April 2019

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“பொறுமையின் மூன்று வகைகளையும் நோன்பு உள்ளடக்கியிருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
1- அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காக பொறுமை காத்தல்: (இது, நோன்பில் இருக்கிறது!)
2 – (பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல். (இதுவும் நோன்பில் இருக்கிறது!)
3 – அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி ‘கழா கத்ர்’ பிரகாரம் நடக்கும் சோதனைகளுக்காகப் பொறுமையாக இருத்தல். (நோன்பில் இதுவும் இருக்கின்றது!)
அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காகப் பொறுமை காத்தல்: நோன்பு என்ற வழிபாட்டின் மீது நோன்பாளி தன்னைச் சிரமப்படுத்தி, கஷ்டப்படுத்திக்கொள்கிறார். சில வேளைகளில் தனக்கு அது வெறுப்பாக இருந்தாலும் இப்படி அவர் செய்கிறார். அப்படி அவர் வெறுப்பது அதிலுள்ள சிரமத்தைத்தான்!.
(பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல்:
பொறுமையின் இரண்டாவது வகையான இதுவும் நோன்பாளியின் விடயத்தில் நடக்கிறது! எவ்வாறெனில், அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டும் நோன்பாளி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்; எனவேதான் அவர் வீண் விடயங்கள், மனைவியுடனான (பகல் நேர) உடலுறவு, அசிங்கமான பேச்சு, பொய் போன்ற அல்லாஹ் தடுத்திருக்கும் ஹராமான விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்கிறார்.
அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி ‘கழா கத்ர்’ பிரகாரம் நடக்கும் சோதனைகளுக்காகப் பொறுமையாக இருத்தல்:
இது எப்படியெனில், நோன்பு நாட்களில் நோன்பாளிக்கு ஏற்படும் சோதனைகளுக்காக அவர் பொறுமை காப்பதாகும்! குறிப்பாக உஷ்ணமான நாட்களிலும், நேரங்கள் நீண்டுள்ள நாட்களிலும் சோம்பல், சோர்வு மற்றும் களைப்புகளால் அவர் வேதனையடைந்து தொந்தரவுப்படுவார். என்றாலும், அவர் பொறுமையோடு இருப்பார். காரணம், இது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் முகமாக நடந்ததாகும்!.
இவ்வாறு, மூன்று வகையான பொறுமையும் நோன்பாளியிடம் உள்ளடங்கியிருப்பதால்தான் அவருக்கான கூலியும் கணக்கின்றி வரையரையில்லாமல் இருக்கின்றது. அல்லாஹ் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும்!’ (அல்குர்ஆன், 39:10)
{ நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 05/267 }

           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
             [قال أهل العلم: ولأن الصوم إشتمل على أنواع الصبر الثلاثة:-
الأول: ففيه صبر على طاعة الله.
الثاني: وصبر عن معصية الله.
الثالث: وصبر على أقدار الله.
  • أما الصبر على طاعة الله: فلأن الإنسان يحمل نفسه على الصيام مع كراهته له أحيانا، يكرهه لمشقته…
  • الصبر عن معصية الله: وهذا حاصل للصائم؛ فإنه يصبّر نفسه عن معصية الله عزّ وجلّ، فيتجنّب الّلغو والرّفث والزّور وغير ذلك من محارم الله.
  • الصبر على أقدار الله: وذلك أن الإنسان يصيبه في أيام الصوم، ولاسيما في الأيام الحارّة والطّويلة من الكسل والملل والعطش ما يتألّم ويتأذّى به، ولكنّه صابر؛ لأن ذلك في مرضاة الله.
        فلما اشتمل على أنواع الصبر الثلاثة كان أجره بغير حساب؛ قال الله تعالى: « إنّما يوفّى الصابرون أجرهم بغير حساب » (سورة الزّمر : ١٠)
{ شرح رياض الصالحين ، ٥/٢٦٧ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத் (காஸிமி,மதனி)

ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை பாடசாலை செல்லும் வயது வரும் முன்னே எந்தப் பாடசாலையில் சிறப்பான கல்வித்தகைமையோடு நல்லொழுக்கம், பண்பாடு கற்பிக்கப்படுகின்றது என்றே பார்க்கின்றனர். ஏனென்றால் இன்று அதிகமான பாடசாலைகளில் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைத் தேடுவதென்பது மிகவும் கஷ்டமாகவே உள்ளது.

எல்லாப் பெற்றோர்களின் மணதிலுமே இருக்கக்கூடிய பயம் என்ன தெரியுமா? என் பிள்ளையை ஒழுக்கமாக கௌரவமாக ஸாலிஹான பிள்ளைகளாக வளர்க்க முடியுமா? என்பது தான். 
இதே பயம் ஏன் அறிவை ஊட்டி நிறையப் புள்ளிகள் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெறுமை சேர்த்து பல பட்டங்கள் பெற்று நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு வழி நடாத்தும் ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை?
இந்த நாகரீக உலகில் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை, பண்பாட்டை, மரியாதையை பல சிரமத்தோடு விதைக்கின்றனர். ஆனால் எங்கு ஒழுக்கம் பண்பாடு கற்பிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறதோ அங்கே ஒழுக்க விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
ஏனென்றால் இன்று பாடசாலைக் கூட்டங்களுக்கோ, இல்லவிளையாட்டுப் போட்டிகளுக்கோ, பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கவோ சென்று ஆசிரியைகளின் ஆடையின் நிலையைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவும் பயமாகவுமே உள்ளது. கண்களைக் கவரக்கூடிய நிறங்களில் டெனிம் ஹபாயா என்றும் படப்லெய் ஹபாயா என்றும் ஒரு சிறிய துணியை தலைக்கு மாத்திரம் சுற்றி உடலின் முன் பின் அங்கங்கள், மார்பின் அளவு என்று அனைத்தையும் படம் பிடித்துக் காட்டக்கூடிய அமைப்பிலேயே அவர்கள் ஆடை முறை இருக்கின்றது.
அண்ணிய ஆண் ஆசிரியர்கள் , வளர்ந்த ஆண் பிள்ளைகள் என்று தங்கள் அழகையும் மறைவிடங்களையும் யாரிடம் ஒரு பெண் மறைக்க வேண்டுமோ அவ்வாரான அஜ்னபியான, ஒவ்வொரு அங்கத்தினதும் வித்தியாசத்தை அறியக்கூடிய வயதிலுள்ளவர்கள் தான் அங்கே இருக்கின்றனர். ஆனால் ஆசிரியைகள் தங்களை எந்தளவு அழகு படுத்த முடியுமோ அந்தளவு அழகை வெளிப்படுத்தி யாரும் தன்னை ரசிக்கலாம் என்று தான் பாடசாலைக்கு வருகை தருகிறார்கள். ஒழுக்கத்தோடு இருக்கும் ஆசிரியர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.
சில ஆசிரியைகளின் இருக்கமான, கவர்ச்சியான, ஒழுக்கம் இல்லாத ஆடையையும், ஒழுக்கமற்ற நடைகளையும், கண்ணுக்கும், முகத்துக்கும் போடும் மேக்கப்களையும் உங்கள் மாணவ மாணவிகளான சமூகத்தின் கண்களான எங்கள் பிள்ளைகள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது.
இன்றைய காலத்தில் எந்த ஒரு மாணவருக்கும் தன் ஆசிரியரைப் பற்றி நல்லெண்ணமோ , மரியாதையோ இல்லை. இதற்குக் காரணம் ஒவ்வொரு ஆசிரியையினதும் நடத்தையே!! ஒழுக்கம் இல்லாத கல்வியும் ,அந்தஸ்த்தும் பதவியும், தகைமையும் ஒரு மனிதனை எந்த வகையிலும் முழுமைப் படுத்தமாட்டாது. எனவே பீ.ஏ, எம்.ஏ என எந்தப் பல்கலைக்கலகங்களில் கற்ற மௌலவி ஆசிரியை என்ற பட்டத்தோடு உலா வந்தாலும் அது வெறுமையான காகிதத்துண்டுதான்.
நாளை உங்களிடம் கற்ற மாணவிகள் ஒழுக்கமற்ற ஆடைகளை அணியும் போது உங்களால் தைரியமாக தட்டிக்கேட்க முடியுமா.? மார்க்கத்துக்கு முரணாக நடக்கும் போது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா.? நிச்சயமாக முடியவே முடியாது. ஏனென்றால் தன்னிடம் குறையிருக்கும் போது தன் பிள்ளைகளை எச்சரிக்கை செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு ஆசிரியையும் தன் ஆடை விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தன்னை முழுமையாக மறைக்கக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் பாடசாலை விடுமுறையின் போதும் பிள்ளைகள் எப்படி சீறுடையை அகலமாகவும், நீட்டமாகவும் உடல் முழுதுமாக எல்லா அங்கங்களும் மறைந்து இருக்க வேண்டும் என்று சீறுடைக்கு அளவு எடுத்துக் கொடுக்கும் பாடசாலை ஓழுக்காற்றுக் குழுத் தலைவரான அதிபர் உற்பட ஆசிரியர்கள் ஏன் ஆசிரியைகளின் ஆடை முறையைக் கவனிக்கத் தறுகின்றனர்.?
காதில் நீண்ட தோடு போடுவதைக் கண்டிக்கும் ஆசிரியைக்கு ஏன் நீண்ட ஷோல் அல்லது பர்தா அணிய முடியாது.?
இரண்டு பிண்ணல் இல்லாதவர்களைக் கண்டிக்கும் ஆசிரியைகளுக்கு ஏன் ஹபாயாக்களை அகலமாக உடுக்க முடியாது??
சீறுடையின் அளவை சோதிக்கும் ஆசிரியைகளுக்கு ஏன் மேக்கப் இல்லாமல் வரமுடியாது.? ஒழுக்கமான பிள்ளைகளை சமூகத்துக்குக் வளர்த்துக் கொடுப்பதில் பெற்றோறுக்குக் கடமை இருப்பது போலவே ஆசிரியர்களுக்கும் அதிகமான பங்கு இருக்கின்றது. என்பததை ஒவ்வொரு ஆசிரியையும் மறந்துவிடக் கூடாது.
அதே போன்று கற்பித்தல் முறையில் ஏதும் குறையிருந்தால் வகுப்பாசிரியரை மாற்றுகின்ற பெற்றோர்கள் ஒழுக்கமற்ற ஆடைகளை அணிந்துகொண்டு வருகின்ற பண்பாடற்ற ஆசிரியைகளையும் மாற்றுவதற்கு ஏன் முன்வறுவதில்லை.? 
இவர்களுடைய இந்த நிலையை மாற்றியமைக்க பாடசாலையின் அதிபர் உட்பட பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

                                                                         உம்மு முஸ்அப் உஸைமீனிய்யா

“லா தஹ்ஸன் இன்னல்லாஃ மஅனா” கவலைப்படாதே, அல்லாஹ் எம்முடன் உள்ளான். இந்த வார்த்தை யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பது தெரியுமா தம்பி தங்கைகளே! வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மக்காவில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்த போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை முஸ்லிம்கள்
சந்தித்தனர். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றில் நீந்தி எரிமலைகளைக் கடந்து செல்வது போலிருந்தது. இறை நிராகரிப்பாளர்களின் வதைகள் வரம்பு மீறிப்
போன போது நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்கள் சிலரை அபீசீனியாவுக்கு அனுப்பினார்கள். அதன்பின் சிலரை மதீனாவுக்கு அனுப்பினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் என்று கூறப்படும். நபி(ஸல்) அவர்கள் தோழர்களை அனுப்பிவிட்டு மக்காவிலேயே இருந்தார்கள்.
மக்கத்து காபிர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள். எல்லா கோத்திரத்தில் இருந்தும் ஒவ்வொரு இளைஞனை எடுத்து அவர்கள்
மூலமாக நபியைக் கொல்ல வேண்டும். அப்படிச் செய்தால் தான் முஹம்மது நபியின் குடும்பத்தால் பழிவாங்க முடியாது போகும் எனத் திட்டம் தீட்டினர்.
இதன்படி மக்கத்து காபிர்கள் முஹம்மது நபியின் வீட்டை முற்றுகையிட்டனர். 
அவர் தமது படுக்கையில் தமது ஒன்றுவிட்ட தம்பி அலி(ரலி) அவர்களை உறங்க வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். நபி(ஸல்) அவர்கள் தமது உயிர்த் தோழர் அபுபக்கர்(ரலி) வீட்டுக்கு வந்தார்கள். இரவு நேரத்தில் தன் தோழரைக் கண்ட அபுபக்கர், நிலைமையை உணர்ந்து கொண்டார். நாடு துறக்க நபிக்கு கட்டளை வந்துவிட்டது என்பது அவருக்குப் புரிந்து விட்டது. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
மக்காவாசிகள் சிறந்த குதிரை வீரர்கள். எனவே அவர்கள் விரட்டிப் பிடிப்பதில் வீரர்கள். அதனால் முஹம்மது நபி தொடர்ந்து பயணம் செய்யாமல்
எதிரிகளைத் தேடி அலையவிட்டு, அவர்கள் ஓய்ந்த பின்னர் பயணத்தைத் தொடர முடிவு செய்தார்கள். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ‘தவ்ர்’ எனும்
குகையில் இருவரும் ஒளிந்து கொண்டனர். தமக்கு உணவு தருவதற்கும் மக்காவின் தகவல்களைத் தருவதற்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர். 
அந்தக் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். முஹம்மதையும் அபுபக்கரையும் உயிருடனோ, மரணித்த நிலையிலோ கொண்டு சென்றால் ஒட்டகங்கள் பரிசாகக் கிடைக்கும் எனும் அறிவிப்பால் மக்கா இறைநிராகரிப்பாளர்கள் அவரைத் தேடி அலைந்தனர். ஒரு கூட்டம் ‘தவ்ர்’ குகைப் பக்கம் வந்து விட்டனர். குகைக்குள் இருப்பவர்களுக்கு மேலே இருப்பவர்களின் கால்கள் தெரிகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் தான் எதிரிகள் கண்டு விடுவார்களோ… இறைத்தூதரைக் கொன்று விடுவார்களோ… என்ற கவலையும் கலக்கமும் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. அப்போது அவர், “இறைத்தூதரே! அவர்களில் ஒருவர் தனது பாதங்களைப் பார்த்தால் கூட எம்மைக் கண்டு விடுவார்களே! நாம் இருவர் தானே உள்ளோம். அவர்கள் பலர் உள்ளனரே! என்ன செய்வது?” என்று தனது கவலையை வெளியிட்டார். அப்போது அபுபக்கரைப் பார்த்த இறைத்தூதர், “நாம்
இருவர் இருக்கின்றோம் என்று கவலையா? நாம் இருவர் இல்லை; மூவர் உள்ளோம். அல்லாஹ்வும் எம்முடன் இருக்கின்றான்.
“லா தஹ்ஸன் ( கவலைலப்படாதே! ) இன்னல்லாஹ மஅனா (நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் உள்ளான்) என ஆறுதல் கூறி உறுதிப்படுத்தினார். குகையில் இருக்கும் நிலையிலும் எதிரிகள் கொலை வெறியுடன் சூழ்ந்திருந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அல்லாஹ் தனது அமைதியை இறக்கினான். காபிர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அந்த இடத்தில் தேடாமல் சென்று விட்டனர். இதனால் உத்தம நபியும் அவரது உயிர்த்தோழர் அபுபக்கர்(ரலி)யும் பாதுகாக்கப்பட்டனர்.
அல்லாஹ் பாதுகாக்க நினைத்தால் எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாப்பான் என்பதற்கு இந்நிகழ்ச்சி நல்ல சான்றாக அமைந்தது. இது குறித்த வசனத்தை சூறா ‘அத்தவ்பா’ 9ஆம் அத்தியாயம் 40ஆம் வசனத்தில் காணலாம்.
                                                                                                அஷ்சேஹ்:- S.H.M. இஸ்மாயில் ஸலபி

அது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களின் நிலையும் (சுறுக்கக் கட்டுரை (லைலதுல் பராஆ) பராத் இரவு என்று பிரபலமாக அழைக்கப்படும் இவ்விரவு இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு இரவே அல்லாமல் நபி ஸல் அவர்கள் வழிகாட்டிய ஓர் இரவல்ல.
குர்ஆனிலும் ஹதீஸிலும் லைதுல் கத்ர் (கத்ருடைய இரவு) என குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் பராத் இரவு என்ற வாசகத்தை அவ்விரண்டிலும் எங்கும் காண முடியாது.
இந்தப் பெயர் உருவான வரலாறு யாதெனில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி (நிஷ்புஸ் ஷஃபான்) என பதிவாகியிருக்கும் சில பலயீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வைத்தே ஆகும்.
இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று அல்லாஹ்வும் ரஸூலும் வழிகாட்டாத ஒன்று மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது என்பதும் அது பித்அத் வழிகேடு என்பதுமாகும்.
அந்த அடிப்படையில் நபி ஸல் அவர்கள் கூறியதாக ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி (பராத் இவு)15 ஆம் நாளில் நோன்பு நோற்றல் மற்றும் விசேட இபாதத்களில் ஈடுபட வேண்டும் என வந்துள்ள அத்தனை செய்திகளும் பலயீனமானவைகளும் இட்டுக்கட்டப்பட்டவைகளுமாகும்.
01- ஆயிஷா நாயகியைத் தொட்டும் முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் பதிவாகியுள்ள செய்தி.
"ஷஃபான் மாதத்தின் நடு இரவில் அல்லாஹ் (அடி) வானிற்க்கு இறங்கி வருகின்றான் அவ்விரவில் கல்பு கோத்திரத்தாரின் ஆடுகளின் உரோமங்களை விடவும் அதிகமாக பாவங்களை மன்னிக்கின்றான்."
இந்த ஹதீஸ் பலயீனமான ஹதீஸாகும். இதில் இடம்பெறும் யெஹ்யா இப்னு அபீ கதீர் மற்றும் ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்ற அறிவிப்பாளர்கள் பலயீனமானவர்களாவர். இவர்கள் இடம்பெறும் இது தொடர்பான ஏனைய ரிவாயத்களும் பலயீனமானவைகளே ஆகும்.
02- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்களைத் தொட்டும் முஸ்னத் அஹ்மதில் பதிவாகியுள்ள செய்தி
"ஷஃபான் மாதத்தின் நடு இரவில் தனது படைப்புகளை நோக்கி அல்லாஹ் வருகின்றான். அவனுடைய அடியார்களில் பகைமை பாராட்டுபவன் மற்றும் கொலையாளியை தவிர மற்ற அனைவரது பாவங்களையும் மண்னிக்கின்றான்."
இந்த செய்தியும் பலயீனமானதாகும். இதில் இடம்பெறுகின்ற ஹுயைய் இப்னு அப்தில்லாஹ் என்கிற அறிவிப்பாளரும் அப்துல்லாஹ் இப்னு லஹியா என்கின்ற அறிவிப்பாளரும் பலயீனமானவர்களாவர்.
03- அலி ரலி அவர்களைத் தொட்டும் ஸுனனு இப்னி மாஜாவில் பதிவாகியுள்ள செய்தி.
"ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்துவிட்டால் அதன் இராப் பொழுதில் நின்று வணங்குங்கள் அதன் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள்"..........
இந்த செய்தி மவ்லூஆன இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதில் இடம்பெறுகின்ற அறிவிப்பாளரான இப்னு அபீ ஸப்ரா என்ற அறிவிப்பாளர் ஹதீதுகளை இட்டுக்கட்டகூடிய பலயீனமான அறிவிப்பாளர் என ஹதீஸ் கலை வல்லுனர்களான இப்னி ஹிப்பான், அபூ அப்தில்லாஹ் அல் ஹாகிம், அஹமத் இப்னு ஹம்பல் மற்றும் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸயே பராத் நோன்பு பிடிப்பதற்க்கும் அவ் இரவில் விசேட தொழுகைகளை தொழுவதற்கும் எமது சமூதாய மக்களும் ஒரு சில உலமாக்களும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.
எப்படி நபி ஸல் அவர்களது பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை வைத்து ஒரு இபாதத்தை எம்மால் உருவாக்க முடியும்? இது தொடர்பாக வருகின்ற அத்துனை செய்திகளும் பலயீனம் எனின் எப்படி இது இபாதத்தாக இறைவனிடம் அங்கீகரிக்கப்படும்.
எனவேதான் இதனை நாம் தெளிவான பித்அத் என்கின்றோம். இப்படியான ஒரு இரவு குர்ஆன் ஹதீஸில் இல்லாத புதிதாக உருவான வழிகேடான இரவாகும்.
எனவே பராத் இரவு என்ற பெயரில் நோன்பு நோற்கவும் விசேட தொழுகைகளில் ஈடுபடவும் அந்நாளை சிறப்பிக்கவும் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. இதனை புரிந்து பாவத்திலிருந்து எம்மைப் பாதுகாத்திடுவோம்.

                                                                           அஷ்சேஹ்  ஜே.எம்.சாபித் ஷரயி

இஸ்லாமிய திருமணத்தில் ஆண் தரப்பு எவ்வாறு ஒரு விருந்தை[வலீமா] ஏற்பாடு செய்கிறதோ அவ்வாறே பெண்தரப்பும் ஒரு விருந்தை அளிப்பதில் குற்றமில்லை. பெண் வீட்டு விருந்தானது எம் வழக்காறுகளிலிருந்து ( العادة) வந்ததோர் விடயமாகும். அப்படியானதோர் வழக்கு ஹராம் ஆகும் என்றிருந்தால் அதை உணர்த்தும் வகையில் ஒரு தெளிவான ஆதாரம் தேவையாகும். 
ஆக, இந்த பெண் வீட்டு சாப்பாட்டை தடுக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இடம்பெறாததனால் அது ஆகுமானதே! வசதியுள்ளவர்கள் அதை ஏற்பாடு செய்வதில் எக்குற்றமும் இல்லை….’ எனும் ஒரு மார்க்கத்தீர்ப்பு இன்று சமூக வலையத்தளங்களில் ஒரு பேசு பொருளாக மாறியிருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே!
உண்மையில், திருமணத்தில் பெண் வீட்டு விருந்து எனும் அம்சத்தை அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் ஒளியின் கீழ் இஸ்லாமிய சட்டக்கலை கோட்பாடுகளோடு அதை அலசி அராய்ந்தோமெனின்- அது தற்போதைய காலகட்டத்தில் கட்டாயம் தடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இதை இரண்டு பிரதான அம்சங்கள் மூலம் விளக்கலாம். முதலாவது-
,***இப்பெண்வீட்டு விருந்து சமூக வழக்கு என்ற அடிப்படையில் ஹலால் ஆகுமா***?
அன்றாட வழக்கில் இருக்கும் ஒரு உலக காரியம் நாம் மக்கள் முன்னிலையில் ஹலால் என தீர்ப்பு கொடுப்பதாயின், அந்த வழக்கின் அடித்தளம் என்ன? அது எங்கிருந்து உருவானது? அதை முஸ்லிம்கள் யாரிடமிருந்து அனந்தரமாக்கி கொண்டார்கள்? அது யாருக்குரிய கலாச்சாரம்? போன்றவற்றை பொருட்படுத்துவது மிக முக்கியமானதாகும்.
ஏனெனில், நபி[ஸல்] அவர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாற்று மதத்தவர்கள் தனதாக்கிக்கொண்ட, அவர்களுக்குரிய தனித்துவமான வணக்கவழிபாட்டு முறைகளையும், அவர்களுக்குரிய வழக்காறுகளையும் முஸ்லிம்கள் எடுத்து நடக்கக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.
ஆகவே, அவர்களுக்கு ஒப்பாகும் விதத்தில் இருக்கும் முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களை கலைத்தெறிந்தார்கள்; அவர்களுக்கு மாறு செய்யுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையும் பிறப்பித்தார்கள்.
நபி[ஸல்] அவர்கள் மீசையை கத்தரிக்கச்சொன்னதும், தாடியை வளரவிடச்சொன்னதும், நரைத்த முடிக்கு கறுப்பு சாயமிடுவதை தடுத்ததும், கணவன் தன் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணை அறவே நெருங்காமல் மொத்தமாக ஒதுக்கி வைப்பதை தடுத்ததும், அல்லது மாதவிலக்குடைய காலங்களில் அவளோடு உறவு கொள்வதை தடுத்ததும்- இவையனைத்தும் முஸ்லிம்கள் அந்நிய மதத்தவர்களுக்குரிய வழக்குகள், கலாச்சாரங்களில் அவர்களோடு ஒத்துப்போகமல் அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
அவ்வாறெனின், இன்று திருமணத்தில் பெண் வீட்டு விருந்து ஹலாலாகும் எனும் தீர்ப்புக்கொடுத்தவர்கள், அவ்விருந்து எவர்களுக்குரிய சம்பிரதாயம்? அது எங்கிருந்து உருவானது? அது யாருக்குரிய கலாச்சாரம் என்பதை சிந்தித்து பார்த்து பத்வா கொடுத்திருக்கக்கூடாதா..?
உண்மையில், பெண் தரப்பால் விருந்து கொடுப்பதென்பது- இந்துக்கள் தொண்டு தொட்டு பரம்பரை பரம்பரையாக செய்து வரும் அவர்களுகென்ற தனித்துவமானதோர் கலாச்சாரமாகும். இவ்விருந்தை அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்தால் பெண் வீட்டு விருந்து என்றும், கோவில்களில் ஏற்பாடு செய்தால் அதை அண்ணதானம் என்றும் கூறுவர்.
ஆக, பெண் வீட்டு விருந்து கொடுப்பதை தடுக்கும் விதமாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவிலே ஆதாரங்கள் பெறப்படாததனால்- அதை தாராளமாக பகிரலாம் என நாம் தீர்ப்புக்கொடுப்பதாயின், இந்துக்கள், பெளத்தர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாற்று மதத்தவர்கள் இன்று மரண வீட்டின் பெயரால், பிறந்த நாளின் பெயரால், பெண் பிள்ளைகள் பருவ வயதை அடைந்ததன் பெயரால், .வருடப்பூர்த்தி விழாக்களின் பெயரால்... செய்யப்படும் எத்தனையோ அனாச்சாராங்களை ஹலால் ஆக்க நேரிடும்.
ஆகவே, மாற்று மதத்தவர்களது கலியாண வைபவங்களில் முக்கியமானதொரு கலாச்சாரமாக கருதப்படும் இந்த பெண் வீட்டு சாப்பாட்டை முஸ்லிம்கள் எடுத்து நடப்பதென்பது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு அவர்கள் செய்வார்களெனின் அவர்கள் அந்த அந்நிய மதத்தவர்களுக்கு ஒப்பாகி அவர்களை சார்ந்தவர்களாகிவிடுவார்கள்.
ஏனெனில், அல்லாஹ் தஆலா யூத, கிறிஸ்தவர்களை தம் நேசகர்களாக எடுத்துக்கொள்வோரைப்பற்றிப்பேசுகையில் பின்வருமாறு கூறுகிறான்.
“உங்களில் யார் அவர்களை நேசகர்களாக எடுத்துக்கொள்கிறாரோ அவரும் அவர்களைச்சார்ந்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்ட மாட்டான்’[அல்மாயிதா:51]
மேலும் நபி[ஸல்] அவ்வர்கள், மாற்றுமதத்தவர்களுக்கென்ற தனித்துவமான வழக்காறுகள் எம் நடைமுறையில் சிறிதளவேனும் வந்து விடுவதையும் பின்வருமாறு கடுமையாக எச்சரித்தார்கள்.
திட்டமாக நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை சாண் சாணாகவும் முழம் முழமாகவும் பின்பற்றுவீர்கள். எந்தளவுக்கெனில் அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப்பின்பற்றிவீர்கள்.[அல்புகாரி3456]
ஆக, இந்த பெண் வீட்டு விருந்து என்பது இன்றளவில் மாற்று மதத்தவர்களுக்குரிய கலாச்சாரமாக இருப்பதால் அதை முஸ்லிம்களாகிய நாம், நம் சமூகத்தில் பரவிவருவதை தடுப்பதோடு அவர்களுக்கு மாறு செய்யும் முகமாக நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த வலீமா என்பதை மாத்திரம் நிலைநிறுத்த வேண்டும்.
அடுத்து , 'இஸ்லாமிய திருமணத்தில் பெண்வீட்டு சாப்பாடு என்பது தடுக்கப்படவேண்டியாதாகும் " என்பதை உணர்த்தும் இரண்டாவது விடயம்
"***ஒரு சமூகக்கொடுமையை அங்கீகரிக்கும் முகமாக வழங்கப்படும் பத்வா அறிவுடமையானதா?***
நபி[ஸல்] அவர்கள் தம் பிரச்சாரப் பணியில் நன்மையை ஏவி, தீமையை தடுத்து மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது தூர நோக்கோடு மிக நூதனமாகவும், நிதானமாகவும் நுட்பமாக சிந்தித்து செயற்பட்டிருக்கிறார்கள்.
அதற்காகத்தான் அடிப்படையில் அனுமதியான சில விடயங்களை குறித்ததொரு காலப்பகுதிக்கு தடை விதித்து மற்றைய காலங்களில் அவற்றை அனுமதியாக்கினார்கள். மேலும் சில இடங்களில் அவற்றுக்கு தடை விதித்து மற்றைய இடங்களில் அவற்றை அனுமதியாக்கினார்கள்.
இவ்வாறு நபி[ஸல்] அவர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலையின் நலவு மற்றும் கெடுதியை கருத்திற்கொண்டு தீர்ப்பெடுத்தமைக்கான சான்றுகள் ஹதீஸ்களில் நிறையவே காணலாம்.
உதாரணமாக,
இஸ்லாத்தில் ஆரம்ப காலப்பகுதியில் ஒருமுறை ஹஜ்ஜுப்பெருநாளுடைய சந்தர்ப்பத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் வந்தனர். அப்போது நபி[ஸல்] அவர்கள் ஸஹாபாக்களைப்பார்த்து ‘[குர்பான் இறைச்சிகளை] மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேமித்து வையுங்கள். எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்’ எனக்கூறினார்கள்.
ஆனால், அடுத்த ஆண்டு அந்த கிராமப்புற ஏழை மக்கள் இருக்காததன் காரணத்தால் மூன்று நாட்களை விட அதிகமாக சேமித்து வைப்பதற்கு நபி[ஸல்] அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.(ஹதீஸ் சுருக்கம்-பார்க்க ஸஹீஹ் முஸ்லிம்1971]
ஆகவே, மேற்படி சம்பவத்தில் நபி[ஸல்] மக்கள் நலன் கருதி சூழ்நிலைக்கேற்றவாறு ஒரே விடயத்தை இரு விதமாக அணுகியிருக்கிறார்கள்.
இதற்கு இன்னுமொரு உதாரணம் கூறுவதாயின்-
நபி[ஸல்] அவர்கள் ‘நான் உங்களுக்கு கப்றுகளை தரிசிப்பதை தடுத்திருந்தேன். ஆனால் தற்போது நீங்கள் அவற்றை தரிசியுங்கள்’ எனக்ககூறினார்கள்.[முஸ்லிம்977]
கப்ருகளை தரிசித்தலானது அடிப்படையில் ஆகுமான விடயமாகும். ஆனால் இங்கு நபி[ஸல்] அவர்கள் அதை ஆரம்ப காலப்பகுதிகளில் தடுத்தார்கள்.
ஏனெனில், அக்காலத்தில் ஸஹாபாக்கள் ஜாஹிலிய்யக்காலத்தோடு மிக அண்மித்திருந்ததால் ஜாஹிலிய்ய காலத்திற்குரிய தவறான காரியங்கள் மீண்டும் இஸ்லாத்தில் பரவிவிடுவதைப்பயந்தார்கள்.
பின்னர் காலம் செல்லச்செல்ல நபி[ஸல்] அவர்கள்- ஜாஹிலிய்யக்கால பழக்கங்கள் சமூகத்திலிருந்து மொத்தமாக நீங்கியிருப்பதையும், ஸஹாபாக்களில் தெளிவான நிலைமையை கண்டதும் கப்ருகளை தரிசிக்குமாறு ஆர்வமூட்டினார்கள்.
இது போன்ற நிலமையை விளக்கக்கூறும் இறைத்தூதரின் முன்மாதிரியிலிருந்து மற்றுமொரு மிகப்பெரும் ஆதாரம் ஸகாத் வசூலிக்கச்சென்ற ஸஹாபியோடு தொடர்புபட்ட ஹதீஸ்.
ஒருமுறை நபி[ஸல்] அவர்கள் ஒரு மனிதரை ஸகாத் வசூலிப்பதற்காக பொறுப்பாக்கினார்கள். அம்மனிதர் தன் பணியை முடித்து வந்ததும் அவருக்கு அன்பளிப்பு கொடுக்கப்பட்டதாகக்கூறி தன் பங்கை நபி[ஸல்] அவர்களிடம் எடுத்துக்காட்டினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள் கடும் கோபத்துக்குள்ளாகி-

“நாம் ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்த பொறுப்புதாரிக்கு என்ன நேர்ந்தது? அவர் நம்மிடம் வந்து ‘இது நீங்கள் என்னை நியமித்த பொறுப்பிலே சேர்க்கப்பட்டதாகும். இது எனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாகும்’ எனக்கூறுகிறார். அவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் அமர்ந்து தனக்கு அன்பளிப்பு வருகிறதா இல்லையா எனப்பார்க்கட்டும்’’ எனக்கூறினார்கள்.[ஹதீஸ் சுருக்கம்,பார்க்க அல்புகாரி6636]
இங்கே நாம் நோக்க வேண்டிய விடயம் யாதெனில்- அன்பளிப்பென்பது மார்க்கத்தில் அடிப்படையிலே அனுமதிக்கப்பட்டதும் ஆர்வமூட்டப்பட்டதுமாகும்.
இங்கே, அன்பளிப்பு கொடுத்த மக்களோ, அல்லது அன்பளிப்பை பெற்றுக்கொண்ட ஸஹாபியோ அந்த அன்பளிப்பை ஆளுக்காள் ஹராமான அடிப்படையில் பரிமாரிக்கொள்ளவில்லை. அவ்வாறு ஹராமாக ஆகிவிடும் என்றிருந்தால் அவர்கள் கொடுத்திருக்கவுமாட்டார்கள். அவர் அதை வாங்கியும் இருக்க மாட்டார்.
ஏனெனில், அவர்களது நோக்கமும் நல்லதே! மற்றும் அன்பளிப்பு கொடுத்தல் எனும் செயலும் அனுமதியானதே!
ஆனால் நபி[ஸல்] அவர்கள் கோபப்பட்டர்கள்; ஆத்திரப்பட்டார்கள்; காரமான வார்த்தைகளை பிரயோகித்து அதை கண்டித்தார்கள். காரணம், அந்த அன்பளிப்பு பரிமாரப்பட்ட இடமும் தருணமும் தவறானதாகும்.
அதாவது, இன்று இந்த இடத்தில் முறையாக எடுக்கப்படும் இந்த அன்பளிப்பானது நாளை லஞ்சம், வற்புறுத்தல் போன்ற மோசடிகளின் பெயரால் பரிமாறப்படலாம். சேர்க்கப்படும் ஸகாத் தொகையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் செல்லலாம்.
ஆக, அடிப்படையில் அனுமதியாக இருக்கும் இந்த அன்பளிப்பு பல சந்தர்ப்பங்களில் ஹலாலாக இருந்த போதிலும் மேற்படி சந்தர்ப்பத்தில் நபி[ஸல்] அவர்கள் அதை ஹராமாக்கினார்கள்.
இந்த அடிப்படையில், திருமணத்தில் பெண் வீட்டு விருந்து’ என்பதை அணுகினோமெனின்-
இன்றைய காலகட்டத்தைப்பொறுத்தவரையில் இந்த பெண் வீட்டு சாப்பாடானது ஆண் தரப்பு, பெண் தரப்பினரிடம் வலுக்கட்டாயப்படுத்தி நிர்ப்பந்த்தித்து கேட்குமளவுக்கு நிலைமை மோசமடைந்து செல்கிறது. அது வெகு சீக்கிரமாக சமூகக்கொடுமையொன்றாக உருமாறும் என்பதை உறுதிப்படுத்துமளவுக்கு சான்றுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், இந்த பெண் வீட்டு விருந்துபசாரத்தால் ஆணை விட பெண் தரப்பினருக்கு செலவீனங்கள் பல மடங்காக அதிகரித்துச்செல்கின்றன. இது மணமகனால் கொடுக்கப்பட வேண்டிய நபி[ஸல்] அவர்கள் சுன்னாவாக வலியுறுத்தியிருக்கும் மஹர்-திருமணக்கொடை என்பதன் கணதியையும் அதன் பெறுமதியையும் இல்லாதொழிக்கின்றது.
இன்னும் சொல்லப்போனால் ஒருகாலத்தில் இந்த பெண் வீட்டு விருந்து மற்றும் சீதனம் போன்றவற்றால் வலீமா எனும் சுன்னா மக்களிடத்தில் நடைமுறையில் இருக்கவில்லை.
ஆக, இந்த பெண் வீட்டு விருந்தின் பிண்ணனியில் இது போன்ற இடர்கள், தீங்குகள் காணப்படுவதால் அவற்றைத் தடுக்கும் முகமாக இவ்விருந்து தடுக்கப்பட்டதாக அமைவது அவசியம். (سدا للذرائع)
அதாவது, அடிப்படையில் மார்க்கத்தில் அனுமதியாக்கப்பட்டிருக்கும் விருந்தானது அநேகமான சந்தர்ப்பங்களில் ஹலாலாக இருந்த போதிலும் மேற்படி நிலைமையையும் சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு கட்டாயம் தடுக்கப்பட வேண்டும்..
இவ்வாறான நிலைமைகளின் மையக்கருவை அடிப்படையாக வைத்து தான் இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் ஒரு சட்டக்கலை கோட்பாட்டை விதித்திருக்கிறனர். الحكم يدور مع علته وجودا وعدما

இதன் தமிழ்மொழிபெயர்ப்பை விளக்கக்கூறின்- குறித்ததொரு விடயத்தில் தீர்மானிக்கப்படும் சட்டமானது அதன் காரணிகளில் தான் தங்கியிருக்கிறது. அந்தக்காரணிகள் இருக்கும் போது எடுக்கப்படும் சட்டமும் அவை இல்லாத போது எடுக்கப்படும் சட்டமும் ஒன்றுகொன்று வேறுபடும்.
அதாவது, திருமணத்தில் பெண் வீட்டு விருந்தானது, அது பெண் தரப்பினருக்கு ஒரு பாரமாக மாறியமை, அது அவர்கள் மீது வலுக்கட்டாயப்படுத்தப் படுகின்றமை, ஆண் தரப்பால் நிறைவேற்றப்பட வேண்டிய வலீமா, மஹர் போன்றவற்றுக்கு சமூகத்தில் பெறுமதியற்றுப்போகின்றமை போன்ற காராணிகள் பெறப்படும் காலமெல்லாம் அது அனுமதியற்றதாக மாறுகிறது.
ஆக, முடிவாகச்சொல்வதாயின் இஸ்லாமிய திருமணத்தில் பெண் வீட்டு சாப்பாடானது அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவினது ஒளியில் பார்க்கும் போது நாம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய அம்சமாகும்.
அதை நாம் மக்கள் மன்றத்தில் சொல்லும் போது “பேணுதல் அடிப்படையில் விரும்பியவர்கள் தவிர்ந்து கொள்ளலாம்’ எனக்கூறுவதே முற்றிலும் தவறாகும்.
ஏனெனில், பேணுதல் ரீதியாக தவிர்ந்து கொள்ளுதல் என்பதன் அடிப்படை அம்சம் அது அனுமதியானது என்பதாகும்.
ஆனால், இந்த பெண் வீட்டு விருந்தானது மாற்று மதத்தவர்களது கலாச்சாரத்திற்கு ஒப்பாகுவதோடு அது சமூகத்தில் பலதரப்பட்ட தீங்குகளுக்கான வாயிலையும் திறந்து விடுகின்றது இதுவே, இந்த பெண் வீட்டு விருந்து தடுக்கப்பட வேண்டும் என்பதற்குரிய போதுமான சான்றாகும்.
அதனோடு சேர்த்து, இங்கே நாம் நோக்க வேண்டிய இன்னுமோர் முக்கிய விடயம் இருக்கிறது.
அதாவது, மார்க்கத்தில் நாம் சில சுன்னாக்களை நடைமுறைப்படுத்தும் போது அதிலே பெருமை, கர்வம், முகஸ்துதி போன்ற காரணிகள் இருக்குமாயின் அது அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் பலிப்புக்குரியது என்பது நாம் அறிந்ததே!
ஆனால் நபி[ஸல்] அவர்கள் சில சந்தர்ப்பங்களில் பொறாமை, பெருமை, மக்கள் திருப்தி போன்றவை ஏற்படுவதற்கு இடம்பாடு இருக்கும் சில விடயங்களையும் பலிப்புக்குரியதாகவே கருதினார்கள்.
எவ்வாறெனில், நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; வருபவர்கள் [ஏழைகள்] தடுக்கப்பட்டு மறுப்பவர்கள் [செல்வந்தர்கள்] அழைக்கப்படும் மணவிருந்து தான் கெட்ட விருந்தாகும்.[பார்க்க முஸ்லிம்1432]
இங்கு நாம் நோக்க வேண்டிய விடயம் யாதெனில், நபி[ஸல்] அவர்கள் இந்த ஹதீஸில் எண்ணத்தை பொருட்படுத்தவில்லை. மாறாக, வெளிப்படையை வைத்து தான் அந்த விருந்து கெட்டது என மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.
அதாவது விருந்து கொடுப்பவர் எனது எண்ணம் தூய்மையாக இருக்கிறது எனச்சொல்லிக்கொண்டாலும் அந்த விருந்துக்கு பணக்காரர்கள் வரவழைத்து ஏழைகள் விடப்படுவார்களானால் அது கெட்ட விருந்தாகவே கருதப்படும். ஏனெனில், அது பெருமைக்குரியவர்களின் விருந்துக்கு ஒப்பாகிறது.
அதுமட்டுமல்லாமல், சுன்னாவாக வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமே இது போன்ற சந்தர்ப்பங்களில் கெட்டதாக மாறிவிடுமென்றால், எந்த ஒரு அடிப்படையும், வழிகாட்டலுமே இல்லாத இந்த பெண்வீட்டு விருந்தின் நிலை என்னவாகும்?
அந்த வகையில், இன்று பெண் வீட்டு விருந்தைக்கொடுக்கும் பெண் தரப்பினரில் போட்டி, பொறாமை, பெருமை போன்றவற்றை இன்று நாம் சமூகத்தில் சிலரில் வெளிப்படையாகக்காண்கிறோம்.
அதேநேரம் எம்மில் சிலர் ‘நாங்கள் பெருமைக்காக விருந்து போடவில்லை. எமக்கு வசதி இருப்பதால் அதை ஏற்பாடு செய்கிறோம்’ எனக்கூறினாலும், அது பெருமை அல்லது முகஸ்துதிக்குரியவர்களின் விருந்துக்கு ஒப்பாகின்றது என்பதை மறுக்க முடியாது.
ஆக; திருமணத்தில் பெண்வீட்டு விருந்து மாற்றுமதத்தவர்களின் கலாச்சாரங்களுக்கு ஒப்பகுவதால் அது அடிப்படையிலே தடுக்கப்பட வேண்டும்.
மேலும் அது பல இடர்களை சுமந்து வருவதால் இந்த பாவத்தை நபி[ஸல்] அவர்கள் தீர்ப்பளிப்பதில் கையாண்ட நுட்பமான பொறிமுறையும் மற்றும் இஸ்லாமிய சட்டக்கலை கோட்பாடுகளையும் வைத்து நிறுத்துப்பார்க்கும் போது அது தடுக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் கிடையாது.
இறுதியாகச்சொல்வதாயின்- நாளுக்கு நாள் இஸ்லாமிய உம்மத்திற்கு பெரும் சவாலாக மாறி வரும் இந்த பாவத்தை ஈமானிய ரோஷமுள்ள எந்த ஒரு உள்ளமும் அனுமதிக்காது என்பதும் தீர்க்கமானதே!
அல்லாஹ் மிக அறிந்தவன்!

                                                                   
இஹ்ஸானா பின்த் மனாப் ஷரஇய்யா


திருமணத்தை ஆகுமாக்கிய மார்க்கம் இஸ்லாம்:- இறைவனால் தன்னை வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட இனங்களுல் மனித இனம் சிரேஷ்டமானது. இவ்வினத்தைப்படைத்த இறைவன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான எல்லா வஸ்துக்களையும் வசப்படுத்தி கொடுத்து மனிதனது விருப்பு வெறுப்புக்களையும் தட்டிக்கழிக்காது எண்ணிளடங்கா அருட்கொடைகளையும் வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். மனிதனை இருஇனங்களாக ஒரு ஆண் மற்றும் பெண்ணிலிருந்து படைத்த அந்த இறைவன் அந்த இரு இனமும் சங்கமிக்கும் திருமணம் எனும் வரப்பிரசாதத்தையும் ஆகுமாக்கியுள்ளான்.
‘உங்களில் வாழ்கை துணையில்லாதவருக்கும், உங்களுடைய ஆண் அடிமைகளுக்கும், இன்னும் நல்லொழுக்கமுல்ல அடிமைப் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய பேரருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் மிக்க விசாலமானவன் நன்கறிந்தவவன்’ (சூரதுன் நூர் 32) என அல்லாஹ் தன் திருமறையயில் திருமணத்தை ஆகமாக்குவதை காணலாம். அவ்வாரே அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களும் திருமணம் முடித்து குடும்பம் நடத்தியவர்களாகவே அதிகமானகவர்களை நம்மால் கண்டுக் கொள்ள முடிகிறது.
குறிப்பாக இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூட இந்த வழிமுறையை எடுத்துக்கொண்டதோடு முழு இளைஞர் சமுதாயத்தையும் பார்த்து ‘வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம் கற்பைக் காத்துக் கொள்வதற்கும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது)…..’(புகாரி 5065, முஸ்லிம் 1400) என தெளிவாகவே திருமணம் முடித்துக் கொள்ளும் படியும் அதனால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்.
இவ்வாரு இஸ்லாமிய சட்டமூலத்தின் அடிப்படைகளே திருமணத்தைப் பற்றி தெளிவுபடுத்திக் கொண்டிருக்க இன்று எத்தனையோ மதங்கள் தங்களது மதப்பெரியார்களுக்கு இந்த மனித உரிமையை வழங்காது இருப்பது வேடிக்கையானது. இதன் விளைவாக மதகுருமார்களினதும் பாதிரிமார்களினதும் சில்மிசங்கள் கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற தலைப்புக்களில் நாலாந்தம் ஊடகங்களில் அரகேற்றப்படுகின்றன.

இவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் கிடையாது, என்றாலும் இஸ்லாம் வழங்கியிருக்கக்கூடிய இவ்வடிப்படை உரிமையை சில முஸ்லிம்களே புரிந்து கொள்ளாது இருப்பதை கண்டுகொள்லாமல் இருந்துவிட முடியாது. எனவே வாழ்க்கையில் ‘சாதித்து விட்டுத்தான் திருமணம்’ என சாட்டுப்போக்கு சொல்லுபவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்து காட்டுவதும் ஒரு சாதனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கடமையாக்கப்பட்ட திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணை அடைந்துக் கொள்ள முயலும் ஒரு ஆணுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதன் சட்டங்களை நோக்குவோம்.
பொதுவாகவே பெரும்பான்மையான உலமாக்கள் பெண்ணைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றனர். பின்வரும் சான்றுகளைக் கொண்டு இக்கருத்தை உறுதிசெய்ய முடிகிறது.
நபி (ஸல்) அவர்களை விழித்து அல்லாஹ் கூறுகின்றான்,

பின்னர் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத்தவிர வேறு பெண்கள் உமக்கு ஆகுமாக்கப்படவில்லை. இன்னும் அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் அவர்களை (உம்முடைய மனைவியராக) இவர்களைக் கொண்டு நீர் மாற்றிக் கொள்வதும உமக்கு (அனுமதி) இல்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கின்றவனாக இருக்கின்றான். (சூரதுல் அஹ்ஸாப் 52)
இங்கு அல்லாஹ் பெண்களின் அழகு கவரப்படுவதாக கூறுகின்றான். உண்மையில் அழகு பார்ப்பதன் மூலம்தான் புலப்படும் என்பது வெள்ளிடைமலை. எனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்க்க முடியும் என விளங்க முடிகின்றது.
இவ்வாரே அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் ஒரு செய்தியில்

“நான் நபியவர்களிடம் இருந்த போது அவரிடம் ஒரு மனிதர் வந்து அவர் அன்ஸாரியப் பெண்ணை திருமணம் முடித்தாக (நிச்சயிக்கப்பட்டதாக) கூறினார் அவரிடம் நபியவர்கள் ‘நீர் அவளைப் பார்த்தாயா?’ ஏன வினவவே, அவரோ இல்லை என்றார். சென்று அவளைப் பார்ப்பீராக நிச்சயமாக அன்ஸாரிகளின் கண்களில் ஏதோ உண்டு என நபியவர்கள கூறினார்கள்”. (முஸ்லிம் 1424, நஸாயி 6:69)
அவ்வாரே ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் நபியவர்கள சொன்னதை நான் கேட்டேன்

யார் ஒருவர் பெண்ணை நிச்சயிக்க முற்படுகிறாரோ அவர் அவளின் சில உறுப்புக்களை பார்க்க முடியுமானால் பார்த்துக் கொள்ளட்டும் (ஹதீஸின் சுருக்கம்) அபூதாவுத் 2082, அஹ்மத் 3:360
இவ்வாறு பல செய்திகள் நபியவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளமையால் பெண்ணைப் பார்ப்பது ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.
அதேவேளை, இமாம் மாலிக்கைத்தொட்டும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க முடியாது என்ற கருத்தை ‘காபி’ என்ற நூலில் இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் இக்கருத்தை கூறக்காரணம் பொதுவாக பல்வேறு ஹதீஸ்கள் பெண்களைப் பார்ப்பதை தடை செய்துள்ளதை ஆதாரமாகக் கொள்கின்றார். என்றாலும் பிரத்யேகமாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் காணப்படுவதனால் “முடியாது” எனும் கருத்து வலு இழந்து போகிறது.
எந்த இடங்களைப் பார்க்களாம்:-
1. பொதுவாக பெண்கள் வெளிப்படுத்தக்கூடிய இரு கைகளையும் மற்றும் முகத்தைப் பார்ப்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. என்றாலும் பெரும்பான்மையான உலமாக்கள் இவ்விரு உறுப்புக்களையும் பார்ப்பதுடன் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்கின்றனர். ஆனால் ஹன்பலி மத்ஹபின் கருத்துப்படி இரு கைகள், கால் மற்றும் ஒரு பெண் சாதாரணமாக வீட்டில் இருக்கும் போது வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் உறுப்புக்களைப் பார்க்கலாம் என்கின்றனர்.
2. இக்கருத்துக்கு ஆதாரமாக நபியவர்கள் விஷேடமாக பெண்ணைப் பார்க்கும் படி ஏவியிருப்பதில் இருந்து அவள் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இரு கைகளையும் முகத்தையும் பார்ப்பதைச் சொல்லவரவில்லை. மாறாக அவள் வீட்டில் இருக்கும் போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உறுப்புக்களைப் பார்ப்பதைக் குறிக்கும் என்கின்றனர்.
3. அதேவேளை அல்அவ்சகி அவர்கள் பெண்ணின் அவயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்க்கலாம் என்கின்றார்.
இவ்வாறு பல கருத்துக்கள் இருந்த போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தான முதலாவது கருத்தே ஏற்றமானது எனலாம். காரணம் இரு கைகள் முகம் என்பவற்றைத் தாண்டி ஒரு பெண்ணைப் பார்ப்பதன் மூலம் வேறு விதமான குற்றச்செயல்கள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.
எனவே இதிலிருந்து நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சில வரையரைகளுடன் பார்க்க வேண்டும் அது நபி வழியாகும் என்பதை விளங்கின்றோம். இன்று சில சகோதரர்கள் அவள் “அஜ்னபி பெண்” அவளை எவ்வாறு பார்ப்பது? என கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நபிவழிக்கு மாற்றமாக குருட்டுத் திருமணம் செய்கின்றனர். இது பிழையான விடயமாகும். காரணம் இவ்வாறு ஒரு பெண்ணைப் பார்க்காமல் திருமணபந்தத்தில் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை திருமணத்திற்குப் பின்னால் எதிர்நோக்கலாம். ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் திருமண வாழ்க்கை ஜொலிக்கும்.
இதே வேளை இன்றும் சிலர் நபியவர்பகள் பார்க்கச்சொல்லியிருக்கிறார்கள்தானே என சொல்லிக் கொண்டு முடியைப்பார்ப்பது, நடையைப்பார்ப்பது என பட்டியலை நீட்டிக்கொண்டு செல்வார்கள். இக்கருத்தை உடையவர்களும் நபியவர்கள் பார்க்கச் சொன்னது வரையருக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கும் மேல் ஒருவருக்கு கட்டாயம் சில விடயங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் ஆணின் சகோதரி அல்லது தாயின் மூலமாக இவ்விடயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பெண்பார்க்கும் படலத்தை பெரும் பரீட்சை மண்டபம் போன்று ஆக்கிக்கொண்டு குறித்த பெண்ணை துருவித்துருவி நீண்டநேரம் பார்க்கக் கூடாது. காரணம் ஒரு பெண்ணும் ஆணும் தனித்து இருக்கும் போது ஷைத்தான் மூன்றாவது நபராக இருக்கின்றான் (அஹ்மத் 01:18, திர்மதி 1171) எனக் கூறியுள்ள செய்தியை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே வேளை நபியவர்கள் ஆணும் பெண்ணுமாக தனித்திருப்பது அனுமதித்ததாக காண முடியவில்லை. மாறாக ஒரு ஆண் பெண்ணோடு தனித்திருக்க நேரிட்டால் குறித்த பெண்ணின் கிட்டிய உறவுக்காரர் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம் (புகாரி 3006, முஸ்லிம் 1341) என பொதுவாகவே நபியவர்கள் வழிகாட்டியுள்ளமை பெண்பார்க்கும் படலத்திற்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.
எப்போது பெண்ணைப் பார்க்கவேண்டும்.?
ஒரு ஆண், தான் திருமணம் முடிக்க எல்லா வகைகளிலும் தயார் என்பதில் உறுதியான பின்னர் தனது துணையை தெரிவு செய்வதற்கு முற்படவேண்டும். இதற்கு மாற்றமாக திருமணம் முடிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னிருந்தே நாற்பது வீட்டிற்கு ஏறி இறங்கி பெண்பார்க்கின்றோம் என்ற பெயரால் வீண் விரயமாக பணத்தை இரைத்து பெண்மக்களைப் பெற்ற பெற்றோரின் வயிற்றிலும் அடிக்கும் நடவடிக்கையை எமது சமூகம் விட்டு விட வேண்டும்.

இந்நடைமுறையானது பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி ஒரு ஆண் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்தபின்னர், தனக்கு இப்பொழுது திருமணம் முடிக்க முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் பெண் கொஞ்சம் உயரம் அல்லது கட்டை கொஞ்சம் நிறம் காணாது என்றெல்லாம் இலேசாக சொல்லி விடும்போது குறித்த பெண் பாரிய மன உலைச்சலுக்கு ஆளாகின்றாள் என்பதனையும் நமது மாப்பிள்ளைமார் மறந்து விட்டனர்.   
பெண்ணின் அனுமதி கேட்க வேண்டுமா.?
பெண்பார்ப்பதற்கு குறித்த பெண்ணின் அனுமதி கேட்கத்தேவையில்லை என்பது பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தாகும் இமாம் மாலிக் அவர்கள் பெண்ணுக்கு அறியப்படுத்திய பின்னால் பார்த்தால் அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கூறிய போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்து மிகவும் ஏற்றதாகத் தெரிகின்றது. காரணம் ஒரு ஆண் சில வேளை பெண்ணை விரும்பலாம். சில வேளை விரும்பாமலும் இருக்கலாம். விரும்பவில்லை என்றாலும் கூட குறித்த பெண்ணுக்கு விடயம் தெரியாததால் அவளுக்கு உலவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படப்போவதில்லை. எனவே பெண்ணின் அனுமதியில்லாமலும் குறித்த பெண்ணை பார்ப்பதற்கு ஆணுக்கு அனுமதிக்க முடியும். அதே வேளை இந்த விடயத்தில் பெண்ணை இச்சையோடு பார்ப்பது மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட அம்சங்களாகும்.
நிழற்படத்தின் மூலம் (Photo) நவீன கருவிகள்(video, messenger) போன்றவற்றினூடாக பெண் பார்க்க முடியுமா?
பொதுவாக நபியவர்கள் பெண்ணை பார்ப்பதற்கு அனுமதித்த செய்திகளில் இருந்து மேற்குறிப்பிட்ட நவீன ஊடகங்களின் ஊடாக அவளைப்பார்ப்பதற்கு அனுமதி அளிக்க முடிகின்றது. இது விடயத்தில் மிகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க முடிகின்றது. என்றாலும் இன்றைய சூழலில் அதிகமான தில்லுமுல்லுகள் தங்கையைக் காட்டி அக்காவைக் கொடுக்கும் கில்லாடி வேளைகள் இடம் பெருவதாலும் தரகர்களின் திருவிளையாடல்கள் மலிந்து போய் உள்ளதாலும் இதனை பலர் அனுமதிப்பது கிடையாது. இஸ்லாத்தில் எந்த விடயத்திலும் ஏமாற்றுதலுக்கு இடமில்லை என்பதனை குறித்த தரப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை அனுமதிக்க முடியாது என்பவர்களின் வாதத்திற்கு வழு சேர்க்க பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றனர்.
– நிழற்பிரதியைப் பொறுத்தவரையில் ஒரு பெண்ணின் யதார்த்தமான உருவத்தை நவீன கருவிகளைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் செய்து அழகு படுத்தலாம்.
– இதற்கு எதிர் மரையாக நேரடியான தோற்றத்திற்கு மாற்றமான அசிங்கமான தோற்றத்தைக்கூட புகைப்படங்கள் ஏற்படுத்தலாம்.
– இவ்வாரான புகைப்படங்கள் அல்லது messenger ஊடாக பெண்ணைப்பார்த்து விட்டு சில நயவஞ்சகர்கள் குறித்த பெண்ணை இணையத்தின் internet ஊடாக கேவலப்படுத்த முனையலாம்.
எனவே இது போன்ற காரணங்களினால் இவ்வாரான நவீன வசதிகளினூடாக பெண் பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் ஏற்றமானது. வேறு வழியில்லாமல் இவ்வழிகளில்தான் பார்த்து ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இரு தரப்பும் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்ணுடன் கைலாகு செய்வது அல்லது உறுப்புக்களைத் தொடுவது கூடாது
இன்று சர்வசாதாரணமாகிப்போன கைலாகு (handshaking) செய்வது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இடம்பெறுவதையோ, உறுப்புக்களைத் தொடுவதையோ இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. நபியவர்கள் தெளிவாகவே

‘நான் பெண்ணுடன் கைலாகு செய்ய மாட்டேன்’ (திர்மதி 1597, நஸாயி 4181, இப்னுமாஜா 2874, அஹ்மத் 6:357)
என கூறியுள்ளார்கள். நபி வழியை எமது வழியாகக் கொண்ட. மேலைத்தேயரின் நாகரீகத்திற்கு ஒப்பாகி ஆண், பெண் கைலாகு செய்வதையும் ஏனைய உறுப்புக்களை தொடுவதையும் தவிர்த்துக் கொள்வது கட்டாயமானதாகும். அதே வேளை முக்கியமான தேவைகளுக்கு அல்லாமல் வீணாக, குறித்த பெண்ணோடு தொலை பேசியினூடாக அரட்டை அடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா.?
தொடர்ந்து ஒரு ஆண் பெண் பார்ப்பதன் ஒழுங்கு முறைகளையும் சில சட்டங்களையும் அவதானித்தோம். தற்போது ஒரு பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா என்று பார்ப்போம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணைப் போன்றே தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். எனவே இஸ்லாம் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கும் செவி சாய்த்து பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது.

இன்றைய எமது சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது. சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே ‘நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாது’ என இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெருகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம்.

அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்றுவிடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறிவிடுகின்றனர். இதனால் எமது சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக தலாக் மற்றும் கணவன் இருக்க இன்னொருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
நாம் ஏற்கனவே பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆண் பெண்ணைப் பார்க்கலாம் என்று சொன்னோம் அதனால் ஏற்படும் பிரதிபலனையும் கோடிட்டுக் காட்டினோம். ஆனால் ஆண் அவ்வாறு பார்த்து விரும்பியதன் பின்னர் நேரடியாக திருமண ஒப்பந்தத்திற்கு செல்லமுடியாது. சில வேளை பாரிய வயது வித்தியாசமான கிழவர்கள் கூட பெண்கள் அனுமதியில்லாமல் அவளைப்பார்த்து விரும்பலாம்.

அதன் பின்னால் பெண்ணின் அனுமதியையும் பெற்று அவள் பார்த்து சரி சொன்னால்தான் பெண்ணுக்குறிய உரிமைகளை வழங்கியவர்களாகவும் அவளின் மனோநிலையை மதித்தவர்களாகவும் ஆக முடியும். எனவே இவ்விடயத்தில் ஆண்கள் கரிசனை செலுத்தி, தான் பார்த்து விரும்பிய அந்தப்பெண்ணுக்கு தன் மேல் விருப்பம் இருக்கிறதா? என்பதை அவள் ஆணைப்பார்த்து உறுதி செய்து கொள்வதற்கும் திருமணத்திற்கு முன் இஸ்லாம் கூறும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து இருமணங்கள் சங்கமிக்கும் திருமண வாழ்வில் இணைந்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் துணைபுரிவாணாக!
                                                                                             மௌலவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ

ஒரு பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய “ஷாத்” – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.    
சீர்திருத்தம் என்றால் பிழையை சரியாக்க வேண்டும். பாதிப்புள்ள சட்டத்தை மாற்றி பாதிப்பு இல்லாத சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இருக்கின்ற நல்ல சட்டத்தை மாற்றுவது சீர் திருத்தமாக இருக்காது’ மாறாக சீர் குலைப்பதாகவே அமையும். சில மார்க்க அறிஞர்களும் இந்தப் பிழையான நிலைப்பாட்டிற்கு ஒத்து ஊத ஆரம்பித்துள்ளனர். எனவே, இது தொடர்பான ஒரு தெளிவை வழங்குவது அவசியமாகின்றது.
‘வலி’யும் குர்ஆனும்:
திருமணம் குறித்துப் பேசும் குர்ஆனின் வசனங்கள் ‘வலி’யின் அவசியத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.
“எனவே, அவர்களது எஜமானர்களின் அனுமதியுடன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக்கொடைகளை நல்ல முறையில் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.” -(4:25)
இது அடிமைப் பெண்களைத் திருமணம் செய்வது குறித்து பேசும் வசனமாகும். என்றாலும், இதைப் பொதுவான சட்டமாகவே நாம் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், இதற்கு அமைவாகவே இது குறித்த ஏனைய வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
“இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை மணமுடிக்காதீர்கள். முஃமினான அடிமைப் பெண், உங்களைக் கவரக் கூடிய இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவளாவாள். இன்னும், இணைவைக்கும் ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (உங்கள் பெண்களுக்கு) மணமுடித்து வைக்காதீர்கள். உங்களைக் கவரக் கூடிய இணைவைக்கும் ஆணை விட, முஃமினான அடிமை மேலானவனாவான். அவர்கள் நரகத்தின் பால் அழைக்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ தனது நாட்டப்படி மன்னிப்பின்பாலும் சுவர்க்கத்தின் பாலும் அழைக்கின்றான். இன்னும் மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு தனது வசனங்களை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்துகின்றான்.” -(2:221)
இவ்வசனத்தில் இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று ஆண்களைப் பார்த்துச் சொல்லப்படுகின்றது. ஆனால், இணை கற்பிக்கும் ஆண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று பெண்களைப் பார்த்துச் சொல்லாமல் இணை வைக்கும் ஆண்களுக்கு உங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்றும் ஆண்களைப் பார்த்துத்தான் கூறப்படுகின்றது. இந்த வசனம் பெண் தானாக திருமணம் செய்யமாட்டாள். அவளது பொறுப்பாளர்கள்தான் திருமணம் செய்விக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
“ஒரு விபச்சாரன், விபச்சாரியை அல்லது இணைவைப்பவளையேயன்றி (வேறு எவரையும்) திருமணம் முடிக்கமாட்டான். ஒரு விபச்சாரி, அவளை ஒரு விபச்சாரனோ அல்லது இணைவைப்பாளனோ தவிர (வேறு எவரும்) திருமணம் முடிக்கமாட்டான். இது நம்பிக்கையாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டதாகும்.” -(24:3)
விபச்சாரம் செய்தவன்தான் தன்னைப் போன்ற ஒரு விபச்சாரியை மணந்து கொள்வான் என்று கூறும் வசனம் ஒரு விபச்சாரம் செய்த பெண், தான் விபச்சாரம் புரிந்தவனை மணப்பாள் என்று கூறவில்லை. இங்கும் திருமணத்தை அல்லாஹ் ஆண்களுடன் இணைத்துத்தான் பேசுகின்றான்.
“நீர் எனக்கு எட்டு வருடங்கள் கூலியாளராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எனது இவ்விரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு நான் திருமணம் முடித்துத் தர விரும்புகின்றேன். நீர் பத்தாகப் பூர்த்தி செய்தால், அது உன் விருப்பத்தைச் சார்ந்தது. உம்மைச் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை. ‘இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்னை நல்லவர்களில் நீர் கண்டு கொள்வீர் என அவர் கூறினார்.” -(28:27)
ஒரு தந்தை தனது மகளை மூஸா நபிக்கு திருமணம் முடித்து வைப்பது பற்றிய வசனம் இது. இங்கும் திருமணம் என்பது கணவன் பெண்ணின் பொறுப்பாளி சம்பந்தப்பட்டதாக பேசப்படுகின்றது. (பெண்ணின் சம்மதம் தேவை என்பது தனி விடயம்.)
“நீங்கள் (உங்கள்) மனைவியர்களை (மீளக் கூடிய) விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா) காலக் கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால் (அப்)பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மண முடிப்பதை (பொறுப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் நன்கறிவான்’ நீங்களோ அறியமாட்டீர்கள்.” -(2:232)
இந்த வசனத்திற்கு அர்த்தம் செய்வதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஒரு பெண் தலாக் சொல்லப்பட்டு அவளது இத்தாக் காலமும் முடிந்து விட்டது. இப்போது இவர்களுக்கு மத்தியில் இருந்த திருமண உறவு முறிந்துவிட்டது. இந்த நிலையில் இருக்கும் பெண் வேறு கணவனை மணம் முடிப்பதை முந்திய கணவன் மறுக்கக் கூடாது என்பதுதான் இந்த வசனத்தின் அர்த்தமாகும் என சிலர் கூறுகின்றனர்.
மற்றும் சிலர் தலாக் சொல்லி இத்தா காலம் முடிந்தால் இருவரின் திருமண உறவும் முறிந்துவிடும். அதன் பின் அவர்கள் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் புதிதாகத் திருமணம் செய்ய வேண்டும். இவ்வாறு தலாக் கூறி இத்தாக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் அவ்விருவரும் உடன்பட்டு நடக்க நாடி திருமணம் செய்ய விரும்பினால் அந்தப் பெண்ணின் வலி அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என இந்த வசனம் கூறுவதாகக் கருதுகின்றனர். இந்த வசனம் அருளப்படக் காரணமாக இருந்த சம்பவமும் குர்ஆனின் வார்த்தைப் பிரயோகமும் இதுதான் சரியானது என்பதை உறுதிசெய்கின்றது.
முதல் சாரார் சொன்னது போல் ‘தலாக்’ கூறிய கணவன் இத்தாக் காலமும் முடிந்து விட்டால் வேறு ஆணை திருமணம் முடிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், இத்தாக் காலம் முடிந்ததும் அவர்களுக்கிடையே உள்ள உறவும் முறிந்துவிடும். எனவே, இது ‘வலி’ பற்றித்தான் பேசுகின்றது.
அவர்கள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால்… என்ற வார்த்தை இத்தா முடிந்த பின்னர் அந்தப் பெண் வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்வது தொடர்பில் சொல்லப்பட முடியாது. ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்தவர்கள் தொடர்பில்தான் சொல்லமுடியும். ஏற்கனவே வாழ்ந்தவர்கள் தமக்குள் உடன்பட்டு சேர்ந்து வாழ விரும்பினால் வலியாக இருப்பவர் தடுக்கக் கூடாது என்றே இந்த வசனம் கூறுகின்றது.
தமது கணவன்மார்களைத் திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் வேறு ஆண்களை மணம் முடிப்பதை முன்னைய கணவன் தடுப்பது பற்றி இந்த வசனம் பேசவில்லை என்பதற்கான ஆதாரமாகும். அல் குர்ஆன் மிக நுணுக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தும். தலாக் சொல்லி இத்தா முடிந்த பின் தன்னை தலாக் சொன்ன முன்னைய கணவனுடன் புதிதாகத் திருமணம் செய்து சேர்ந்து வாழ பெண் விரும்பினால் வலியாக இருப்பவர் கௌரவத்துக்காக அதைத் தடுக்கக் கூடாது என்றுதான் இந்த வசனம் பேசுகின்றது.
இந்த வசனத்திற்கு அடுத்த வசனத்தில் தலாக் கூறி பிரிந்துவிட்டவர்கள் பிள்ளைக்குப் பால் கொடுப்பது பற்றிய சட்டங்கள் பேசப்படுகின்றன. அங்கே கணவன் – மனைவி என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல் குழந்தையைப் பெற்றவள், குழந்தையைப் பெறக் காரணமானவர் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப் படுகின்றன. இங்கு கணவனைத் திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறப்படுகின்றது. இது அந்தப் பெண் வேறு கணவர்களை மணமுடிப்பதை தலாக் விட்டவர் தடுப்பது பற்றி பேசவில்லை. தலாக் விட்ட கணவரை மீண்டும் மணம் முடிப்பதை வலீ தடுக்கக் கூடாது என்றுதான் கூறுகின்றது.
வேறு ஆண்களைத் திருமணம் செய்வதை தலாக் விட்ட கணவன் தடுக்கக் கூடாது என்றால் அவர்கள் வேறு ஆண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்றே அல்லாஹ் கூறியிருப்பான் என்பது சரி. ஆனால், அவர்கள் தமது கணவர்களைத் திருமணம் முடிப்பதைத் தடுக்காதீர்கள் என்று கூறப்படுகின்றதே! தலாக் கூறி இத்தாக் காலம் முடிந்த பின்னர் அவர்களைக் கணவர்கள் என்று குர்ஆன் குறிப்பிடுமா என்ற சந்தேகம் எழலாம்.
முன்னால் பேசப்பட்டவர் விடயமாகத்தான் அடுத்த விடயமும் பேசப்படுகின்றது என்பதைக் காட்ட இப்படிப் பாவிக்கப்படுவது இயல்பாகும். உதாரணமாக மூஸா நபியுடன் சூனியக்காரர்கள் போட்டிக்கு வந்தனர். ஈற்றில் அவர்கள் ஈமான் கொண்டு சுஜுதில் விழுந்தனர். இதைக் குர்ஆன் கூறும் போது சூனியக்காரர்கள் சுஜுதில் விழுந்தனர் என்று கூறுகின்றது. (பார்க்க: 7:120, 26:46)
அவர்கள் சுஜூதில் விழும் போது சூனியக்காரர்களாக இருக்கவில்லை. இருப்பினும் அறிமுகத்திற்காக குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. தலாக் விடப்பட்ட பெண்கள் தமது கணவர்களை முடிப்பதைத் தடுக்காதீர்கள் என்று இங்கே கூறப்படுவது தலாக் விட்ட முன்னைய கணவரைத் திருமணம் செய்வதை வலி தடுக்கக் கூடாது என்றே கூறுகின்றது என்பது இதன் மூலம் இன்னும் உறுதியாகின்றது.
இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் குறித்து ஸஹீஹ் புகாரியில் பின்வரும் சம்பவம் இடம் பெறுகின்றது.
மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்: “அந்த (திருக்குர்ஆன் 2:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது. என்னுடைய ஒரு சகோதரியை ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய ‘இத்தா’க் காலத் தவணை முடிந்த போது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், ‘நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். 

இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்’ என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ், ‘…அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.”
(நூல்: புகாரி- 5130, 4529, 5331 | அபூதாவூத்- 972, 2087 | நஸாஈ- 10974)
(இது ஸஹீஹான அறிவிப்பு என இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.)
இந்த வசனமும் இந்த சம்பவமும் பெண்ணுக்கு வலி அவசியம் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. பெண் ஏற்கனவே திருமணம் முடித்தவளாக இருந்தாலும் ‘வலி’ அவசியம் என்பதை இந்த சம்பவம் உறுதியாகக் கூறுகின்றது.
சுன்னாவும் வலியும்:
சிலர் வலி தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானது என்றும் அதனால்தான் புகாரி, முஸ்லிம் இமாம்கள் இந்த ஹதீஸை பதிவிடவில்லை எனக் கூறி என்னமோ இமாம் புகாரி வலி அவசியம் இல்லை என்ற கருத்தில் இருந்தது போன்ற எண்ணத்தை பாமர மக்கள் மனதில் பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். இமாம் புகாரி ‘வலி இல்லாமல் திருமணம் இல்லை’ என்ற தலைப்பில் தனிப்பாடத்தையே தனது கிரந்தத்தில் இடம்பெறச் செய்திருப்பதுடன் கன்னிப் பெண்ணுக்கு மட்டுமன்றி விதவைப் பெண்ணுக்கும் வலி அவசியம் என்ற கருத்தை புகாரியில் பதிவு செய்துள்ளார்.
வலி தொடர்பில் பல்வேறுபட்ட அறிவிப்புக்கள் வந்துள்ளன. அவற்றை ஹதீஸ்துறை அறிஞர்கள் ஸஹீஹ் என்றே கூறியுள்ளனர். அதுதான் அல்குர்ஆனின் மேற்படி வசனங்களுக்கும் ஏற்றதாகும். எகிப்து போன்ற சீர்கெட்ட நாடுகளில் 18 வயதுக்கு மேல் வலி இல்லாமல் திருமணம் செய்யலாம் என்ற சட்டம் இருப்பதைச் சாட்டாக வைத்து சமூகத்தை சீர் கெடுக்க முடியாது.

வலி இல்லாமல் திருமணம் இல்லையென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ மூஸா | நூல்: திர்மிதி- 1101, அபூதாவூத்- 2088, இப்னுமாஜா: 1881
(இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று குறிப்பிடுகின்றார்கள்.)
எனவே, வலி இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்பதுதான் சரியானதாகும்;. ஒரு பெண் வலி இல்லாமல் திருமணம் செய்யலாம் என்ற சட்டம் ஒழுக்க சீர்கேட்டை உருவாக்கும். ஓடிப் போய் குடும்பத்திற்குத் தெரியாமல் திருமணம் செய்யும் குடும்ப குத்து விளக்குகளை உருவாக்கத்தான் இது உதவி செய்யும். இளம் பெண்கள் ஏமாற்றப்படும் இக்காலகட்டத்தில் இந்த சட்டத்தையும் போட்டால் குடும்பத்துக்குத் தெரியாமல் திருமணம் செய்து கற்பையும் இழந்து கைவிடப்படும் பெண்கள்தான் உருவாகுவார்கள்.
இந்தியா, போன்ற நாடுகளில் இப்படி ஏமாற்றி அழைத்துச் செல்லப்படும் பெண்கள் விபச்சார விடுதிகளுக்கு விற்கப்படுகின்றனர். அனுபவித்த பின்னர் நடுத்தெருவில் விடப்படுகின்றனர். சில போது நண்பர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
வலீ இல்லாமல் ஒரு பெண் தானாகவே திருமணம் செய்யலாம் என்று கூறும் பெரியவர்களே! உங்கள் மகள் அல்லது சகோதரி உங்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து விட்டு வந்து இந்த நபரை நான் திருமணம் செய்துவிட்டேன் என்று உங்களிடம் கூறினால் உங்கள் உள்ளம் எந்த ‘வலி”யும் இல்லாமல் மனதார அதை ஏற்றுக் கொள்ளுமா? உள்ளத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!
‘வலி’ இல்லாமல் திருமணத்தை ஆதரிக்கும் பெண்ணிலைவாதிகள் பெண்களை படுகுழியில் தள்ளும் முயற்சியில்தான் இறங்கியுள்ளனர். எனவே, ஷரீஆ ரீதியிலும் சமூக அடிப்படையிலும் தனது முடிவு சரியானதா என அவர்கள் நடுநிலையாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
நாங்களும் முற்போக்குவாதிகள்தான் எனக் காட்டிக் கொள்வதற்காகவும் தனிப்பட்ட ஜமாஅத் இயக்க வெறுப்புக்களை பழிதீர்ப்பதற்காகவும் இப்பிரச்சினையில் வலுவற்ற கருத்துக்களையும் சமூகத்தைப் பாதிக்கும் கருத்துக்களையும் பகிர்ந்து வரும் கலாநிதிகளும் அஷ்ஷெய்குகளும், நவீனத்துவ(?) சிந்தனையாளர்களும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கும் தன்னைத் தூக்கி நிறுத்துவதற்காகவும் களத்தில் இருக்கும் ஏனைய அமைப்புக்களை காயப்படுத்துவதற்கும் இதை ஒரு களமாகப் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
                                                                              
                                                                                             மௌலவி:- S.H.M. இஸ்மாயில் ஸலபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget