பெண்களும் அவர்களுக்குரிய நோன்பும்.!

இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.  
மாத, பிரசவ, தீட்டுடைய பெண்கள்
ஹைல், நிபாஸ் எனப்படும் நிலைகளில் பெண்கள் தவிர்க்க வேண்டியவைகளில் தொழுகை, நோன்பு, உடலுறவு கொள்ளல், கஃபாவைத் தவாப் செய்தல் என்பன அடங்கும். மற்றப்படி அவர்கள் திக்ரும் ஸலவாத்தும் ஓதலாம். மற்றவர்களுடன் ஒன்றாக உண்ணலாம், உறவாடலாம். இஸ்லாம் இவற்றை ஏனைய மதங்கள் கூறுவது போல் தீட்டாகக் கருதவில்லை. தமிழ் மொழியில் ஹைல், நிபாஸ் என்பன மாதத் தீட்டு, பிரசவத் தீட்டு என்று குறிப்பிடப்படுவதனாலேயே நாமும் குறிப்பிட்டு வருகின்றோம்.
இந்நிலையில் இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கலாகாது. ஆனால், இதனால் விடுபட்ட நோன்புகளை பின்னர் கழாச் சொய்ய வேண்டும்.
‘நபி(ஸல்) அவர்களது காலத்தில் நாம் மாதவிடாய்க்கு உட்பட்;டால் நோன்பைக் கழாச் செய்யுமாறு எமக்கு ஏவினார்கள். தொழுகையைக் கழாச் செய்யுமாறு ஏவமாட்டார்கள்;’ என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)
நோன்புடன் ஒரு பெண் இருக்கையில் இந்நிலையை அடைந்தால் நோன்பு முறிந்து விடும். மஃரிபுடைய வேளைக்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் இந்நிலை ஏற்பட்டாலும் அவர் அந்த நோன்பை கழாச் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இருக்கும் சில பெண்கள் வீட்டில் மற்றவர்கள் நோன்புடன் இருக்கும் போது தாம் உண்பது கூடாது என்று கருதி தம்மைக் கஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். பிறர் அறிய உண்பதில் சங்கடங்கள் இருந்தால் தனிமையில் அவர்கள் வழமை போல் உண்பதிலோ அல்லது பருகுவதிலோ எந்தக் குற்றமுமில்லை.
சில படித்த பெண்கள் நோன்பு காலங்களில் அதிக அமல்கள் செய்யும் ஆர்வத்திலும், விடுபட்ட நோன்புகளைப் பின்னர் கழாச் செய்வதிலுமுள்ள அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டும் மாதத்தீட்டைத் தடை செய்யும் மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து நேரடியாக எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் இயற்கைக்கு மாற்றமான இவ்வழிமுறையைக் கைவிடுதலே சிறந்ததாகும். ஏனெனில், இதனல் நோன்பைக் கழாச் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. தொழுகை அவர்கள் மீது கடமையில்லை.
திக்ர், ஸலவாத்து, அல்குர்ஆனை ஓதுதல் போன்ற வழமையான இபாதத்துக்களில் அவர்கள் ஈடுபடலாம். நோன்பை மட்டும் தவிர்க்க வேண்டியது தான் பாக்கி. அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படப் போவதுமில்லை. குற்றம் பிடிக்கப் போவதுமில்லை. எனவே, இவ்வழிமுறையை நாம் கைவிட்டு இயற்கை வழியிலேயே செயற்படுவோமாக.
விடுபட்ட நோன்புகளை அடுத்த றமழான் வருவதற்கு முன்னர் கழாச் செய்திட வேண்டும். அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்ற அவசியமுமில்லை. தனித்தனியாக வசதிப்படி நோற்றுக் கொள்ளலாம். அப்படி நோற்பதாயின் வெள்ளிக் கிழமை மட்டும் தனியாக நோற்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஹைல் நிபாஸுடன் இருக்கும் ஒரு பெண் ஸஹருடைய நேரத்தை அடையும் முன் சுத்தமாகி விட்டால் அவர் நோன்பு நோற்பது கடமையாகும். உதாரணமாக சுப்ஹுடைய அதானுக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் ஹைல் நின்று விட்டால் ஸஹர் செய்து நோன்பு நோற்க வேண்டும். தொழுகைக்காக் குளித்துக் கொள்ள வேண்டும்.
ஸஹருடைய நேரம் சுபஹுடைய அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே முடிவடைந்து விடுவதாக நம்பப்படுகிறது. அது தவறானதாகும். இதனைப் பின்வரும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் றமழான் மாதத்தில் ஸஹருடைய ஒரு அதானும் சுபஹுடைய ஒரு அதானும் கூறப்படும். இது குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள் உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள் எனக் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), ஆதாரம்: இப்னு குஸைலமா-1932)
மேற்படி ஹதீஸ் சுப்ஹுடைய அதான்வரை ஸஹருடைய நேரம் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. எனவே, ஸஹருடைய நேரத்திற்கு முன் சுத்தமாகும் பெண் மீது நோன்பு கடமையாகும். ஆனால் உடனே குளித்து விட்டுத்தான் நோன்பை நோற்க வேண்டும் என்பதில்லை. ‘நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பு நோற்றார்கள்’ என நபிகளாரின் துணைவியர்களான உம்மு ஸலமா (ரழி), ஆயிஷா(ரழி) இருவரும் கூறுகின்றார். (தாரமி-1725, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா-1704, முஅத்தா-644,645) மேற்படி நபிமொழிக்கு அமைய ஸஹருடைய நேரம் முடிவடைவதற்குள் மாதத்தீட்டிலிருந்து விடுபடும் பெண்கள் அதே நிலையில் நோன்பை நோற்கலாம். தொழுகைக்காக குளித்துக் கொள்ள வேண்டும்.
பயணத்தில் பெண்கள்
பயணம் செய்யும் பெண்கள் நோன்பை விட்டு விட்டுப் பின்னர் அதனைக் கழாச் செய்து கொள்ளலாம். இது பெண்களுக்கு மட்டுமுரியதல்ல. இதனை அறியாத பல பெண்கள் தம்மைத் தாமே வருத்திக் கொள்கின்றனர்.
‘எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால் அவர் (அந்தச் சமயத்தில் நோன்பு நோற்காமல்) வேறு நாட்களில் (விடுபட்டுப் போன) அதைக் கணக்கிட்டு (நோற்றுக் கொள்வ(து அவர் மீது கடமையானதாகும்’… (2:165)
இவ்வகையில் பயணத்தில் இருக்கும் அல்லது நோயுடன் இருக்கும் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பின்னர் கழாச் செய்து கொள்வதற்கு அனுமதியுள்ளது. வீணே தன்னைத் தானே சிரமப்படுத்திக் கொள்ள இஸ்லாம் கூறவில்லை.
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களும், மூதாட்டிகளும்
கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தமக்கோ, தமது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சும் நிலையிருந்தால் நோன்பை விடலாம். அவ்வாறே வயோதிப ஆண், பெண் இரு சாராரும்கூட நோன்பை விடலாம். தாம் நோற்காக ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இவர்கள் பித்யா வழங்கப்பட்ட இந்த நோன்பை மீண்டும் கழாச் செய்ய வேண்டியதில்லை.
இந்த சலுகையை அறியாத பலர் தம்மைத் தாமே சிரமப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் பலர் சிரமத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதனால் நோன்பை விட்டு விடுகின்றனர். ஆனால் சட்டம் தெரியாததால் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவு என்ற பரிகாரத்தை நிறைவு செய்வதுமில்லை.
வயோதிபர்களும் பெண்களும் பித்யா கொடுக்கும் இவ் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினால் இதன் மூலம் நோன்பு காலத்தில் அனேக ஏழைகளுக்கு உணவு போய்ச்சேர வழிபிறக்கும்.
சமையலில் சுவை பார்த்தல்
பெண்கள் நோன்பு கால சமையலில் உப்பு, காரம் போன்றவையைக் கூட்டிக் குறைத்து அசடு வழிவதுண்டு. உணவை சுவைபார்க்க முடியாது என்பதால் தான் இந்நிலையென தன்னிலை விளக்கம் கூறுவர். இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன்(ரழி), ஆயிஷா(ரழி) போன்ற நபித் தோழர்கள் இதனைச் சரி கண்டுள்ளனர். எனவே, பெண்கள் ஆணம், கஞ்சி போன்றவற்றை நாவின் நுணியில் வைத்து சுவைபார்க்கலாம் அதனைப் பின்னர் உமிழ்ந்துவிட வேண்டும்.
இல்லறத்தில் ஈடுபடுதல்
நோன்புடன் இருக்கும் போது தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்றால் முத்தமிடுவது குற்றமில்லை. இரவு நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடுவதிலும் எந்தத் தவறும் இல்லை. இதனை ‘நபி(ஸல்) அவர்கள் நோன்புடன் இருக்கும் போது (தமது மனைவியை) முத்தமிடுவார்கள்’ (புஹரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, தாரமி) என்ற நபிமொழியும் ‘நோன்புடைய இரவில் உங்கள் மனைவியருடன் (வீடு) கூடுவது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது’ (2:187) என்ற வசனமும் உணர்த்துகின்றது. 

இல்லறத்தில் ஈடுபட்டாலும் இது தவறாகுமோ என்ற அச்சம் அல்லது இதனால் நோன்பின் பயன் குறைந்து விடுமோ என்ற கவலையும் பெண்களிடம் உள்ளது. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதனால் குளிப்புக் கடமையான நிலையில் விழிப்போர் அதே நிலையில் நோன்பைக் கூட நோற்கலாம். தொழுகைக்காகத்தான் அவர்கள் குளித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நபிமொழிகளின் மூலம் உணரலாம்.
மார்க்கச் சட்டங்களைச் சரிவர அறிந்து கொள்ளாததால் மக்கள் மார்க்கத்தைச் சிரமமானதாக எடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாமிய சட்டங்களை சரிவர அறிந்து இலகு மார்க்கம் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வோமாக.
                                                                                                            அஷ்சேஹ்  இஸ்மாயில் (ஸலபி) 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget