மணமகணின் விருந்தா.? பெண் வீட்டார் விருந்தா.?

இன்று ஸலபுக்கொள்கையில் இருக்கக் கூடியவர்கள் மத்தியிலும் கூட திருமணத்தைக் காரணம் காட்டி பெண் வீட்டாரின் செலவில் கொடுக்கப்படும் விருந்துகளை ஆதரிப்போர் சிலரும் ,மறுப்போர் சிலரும் காணப்படுகின்றனர்.

பெண் வீட்டார் செலவில் கொடுக்கப்படும் விருந்து ஹராம் என்று ஒரு சிலரும், சுன்னாவில் அடங்காது என ஓர் சாராரும், கலந்து கொள்வது பிழையில்லை ஆகுமாகும் என மற்றொரு சாராரும், நபிவழியின் அடிப்படையில் வலீமா மாத்திரம்தான் திருமண விருந்தாகும் என இன்னொரு சாராரும் எனப் பல முறண்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் உலாவருகிறது.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “இளைஞர் சமுதாயமே! உங்களில் வாழ்க்கைச் செலவு (தாம்பத்தியம், உணவு, உடை, உறையுள்) போன்றவற்றைக் கொடுக்க சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள்” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்

கணவனே திருமண பந்தத்தின் முழுப் பொறுப்பையும் சுமப்பவர் என்பது இந்த ஹதீஸின் மூலம் தெளிவாகின்றது.வாழ்க்கைச் செலவு, வசதி வாய்ப்புக்களோடு ஓர் பெண்ணை வாழவைக்கத் தகுதி படைத்த ஆணுக்குத்தான் திருமணம் முடிப்பது கடமை என்பதை நபியவர்கள் வழியுறுத்தியுள்ளதே சிறந்த சான்றாகும். 2793. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிறகு நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள்.

பிறகு, நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் ("சத்துஸ் ஸஹ்பா" எனுமிடத் தில்) இருந்தபோது, (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (அலங்கரித்துத்) தயார்படுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார்கள். காலையில் புது மாப்பிள்ளையாக இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம்மிடம் ஏதேனும் (உணவுப் பொருட்கள்) வைத்திருப்பவர், அதை (நம்மிடம்) கொண்டுவாருங்கள்" என்று கூறி, தோல் விரிப்பொன்றையும் விரித்தார்கள். 

அப்போது (அங்கிருந்தவர்களில்) ஒருவர் பாலாடைக் கட்டியைக் கொண்டுவரலானார்; மற்றொருவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வரலானார்; இன்னொருவர் நெய்யைக் கொண்டுவரலானார். அவற்றை ஒன்றாகக் கலந்து "ஹைஸ்" எனும் ஒரு வகைப் பலகாரத்தைத் தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த மணவிருந்தாக (வலீமா) அமைந்தது. ஸஹீஹ் முஸ்லிம்

மேற் கண்ட ஹதீஸின் அடிப்படையில் நபியவர்களின் மனைவியான சபிய்யா பினத் ஹுயை அவர்களின் திருமணத்தைக் காரணம் காட்டி யார் வேண்டுமானாலும் திருமணவிருந்து கொடுக்கலாம் எனச் சிலர் கூறுவது அறிவுபூர்வமான கருத்தல்ல. 

மதீனாவுக்கு வெளியே ஒருபோர் முடிந்ததும் இத்திருமணம் நடக்கின்றது. சந்தர்ப்ப சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் நபியவர்களிடம் திருமண விருந்தளிக்க உணவில்லாத காரணத்தால் ஸஹாபாக்களின் உணவுகளால் கொடுக்கப்பட்டது. ஓர் கணவனுக்கு இந்த மாதிரி ஓர் நிர்ப்பந்தத்தால் வசதியற்ற நிலையில் மற்றவர்கள் விருந்தளிப்பதில் குற்றமில்லை என்றுதான் இந்த ஹதீஸில் இருந்து விளக்கம் எடுக்க வேண்டும்.அத்தோடு வலீமா எனும் திருமண விருந்து கொடுக்கப்படுவதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

ஆனாலும் நபியவர்களின் ஏனைய திருமணங்களின் போது நபியவர்களின் செலவில்தான் திருமண விருந்து போடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 5183. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

அபூ உசைத் அஸ்ஸாஇதீ(ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பருகக் கொடுப்பதற்காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா?

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரிச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி(ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரிச்சம் பழச்சாற்றை அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.)118 ஸஹீஹ் புகாரி

அதே போல் இந்த ஹதீஸில் அபூ உஸைத் அவர்களின் மணவிருந்து அவரது மனைவியின் கைகளாலேயே பரிமாறப்படுகின்றது. இதை வைத்து சிலர் பெண் வீட்டு சாப்பாடு ஆகுமாகும். என்று யூகத்தில் கற்பனையாக விளக்கம் கொடுப்பது ஆதாரமாகாது. மணமகள் வீட்டாரின் செலவில்தான் இந்த விருந்தளிக்கப்பட்டது என்று இந்த ஹதீஸில் எந்த விளக்கமும் கொள்ள முடியாது.

கணவனது செலவில் மனைவி வீட்டில் மனைவியின் கையால் விருந்தளிப்பதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது.யார் வீட்டில் வேண்டுமானாலும் கணவன் விருந்தளிப்பதே மணவிருந்தாக அமையும். மனைவி வீட்டில் ஒரு போதும் மனைவி செலவழிப்பதில்லை. மனைவியின் பெற்றோரும் அவரது குடும்பமும் தான் செலவழிக்கின்றனர்.பல சங்கடங்களுக்கு மத்தியில் துன்பப் பட்டு மனைவி வீட்டார் விருந்தளிக்கின்றனர்.

பெண் வீட்டார்....... முகஸ்துதிக்காக, சரியில்லையே நாமும் சாப்பாடு போட வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளோடு தப்ப முடியாது என்றும், பலரிடம் கையேந்தி, பல பொருட்களை அடமானம் வைத்து வட்டி வாங்கி, கடன் பட்டு நகை, சாப்பாடு போடுவதே சமூகத்தின் உண்மை நிலைமை ஆகும். சிலரின் குத்தல் பேச்சுக்குப் பயந்து,கணவன் வீட்டாரின் நாற்பட்ட கொடுமைகளுக்குப் பயந்து விருந்து ஏற்பாடு நடக்கும்.

ஒரே பிள்ளை ,எங்களுக்கும் உறவுண்டு வசதியுண்டு என்ற பலகாரணங்களோடு தற்பெருமைக்காகவும் பெண் வீடு இவற்றைத் தாமாகச் செய்யும் அவலத்தையும் காண்கிறோம். ரூம் செட் நகை என எல்லாவற்றின் விடயங்களிலும் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு பல சட்டங்களை இடுவார்கள். இது மறைமுகமான சீதனம் தான்.தன்மானப்பிரச்சினையால் சொந்தக் குடும்பத்திற்குள்ளே திருமணப்பேச்சுவார்த்தை நிகழ்ந்தாலும் மாரி மாரி சாப்பாடு போடுவதும் வேடிக்கை தான்.

கணவன் தன் வசதிக்கேற்ப வலீமா எனும் திருமண விருந்தளிப்பதை மார்க்கம் வழியுறுத்துகின்றது.

அதையும் மீறி பெண் வீட்டார் விருந்தளிப்பது வீண் விரயமாகும்.வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்தான்.

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏
திண்ணமாக, வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:27)

ஒரு வாரகாலமாகவே திருமண சம்பிரதாய விருந்துகள் இன்று ஏராளம். ஒரு விருந்து போதும். மற்றவை அனைத்தும் வீண்விரையமேயன்றி வேரில்லை. அப்படியே விருந்து கொடுக்க வேண்டும் உறவுகளை வரவேற்க வேண்டும் எனப் பெண் வீடு கருதினால் திருமணத்தைக் காரணம் காட்டி விருந்துபசாரம் செய்யாது வேறு ஒரு காலத்தில் தனிப்பட்ட சாப்பாடுகளைப் போடலாம்.

பெண்வீட்டு சாப்பாடு கொடுக்கலாமா ? என்ற கேள்வியைக் கூடக் கேட்க வேண்டிய அவசியம் ஒரு முஸ்லிமுக்கு இல்லை என்ற அளவுக்கு நபியவர்கள் கணவனுக்குத் தான் திருமண விருந்து கடமை என்பதை இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகின்றார்.

அப்துர்ரஹ்மான இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற நபித் தோழர் ஒரு அன்சாரிப் பெண்ணை மணம் முடித்தார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், என்ன விசேஷம் என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது என பதிலளித்தார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், எவ்வளவு மஹர் கொடுத்தீர்? என கேட்டார்கள்.

அதற்கு இப்னு அவ்ஃப(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஒரு பேரித்தம் பழம் அளவு தங்கம் என்றார்கள். ரசூல்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'ஒரு ஆட்டையாவது அறுத்து வலிமா விருந்து வைப்பீராக' என்றார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:புகாரி, முஸ்லிம்

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் தங்கத்தை மஹராகக் கொடுத்துத் திருமணம் முடித்த பின் மணவிருந்து (வலீமா) கொடுக்காது நபியவர்களைச் சந்திக்கிரார்.அப்போது கணவனுக்குத் தான் வலீமா கொடுக்கும் படி ஏவினார்கள். 5030. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்வில்லை என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். 

அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!' ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!' என்றார். 

நபி(ஸல்) அவர்கள், உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!' என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். 'இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று பார்!' என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, 'இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது' என்று கூறினார். றிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தன்னுடைய வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். -

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்த வேட்டியை நீர் அணிந்தால், அவளின் மீது ஏது இருக்காது. அவள் அணிந்தால், உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?)' என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு, அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். 

அவர் வரவழைக்கப்பட்டபோது, 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது' என்று கேட்டார்கள். அவர், 'இன்ன , இன்ன , இன்ன என்னுடன் உள்ளன' என்று எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (ஓதுவேன்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்

இந்த ஹதீஸில் இரும்பாலான மோதிரம் கூட மஹராக வழங்க முடியாத அளவுள்ள ஏழ்மை மிக்க அந்த ஸஹாபிக்கும் கூட உன்னிடம் இருக்கும் ஏதாவது ஒன்றை மஹராகக் கொடுத்து மணம் முடிக்க ஏவினார்கள். இதனடிப்படையில் மணமகனே செலவுக்கு சொந்தக் காரன் என்பது தெளிவாகின்றது. அச்சபையில் அவரது மனைவியாகப் போகும் பெண் இருந்தார் ஆனால் மணகளின் வீட்டாருக்கு எக்கடமையும் இல்லை எபதற்கு இந்த ஹதீஸ் ஓர் எடுத்துக் காட்டாகும்.

இன்றைய மணவிருந்துகளும் கூட கோழி, மாட்டிறைச்சி, கலியா, மாசிசம்பல் எனப் பல வகையான உணவுச் சம்பிரதாயங்களோடு சமூகத்தைக் கட்டிப் போட்டுள்ளது. இவற்றில் அரைவாசி உணவு குப்பைக்குப் போவதும் யாவரும் அறிந்த சமூகக் கொடுமை. ஆனால் நபியவர்களோ,சஹாபாக்களோ வீண்விரயமில்லாது தங்களின் கைவசம் இருக்கும் ஏதோ ஒரு உணவைத்தான் மணவிருந்தாக அளித்தார்கள். 

உணவில் வரையறையில்லை,வீண் விரயமும் இருக்க வில்லை. இதுவே அழகான வழிகாட்டலாகும். எப்போது திருந்தும் நமது முஸ்லிம் சமூகம்.ஒரு விடயத்தை நாம் ஆகுமாக்குவதன் மூலம் பல தீமைகள் அதன் மூலம் நிகழுமாயிருந்தால் அதைச் சமூகத்தில் பரப்பாமல் இருப்பதே சிறந்ததாகும். வரதட்சனையை இல்லை யென்று வாதிட்ட சமூகத்துக்குள் பெண் வீட்டு சாப்பாடு ஆகுமாகும் என வழியுறுத்துவதும் மறைமுகமாக வரதட்சனைக் கொடுமை நிகழப் பல வழிகளைத் திறந்து விடும்.

வீண்விரயமாக, முகஸ்துதிக்காக, பெருமைக்காக எனப் பல விருந்துகளை அளிக்காது கணவன் மனைவி வீட்டார் புரிந்துணர்வோடு கலந்தாலோசித்து மார்க்கம் சொல்லும் மணவிருந்தைக் கணவனின் செலவில் போடக்கூடிய விருந்தாக மாத்திரம் நடைமுறைப்படுத்துவதே நபிவழியாகும்.

நபிவழியில் காட்டித்தராத அந்நிய மதக் கலாச்சாரத்திலிருந்து மறைமுகமான வறதட்சனையாக ஊடுருவியுள்ள பெண் வீட்டு சாப்பாடு ஹராம் என்று கூற மூடியாது.

ஆனால் நபிவழியில் எவ்விடத்திலேயும் இதற்கு ஆதாரம் இல்லை என்று கூறலாம். ஆகவே நாம் தான் சிறந்த தீர்ப்பை ஹதீஸ்களின் மூலம் விளங்கி செயற்படுத்த முற்பட வேண்டும்.

வள்ள ரஹ்மான் ஒருவனே யாவற்றையும் திறன் பட அறிந்தவன் .

                                                                Safiyyah Ibnathu Meeran ( Al Baziyah )

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget