பெண்ணியம் போற்றும் இஸ்லாம்.!

"பெண்களை மதிப்போம்! அவர்களுக்கான உரிமைகளை வழங்குவோம்!" என்று சிலர் இன்றைக்கு பேசிக்கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது. ஆனால், இத்தகைய பேச்சுக்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடியவர்களை இச்சமுதாயத்தில் நாங்கள் காண இயவில்லை! 

ஒருபுறம் பெண்ணுரிமையை பேசக்கூடிய இவர்கள், இதற்கு ஊறுவிளைவிக்கும் காரணியை மறுபுறத்தில் இருந்து கணகச்சிதமாக செய்துவிடுகின்றனர். இதிலும், "சமூக சீர்திருத்தவாதிகள்" என்று இவர்கள் தங்களை அழைத்துக்கொள்வதுதான் பெரும் வேடிக்கையாக உள்ளது. 

ஆதி மார்க்கமான இஸ்லாமோ கல்வி, இல்லறம், குழந்தை பங்கீடு, சொத்துரிமை என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான உரிமைகளை முறையாக வழங்கி அவர்களை சிறப்பித்து போற்றுகிறது. 

பெண் குழந்தைகளை சாபக்கேடாக நினைத்து அவர்களை கொல்லக்கூடிய அறியாமை நிலை இன்றைக்கும் சமூகத்தில் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ நடவடிக்கைகளை அரசாங்கமும், தனி மனிதர்களும் மேற்கொண்டும்கூட இவ்விடயத்திற்கு முழு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. இந்நிலையை முழுமையாக மாற்றியமைத்து, பெண் பிள்ளை பிறப்பதை நற்செய்தியாக கூறச்செய்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! 

"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." (அல்குர்ஆன் 17:31)

"அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்."

"எதைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா.? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?"
(அல்குர்ஆன் : 16: 58,59)

பெண் குழந்தைகள் பிறப்பதை இச்சமூகம் வெறுப்பதற்கான பிரதான காரணம் "வரதட்சணையே!". இதனால்தான் இன்றைக்கு திருமண வயதை தாண்டியும் திருமணமே ஆகாமல் பல பெண்கள் இச்சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஒருகணம் இதை நினைக்கும்போது மிகக்கவலையாக உள்ளது. 

சீர்த்திருத்தவாதிகள் என்று மார்தட்டிக்கொள்வோர் இவ்விடயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அது ஏனென்றுதான் தெரியவில்லை(?) 

இஸ்லாத்தில் வரதட்சணை எனும் முறை தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்ணுக்கான தேவையை மணமகனே பூர்த்திசெய்து அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென இஸ்லாம் கட்டளை பிறப்பித்துள்ளது. இதற்கு "மணக்கொடை" என்றும் பெயரிட்டுள்ளது.

"நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடைகளை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள்!"
(அல்குர்ஆன் : 4:4)

அடுத்ததாக, ஒரு பெரும் குற்றச்சாட்டு இஸ்லாமிய சமூகத்தை நோக்கி வைக்கப்படுகிறது. அது என்னவென்றால்,  'ஆடை முறையின் மூலம் இஸ்லாமிய பெண்கள் அடிமைப்படுகிறார்கள்' என்பதே! 

இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடைமுறையை 'அடிமைத்தனம்' என்று விமர்சிக்கக் கூடியவர்கள் யாரென்றால் மேற்கத்திய ஆடை கலாச்சாரங்களை அப்படியே சரிகாணக்கூடியவர்கள்தாம்! 

ஆடைச் சுதந்திரம் என்கிற பெயரில் அறைகுறை ஆடையணிந்து உலாவுவதால்தான் கற்பழிப்பும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் இன்றைய சமூகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது (!)  

உண்மையில் இஸ்லாம் கூறும் ஆடைமுறையான "ஹிஜாப்" மட்டுமே பெண்களை பல தீய விளைவுகளிலிருந்து காக்கக்கூடிய கேடயமாக உள்ளது. 

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்..." (அல்குர்ஆன் : 24:31)

இப்போது கூறுங்கள்... பெண்களுக்கு பாதுகாப்பான ஆடைமுறை எது?
கண்ணியமான ஹிஜாப் ஆடையா.?? (அல்லது) மேற்கத்திய அறைகுறை ஆடையா..??

அடுத்ததாக, பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தாழ்வாகக் கருதக்கூடிய நிலை இன்றைக்கு சில மக்களிடத்தில் காணப்படுகிறது. இவ்வாறான செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :"ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தைகளுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டாமலும் இருந்தால், இறைவன் அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்”. (நூல்: அபூதாவூத்)

மேலும், ஆண் - பெண் ஒப்பீட்டின் மூலம் பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்படும் இடத்தில்கூட பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாம் வழங்கச் சொல்லியுள்ளது. 
‏ 
"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." (அல்குர்ஆன் : 4:7)

இஸ்லாம் பெண்களை கல்வி கற்க தூண்டுவதில்லை என்று ஒருபுறத்தில் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இஸ்லாத்தை முறையாக படிக்காமலே இத்தகைய நச்சுக்கருத்துகளை சமூகத்தில் விதைக்கிறார்கள். 

கல்விக்கான முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுத்துள்ளதை போன்று உலகில் வேறு எந்த மார்க்கத்திலும் கொடுக்கப்படவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?

இதோ நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

"கல்வியை தேடிப்பெறுவது ஒவ்வொரு முஸ்லிமான (ஆண், பெண்) மீதும் கட்டாயக் கடமையாகும்! (நூல் : இப்னுமாஜா)

இவ்வாறாக எல்லா ரீதியிலும் பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாம் குறைவில்லாமல் வழங்கி போற்றியுள்ளதை நாம் மேற்கண்ட செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது.  மேலும், 'இஸ்லாமிய பெண்ணடிமைத்தனம்' என்பது ஓர் போலியான வாதம் என்பதும் நமக்கு கண்கூடாக விளங்குகிறது. 

பெண்களை கண்ணியப்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி நீங்களும் வாருங்கள்! எல்லாம் வல்ல இறைவன் நமக்கு ஈருலகத்திலும் வெற்றியை தருவானாக...

                                                                                     ஆக்கம் : R. ரய்யான் 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget