இஸ்லாமிய பார்வையில் ஊடகங்கள் எதற்காக.?

மனித சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் அருட்கொடைகளில் இன்றியமையாத ஒன்றுதான் எமது கைகளில் உலாவருகின்ற ஊடகங்கள். ஆம் அதை ஒரு அருட்கொடையாக நோக்கினால் அது மாபெரும் அருட்கொடைதான். நிச்சயமாக ஒரு சமூகம் அதை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் காணும் போது அது மாபெரும் அருட்கொடை என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் இன்னுமொரு சமூகம் இந்த ஊடகங்களினால் வழிகெட்டு ,படுகுழியில் வீழ்ந்து கிடப்பதை காணும் போது இப்படி ஒரு ஊடகம் இந்த சமூகத்திற்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

இளைஞர்கள், யுவதிகள், திருமணமானவர்கள், ஆகாதவர்கள், சிறுவர்கள் என எல்லோருமே சினிமா , பாடல் , கூத்து என ஆபாசமான , பாவமான விடயங்களை பதிவிடுகிறார்கள் . மேலும் அதைப் பகிர்ந்து இன்பம் காண்கிறார்கள் . இந்த விடயங்களைப் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பாவத்தில் இவர்களுக்கு மிக முக்கிய பங்குண்டு என்பதை இத்தகையவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .  

உண்மையில் இந்த விடயத்தில் கற்றவர்கள்,ஆலிம்கள், கல்வியில் உயர்வு கண்ட சில மேதைகள் என தங்களை சொல்லிக் கொள்வோரும் விதிவிலக்கல்ல. எவ்வளவுதான் மார்க்கம் பேசினாலும் தனி மனிதர்களுக்கிடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினைகள் வாட்சப், பேஸ்புக் போன்ற வலயத்தலங்கள் மூலம் பழிவாங்கப்படுகின்றது.

அமைப்புகளுக்கிடையே உள்ள நிர்வாக பிரச்சினையா? அதுவும் பேஸ்புகில் தான், குடும்பங்களுக்கிடையில் பிரச்சினையா? அதுவும் பேஸ்புக்கில், பாடசாலையில் பிரச்சினையா? அதுவும் பேஸ்புக்கில், குடும்பத்துடன் சுற்றுலா பயணமா? மனைவியின் பிறந்தநாளா? எல்லாமே பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் . எந்தளவுக்கெனில் கணவன் மனைவியின் அன்புப் பரிமாறல்கள் , இன்னும் பிரச்சினைகள் எல்லாம் இன்று இந்த ஊடகங்கள் மூலம் சந்தைக்கு வந்து விட்டன.

பக்கத்து வீட்டு கணவன் மனைவி பிரச்சினையை எதிர் வீட்டுக்காரன் பதிவிடுகின்றான். இன்னும் எத்தனை விடயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எதை எதில் பதிவிட வேண்டும் என்ற ஒரு வரையறை இல்லை, யார் எதைப் பதிவிட வேண்டும் என்ற வரையறை இல்லை.

இங்கு, உங்கள் எலோருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதின் பால் சற்று திரும்புங்கள்: முஸ்லீம் கிரந்தத்தில் பதிவாகியுள்ள ஹதீத்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய அனைத்தும் இன்னொரு முஸ்லிமுக்கு ஹராமாகும்: அவனுடைய இரத்தம், அவனுடைய மானம், அவனுடைய சொத்து. எனவே ஒரு மனிதனுடைய மானம் சம்பந்தப்பட்ட விடயத்தை நீங்கள் பதிவிடும் சந்தர்ப்பத்தில் 40 பேருக்கு தெரிந்த விடயம் 400000 பேருக்கு தெரிய வருகிறது.

இதனால் நீங்கள் அடையும் பயன் தான் என்ன? அவன் அவமானப்பட்டு விட்டான். அசிங்கப்பட்டு விட்டான், இனி சமூகத்தில் தலைகாட்ட முடியாதவாறு செய்துவிட்டோம் என பூரிப்படைகிரீர்களா? உங்களைப் பார்த்து அல்லாஹ் வெட்கப்படுகின்றான், உங்கள் மானத்தை அல்லாஹ் உலகமக்கள் அனைவரின் முன்னாலும் அசிங்கப்படுத்துகிறான்.

இந்த அசிங்கங்களை பதிவிட ஒரு கூட்டம், அதை லைக் பண்ண இன்னொரு மானமிழந்த முஸ்லீம் கூட்டம், அதை செயார் பண்ண இன்னுமொரு வேலையில்லாத கூட்டம்.

நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: புறம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? தோழர்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ உனது சகோதரன் வெறுப்பதை நீ கூறுவதாகும்” அப்போது கேட்கப்பட்டது: நான் கூறுவது எனது சகோதரனில் இருந்தாலும் புறமாகுமா? ஆம், நீ கூறுவது உனது சகோதரனில் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசிவிட்டாய், நீ கூறுவது அவனிடத்தில் இல்லாவிட்டால் அவனைப் பற்றி நீ இட்டுக்கட்டிவிட்டாய். (முஸ்லிம்)

எனவே நான் இங்கு கூற முனைவது, நீங்கள் வாட்சப்பிலோ, பேஸ்புக்கிலோ பதிவிடக்கூடிய விடயம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், குறிப்பிட்ட மனிதரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் குற்றவாளிகள் என்பதில் ஐயமில்லை.

ஒரு வீட்டில் நடந்த பிரச்சினை அல்லது இரு அயல் வீட்டின் பிரச்சினையை மறைவிலிருந்து படம் பிடித்து இவ்வாறான ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். 

உண்மையில் பிரச்சினைப் பட்டவர்கள் ஒரு வாரத்தின் பின்னோ அல்லது ஒரு மாதத்தின் பின்னோ உறவாகிவிடுவார்கள். ஆனால் நாம் இட்ட பதிவினை அளித்துவிட முடியுமா?

கணவன் மனைவி பிரச்சினையை பதிவிட்டு பல்லாயிரம் பேருக்கு காண்பிக்கிறோம், அவர்கள் ஒரு வருடத்தின் பின் உறவாகி சேர்ந்து வாழ்வார்கள், நாம் இட்ட பதிவினை அழித்துவிட முடியுமா? இப்படி இன்னும் எத்தனை எத்தனை தனி நபர்களின் மானத்தில் கை வைத்திருக்கின்றோம், இதற்கு நாம் ஒவ்வருவரும் பொறுப்புதாரிகள்.

திருமணம் நடந்தால் மனைவியுடன் ஒரு செல்பி, தியட்டருக்கு போனால் டிக்கட்டுடன் ஒரு செல்பி, பிள்ளை பிறந்தால் பிள்ளையுடன் ஒரு செல்பி, உம்ராவிற்குப் போனால் இஹ்ராமுடன் ஒரு செல்பி, யாரும் தூக்கில் தொங்கினால் அதனுடனும் ஒரு செல்பி, விபத்துக்குள்ளான வாகனத்திலும் செல்பி.

சூரத்துல் கஸஸ்: 55 ல் அல்லாஹ் கூறுகிறான்:
وإذا سمعوا اللغو أعرضوا عنه

“வீணானதை அவர்கள் செவிமடுத்தால் அதை அவர்கள் புறக்கணித்துவிடுவார்கள்” இன்னுமொரு இடத்தில் உண்மை முஃமின்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது

والذين هم عن اللغو معرضون
“உண்மையான முஃமின்கள் வீணானதை விட்டும் புறக்கணித்து இருப்பார்கள்” எனக் கூறுகிறான்.

எனவே ஊடகங்களை வீணான விடயங்களுக்கு பயன்படுத்தாமல் இந்த சமூகத்தின் இளைஞகள் , யுவதிகள் , கணவன் மனைவி பயன்பெறக்கூடிய நல்ல நல்ல கருத்துக்கள், கட்டுரைகள், ஆக்கங்கள் போன்றவற்றை பதிவிடுவது மிக மிகப் பயனளிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

ஆக தனிப்பட்ட ஒருவரை பழிவாங்குவதற்காகவோ அல்லது ஒரு அமைப்பை பழிவாங்கவோ ஊடகங்கள் இல்லை என்பதை மனதிற்கொண்டு சமூகத்தில் சில தவறுகளை காணும் பட்சத்தில் அதனை அல்குர்ஆன், அல்ஹதீத் ரீதியில் அழகிய முறையில் சுட்டிக்காட்டி எமது பதிவுகளை பதிவிடப் பழகிக்கொள்ள வேண்டும்.

நான் முன்பு குறிப்பிட்டதைப் போன்று மற்றவரின் மானம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விடயத்தில் கவனமாக மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.

ஏனெனில் அந்த விடயம் அவரிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அதில் குற்றவாளிகள் என்பதை மனதிற்கொண்டு மானக்கேடான விடயங்களை பதிவிடுபவர், அதை லைக் பண்ணுபவர், கொமன்ட் பண்ணுபவர் எல்லோரும் பாவத்தில் சமமானவர் உணர்ந்து கொள்ள வேண்டும் .

வீணான செயலிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் எமது சந்ததியையும் பாதுகாப்பானாக!


                                                                             மொளவியா:- ஷர்மிளா ஷரஇய்யா-

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget