சுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா பாகம்-02

சுபஹ் தொழுகையில் வழமையாக ஓதப்படும் குனூத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே ராஜிஹான (வலுவான) கருத்தாகும். பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளைத் தொழுகையிலும் குனூதுன்னவாஸில் ஓதிக் கொள்ளலாம். இதுவே சரியான முறையாகும்.
இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தமது ‘ஸாதுல் மஆத்’ எனும் நூலில் இது குறித்து கூறும் கருத்து கவனிக்கத் தக்கதாகும்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் சுபஹ் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் ருகூஃ விற்குப் பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பின் முஃமின்களுக்காகவும், காபிர்களுக்கு எதிராகவும் பிரார்த்தித்தார் என்ற ஹதீஸ் ஸஹீஹானதே! நபி(ஸல்) அவர்கள் இதைச் செய்து விட்டு பின்னர் விட்டுவிட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. அபூஹுரைரா(ரலி) அவர்கள், இது போன்ற குனூத் ஸுன்னாவாகும். நபி(ஸல்) அவர்கள் இதைச் செய்துள்ளார்கள் என்று அந்த மக்களுக்குக் கற்றுக் கொடுக்க விரும்பியிருக்கலாம். சுபஹிலும் பிரச்சினையான சந்தர்ப்பங்களிலும் குனூத் ஓதுவதை வெறுக்கக் கூடிய கூபாவாசிகளுக்கு இது மறுப்பாகும். அவர்கள் (குனூதுன்னவாஸில்) மாற்றப்பட்டுவிட்டது என்றும் அதைச் செய்வது பித்அத் என்றும் கூறுகின்றனர்.
அஹ்லுல் ஹதீஸுடைய அறிஞர்கள் கூபாவாசிகளுக்கும், பிரச்சினையான சந்தர்ப்பங்களிலும், பஜ்ரிலும் குனூத் ஓதுவதை முஸ்தஹப்பாகக் கருதக் கூடியவர்களுக்கும் மத்தியில் நடுநிலையான கருத்தைக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு கூட்டத்தை விடவும் இவர்களே ஹதீஸ் விடயத்தில் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் ஓதிய குனூத்தை (குனூதுன்னவாஸில்) ஓதுவார்கள். அவர்கள் விட்ட குனூத்தை விட்டுவிடுவார்கள். (நபியவர்கள் செய்ததை) செய்வதும் ஸுன்னத்துதான். (அவர்கள் விட்டதை) விடுவதும் ஸுன்னத்துதான் என அவர்கள் கூறுவார்கள். 

இதே வேளை இதைத் தொடராகச் செய்பவர்களை மறுக்கமாட்டார்கள். அதை பித்அத்தாகப் பார்க்கவும் மாட்டார்கள். அதைச் செய்பவரை ஸுன்னாவுக்கு முரண்பட்டவராகவும் கருதமாட்டார்கள். இவ்வாறே பிரச்சினையான சந்தர்ப்பங்களில் ஓதப்படும் குனூத்தை மறுப்பவர்களையும் எதிர்க்கமாட்டார்கள். அந்தக் குனூத்தை விடுவதை பித்அத்தாகவும் கருதமாட்டார்கள். அதை விடுபவரை ஸுன்னாவுக்கு முரண்பட்டவராகவும் பார்க்கமாட்டார்கள். மாறாக, யார் குனூத் ஓதினாரோ அவரும் நல்லதையே செய்தார். யார் விட்டாரோ அவரும் நல்லதையே செய்தார். இஃதிதாலுடைய நிலை, துஆவுக்கும் அல்லாஹ்வைப் புகழ்வதற்கும் உரிய இடமாகும். இஃதிதாலில் இவ்விரண்டையும் நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். (ஸாதுல் மஆத் : 1ஃ266)
இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் இவ்வாறு நடுநிலையான ஒரு கருத்தை முன்வைத்தாலும் சுபஹுடைய குனூத் ஸுன்னா இல்லை என்பதையே மிகச் சரியான வலுவான கூற்றாகக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறிவிட்டு சுபஹுடைய குனூத் தொடர்பில் நீண்ட கருத்தாடலைச் செய்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் உலகைப் பிரியும் வரை பஜ்ரில் குனூத் ஓதினார்கள் என்ற செய்தி குறித்து இமாமவர்கள் பேசும் போது, இதன் அறிவிப்பாளர் அபூ ஜஃபர் அர்ராஸி என்பவர் பலவீனமானவர் என்பதை நிரூபித்துவிட்டு இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று கூறினால் கூட இப்போது சுபஹில் ஓதப்படும் குனூத்திற்கு ஒரு போதும் ஆதாரமாக அமையாது என்று கூறுகின்றார். குனூத் என்றால் நிற்றல், மௌனமாக இருத்தல், ஒரு இபாதத்தில் தொடராக இருத்தல், துஆ, தஸ்பீஹ், உள்ளச்சம் என பல அர்த்தங்கள் உள்ளன. அல்லாஹ் தன் திருமறையில்,
‘வானங்கள் மற்றும் பூமியில் இருப்போர் அவனுக்கே உரியவர்களாவர். (அவர்கள்) அனைவரும் அவனுக்கே அடிபணிந்து வழி படுகின்றனர்.’ (30:26)
என்று கூறுகின்றான். மேலும், ‘(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமையைப் பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுபவரா? அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என (நபியே!) நீர் கேட்பீராக! சிந்தனையுடையோர்தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.’ (39:09)
மேலும்,
‘இன்னும் இம்ரானின் மகள் மர்யமையும் (உதாரணமாகக் கூறுகின்றான்.) அவள் தனது கற்பைக் காத்துக் கொண்டாள். எமது ‘ரூஹி’ல் இருந்து அதில் நாம் ஊதினோம். அவள் தனது இரட்சகனின் வார்த்தை களையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். மேலும், அவள் வழிப்பட்டு நடப்போரில் ஒருவராகவும் இருந்தாள்.’ (66:12)
இந்த இடங்களில் எல்லாம் ‘குனூத்’ என்ற சொல்லின் தோற்றப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நபி(ஸல்) அவர்கள், தொழுகையில் சிறந்தது நீண்ட குனூத் உடைய தொழுகை என்று கூறியுள்ளார்கள். அதாவது, நீண்ட நேரம் நின்று தொழும் தொழுகை என்பதே இதன் அர்த்தமாகும். ஆரம்பத்தில் தொழுகையில் பேசுவது தடுக்கப்பட்டிருக்கவில்லை.
‘தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு ”(முற்றிலும்) அடிபணிந்த வர்களாக நில்லுங்கள்”’(2:238)
மேற்படி வசனம் அருளப்பட்ட பின்னர் நாம் தொழுகையில் மௌனமாக இருக்குமாறு ஏவப்பட்டோம், பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோம் என ஸைத் இப்னு அர்க்கம்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இந்த வசனங்களில் குனூத் என்பது ஏற்கனவே நாம் கூறிய அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்.
நபி(ஸல்) அவர்கள் சுபஹுடைய தொழுகைகளில் ருகூஃ வுக்குப் பின்னர் அல்லாஹும்மஹ்தினி பீமன் ஹதைத்த என்று சப்தத்தை உயர்த்தி ஓதினார்கள். பின்னால் உள்ளவர்கள் ஆமின் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் கூறவில்லை.
இஃதிதாலில்,
என்பது போன்ற நீண்ட துஆவை ஓதுவார்கள். புகழ்ச்சியும், துஆவுமுடைய இதுவும் ‘குனூத்’ தான்.
நீண்ட நேரம் இஃதிதாலில் நிற்பதும் குனூத் தான்; நீண்ட கிராஅத்துக்களை ஓதுவதும் குனூத் தான்; குறித்த இந்த துஆவும் குனூத்தான். குனூத் என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கும் போது அனஸ்(ரலி) அவர்கள் சுபஹில் குனூத் இருந்தது என்று கூறும் ஹதீஸின் அர்த்தம், குறித்த அந்த துஆவை ஓதுவதைத்தான் குறிக்கும் என்று எங்கிருந்து அர்த்தம் எடுப்பீர்கள்?
பஜ்ரில் குனூத் இருந்தது என பஜ்ருடைய தொழுகை விஷேடமாகக் கூறப்பட்டுள்ளதை வைத்து குறித்த இந்த துஆவைத்தான் குறிக்கும் என்று எடுக்க முடியாது.
குனூத் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. பஜ்ர் தொழுகை மற்ற தொழுகை அனைத்தும் உள்ளடங்கக் கூடியதே! குனூத் பற்றிக் கூறும் போது அனஸ்(ரலி) அவர்கள் பஜ்ரை மட்டும் விஷேடமாக இங்கே குறிப்பிட்டுள்ளார்கள். இந்த குனூத்தை காபிர்களுக்கு எதிரான குனூத் என்று கூற முடியாது. முஃமின்களிலுள்ள பலவீனமானவர் களுக்கான துஆ என்றும் கூற முடியாது. ஏனெனில், அனஸ்(ரலி) அவர்களே இந்த குனூத்தை நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் ஓதிவிட்டு பின்னர் விட்டுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களின் பஜ்ர் தொழுகையில் குனூத் இருந்தது என்ற அனஸ்(ரலி) அவர்களின் கூற்று, குறித்த இந்த துஆவை நபி(ஸல்) அவர்கள் குனூத்தில் ஓதினார்கள் என்பதேயாகும். நான்கு கலீபாக்களும், அல் பராஜ் இப்னு ஆஸிப், அபூ மூஸல் அஸ்அரி, அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஆகியோர் குனூத் ஓதியுள்ளனர் என்று சிலர் வாதிடலாம்.
இதற்கு பல கோணங்களில் பதில் கூறலாம்.
01. நபி(ஸல்) அவர்கள் சுபஹிலும் மஃரிபிலும் குனூத் ஓதினார்கள் என்றே அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி) சுபஹை மட்டும் குறிப்பிட்டுக் கூறவில்லை. இவ்வாறே அல் பராஃ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். பஜ்ரில் மட்டும் குனூத் ஓத வேண்டும் என்று இதை வைத்து எப்படிக் கூற முடியும்?
இந்தக் கேள்விக்கு மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டுவிட்டது என நீங்கள் கூறினால் உங்களுடன் முரண்பட்ட கூபாவாசிகளும்; அவ்வாறே பஜ்ருடைய குனூத்தும் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுவார்கள். நீங்கள் மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தைக் கொண்டு வந்தாலும், அது சுபஹுடைய குனூத்தும் மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கு ஆதாரமாகவே அமையும். மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டு விட்டது, சுபஹுடைய குனூத் மட்டும் சட்டமாக்கப்பட்டது என்பதற்கு நீங்கள் எந்தவொரு ஆதாரத்தையும் ஒரு போதும் கொண்டு வர முடியாது.
அனஸ்(ரலி) அவர்களது அறிவிப்பில் வரும் மஃரிபுடைய குனூத் என்பது பிரச்சினைக்காக ஓதப்பட்ட குனூத். வழமையாக ஓதப்படும் குனூத் அல்ல என்று நீங்கள் கூறினால் உங்களுடன் முரண்பட்டிருக்கும் அஹ்லுல் ஹதீஸைச் சேர்ந்தவர்கள், ஆமாம். அப்படித்தான் பஜ்ரில் குனூத் ஓதினார்கள் என்று வருவதும் பிரச்சினைக்காக ஓதிய குனூத்தே தவிர வழமையாக ஓதும் குனூத் குறித்து பேசும் செய்தி அல்ல அது என்று கூறுவார்கள். இரண்டு குனூத்துக்குமிடையில் என்ன வேறுபாடு இருக்கின்றது.
சுபஹுடைய குனூத் என்று வருவது வழமையான இந்தக் குனூத்தைக் குறிக்காது. பிரச்சினையான சந்தர்ப்பத்தில் ஓதப்பட்ட குனூத்தையே குறிக்கும். இதை அனஸ்(ரலி) அவர்களே அறிவிக்கின்றார்கள்.
சுபஹில் வழமையாக குனூத் ஓதுவதற்கு தூண் போன்று ஆதாரமாக அமைவதே அனஸ்(ரலி) அவர்கள்தான். அனஸ்(ரலி) அவர்களே அந்த குனூத் பிரச்சினைக்காக ஓதப்பட்ட குனூத் தான். பின்னர் அதை விட்டுவிட்டார்கள் என்று அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் அறபிகளின் சில கோத்திரங்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். பின்னர் விட்டுவிட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பஜ்ரில் தொடராக குனூத் ஓதியதாக சிலர் வாதிடுகின்றனர் என்று நாம் அனஸ்(ரலி) அவர்களைக் கேட்ட போது, ‘பொய் சொல்கின்றனர். நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் சில அறபிக் கூட்டங்களுக்கு எதிராகக் குனூத் ஓதினார்கள்’ என பதிலளித்தார்கள்.
கைஸ் இப்னுர் ரபீக் எனும் இச்செய்தியின் அறிவிப்பாளரை யஹ்யா இப்னு மயீன்(ரஹ்) அவர்கள் பலவீனப்படுத்தியிருந்தாலும் மற்றும் சிலர் அவரை உறுதிப்படுத்தியுள்ளனர். அபூஜஃபர் அர்ராஸியைப் போன்றவர் அல்ல இவர். நபி(ஸல்) அவர்கள் உலகைப் பிரியும் வரை சுபஹில் குனூத் ஓதினார்கள் என்ற செய்தியை அறிவிக்கும் பலவீனமான அபூஜஃபர் அர்ராஸியை ஆதாரமாக எடுப்பவர்கள் இந்த ஹதீஸை கைஸ் இப்னு ரபிஃயைக் காரணம் காட்டி ஏற்க முடியாது என்று எப்படிக் கூற முடியும்.
சுபஹுடைய குனூத்தை ஆதரித்துப் பேசும் அபூ ஜஃபர் அர்ராஸியை விட அதை மறுத்துப் பேசும் கைஸ் பலமானவர் அல்லது அவரின் நிலையில் உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். கைஸ் பலவீனமானவர் என்று கூறியவர்களை விட அதிகமானவர்கள் அபூஜஃபர் அர்ராஸியை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
அடுத்து, அனஸ்(ரலி) அவர்கள் பிஃர்மஊனாவில் நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது கொலை செய்தவர்களுக்கு எதிராக குனூத் ஓதியதாக அறிவிக்கின்றார்கள். இதுதான் குனூத்தின் ஆரம்பம் என்றும் கூறுகின்றார்கள். இதிலிருந்து குனூத் என்பது நபி(ஸல்) அவர்களின் வழமையான நடவடிக்கையாக இருக்கவில்லை என்பதும், ‘குனூத் ஆரம்பமானது. ஒரு மாதத்திற்குப் பின்னர்’ விட்டுவிட்டார்கள் என்ற அனஸ்(ரலி) அவர்களின் வார்த்தைகளில் இருந்து இது பிரச்சினையான சந்தர்ப்பத்தில் ஓதப்படும் குனூத்தைத்தான் குறிக்கும் என்பது தெளிவாகின்றது.
நபி(ஸல்) அவர்கள் சுபஹில் குனூத் ஓதினார்கள் என்றும் ழுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபஹ் (அபூதாவூத்) ஐவேளையும் குனூத் ஓதினார்கள் என்றும் ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, சுபஹில் மட்டுமன்றி ஏனைய தொழுகைகளிலும் ஓதப்பட்ட குனூத் குனூதுன்னவாஸில்தானே தவிர சுபஹில் மட்டும் ஓதப்படும் இந்த குனூத் ஆதாரபூர்வமானதல்ல என இமாமவர்கள் விரிவாக விளக்குகின்றார்கள். மேலதிகத் தகவல்களுக்கு ஸாதுல் மஆதைப் பார்வையிடலாம்.
முடிவாக:- சுபஹில் மட்டும் வழமையாக குனூத் ஓதப்படுவது ஸுன்னா அல்ல. பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளை குனூத் ஓதலாம்.
குனூத் விடயத்தில் ஒருவர் மற்றவரை எதிர்ப்பதும், விரோதிப்பதும் முன் சென்ற அறிஞர்களின் நடுநிலையான போக்கிற்கு எதிரானதாகும் என்ற உண்மைகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

                                                                                                               S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget