முடித்துவிட்டு எச்சமாக அவர்கள் விதைப்பதெல்லாம் சடவாத க்ரொமோசோம்களை தாங்கிய செல்களைத்தான். படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு ஒரு வரியிலும் ஞாபகப்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதைக்கொள்கையாக வைத்திருக்கும் கல்வியால் இந்த சமூகம் ஒருபொழுதும் எழுச்சி பெறப் போவதில்லை என்பதை இது போன்ற ஆர்வலர்கள் கணக்கில் கூட எடுப்பதில்லை.

                                                                மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ 

குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும். (அல்குர்ஆன் 104:1-9)

                                       மௌலவி முர்ஸீத் அப்பாஸி 

மரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயம் வந்தே தீரும். அது உங்களை இதோ நெருங்கி விட்டது. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும், இறுதித் தீர்ப்புநாளில்தான், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.  (சூரா ஆல இம்ரான் 3:185)

                                                மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ 

ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” என கூறுவோம். யாருடைய மையத்தாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.
இஸ்லாத்தின் பார்வையில் இதில் தடையிருப்பதாக தெரியவில்லை. “யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸை காரணம் காட்டி தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.
யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபி மானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச் சூழலில் பிரேதப் பரிசோதனைக்காக மையத்தின் உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோனை செய்வது என்பது வீணாக உறுப்புக்களை வெட்டி வீசுவதற்கல்ல.
இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை முறை தேவையில்லை என்றும் அது மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். சிலநேரம் மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த விடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும்தவறாகும்.
இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.
பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்துக் கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.
இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸிஸேரியன்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள். இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகளை மனிதனின் நலன் கருதி செய்யப்படுகிறன.
நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும்போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பது தவறான வாதமாகும்.
                                                                                                          அஷ்சேஹ்  இம்தியாஸ் ஸலபி

ஷீஆயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். அது ஒரு தனியான (யூதக் கொள்கைகளைக் கொண்ட) மதம் என்று கூட சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷீஆக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷீஆக்களின் நம்பிக்கை.

ஷீஆக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு நேர் மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷீஆக்கள் புனிதமாகப் போற்றும் அவர்களின் மத நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.

"தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.
(அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238)

ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு,ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்களாம். (அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226)

"நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
(அல் உஸூலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261)

"உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்களாம். (அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27)

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது "முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்களாம். (தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404)

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள்.
(அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197)

அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று இமாம் பாகிர் கூறினார்களாம். (காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837)

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷீஆக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.
(கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245)

அபூபக்ரும், உமரும், அலீ (அலை) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
(கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246)

(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர். (கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 296)

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
(கிதாபுஷ்ஷீஆ வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு)

அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷீஆக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவை தவிர ஷீஆக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷீஆக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.

ஷீஆக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
(அல் உஸுலு மினல் காபி பக்கம் 258)

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம். (அல் உஸுலுமினல் காபி பக்கம் 398)
 

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம். (அல் உஸுலுமினல் காபி பக்கம் 402)

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர்.
(குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146)

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்திஹா நாயகர்) "வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்களாம்.
(அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261)
 

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்களாம் 
(கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470)

"யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி)யைப் பற்றி கூறினானாம்.
(பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23)

அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீஆக்கள். அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் "வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
(தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172)

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார். (தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108)

இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷீஆக்கள். ஷீஆக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இங்கு பக்கங்கள் போதாது. அந்த அளவுக்கு இவர்களிடம் மூட நம்பிக்கைகளும் யூதக் கொள்கைகளும் நிறைந்து கிடக்கின்றன. இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

சுபஹ் தொழுகையில் வழமையாக ஓதப்படும் குனூத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே ராஜிஹான (வலுவான) கருத்தாகும். பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளைத் தொழுகையிலும் குனூதுன்னவாஸில் ஓதிக் கொள்ளலாம். இதுவே சரியான முறையாகும்.
இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தமது ‘ஸாதுல் மஆத்’ எனும் நூலில் இது குறித்து கூறும் கருத்து கவனிக்கத் தக்கதாகும்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் சுபஹ் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் ருகூஃ விற்குப் பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பின் முஃமின்களுக்காகவும், காபிர்களுக்கு எதிராகவும் பிரார்த்தித்தார் என்ற ஹதீஸ் ஸஹீஹானதே! நபி(ஸல்) அவர்கள் இதைச் செய்து விட்டு பின்னர் விட்டுவிட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. அபூஹுரைரா(ரலி) அவர்கள், இது போன்ற குனூத் ஸுன்னாவாகும். நபி(ஸல்) அவர்கள் இதைச் செய்துள்ளார்கள் என்று அந்த மக்களுக்குக் கற்றுக் கொடுக்க விரும்பியிருக்கலாம். சுபஹிலும் பிரச்சினையான சந்தர்ப்பங்களிலும் குனூத் ஓதுவதை வெறுக்கக் கூடிய கூபாவாசிகளுக்கு இது மறுப்பாகும். அவர்கள் (குனூதுன்னவாஸில்) மாற்றப்பட்டுவிட்டது என்றும் அதைச் செய்வது பித்அத் என்றும் கூறுகின்றனர்.
அஹ்லுல் ஹதீஸுடைய அறிஞர்கள் கூபாவாசிகளுக்கும், பிரச்சினையான சந்தர்ப்பங்களிலும், பஜ்ரிலும் குனூத் ஓதுவதை முஸ்தஹப்பாகக் கருதக் கூடியவர்களுக்கும் மத்தியில் நடுநிலையான கருத்தைக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு கூட்டத்தை விடவும் இவர்களே ஹதீஸ் விடயத்தில் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் ஓதிய குனூத்தை (குனூதுன்னவாஸில்) ஓதுவார்கள். அவர்கள் விட்ட குனூத்தை விட்டுவிடுவார்கள். (நபியவர்கள் செய்ததை) செய்வதும் ஸுன்னத்துதான். (அவர்கள் விட்டதை) விடுவதும் ஸுன்னத்துதான் என அவர்கள் கூறுவார்கள். 

இதே வேளை இதைத் தொடராகச் செய்பவர்களை மறுக்கமாட்டார்கள். அதை பித்அத்தாகப் பார்க்கவும் மாட்டார்கள். அதைச் செய்பவரை ஸுன்னாவுக்கு முரண்பட்டவராகவும் கருதமாட்டார்கள். இவ்வாறே பிரச்சினையான சந்தர்ப்பங்களில் ஓதப்படும் குனூத்தை மறுப்பவர்களையும் எதிர்க்கமாட்டார்கள். அந்தக் குனூத்தை விடுவதை பித்அத்தாகவும் கருதமாட்டார்கள். அதை விடுபவரை ஸுன்னாவுக்கு முரண்பட்டவராகவும் பார்க்கமாட்டார்கள். மாறாக, யார் குனூத் ஓதினாரோ அவரும் நல்லதையே செய்தார். யார் விட்டாரோ அவரும் நல்லதையே செய்தார். இஃதிதாலுடைய நிலை, துஆவுக்கும் அல்லாஹ்வைப் புகழ்வதற்கும் உரிய இடமாகும். இஃதிதாலில் இவ்விரண்டையும் நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். (ஸாதுல் மஆத் : 1ஃ266)
இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் இவ்வாறு நடுநிலையான ஒரு கருத்தை முன்வைத்தாலும் சுபஹுடைய குனூத் ஸுன்னா இல்லை என்பதையே மிகச் சரியான வலுவான கூற்றாகக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறிவிட்டு சுபஹுடைய குனூத் தொடர்பில் நீண்ட கருத்தாடலைச் செய்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் உலகைப் பிரியும் வரை பஜ்ரில் குனூத் ஓதினார்கள் என்ற செய்தி குறித்து இமாமவர்கள் பேசும் போது, இதன் அறிவிப்பாளர் அபூ ஜஃபர் அர்ராஸி என்பவர் பலவீனமானவர் என்பதை நிரூபித்துவிட்டு இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று கூறினால் கூட இப்போது சுபஹில் ஓதப்படும் குனூத்திற்கு ஒரு போதும் ஆதாரமாக அமையாது என்று கூறுகின்றார். குனூத் என்றால் நிற்றல், மௌனமாக இருத்தல், ஒரு இபாதத்தில் தொடராக இருத்தல், துஆ, தஸ்பீஹ், உள்ளச்சம் என பல அர்த்தங்கள் உள்ளன. அல்லாஹ் தன் திருமறையில்,
‘வானங்கள் மற்றும் பூமியில் இருப்போர் அவனுக்கே உரியவர்களாவர். (அவர்கள்) அனைவரும் அவனுக்கே அடிபணிந்து வழி படுகின்றனர்.’ (30:26)
என்று கூறுகின்றான். மேலும், ‘(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமையைப் பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுபவரா? அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என (நபியே!) நீர் கேட்பீராக! சிந்தனையுடையோர்தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.’ (39:09)
மேலும்,
‘இன்னும் இம்ரானின் மகள் மர்யமையும் (உதாரணமாகக் கூறுகின்றான்.) அவள் தனது கற்பைக் காத்துக் கொண்டாள். எமது ‘ரூஹி’ல் இருந்து அதில் நாம் ஊதினோம். அவள் தனது இரட்சகனின் வார்த்தை களையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். மேலும், அவள் வழிப்பட்டு நடப்போரில் ஒருவராகவும் இருந்தாள்.’ (66:12)
இந்த இடங்களில் எல்லாம் ‘குனூத்’ என்ற சொல்லின் தோற்றப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நபி(ஸல்) அவர்கள், தொழுகையில் சிறந்தது நீண்ட குனூத் உடைய தொழுகை என்று கூறியுள்ளார்கள். அதாவது, நீண்ட நேரம் நின்று தொழும் தொழுகை என்பதே இதன் அர்த்தமாகும். ஆரம்பத்தில் தொழுகையில் பேசுவது தடுக்கப்பட்டிருக்கவில்லை.
‘தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு ”(முற்றிலும்) அடிபணிந்த வர்களாக நில்லுங்கள்”’(2:238)
மேற்படி வசனம் அருளப்பட்ட பின்னர் நாம் தொழுகையில் மௌனமாக இருக்குமாறு ஏவப்பட்டோம், பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோம் என ஸைத் இப்னு அர்க்கம்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இந்த வசனங்களில் குனூத் என்பது ஏற்கனவே நாம் கூறிய அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்.
நபி(ஸல்) அவர்கள் சுபஹுடைய தொழுகைகளில் ருகூஃ வுக்குப் பின்னர் அல்லாஹும்மஹ்தினி பீமன் ஹதைத்த என்று சப்தத்தை உயர்த்தி ஓதினார்கள். பின்னால் உள்ளவர்கள் ஆமின் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் கூறவில்லை.
இஃதிதாலில்,
என்பது போன்ற நீண்ட துஆவை ஓதுவார்கள். புகழ்ச்சியும், துஆவுமுடைய இதுவும் ‘குனூத்’ தான்.
நீண்ட நேரம் இஃதிதாலில் நிற்பதும் குனூத் தான்; நீண்ட கிராஅத்துக்களை ஓதுவதும் குனூத் தான்; குறித்த இந்த துஆவும் குனூத்தான். குனூத் என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கும் போது அனஸ்(ரலி) அவர்கள் சுபஹில் குனூத் இருந்தது என்று கூறும் ஹதீஸின் அர்த்தம், குறித்த அந்த துஆவை ஓதுவதைத்தான் குறிக்கும் என்று எங்கிருந்து அர்த்தம் எடுப்பீர்கள்?
பஜ்ரில் குனூத் இருந்தது என பஜ்ருடைய தொழுகை விஷேடமாகக் கூறப்பட்டுள்ளதை வைத்து குறித்த இந்த துஆவைத்தான் குறிக்கும் என்று எடுக்க முடியாது.
குனூத் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. பஜ்ர் தொழுகை மற்ற தொழுகை அனைத்தும் உள்ளடங்கக் கூடியதே! குனூத் பற்றிக் கூறும் போது அனஸ்(ரலி) அவர்கள் பஜ்ரை மட்டும் விஷேடமாக இங்கே குறிப்பிட்டுள்ளார்கள். இந்த குனூத்தை காபிர்களுக்கு எதிரான குனூத் என்று கூற முடியாது. முஃமின்களிலுள்ள பலவீனமானவர் களுக்கான துஆ என்றும் கூற முடியாது. ஏனெனில், அனஸ்(ரலி) அவர்களே இந்த குனூத்தை நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் ஓதிவிட்டு பின்னர் விட்டுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களின் பஜ்ர் தொழுகையில் குனூத் இருந்தது என்ற அனஸ்(ரலி) அவர்களின் கூற்று, குறித்த இந்த துஆவை நபி(ஸல்) அவர்கள் குனூத்தில் ஓதினார்கள் என்பதேயாகும். நான்கு கலீபாக்களும், அல் பராஜ் இப்னு ஆஸிப், அபூ மூஸல் அஸ்அரி, அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஆகியோர் குனூத் ஓதியுள்ளனர் என்று சிலர் வாதிடலாம்.
இதற்கு பல கோணங்களில் பதில் கூறலாம்.
01. நபி(ஸல்) அவர்கள் சுபஹிலும் மஃரிபிலும் குனூத் ஓதினார்கள் என்றே அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி) சுபஹை மட்டும் குறிப்பிட்டுக் கூறவில்லை. இவ்வாறே அல் பராஃ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். பஜ்ரில் மட்டும் குனூத் ஓத வேண்டும் என்று இதை வைத்து எப்படிக் கூற முடியும்?
இந்தக் கேள்விக்கு மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டுவிட்டது என நீங்கள் கூறினால் உங்களுடன் முரண்பட்ட கூபாவாசிகளும்; அவ்வாறே பஜ்ருடைய குனூத்தும் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுவார்கள். நீங்கள் மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தைக் கொண்டு வந்தாலும், அது சுபஹுடைய குனூத்தும் மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கு ஆதாரமாகவே அமையும். மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டு விட்டது, சுபஹுடைய குனூத் மட்டும் சட்டமாக்கப்பட்டது என்பதற்கு நீங்கள் எந்தவொரு ஆதாரத்தையும் ஒரு போதும் கொண்டு வர முடியாது.
அனஸ்(ரலி) அவர்களது அறிவிப்பில் வரும் மஃரிபுடைய குனூத் என்பது பிரச்சினைக்காக ஓதப்பட்ட குனூத். வழமையாக ஓதப்படும் குனூத் அல்ல என்று நீங்கள் கூறினால் உங்களுடன் முரண்பட்டிருக்கும் அஹ்லுல் ஹதீஸைச் சேர்ந்தவர்கள், ஆமாம். அப்படித்தான் பஜ்ரில் குனூத் ஓதினார்கள் என்று வருவதும் பிரச்சினைக்காக ஓதிய குனூத்தே தவிர வழமையாக ஓதும் குனூத் குறித்து பேசும் செய்தி அல்ல அது என்று கூறுவார்கள். இரண்டு குனூத்துக்குமிடையில் என்ன வேறுபாடு இருக்கின்றது.
சுபஹுடைய குனூத் என்று வருவது வழமையான இந்தக் குனூத்தைக் குறிக்காது. பிரச்சினையான சந்தர்ப்பத்தில் ஓதப்பட்ட குனூத்தையே குறிக்கும். இதை அனஸ்(ரலி) அவர்களே அறிவிக்கின்றார்கள்.
சுபஹில் வழமையாக குனூத் ஓதுவதற்கு தூண் போன்று ஆதாரமாக அமைவதே அனஸ்(ரலி) அவர்கள்தான். அனஸ்(ரலி) அவர்களே அந்த குனூத் பிரச்சினைக்காக ஓதப்பட்ட குனூத் தான். பின்னர் அதை விட்டுவிட்டார்கள் என்று அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் அறபிகளின் சில கோத்திரங்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். பின்னர் விட்டுவிட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பஜ்ரில் தொடராக குனூத் ஓதியதாக சிலர் வாதிடுகின்றனர் என்று நாம் அனஸ்(ரலி) அவர்களைக் கேட்ட போது, ‘பொய் சொல்கின்றனர். நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் சில அறபிக் கூட்டங்களுக்கு எதிராகக் குனூத் ஓதினார்கள்’ என பதிலளித்தார்கள்.
கைஸ் இப்னுர் ரபீக் எனும் இச்செய்தியின் அறிவிப்பாளரை யஹ்யா இப்னு மயீன்(ரஹ்) அவர்கள் பலவீனப்படுத்தியிருந்தாலும் மற்றும் சிலர் அவரை உறுதிப்படுத்தியுள்ளனர். அபூஜஃபர் அர்ராஸியைப் போன்றவர் அல்ல இவர். நபி(ஸல்) அவர்கள் உலகைப் பிரியும் வரை சுபஹில் குனூத் ஓதினார்கள் என்ற செய்தியை அறிவிக்கும் பலவீனமான அபூஜஃபர் அர்ராஸியை ஆதாரமாக எடுப்பவர்கள் இந்த ஹதீஸை கைஸ் இப்னு ரபிஃயைக் காரணம் காட்டி ஏற்க முடியாது என்று எப்படிக் கூற முடியும்.
சுபஹுடைய குனூத்தை ஆதரித்துப் பேசும் அபூ ஜஃபர் அர்ராஸியை விட அதை மறுத்துப் பேசும் கைஸ் பலமானவர் அல்லது அவரின் நிலையில் உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். கைஸ் பலவீனமானவர் என்று கூறியவர்களை விட அதிகமானவர்கள் அபூஜஃபர் அர்ராஸியை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
அடுத்து, அனஸ்(ரலி) அவர்கள் பிஃர்மஊனாவில் நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது கொலை செய்தவர்களுக்கு எதிராக குனூத் ஓதியதாக அறிவிக்கின்றார்கள். இதுதான் குனூத்தின் ஆரம்பம் என்றும் கூறுகின்றார்கள். இதிலிருந்து குனூத் என்பது நபி(ஸல்) அவர்களின் வழமையான நடவடிக்கையாக இருக்கவில்லை என்பதும், ‘குனூத் ஆரம்பமானது. ஒரு மாதத்திற்குப் பின்னர்’ விட்டுவிட்டார்கள் என்ற அனஸ்(ரலி) அவர்களின் வார்த்தைகளில் இருந்து இது பிரச்சினையான சந்தர்ப்பத்தில் ஓதப்படும் குனூத்தைத்தான் குறிக்கும் என்பது தெளிவாகின்றது.
நபி(ஸல்) அவர்கள் சுபஹில் குனூத் ஓதினார்கள் என்றும் ழுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபஹ் (அபூதாவூத்) ஐவேளையும் குனூத் ஓதினார்கள் என்றும் ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, சுபஹில் மட்டுமன்றி ஏனைய தொழுகைகளிலும் ஓதப்பட்ட குனூத் குனூதுன்னவாஸில்தானே தவிர சுபஹில் மட்டும் ஓதப்படும் இந்த குனூத் ஆதாரபூர்வமானதல்ல என இமாமவர்கள் விரிவாக விளக்குகின்றார்கள். மேலதிகத் தகவல்களுக்கு ஸாதுல் மஆதைப் பார்வையிடலாம்.
முடிவாக:- சுபஹில் மட்டும் வழமையாக குனூத் ஓதப்படுவது ஸுன்னா அல்ல. பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளை குனூத் ஓதலாம்.
குனூத் விடயத்தில் ஒருவர் மற்றவரை எதிர்ப்பதும், விரோதிப்பதும் முன் சென்ற அறிஞர்களின் நடுநிலையான போக்கிற்கு எதிரானதாகும் என்ற உண்மைகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

                                                                                                               S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர்.
சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். சிலர் பின்பற்றித் தொழுதாலும் இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜதாக்கள் மறதிக்காக தனியாகச் செய்துவிட்டு ஸலாம் கொடுக்கின்றனர்.
சுபஹுடைய குனூத் ஸுன்னா அல்ல எனக் கருதுபவர்கள் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். மற்றும் சிலர் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றி ஏனைய தொழுகைகளைக் கூட தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த இரு பக்க தீவிரவாதமும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
சுபஹுடைய குனூத் ஸுன்னா அல்ல என்ற கருத்தையே வலுவானதாக – ராஜிஹானதாக – மிகச் சரியானதாகக் கருதினாலும் இது தொடர்பில் இருக்கும் இருபக்க தீவிரவாதப் போக்குகளும் தவிர்க்கப்பட வேண்டியவை எனக் கருதுவதால் இது குறித்து விரிவாக விளக்குவது பொருத்தமானது என நினைக்கின்றேன்.
ஐவேளைத் தொழுகையில் ஓதப்படும் குனூத்:
முஸ்லிம் சமூகம் சந்திக்கும் சவால்களின் போது ஐவேளைத் தொழுகையிலும் ‘குனூத் நவாஸில்’ ஓதுவது குறித்தும் தொடராக சுபஹுடைய தொழுகையில் குனூத் ஓதுவது குறித்தும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.
சுபஹுடைய குனூத்:
சுபஹுடைய குனூத் தொடர்பில் நான்கு விதமான கருத்துக்கள் உள்ளன. இந்தக் கருத்துக்கள் குறித்தும் அவற்றுக்கு அவரவர் காட்டும் ஆதாரங்கள் குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.  
1. சுபஹுடைய குனூத் கட்டாய சுன்னாக்களில் ஒன்றாகும். அதனைத் தொடராகச் செய்து வருவது முஸ்தஹப் ஆகும் என்பது ஷாபிஈ, மாலிகீ மத்ஹபுடைய அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இதற்குப் பின்வரும் ஹதீஸ்களை அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.
‘நபி(ச) அவர்கள் சுபஹிலும் மஃரிபிலும் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.’
அறிவிப்பவர்: அல்பராஉ இப்னு ஆஸிப்(வ) ஆதாரம்: முஸ்லிம் 678-305, தாரமி1638, நஸாஈ 1076
இந்நபிமொழியில் சுபஹ், மஃரிப் ஆகிய இரு தொழுகைகளிலும் நபி(ச) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்று கூறப்படுவதை சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவதற்கான ஆதாரமாகக் கொள்கின்றனர்.
‘நபி(ச) அவர்கள் சுபஹில் குனூத் ஓதினார்களா என அனஸ் இப்னு மாலிக்(வ) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘ஆம்’ எனப் பதிலளித்தார்கள். ருகூஃ செய்வதற்கு முன்னர் ஓதினார்களா? என்று கேட்ட போது ருகூஃ விற்குப் பின்னர் சிறிது நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள்.’ அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு ஸீரீன்(ரஹ்)
ஆதாரம்: புஹாரி 1001, தாரமீ: 1745
முன்னர் கூறிய ஹதீஸை விட சுபஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறுபவர்களுக்கு இது பலமான ஆதாரமாகத் தெரிகின்றது.
‘அபூ ஹுரைரா(வ) அறிவித்தார். இறைத்தூதர்(ச) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ என்று சொன்ன பின்பு, ‘இறைவா! வலீத் இப்னு வலீத், ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப்(ர) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக!’ என்று பிரார்த்திப்பார்கள். அதை சப்தமாகச் சொல்வார்கள். 

தம் ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், ‘இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவாயாக’ என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள்.’ (புஹாரி: 4560)
இந்த நபிமொழியிலும் பஜ்ருத் தொழுகை சிலவற்றிலும் சில கோத்திரத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள் என்று கூறப்படுவதையும் சுபஹுடைய குனூத்திற்கான ஆதாரமாகக் கொள்கின்றனர்.
‘அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) கூறினார். (உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு – ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறியதற்குப் பின்னால், நபி(ச) அவர்கள், ‘இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்னும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை இறக்கியருளினான். ‘ (புஹாரி: 4069)
இந்த வசனம் இறங்கியதும் நபியவர்கள் சபிப்பதை விட்டு விட்டதாகவும் குனூத்தை விடவில்லை எனவும் சுபஹுடைய குனூத்தை சரிகாணும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
‘நபியவர்கள் பஜ்ர் தொழுகையில் உலகை விட்டும் பிரியும் வரையும் குனூத் ஓதினார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ்(வ) ஆதாரம்: ஹாகிம் முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 4964, அஹ்மத் 12657
இமாம் ஹாகிம் அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிட்டாலும் இது பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஃபர் அர்ராஸி என்பவர் (இவரது இயற் பெயர் ஈஸா இப்னு மாஹான்) பலவீனமானவராவார். ஸஹீஹான அறிவிப்பாளர்களுக்கு முரணாக அறிவிக்கும் போக்குடையவர். இவர் குறித்து அறிஞர்கள் பல விமர்சனங்களைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாம் மேலே குறிப்பிட்டவை போன்ற ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து சுபஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதி வர வேண்டும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
2. சுபஹ், ஏனைய தொழுகைகளில் குனூத் ஓதுவது மாற்றப்பட்டதும் பித்அத்தான நடைமுறையுமாகும்.
இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தில் இருக்கின்றார்கள். இந்தக் கருத்துடைய அறிஞர்கள் பின்வரும் செய்திகளைத் தமக்குரிய ஆதாரமாகக் கொள்கின்றனர்.
1. ‘அபூ மாலிகில் அஸ்ஜயீ(வ) அவர்கள் தனது தந்தையிடம் ‘தந்தையே! நீங்கள் நபியவர்களுக்கும் அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகியோருக்கும் கூபாவில் சுமார் ஐந்து வருடங்கள் அலி(வ) அவர்களுக்கும் பின்னால் தொழுதுள்ளீர்கள். அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா?’ எனக் கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை அருமை மகனே! இது புதிதாக உருவானது’ எனப் பதில் கூறினார்கள்.’
(ஆதாரம்: அஹ்மத் 15879, 27210, திர்மிதி- 402, 244)
சில அறிவிப்புக்களில் பஜ்ரில் குனூத் ஓதினார்களா? என்றும் கேட்டதாகவும் (ஷரஹ் மஆனியல் ஆதார் 1474) பல அறிவிப்புக்களில் பொதுவாகக் கேட்கப்பட்டதாகவும் இடம் பெற்றுள்ளது. குனூத்தே இல்லை என்பதற்கும் நபி(ச) அவர்கள் ஓதியது மன்ஸூஹ் – மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கும், குனூத் ஒரு பித்அத்தான செயல் என்பதற்கும் இதனை பலமான ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
‘நபி(ச) அவர்கள் சுபஹில் குனூத் ஓதுவதைத் தடுத்தார்கள்.’ அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரழி) ஆதாரம்: இப்னுமாஜா 1242, தாரகுத்ஸி 1688
இதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர் இடம்பெற்றுள்ளதாக அறிஞர் ஷ{ஐப் அல் அர்நாஊத் குறிப்பிடுகின்றார்கள். அல்பானி (ரஹ்) அவர்கள் இதனை இட்டுக்கட்டப்பட்டது என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே, இதனை இக்கருத்துக்கு வலுவூட்டும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
‘நபி(ச) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். அதற்கு முன்னரோ, பின்னரோ குனூத் ஓதியதில்லை என இப்னு மஸ்ஊத்(ச) அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள்.’
ஆதாரம்: இப்னு அபீiஷபா-342, அல்பஸ்ஸார்-1569, ஷரஹ் மஆனியல் ஆதார்-1465, தபரானி (அல்கபீர்)-9973
குனூத் குறித்து இப்னு உமர்(ரழி ) அவர்கள் ‘அல்லாஹ் மீது சத்தியமாக அது பித்அத்தாகும். நபி(ச) அவர்கள் ஒரு மாதம் ஓதினார்கள். பின்னர் விட்டு விட்டார்கள்.’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: பிஷ;ர் இப்னு ஹர்ப்(ரஹ்) ஆதாரம்: தபரானி (அல்கபீர்)- 14065, பைஹகி (குப்றா)-3158 இதுவும் பலவீனமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டதாகும்.
இது போன்ற தகவல்களை மையமாகக் கொண்டு சுபஹுடைய குனூத் மட்டுமன்றி பிரச்சினையான சந்தர்ப்பங்களில் ஓதப்படக் கூடிய குனூத்தும் மன்ஸூஹ் – மாற்றப்பட்ட சட்டத்தில் உள்ளது. அதனைச் செய்யக்கூடாது. சுபஹுடைய குனூத் பித்அத்தாகும் என்ற கருத்தை இச்சாரார் கொண்டுள்ளனர்.
03. குனூத்தை ஓதவும் முடியும், விடவும் முடியும்:
மேற்குறிப்பிட்ட இரு சாராரின் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து ஓதுவதும் ஆகுமானது; விடுவதும் ஆகுமானது என்ற கருத்தில் சில அறிஞர்கள் உள்ளனர். சில அறிஞர்கள் சுபஹுடைய குனூத்தை தவிர்ப்பதே மிகச் சரியானது என்று கருதிய போதிலும் ஓதுவதைக் கண்டிக்காது உள்ளனர். இமாம் இப்னுல் கையிம் ஜவ்ஸி(ரஹ்), இமாம் சுப்யானுத் தவ்ரீ(ரஹ்), தபரி(ரஹ்) போன்றோரை இக்கருத்துடைய அறிஞர் களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
தொடரும்…. இன்ஷா அல்லாஹ்
                                                                                              S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

தொழுகையை இமாமத் செய்யக்கூடிய ஒருவருக்கு இஸ்லாம் உயரிய அந்தஸ்தை வழங்குகிறது காரணம் இமாமத் செய்யக்கூடியவர்கள் சமுதாயத்தில் வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள் .இந்த அடிப்படையில் தான் நபி ஸல் அவர்கள் கடைசி காலம் வரை தான் இமாமத் செய்யும் பொறுப்பை வகித்தார்கள்

எனவே இமாமாக கடமையாற்ற வேண்டும் என்றால் அல்லது தொழுகையை நடத்த வேண்டுமென்றால் அதற்கான சில தகுதிகளையும்,தராதரங்களையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இமாமத் செய்யக்கூடியவர்கள் தகுதி பற்றி கூறும் போது" குர்ஆனை நன்கு ஒத தெரிந்தவர் இமாமத் செய்யட்டும் அப்படி ஓதத் தெரிந்தவர்கள் பலர் இருந்தால் அத்துடன் சுன்னாவை நன்கு அறிந்தவர் இமாமமத் செய்யட்டும் " என கருத்துப்பட இந்த செய்தி முஸ்லிமில் (அபூ மஸ்ஊதுல் அன்சாறி றழி அவர்கள் அறிவிக்கிறார்கள். )பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் இமாமத் செய்ய கூடிய ஒருவர் குர்ஆன் சுன்னாவிற்கு முரண்படாமல் தொழுகையின் சட்டங்களை நன்கு அறிந்தவர் மார்க்க விளக்கங்களை அளிக்க கூடிய ஒருவராகவும் இமாமாக இருக்கவேண்டும் .
தற்காலிகமாக ஒருவர் பள்ளிவாசலில் இமாம் இல்லாத சந்தர்ப்பத்தில் மேற்கூறப்பட்ட அடிப்படையில் குர்ஆனை நன்கு ஒதத் தெரிந்தவர் இமாமத் செய்யக்கூடிய தகுதி என்ற அடிப்படையில் பேணப்பட வேண்டும் .

எனவே நிரந்தர இமாமை தேர்வு செய்யும் சட்டமாக இது இருந்தாலும் தற்காலிகமாக தொழுகை நடத்தக்கூடிய தகுதியாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய இந்நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

ழுகை நடத்தும்போது சட்டதிட்டங்களை தொழுகையின் விதிமுறைகளை அறிந்த ஒருவராக கட்டாயம் ஏன் இருக்க வேண்டும் என்றால் ஒரு இமாம் மார்க்க சட்ட திட்டங்களை , தொழுகை விதிமுறைகளை அறியாமல் நபியவர்களுடைய தொழுகை முறைகளை அறியாமல் பிழையாக இமாமத் செய்வதாக இருந்தால் அந்த தொழுகை பாத்திலாக அமையும் .அதற்கு சமூகம் பொறுப்புக் கூற வேண்டும்.

தொடர்ந்தும் அப்படி ஓர் இமாம் இருப்பாரானால் அந்த இமாமைப் பின்தொடர்வது நிராகரிக்கப்பட வேண்டும் .அத்தகைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது மார்க்கத்திற்கு முரணான விடயம் இந்த அடிப்படையில் ஒரு இமாம் தொழுகை நடத்துகின்ற போது மார்க்கத்திற்கு முரணாக செய்தால் அவருக்கு பின்னால் நிற்பதும் அவருடைய முரண்பாடுகளை அவர் செய்வது போன்று அனுமதித்து தொடருவதும் .அல்லது அவரை முறண்பட்டு நாம் செய்வதும் தொழுகை பாத்திலாக அமையும்.

உதாரணமாக சுபஹ் தொழுகையில் இமாம் குனூத் ஓதுகிறார் என வைத்துக் கொண்டால் அந்த இமாமுக்குப் பின்னால் நாங்கள் நின்று தொழுவது கூடாது. அதே நேரத்தில் சிலர் இமாம் குனூத் ஓதுவதை விருப்பமில்லாமல் கைகளை கீழே விட்டு விடலாம் என்று ஒருதலைப்பட்சமாக மார்க்கத்திற்கு முரணான சட்டங்களை பின்பற்றி பலருடைய தொழுகைகளை வீணாக்கி விடுவதைபார்க்கிறோம். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவுக்கு முரணானது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இதனால்தான் சூரத்துல் பாத்திஹாவை ஒரு இமாம் தொடர்ந்து பிழையாக ஓதினாலும் அந்த இமாம் நிராகரிக்கப்பட வேண்டும் . இஸ்லாம் கூறுவது போல் இமாம் மார்க்கத்தின் சட்டங்களையும் குறிப்பாக தொழுகையின் சட்டங்களை நபி அவர்களுடைய கூறியது போன்று "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அதேபோன்று நீங்களும் தொழுங்கள்" என்ற அடிப்படையில் அந்தத் தொழுகை அமைய வேண்டுமே தவிர சரியாவுக்கு முறணாக செய்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி நாம் அனுமதித்தால் நபி(ஸல்) அவர்களை அவர்களுடைய சுன்னாவை நிராகரித்தவர்களாக ஆகிவிடுவோம்.
அல்லாஹ் நமக்கு நல்ல வழிகளை காட்டுவானாக

                                                                                 அஷ்சேஹ் றஸ்மி மூஸா சலபி (MA)

சமகாலத்தில் சில பள்ளிகளில் மகான்கள், அவ்லியாக்கள் என்று சொல்லி அவர்களது உடல்களை பள்ளியிலேயே அடக்கம் செய்து கொள்ளக்கூடிய செயல்கள் இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது.
இந்த செயற்பாடானது மார்க்கம் தடுத்த ஒரு செயற்பாடாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் பின்வரும் செயலுக்காக யூத நஸாராக்களை சாபம் செய்தார்கள்.
“யூதர்களையும் கிறிஸ்தவவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் நபிமார்களது கப்றுகளை வணங்கும் இடங்களாக எடுத்துக் கொண்டார்கள்” புஹாரி: 1/446 | முஸ்லிம்: 1/386
முன் வாழ்ந்த ஒரு சமூகம் இந்த காரியத்தை செய்ததனால் அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றிருக்கிறது. அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றத்தரக் கூடிய எந்த காரியமாக இருந்தாலும் ஒன்று அது இணைவைப்பாக இருக்கும் அல்லது பெரும்பாவமாக இருக்கும்.
இந்தடிப்படையில் பள்ளிகளில் கப்றுகளை எடுத்துக் கொள்வதானது மனிதனை நேரடியாக இணைவைப்பின் பக்கம் இட்டு செல்லக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. 
இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்
பள்ளிவாசல்களில் மரணித்தவர்களை அடக்கம் செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்த காரியமாகும். கப்றுகள் மீது பள்ளிகளைக் கட்டுவதும் தடுக்கப்பட்ட காரியமாகும். மரணித்தவர்களது விடயத்தில் இப்படி நடந்து கொள்பவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாபம் செய்து விட்டு தன்னுடைய சமூகத்தையும் அவ்வாறு செய்வதை விட்டும் எச்சரித்தார்கள். அதே போன்று இந்த செயல் யூத கிறிஸ்தவர்களது செயலென்றும் சொல்லித் தந்திருக்கின்றார்கள். 
மேலும் இந்த செயல் இணைவைப்பின் பக்கம் இட்டு செல்வதற்குறிய சாதனமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் பள்ளிகளில் மரணித்தவர்களை அடக்கம் செய்வதும் அல்லது கப்றுகளின் மீது பள்ளிகளைக் கட்டுவதும் மரணித்தவர்களது விடயத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தப்பதற்குறிய ஊடகமாக ஆகிவிடும். பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பிரயோசனங்களையும் தீங்கினையும் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்படாமல் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களுடைய நெருக்கத்தையே பெறவேண்டுமென்ற சிந்தனையையும் ஏற்படுத்திவிடும்.
எனவே ஒவ்வொரு முஸ்லிம்களும் வெளிப்படையான இந்த அபாயகரமான செயலிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான அகீதாவுக்காகவும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்ட பள்ளிகள் கப்றுகளை விட்டும் பிறிந்தவைகளாகவே இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் “பள்ளிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் சேர்த்து வேறு எவர்களையும் அழைக்காதீர்கள்” (ஸூரதுல் ஜின்:18)
ஆகவே அல்லாஹ்வுடைய எல்லாப் பள்ளிகளும் இணைப்பினுடைய செயலை விட்டும் நீங்கியதாக இருக்க வேண்டும். அந்த பள்ளிகளில் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் அவன் மாத்திரமே வணங்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் வாஜிபான ஒன்றாகும்.” (பதாவா அல் அகீதா: பக்கம் 26)
எனவே அன்புள்ள என் இஸ்லாமிய சகோதரர்களே!
பள்ளிகளில் கப்றுகளை கட்டி அவைகளை கண்ணியப்படுத்துகின்ற வண்ணம் நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்வதானது பகிரங்கமான இணைவைப்பாக இருந்து கொண்டிருக்கின்றது.
அல்லாஹ் எம்மனைவரையும் இந்த இணைவைப்பான காரியங்களிலிருந்து பாதுகாப்பானாக!
                                                                   பர்ஹான் அஹமட் ஸலபி

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :ஒவ்வொரு இரவும் சூரா வாகிஆவை யார் ஓதி வருகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி) – நூல் : பைஹகீ 2392
இந்த செய்தி பலவீனமானது என்பதாக இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் தமது அல் இலலுல் முதனாஹியா (1/151) விலும், இமாம் இப்னு இராக் அவர்கள் தன்ஸீஹுஷ் ஷரீஆ (1/301) விலும், இமாம் ஷௌகானி அவர்கள் அல் பவாயிதுல் மஜ்மூஆ (972) விலும் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம்கள் கூறுவது போன்றே இந்த செய்தி பலவீனமானதாகும், ஹதீஸ்கலை அடிப்படை விதிகளின் படி பலவீனமான செய்திகளைக் கொண்டு புதிய ஒரு சட்டத்தையோ சிறப்பையோ நிறுவ முடியாது. இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.
பலமான ஒரு செய்தியின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு விடயத்தின் சிறப்புக்களுக்காக பலவீனமான செய்திகளை பயன்படுத்தும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை உள்ளது, அதனை ஆதரிக்கின்ற அறிஞர்கள் கூட சில நிபந்தனைகளை விதித்துள்ளனர் என்பதனை இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் மிகச் சுருக்கமாக ஏனைய அறிஞர்களின் கருத்துக்களுக்கமைய முன்வைத்துள்ளார்கள். அதனை இமாம் ஸஹாவி அவர்கள் தமது “அல் கவ்லுல் பதீஃ” 195 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
  • குறித்த பலவீனமான ஹதீஸ் மிகவும் பலவீனமான நிலையில் (ழஈபுன் ஜித்தன்) ஆக இருத்தல் கூடாது.
பொய் சொல்பவர்களோ, அதிக குளறுபடி உள்ளவர்களோ, பொய்யன் என சந்தேகிக்கப்படுபவர்களோ அந்த இஸ்னாத் – அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறக்கூடாது.
  • குறித்த அந்த ஹதீஸ் அமுல்படுத்தப்படுகின்ற அடிப்படையான ஒரு சட்டத்தின் கீழ் அமையப் பெற்றதாக இருக்க வேண்டும்.
  • குறித்த அந்த ஹீஸை அமல் செய்கின்ற போது அது அடிப்படையானது என்ற எண்ணத்தை தவிர்த்து அதன் போது பேணுதலை கடைப்பிடித்தல்.
மேலுள்ள சூரா வாகிஆவின் குறித்த சிறப்பை நிறுவுவதற்கு எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸ்களும் கிடையாது என்ற வகையில் இப்படியான ஒரு சிறப்பே வஹியில் சொல்லப்படவில்லை என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
                                                                அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி

கேள்வி : ஹிஜாமா என்பது நபிவழிமுறையா அல்லது நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்றா?
பதில் : ஹிஜாமா தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் இருவகையான கருத்துகள் நிலவுகின்றன;
முதலாவது கருத்து : ஹிஜாமா என்பது ஆகுமாக்கப்பட்ட உபாியான சுன்னாவாகும்.
“ஹிஜாமா செய்வது ஒவ்வொருவரின் மீதும் விரும்பத்தக்கதாகும்.” (அல்பதாவா அல்ஹின்திய்யா : 5/355)
இப்னு முப்லிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : “ஹிஜாமாவைப் பொருத்தவரை அதனை செய்வது தொடர்பாகவும், அதன் சிறப்பு பற்றியும், அதனுடைய காலம் பற்றியும் அதிகமான பிரபல்யமான செய்திகள் உள்ளன. அவைகளில் ஒன்று நபியவர்களின் கூற்றாகவும் செயலாகவும் இருந்தது தான் 17, 19, 21 ஆம் தினங்களில் செய்வது.” (அல்ஆதாப் அஷ்ஷரஇய்யா : 3/87)
இக்கருத்துக்கு ஆதாரமாக ஹிஜாமா மற்றும் அதனால் நோய்நிவாரணம் உள்ளது போன்ற பொதுவாக வந்துள்ள ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
இரண்டாவது கருத்து : ஹிஜாமா என்பது இஸ்லாமிய ஷரீஆ முறையிலான பித்தியேகமான நன்மை தரக்கூடிய சிகிச்சையல்ல. மாறாக அது ஆகுமாக்கப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்று மாத்திரமே.
அல்காஸானீ அல்ஹனபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : “ஹிஜாமா என்பது விரும்பத்தக்க விடயமாகும்” (பதாஇஉஸ் ஸனாஇஃ : 4/190)
அல்கத்தாபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : “ஹிஜாமா என்பது ஆகுமான விடயமாகும். அத்துடன் அதிலே பயன்கள் இருப்பதுடன் உடலுக்குரிய நல்லவிடயங்களும் அடங்கியுள்ளன.” (மஆலிமுஸ் ஸுனன் : 4/103 , ஷரஹு இப்னு பத்தால் : 9/404 , அந்நிஹாயா பீ கரீபில் ஹதீஸி : 2/5)
இவ்விரண்டாவது கருத்திலிருந்து பின்வரும் விடயங்களை ஆதாரமாக எடுக்கலாம்;
  1. ஹிஜாமா என்பது இஸ்லாத்திற்கு முன்பு அரபிகள் அறிந்திருந்த ஒரு கிசிச்சை முறைகளில் ஒன்று மாத்திரமில்லாமல் வரலாற்று புத்தகங்களில் அறியப்பட்டது போன்று பிர்அவ்னுடைய காலம் போன்று அதற்கு முன்னைய சமூகங்களிலும் இச்சிகிச்சை முறை அறியப்பட்டிருந்தது. எனவே, இதற்கு இஸ்லாத்தில் என்று சிறப்பம்சம் கிடையாது. ஆகவே, ஹிஜாமா என்பது விரும்பத்தக்க ஒன்றாக இருப்பதுடன், மருத்துவத்திற்கான தேவை ஏற்படும்போது இதனை செய்யலாம்.
  2. வழமையான விடயங்கள், வாழ்க்கையின் பொதுவான செயற்பாடுகளாக கருதப்படக்கூடிய விடயங்களை பண்பாடுகளின் சிறப்புக்களுடன் தொடர்புபடுத்தாமல் வழமையான விடயம் என்ற வட்டத்தில் இருக்கின்றவரை அவைகள் அடிப்படையிலேயே ஆகுமானதாகும். எனவே, அவைகள் தொடர்ந்தும் ஆகுமானது என்ற வட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கும்.
  3. ஹிஜாமா செய்வதினால் பிரத்தியேகமான நன்மை கிடைக்கும் என்றோ, அல்லது அதனை செய்யாமல் விட்டுவிட்டால் தண்டனையோ, இழிவோ ஏற்படும் என்று நபியவர்களைத் தொட்டும் ஒருவிடயங்களும் வரவில்லை.
  4. ஹிஜாமாவினால் வணக்கவழிபாடு என்பதற்கோ அல்லது அதன் மூலம் அல்லாஹுத்தஆலாவை நெருங்குவதற்கு என்றோ எந்த நிலைப்பாடுகளும் கிடையாது. மாறாக அது மனிதர்களின் வழமையான வாழ்க்கை விடயங்களைப்போன்ற ஒரு விடயமாகவே உள்ளது.
எனவே இதன் மூலம் விளங்குவது என்னவென்றால்; இரண்டாவது கருத்தே மிகவும் ஏற்றமான கருத்தாகும். ஏனெனில், ஹிஜாமா என்பது மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆதலால் அதன்பால் தேவையுடையவன் வணக்கவழிபாடு என்ற அடிப்படையில் இல்லாமல் மருத்துவம், சிகிச்சை என்ற அடிப்படையில் அதனை செய்வான்.
அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : “ஹிஜாமா என்பது சுன்னாவல்ல அது ஒரு மருந்துவ கிசிச்சையாகும். எனவே, அதன்பால் மனிதர்கள் தேவையுடையவர்களாக இருந்தால் ஹிஜாமா செய்வார்கள். அதன்பால் தேவையில்லை என்று கருதக்கூடியவர்கள் ஹிஜாமா செய்யமாட்டார்கள்.” (மஜ்மூஉ பதாவா வ-ரஸாஇலில் உஸைமீன் : 23/96)
மேலும், ஹிஜாமாவின்பால் தேவையுடைய நோயாளிக்கு ஹிஜாமா சுன்னா என்று கூறுவதில் எந்தவித தடையும் கிடையாது. ஏனெனில் அவன் இரண்டு விடயங்களை ஒன்று சேர்ப்பவனாக இருப்பான்;
  • ஒன்று : மருத்துவம்
  • மற்றையது : ஹிஜாமாவின் மூலம் நோய்நிவாரணம் உள்ளது என அல்லாஹ்வின் தூதர் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், அவன் ஹிஜாமாவை பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்தான்.
இமாம் அந்நப்ராவீ அல்மாலிகீ (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : “ஹிஜாமாவின்பால் தேவை ஏற்படுகின்ற போது ஹிஜாமா செய்துகொள்வது விரும்பத்தக்கதாகும்.” (அல்பவாகிஹ் அத்தவானீ : 2/338) , (அல்-அதவீ பீ ஹாஷியதிஹி : 2/493)
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜாமாவின்பால் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் ஹிஜாமா செய்தார்கள் என்று ஹதீஸ்களில் கண்டு கொள்ளமுடியாது. மாறாக, நபியவர்கள் தனக்கு ஏற்பட்ட தலைவலி மற்றும் இதுபோன்ற வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டால் ஹிஜாமா செய்பவர்களாக இருந்துள்ளார்கள். எனவே, ஹிஜாமா என்பது அதன்பால் தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் செய்யப்படும் ஒன்றாக இருப்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!
அரபியில் : https://islamqa.info/ar/answers/269871
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget