June 2019

முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர்.

அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய யாரும் உலகில் இல்லை. அப்படி யாரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போவதுமில்லை.
ஏனெனில், அந்தப் பெயர் வழிகெட்ட பிரிவுகளின் பெயரில் ஆழமாக இடம்பெற்றுவிட்டது. ஏற்கனவே இருந்த முஃதஸிலாக்கள் கூட தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தம்மை “அஹ்லுத் தவ்ஹீத் வல் அத்ல்” என்றே அழைத்துக் கொண்டனர். எனவே, இன்றும் கூட தவ்ஹீத்வாதிகள் என்ற பெயரில், இஸ்லாமிய அமைப்புக்கள் என்ற பெயரில் முஃதஸிலாக்களின் எச்ச சொச்சங்கள் சமூகத்திற்குள் ஊடுருவியுள்ளது.
முஃதஸிலாக்கள் என்ற பெயரில் எந்த அமைப்பும் உலகில் இல்லையென்றாலும் முஃதஸிலாக்களின் பாணியில் குர்ஆன், ஸுன்னாவை அணுகும் வழிகெட்ட அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கவே செய்கின்றன.
எனவே, முஃதஸிலாக்கள் என்பது அழிந்து போன அமைப்பு அல்ல. சிந்தனா ரீதியில் வாழ்ந்து, வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த வழிகெட்ட அமைப்பின் தாக்கம் இஸ்லாமிய சிந்தனையாளர்கள், நவீனகால அறிஞர்கள் என அடையாளம் காணப்பட்ட பலரிடமும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே, முஃதஸிலாக்களின் வழிகேட்டு வலையில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் பற்றிய இத்தொடர் முன்வைக்கப்படுகின்றது.
முஃதஸிலா பெயர் விளக்கம்:
“இஃதஸல” என்றால் பிரிந்து சென்றான், விலகிச் சென்றான், ஒதுங்கினான் என்று அர்த்தம் செய்யலாம்.
“என்னை நீங்கள் நம்பிக்கை கொள்ள வில்லையானால் என்னை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள் (எனவும் மூஸா கூறினார்.)”(44:21)
மேற்படி வசனத்தில் விலகிச் செல்லுங்கள் என்பதற்கு ‘பஃதஸிலூன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் என்ற பதம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தோன்றிய இஸ்லாமிய அகீதாவை ஆய்வு செய்யும் விடயத்தில் பகுத்தறிவுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் அமைப்புக்குச் சொல்லக்கூடிய பெயராகும். இவர்கள் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களது மஜ்லிஸில் இருந்து பிரிந்து சென்ற வாஸில் பின் அதாவின் குழுவினர் என அறியப்பட்டார்கள்.
(அல் பர்க் பைனல் பிரக்: 20, அல் மினல் வன்னிகல்: 1ஃ50, வபயாத் லில் அஃயான்: 2ஃ71, அத்தஃரீ பாத் லில் ஜுர்ஜானி: 238)
பெயருக்கான காரணம்:
முஃதஸிலா என்ற பெயர் இவர்களே தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் அல்ல. அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இவர்களை இழிவுபடுத்துவதற்காகவும் அடையாளப்படுத்துவதற்காகவும் இவர்களுக்கு இட்ட பெயரே இதுவாகும். இவர்கள் இஸ்லாமிய உம்மத்திலிருந்து சிந்தனா ரீதியில் பிரிந்து சென்றுவிட்டனர் என்று அடையாளப்படுத்தும் விதமாகவே இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். இந்தப் பெயர் இவர்களுக்குச் சொல்லப்படுவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது என்பது பிரபலமான கருத்தாகும்.
இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ஒரு சபையில் இருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து, ‘இமாமவர்களே! இப்போது ஒரு கூட்டம் தோன்றியுள்ளது. அவர்கள் பெரும் பாவம் செய்பவர்களைக் காபிர்கள் என்று கூறுகின்றனர். பெரும் பாவம் செய்வது அவர்களின் பார்வையில் குப்ர் ஆகும். பெரும் பாவம் செய்தவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான் என்பது அவர்களது நிலைப்பாடு. இவர்கள் கவாரிஜ்கள்.
மற்றுமொரு கூட்டம் பெரும்பாவம் செய்பவருக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுகின்றனர். அவர்களது பார்வையில் ஈமான் என்பது நம்பிக்கை மட்டுமே, செயல் கிடையாது. ஈமானுடன் பெரும் பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கின்றனர். குப்ருடன் நன்மை செய்தால் எப்படி எந்த நன்மையும் இல்லையோ அவ்வாறே ஈமானுடன் பாவம் செய்வதால் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறுகின்றனர். இவர்கள் முர்ஜிய்யாக்கள். இந்தக் கொள்கை பற்றி நீங்கள் எங்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்” என்று கேட்டார்.
இதற்கு இமாமவர்கள் பதிலளிப்பதற்கு முன்னர் அந்த சபையில் இருந்த வாஸில் பின் அதாஃ (ஹி. 80-131) என்பவன் பெரும் பாவம் செய்பவனை முழுமையான முஃமின் என்றும் நான் சொல்லவும் மாட்டேன், காபிர் என்று முழுமையாகக் கூறவும் மாட்டேன். எனினும், ஈமான்-குப்ர் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றான். அவன் முஃமினும் இல்லை காபிரும் இல்லை.
(மன்ஸிலதுன் பைனல் மன்ஸிலதைன்)
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான் என்று கூறிவிட்டு ஹஸன் பஸரியின் மஜ்லிஸை விட்டும் ஒதுங்கி மஸ்ஜிதில் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அம்ர் இப்னு உபைத் என்ற அவனது நண்பனும் அவனுடன் இணைந்து கொண்டான். இந்த சந்தர்ப்பத்தில்தான் இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ‘இஃதஸலனா வாஸில்…” ‘வாஸில் எம்மை விட்டும் ஒதுங்கிவிட்டார்” என்றார்கள். அதுவே அவர்களை அடையாளப்படுத்தும் பெயராக மாறிவிட்டது என இமாம் ஸஹ்ருஸ்த்தானி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 
(அல் மினல் வன்னிகல்: 1ஃ52)
குறித்த இந்த சம்பவம் தொடர்பிலும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. நவீன கால முஃதஸிலா ஏஜென்டுகள் இந்த நிகழ்ச்சியை வைத்து இமாம் ஹஸனுல் பஸரியையே குறை கூற ஆரம்பித்துள்ளனர். வாஸில் தவறான கருத்தைக் கூறியிருந்தால் அவனுடன் விவாதித்து உண்மையை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பட்டம் கூறி அவனை ஒதுக்கியது தவறு என்ற அடிப்படையில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ‘தானாடாவிட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். தமது முன்னோர் குறை கூறப்படும் போது உள்ளம் கொதி கொதிக்கின்றது போலும்!
இந்த நிகழ்ச்சியில் இமாம் ஹஸனுல் பஸரியிடம்தான் கேள்வி கேட்கப்பட்டது. அவர்தான் பதில் சொல்ல வேண்டும். இடையில் பாய்ந்து பதில் சொன்னது வாஸிலின் தவறாகும். பதிலைக் கூட அவர் குர்ஆன், ஹதீஸில் இருந்து கூறவில்லை. தனது கருத்தாகவே முன்வைக்கின்றார். கருத்தைச் சொன்னாலும் அடுத்தவர்களுடைய கருத்து என்ன? இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் என்ன? என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை. தானாகவே ஒதுங்கிச் சென்றுவிட்டான்.
எனது கருத்து இதுதான். இதற்கு மாற்றமான கருத்துடன் இணைந்திருக்க முடியாது என்று ஒதுங்கிச் சென்றது அவன்தான். அவனை ஹஸனுல் பஸரி(ரஹ்) ஒதுக்கவில்லை. இன்றைய முஃதஸிலா குஞ்சுகளும் ஏதேனும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அதைச் சாட்டாக வைத்து ஒதுங்கிச் செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதை அவதானிக்கும் போது இது இரத்தத்துடன் இரத்தமாக ஊறிப்போன குளமோ என்று ஐயப்படவேண்டியுள்ளது.
முஃதஸிலாக்களின் பெயர்கள்:
முஃதஸிலாக்களுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. முஃதஸிலாக்களுக்கு பிற முஸ்லிம்கள் வைத்த பெயர்கள் உள்ளன. அவ்வாறே அவர்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட பெயர்களும் உள்ளன.
பிறர் சூட்டிய பெயர்கள்:
1. முஃதஸிலாக்கள்:
இந்தப் பெயர் தோன்றிய காரணம் குறித்து முன்னர் பார்த்தோம்.
2. ஜஹ்மிய்யாக்கள்:
ஜஹ்ம் இப்னு ஸப்வான் என்ற ஒரு வழிகேடன் இருந்தான். இவனது பல கொள்கைகளை முஃதஸிலாக்கள் ஏற்றுக் கொண்டு அதைப் பிரச்சாரம் செய்தனர். குர்ஆன் படைக்கப்பட்டது போன்ற கொள்கைகளை உருவாக்கினான். அல்லாஹ்வின் ஸிபத்துக்களுக்கு மாற்று விளக்கம் அளிக்கும் இவனது வழிகெட்ட சிந்தனைப் போக்கின் தாக்கம் இன்று தம்மை அஹ்லுஸ் சுன்னா என அழைத்துக் கொள்ளும் பல அமைப்புக்களிடமும் இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஜஹ்மிய்யாக்கள் என்போர் முஃதஸிலாக்களை விட விசாலமான வழிகேட்டை உடையவர்கள். எனவேதான் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்,
என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது, எல்லா முஃதஸிலாக்காரனும் ஜஹ்மிய்தான். ஆனால், எல்லா ஜஹ்மிய்யும் முஃதஸிலா அல்ல. (மின்ஹாஜுஸ் சுன்னா: 1ஃ256)
இந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் ஜஹ்மிய்யாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
“அல்லாஹ் அர்ஷின்மீதானான்” என்ற குர்ஆன் வசனத்திற்கு அர்ஷின் மீது தன் அதிகாரத்தை நிலைநாட்டினான் என்று மாற்றுவிளக்கமளித்தவன் இந்த ‘ஜஹ்ம்’தான். இவன் இந்தக் கருத்தை ஜஹ்த் இப்னு திர்ஹம் என்பவனிடமிருந்து எடுத்தான். ஜஹ்ம் பின்னர் அதை பிரச்சாரம் செய்ததால் இது போன்ற கருத்துக்கள் இவனுடன் இணைக்கப்பட்டு இவர்கள் ஜஹ்மிய்யாக்கள் எனப்பட்டனர்.
இந்த சிந்தனை யூதர்களிடமிருந்து வந்ததாகும். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதை இப்படிக் கூறலாம்.
ஜஹ்ம் இப்னு ஸப்வான்
அல் ஜஃத் இப்னு திர்ஹம்
அபான் இப்னு ஸம்ஆன்
தாலூத் (ஸபீத் இப்னு அஃலம் என்ற நபியவர்களுக்கு சூனியம் செய்த யூதனின் சகோதரியின் மகன்.) லபீத் இப்னுல் அஹ்ஷம் எனும் நபிக்கு சூனியம் செய்த யூதன். (மஜ்மூஃ பதாவா: 5ஃ20)
இந்த அடிப்படையில் ஜஹ்மிய்யா சிந்தனையும் முஃதஸிலாப் போக்கும் யூத அடிப்படையில் உருவான வழிகேடுகளாகும்.
03. கதரிய்யாக்கள்:
நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்பது ஈமானின் அடிப்படையாகும். முஃதஸிலாக்கள் அல்லாஹ் தீமையை நாடமாட்டான் என்று வாதிடுகின்றனர். இவ்வாறே மனிதனின் செயல்களை மனிதன்தான் படைத்துக் கொள்கின்றான். மனிதனது செயல்களுக்கும் ‘கத்ரு”க்கு மிடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் இவர்கள் கதரிய்யாக்கள் என அழைக்கப்பட்டனர்.
இதனை முஃதஸிலாக்கள் மறுக்கின்றனர். நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் கத்ர் படி நடக்கின்றது என்று கூறுவபவர்களுக்குத்தான் கதரிய்யா என்ற பெயர் பொருத்தமானது என்று கூறுகின்றனர்.
இது குறித்து இமாம் இப்னு குதைபா(ரஹ்) அவர்கள் கூறும் போது,
‘முஃதஸிலாக்கள், (அல்லாஹ்வின் நாட்டப்படி அனைத்தும் நடப்பதில்லை எனக் கூறி) அல்லாஹ்வின் கத்ரை இல்லை என்கின்றனர். (மனிதன் தனது செயல்களைத் தானே படைத்துக் கொள்கின்றான் என்று கூறுவதன் மூலம்) கத்ரை தம்மோடு இணைத்துக் கொள்கின்றனர். எனவே, அவர்கள்தான் கத்ரிய்யாக்கள் என்று கூற வேண்டும். ஏனெனில், தன்னிடம் ஒன்று இருப்பதாக வாதிடக்கூடியவன்தான் அந்தப் பெயரைக் கூறி அழைக்கத் தகுதியானவனாவான்” என்று கூறுகின்றார்கள். 
(தஃவீலு முஹ்தலபுல் ஹதீத்: 98, தாரீகுல் ஜஹ்மிய்யா வல் முஃதஸிலா: 54)
4. இந்த உம்மத்தின் மஜூஸிகள்:

மஜூஸிகள் நல்லதைப் படைக்க ஒரு கடவுளும், தீயதைப் படைக்க இன்னொரு கடவுளும் இருப்பதாக நம்புகின்றனர். முஃதஸிலாக்களும் நன்மையை அல்லாஹ் படைப்பதாகவும், தீமையை மனிதன் படைப்பதாகவும் நம்புகின்றனர். இதன் மூலம் இரண்டு படைப்பாளர்கள் இருப்பதாக நம்புகின்றனர். இது தெளிவான குப்ராகும். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுக்கும் போது இன்றைய முஃதஸிலாக்கள் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர்.
நபிக்கு சூனியம் பலிக்கும் என்பது நல்லதா, கெட்டதா? கெட்டது! அல்லாஹ் கெட்டதை நாடுவானா? அல்லாஹ்வையும் சூனியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்போகின்றீர்களா? என்று கேட்கின்றனர்.
ஷைத்தான் நல்லவனா, கெட்டவனா? கெட்டவன். கெட்டவனை அல்லாஹ் படைப்பானா? அவனுக்கு நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுப்பானா? அவனுக்குப் பல்வேறுபட்ட ஆற்றல்களை அல்லாஹ் வழங்குவானா? ஷைத்தான் செய்யும் எல்லாத் தீமைகளிலும் அல்லாஹ் பங்காளியாக இருப்பானா? என்று கேட்டால், ஷைத்தானைப் படைத்தது வேறு இறைவன் என்று நம்ப வேண்டும். இந்த தெளிவான குப்ரைத்தான் இன்றைய முஃதஸிலாக்களும் மகத்தான வாதமாக முன்வைத்து வருகின்றனர்.
முஃதஸிலாக்களிடம் மஜூஸிகளின் இந்தத் தாக்கம் இருப்பதால், இந்த உம்மத்தில் உள்ள மஜூஸிகள் என அழைக்கப்பட்டனர்.
5. அல் வஈதிய்யா:

முஃதஸிலாக்களின் ஐந்து அடிப்படைகளில் அல் வஃத் வல் வஈத் வாக்கும் எச்சரிக்கையும் என்பது ஒன்றாகும். அல்லாஹ் தனது வாக்கிலும் எச்சரிக்கையிலும் உண்மையானவன். தவ்பாவுக்குப் பின்னர்தான் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று இவர்கள் கூறி வந்தனர்.
(அல் இன்திஸார்: 126)
எனவே, இவர்கள் வஃதிய்யாக்கள் எச்சரிப்போர் என அழைக்கப்பட்டனர்.
6. முஅத்திலாக்கள்:

முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்த காரணத்தினால் ‘முஅத்திலாக்கள்” – மறுப்பவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு இவர்கள் பல பெயர் கொண்டு அழைக்கப்படுவதன் மூலமே இவர்களின் வழிகேடுகள் சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது.

                                                                                                       அஷ்ஷேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் கொள்கையில் உறுதியை வலியுறுத்துகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கொள்கையில் மலை போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும். அதில் தளர்வோ தள்ளாட்டமோ இருக்கக் கூடாது. இதே வேளை, இஸ்லாம் பிற சமய, சமூக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது.
இஸ்லாம் சிலை வணக்கத்தையும், பல தெய்வ வழிபாட்டையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை முட்டாள்தனமாகவும் பார்க்கின்றது. இன்னும் அதை நரகத்திற்கு இட்டுச் செல்லும் இணை வைப்புச் செயலாகவும் பார்க்கின்றது.
ஆனால், சிலைகளைக் கடவுள்களாக பிற மக்கள் வழிபடும் போது அவர்களின் அந்தச் செயலை நாம் மறுத்தாலும் அவர்களின் உணர்வுகளை ஊனப்படுத்துவதையோ, அதன் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டி குழப்பத்தை ஏற்படுத்துவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் அறியாமையினால் வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செயல்களை நாம் அலங்கரித்துக் காட்டியுள்ளோம். பின்னர் அவர்களது இரட்சகனிடமே அவர்களது மீளுதல் உள்ளது. அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.” (6:108)
இந்த வசனத்தில் பிற மக்கள் வழிபடும் போலி தெய்வங்ளைத் திட்ட வேண்டாம், குறை கூற வேண்டாம் என்று தடை விதிக்கப்படுகின்றது. தடைக்கு ஒரு காரணமும் கூறப்படுகின்றது. எதிர் விளைவு குறித்து சிந்திக்க வேண்டும். நாம் அவர்கள் வழிபடும் போலி தெய்வங்களைக் குறை கூறினால் அவர்கள் அல்லாஹ்வைக் குறை கூறுவார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறை கூற நாமே காரண கர்த்தாவாகிவிடுவோம்.
அடுத்து அவர்கள் சிலைகளை வழிபடுகின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செய்யக் கூடிய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அவர்களது செயற்பாடுகள் அவர்களுக்கு அழகாகக் காட்டப்பட்டுள்ளன. எனவே, நாம் அவற்றை அசிங்கமாகச் சித்தரித்தாலோ, குறை கூறி விமர்சித்தாலோ அவர்கள் ஆத்திரமுறுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, பிற சமூக மக்களின் செயற்பாடுகளை நாம் விமர்சிப்பதும் குறை கூறுவதும் அவர்களது உள்ளத்தைப் பாதிக்கும்’ அவர்களது உணர்வுகளை சீண்டுவதாக அமையும் எனவே, அவற்றை நாம் தவிர்ப்பதே நல்லதாகும்.
இவ்வாறே ஒவ்வொரு சமூகமும் சில இடங்களையும், பொருட்களையும் புனிதமாகப் பார்க்கலாம். பிற சமூக மக்களுடன் கலந்து வாழும் போது இது பற்றிய தெளிவுடன் நாம் நடந்து கொள்வது அவசியமாகும்.
அண்மையில் இலங்கை மாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்னர் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய தப்பான எண்ணங்கள் விதைக்கப்படும் வண்ணம் காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதற்கு நம்மவர்களும் காரணமாக உள்ளனர்.
ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் ‘கிரலகல’ தூபி மீது ஏறி நின்று புகைப்படம் பிடித்து ஒரு வருடத்திற்கு முன்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தனர். இந்த விடயம் பூதாகரமாக்கப்பட்டு அவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அந்தத் தூபி கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதும் அதில் பௌத்த மக்களே செருப்புகளுடனும் அரை குறை ஆடைகளுடனும் ஏறி நின்று புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ள நிலையில் முஸ்லிம் மாணவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நாட்டில் எதிர்கால ஜனாதிபதியாக வர வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்களால் விரும்பப்பட்ட சஜித் பிரேமதாஸ அவர்களே இது குறித்து கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் பத்து வருடங்களாக முஸ்லிம்களின் பள்ளிகள், தர்காக்கள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் வாய் திறக்காத சஜித் பிரேமதாஸ முஸ்லிம் மாணவர்கள் விடயத்தில் பேசியமை யையிட்டு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் என்ற வகையில் யாரும் மன்னிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நாம் விரும்பவில்லை. ஆனால், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக தண்டிக்கப்படும் நிலை இருக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
மத, இன உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் எம்மதத்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலையானது’ கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், முஸ்லிம்கள் மீது பாயும் சட்டம் மற்றவர்கள் விடயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டு கால்களை முடக்கி படுத்துக் கொண்டிருப்பது அநியாயத்தின் வெளிப்பாடாகும். இந்த சூழ்நிலையை கவனத்திற் கொண்டு புரிந்து செயற்படுவது முஸ்லிம் சமூகத்தின் காலத்தின் கட்டாயமாகும். இந்த சூழலில் மீண்டும் இரண்டு மத்ரஸா மாணவர்கள் அதே தவறைச் செய்துள்ளனர்.
இந்த செயற்பாடு பதிவாகி காலப் போக்கில் முஸ்லிம்கள்தான் பௌத்த மதத்தை அவமதித்து நடந்தார்கள். அதனால்தான் இந்த நாட்டில் கலவரங்கள் உண்டாயின என்பது போன்ற வரலாறு உருவாக்கப்பட்டு விடும்.
1915 கலவரத்திற்கு முஸ்லிம்கள் “ஊ” காட்டியதுதான் காரணம் என்று இன்று நாங்களே முஸ்லிம்களைக் குறை கூறுவது போல், அவர்கள் நூற்றுக் கணக்கான தாக்குதல்களை நடாத்தியிருந்தாலும் முஸ்லிம்களில் ஓரிருவர் செய்த ஓரிரு குற்றங்கள் பதியப்பட்டு, கண்டிக்கப்பட்டு கலவரங்களுக்குக் காரணமாகக் காட்டும் போது எதிர்கால சந்ததிகள் எம்மை ஏசும் நிலை உருவாகும். எனவே, முஸ்லிம் சமூகம் இவற்றுக்கு இடம ;கொடுக்காத வண்ணம் வளர்க்கப்பட வேண்டியுள்ளது.
எமது மக்கள் பிற சமூக, சமய நிலையங்களைப் பார்வையிடச் செல்லும் போது அங்கிருந்து கொண்டே அவர்களின் செயற்பாடுகள் குறித்து தமக்குள் பேசிக் கொள்வது, கேலியாக சிரிப்பது, விமர்சிப்பது, அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக நடப்பது போன்ற தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
கோணேஸ்வர மலை பார்க்கச் சென்றால் அங்கு குழந்தைப் பாக்கியம் இல்லாத சிலர் ஒரு மரத்தில் தொட்டில் கட்டியிருப்பர். அங்கிருந்து கொண்டே “மரத்தில் தொட்டில் கட்டினால் பிள்ளை கிடைக்குமா? பாருங்களேன் இவர்களின் மடமையை” என்று தமக்குள் பேசிக் கொள்வர். அது அவர்களின் நம்பிக்கை. இதைப் பார்த்து நாம் பேசியவை அவர்கள் காதில் விழுந்தால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவது தவிர்க்க முடியாதல்லவா? இவ்வாறே இளைஞர்கள் இவ்வாறான இடங்களுக்குச் சென்றால் தேவையற்ற சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். இவை முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் இவ்வாறான இடங்களுக்குச் சுற்றுலாவுக்காகச் சென்றால் சில சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்ப காலத்தில் இப்படி ஏதாவது நடந்தால் சாதாரணமாக இளமைக் கோளாறாகப் பார்த்த மக்கள் இப்போது மதத் தீவிரவாதமாகவும், பயங்கரவாதமாகவும், ஐ.எஸ். வாதமாகவும் பார்க்கின்றனர். எனவே, இவ்வாறான இடங்களுக்கான சுற்றுலாக்களை முஸ்லிம்கள் தவிர்ப்பதுதான் நல்லதாகும். மாற்றமாக, மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் அவசியம் அவர்கள் அங்கு செல்ல முன்னரே பொறுப்பானவர்களால் கண்டிப்பான கட்டளையும் சிறந்த அறிவுட்டலும் வழங்கப்பட வேண்டும்.
இதே வேளை, இந்த இடங்களைப் பார்வையிடும் விடயத்தில் எமது மக்கள் தேவையற்ற அளவுக்கு அக்கறை எடுக்கின்றனர். சில பௌத்த மத பீடங்களுக்குச் செல்வதாக இருந்தால் முஸ்லிம் பெண்கள் தலை திறந்து செல்ல வேண்டும் என்று வரும் போது உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக தலையைத் திறந்து கொண்டு செல்கின்றனர். புத்த சமய பீடத்தை தரிசிப்பதற்காக ஒரு பெண் ஹராத்தை செய்ய வேண்டுமா? பாடசாலை மற்றும் பல்கலைக்கழக சுற்றுலாக்களில் முஸ்லிம் பெண்கள் இவ்வாறு செயற்படுவது ஹராமும் கண்டிக்கத்தக்கதுமாகும். பிற மதத்தளத்தை தரிசிப்பதற்காக இஸ்லாமியக் கடமையொன்றை மீறுவதை எப்படி சரி காண முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வாறே சில இந்துக் கோவில்களுக்குச் செல்வதாக இருந்தால் மேலாடையைக் கழற்றிவிட்டே செல்ல வேண்டும். அப்படி கழற்றி விட்டுச் சென்று, எதைப் பார்த்து பெரிதாக என்ன செய்துவிடப் போகின்றோம்! எனவே, இவ்வாறான நிபந்தனைகள் உள்ள இடங்களுக்குச் செல்வதை நாம் முற்றாகத் தவிர்ப்பதே சிறந்ததாகும்.
இந்த இடங்களைத் தேடிச் சென்று பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளாமல், பிற மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு முஸ்லிம்கள் பற்றிய தப்பான பதிவை பிற மக்கள் மனங்களில் உருவாக்கிவிடாமல் இருப்பது காலத்தின் கட்டாயமாகும். முஸ்லிம் இளைஞர்கள் இது விடயத்தில் தெளிவுடன் இருக்க வேண்டும். நாம் விடும் சின்னச் சின்ன தவறுகள் கூட பதிவாகி வரலாற்றில் வரலாற்றுத் தவறுகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது என்பதை நன்கு உணர்ந்து பிற மக்களின் உணர்வுகளையும் புரிந்து இந்நாட்டில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
எனவே, எந்நிலையிலும் எந்நேரத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் நிதானமாகவும், தூரநோக்குடனும், அறிவுக் கூர்மையுடன் சிந்தித்து செயலாற்ற முன்வருவோமாக!.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி நிம்மதியையும் சந்தோஷத்தையும் நம் அனைவருக்கும் வழங்குவானாக!

                                                                                            அஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.
இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான்.
‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை எடுத்திருக்க மாட்டார்கள்.)” (29:41)
அல்லாஹ்வுக்கு நிகராக அவனல்லாதவர்களை எடுத்துக் கொண்டவர்களது உதாரணம் சிலந்தி வீட்டைப் போன்றது என்று அல்லாஹ் கூறுகின்றான். இஸ்லாம் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தும் மார்க்கமாகும். அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பதை அது வன்மையாகக் கண்டிக்கின்றது. முஸ்லிம்களில் சிலரும் இந்த உண்மையை உணராமல் இறந்து போன நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்து தமது ஈமானையும் தாம் செய்த நல்லமல்களையும் அழித்து வருகின்றனர். அல்குர்ஆன் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது.
‘யார் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கின்றானோ, அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவனது விசாரணை அவனது இரட்சகனிடமே இருக்கின்றது. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.” (23:117)
وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ‏
‘அல்லாஹ்வையன்றி மறுமை நாள் வரை தனக்கு எந்தப் பதிலையும் அளித்திடாதோரை அழைப்பவனை விட மிகவும் வழிகெட்டவன் யார்? அவர்களோ இவர்களின் அழைப்பை உணராதவர்களாக இருக்கின்றனர்.” (46:05)
ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ ؕ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْر
‘அல்லாஹ்தான் உங்களது இரட்சகன். அதிகாரம் அவனுக்கே உரியது. அவனையன்றி நீங்கள் அழைப்போர் (படைப்பதற்கு) அணுவளவும் ஆற்றல் பெறமாட்டார்கள்.”

اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ ؕ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ

‘நீங்கள் அவர்களை அழைத்தாலும் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் செவியேற்றாலும் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள். மறுமை நாளில் உங்களின் இணைவைப்பை அவர்கள் நிராகரித்தும் விடுவார்கள். யாவற்றையும் அறிந்தவனைப் போன்று எவரும் உமக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (35:13-14)
இவ்வாறு பல வசனங்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது ஷிர்க் என்றும் அர்த்தமற்ற செயல் என்றும் விபரிக்கின்றது. இவ்வாறு செய்பவர்கள் சிலந்தியைப் போன்றவர்கள் என்று உவமித்துக் கூறுகின்றது.
குர்ஆன் கூறும் உதாரணங்கள்: குர்ஆன் கூறும் உதாரணங்கள் பற்றி குர்ஆன் கூறும் போது இவ்வாறு விபரிக்கின்றது.
‘மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூறியிருக்கின்றோம்.”39:27)
சிலந்தி: அல்லாஹ் எந்தப் படைப்பையும் வீணுக்காகப் படைக்கவில்லை. எல்லா படைப்புக்களும் மனிதனின் நலனுக்காகவும் உலக இயக்கத்தின் தேவைக்காகவுமே படைக்கப்பட்டுள்ளன.
‘வானம், பூமி மற்றும் அவையிரண்டுக்கு மிடைப்பட்டவற்றை நாம் வீணாகப் படைக்கவில்லை. இது நிராகரித்தோரின் எண்ணமாகும். நிராகரித்தோருக்கு நரகத்தின் கேடுதான் உண்டு.”(38:27)
சிந்திப்பதற்காகவே உதாரணங்கள் கூறப்படுவதாக இந்த வசனம் கூறுகின்றது. இவ்வாறு 17:89, 18:54, 30:58 ஆகிய வசனங்களிலும் கூறப்படுகின்றது.
சிலந்தியை உதாரணமாகக் கூறிவிட்டு சிந்திப்பவர்கள்தான் இந்த உதாரணங்களின் உண்மையை அறிய முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
‘இவை உதாரணங்களாகும். இவற்றை மனிதர்களுக்காகவே நாம் கூறுகின்றோம். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதனை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.” (29:43)
உண்மையான ஈமான் உடையவர்களுக்கு உதாரணங்கள் உறுதியைக் கொடுப்பதாகவும் இறை நிராகரிப்பாளர்களுக்கு அது வழிகேட்டையே அதிகரிக்கும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
‘நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ (அற்பத்தில்) அதை விட மேலானதையோ உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டோர், அது தம்முடைய இரட்சகனிடமிருந்து வந்த உண்மை என்பதை அறிந்து கொள்வார்கள். (ஆனால்) நிராகரித்தோரோ, ‘இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகின்றான்?” என்று கேட்கின்றனர். (உதாரணமாகக் கூறப்பட்ட) இதன் மூலம்; (அல்லாஹ்) பலரை வழிகேட்டில் விட்டு விடுகிறான். இதன்மூலம் அதிகமானோரை நேர்வழியில் நடத்துகின்றான். இதன் மூலம் பாவிகளைத் தவிர வேறு எவரையும் அவன் வழிகேட்டில் விடுவதில்லை.” (2:26)
சிலந்திகளும் அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாகும். சிலந்தியில் ஓரிரு வகைதான் நாம் அறிந்ததாகும். சிலந்திகளில் பல்லாயிரம் (சுமார் 46000) வகைகள் உள்ளன. உலகில் உள்ள மொத்த சிலந்திகளும் 400-800 டொண் உணவுகளை உட்கொள்வதாக கணிப்பிட்டுள்ளனர். 1985 இல் பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம், ‘பிரிஸ்டைவ் தே வேல்ட் ஒப் ஸ்பைடர்” என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் அவர் சிலந்திகளால் கொல்லப்படும் பூச்சிகளின் எடை பிரிட்டனில் வாழும் மக்கள் தொகையின் எடையை விட அதிகமானதாக இருக்கும் என்ற கணிப்பை வெளியிட்டார். இந்தத் தகவல் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் பல்லாயிரம் பூச்சி இனங்களைக் கொன்று சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சிலந்திகளுக்கு இருக்கும் பங்கை வெளிப்படுத்துகின்றது.
சிலந்தி வீடும் இந்த உதாரணமும்:
இந்த உதாரணத்தை அல்லாஹ் கூறிவிட்டு சிலந்தியின் வீடு பலவீனமானது, இவர்கள் அறியக் கூடியவர்களாக இருந்தால்.. என்று கூறுகின்றான். இதன் மூலம் இந்த வசனத்தில் ஆய்ந்து அறிய வேண்டிய மனித இனம் கண்டுபிடிக்க வேண்டிய விடயமும் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.
பெண் சிலந்தி:
சிலந்திகளில் பெண் சிலந்திதான் வலை பின்னி கூடு கட்டும். ஆண் சிலந்தி கூடு கட்டுவதில்லை. இது ஆரம்ப காலத்தில் அறியப்படாத செய்தியாக இருந்தது. அண்மைக்கால ஆய்வுகளில்தான் இந்த உண்மை கண்டறியப்பட்டது. இந்த வசனத்திலும், ‘இத்தஹதத் பைத்தன்” – வீட்டை எடுத்துக் கொண்ட சிலந்தி என்று கூறப்பட்டுள்ளது. இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது பெண்பால் வினைச் சொல்லாகும். இது ஒரு வகையில் அற்புதமான அம்சமாகும்.
சிலந்தியின் வீடு:
இந்த வசனத்தில் சிலந்தியின் வீடு பலவீனமானது என்று கூறப்படுகின்றது. சிலந்தி பற்றி ஆய்வு செய்த சிலர் சிலந்தியின் நூல் பலமானது என்ற உண்மையைக் கண்டறிந்து குர்ஆன் அறிவியலுக்கு முரணானது என வாதிட்டனர். சிலந்தியின் நூலின் அளவுக்கு மெல்லியதாகவும் அதன் பாரத்திற்கு ஏற்பவும் இரும்பை அறுத்தால் அந்த இரும்பை விட சிலந்தியின் நூல் பலமானது என்பது அண்மைக் கால ஆய்வுகளின் முடிவாகும். அப்படியானால் குர்ஆன் கூறியது உண்மைக்கு முரணானதுதானே என்பது அவர்களின் வாதமாகும்.
இங்கே குர்ஆன் சிலந்தியின் நூல் பலவீனமானது என்று கூறவில்லை. வீடுகளில் பலவீனமானது சிலந்தியின் வீடுதான் என்றுதான் கூறுகின்றது. சிலந்தியின் நூல் பலவீனமானது என அறிவியலுக்கு முரணாகக் கூறவில்லை.
பலவீனமான வீடு:
ஒரு மொழியில் ஒரே வார்த்தை பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படலாம். பலவீனம் என்பது யதார்த்தத்திலும் இருக்கலாம். உவமையாகவும் இருக்கலாம். ஒருவர் பலவீனமாக இருக்கின்றார் என்றால் அது அவரின் உண்மையான பலவீனத்தைக் குறிக்கும். ஒரு கட்சி பலவீனமாக உள்ளது என்றால் அந்தக் கட்சியின் செல்வாக்கு சரிந்திருக்கும். சிலந்தியின் வீடு பலவீனமானது என்றால் அது அந்த நூலைக் குறிப்பது அல்ல. ஒரு குருவியின் கூடும் பலவீனமானதாகத்தான் இருக்கும். இங்குதான் அறிவுள்ளவர்களாக இருந்தால் சிலந்தியின் வீடு பலவீனமானது என்று கூறப்படுவதன் காரணத்தை ஆராய வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
வீடு:
வீடு என்பது ஒதுங்கும் இடமாகும். அதில் உள்ளவர்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் பாதுகாப்பையும் அது அளிக்க வேண்டும். ஆனால், சிலந்தியின் வீடு வெயிலில் இருந்தோ, மழையில் இருந்தோ பாதுகாப்பளிக்காது. அனைத்துக்கும் மேலாக பெண் சிலந்தி இனப்பெருக்கத்திற்குத் தயாரானதும் ஆண் சிலந்தியைத் தின்றுவிடும்.
இவ்வாறே MICARIA SOCIABILIS எனும் இன ஆண் சிலந்தி பெண் சிலந்தியைக் கொன்று தின்றுவிடும். பெண் சிலந்தியின் பசியை மோப்பம் மூலம் உணர்ந்த ஆண் சிலந்தி தப்பித்துக் கொள்வதும் உண்டு. இவ்வாறே சிலந்திகள் சகோதர சிலந்திகளையும் வேட்டையாடி தின்றுவிடும். பெண் சிலந்தி கூடு கட்டும் போதே கண்ணிகளை (பொறி) வைத்திருக்கும். அந்த இடம் அதற்கு மட்டும்தான் தெரியும். சில போது ஆண் சிலந்தி அதில் மாட்டிக் கொள்ளும். சிலந்திக் கூட்டுக்குள் நடக்கும் இந்த உறவுக் கொலை மூலம் அது பலவீனமான வீடாக இருக்கின்றது.
குர்ஆன் சொல்லும் பலவீனம் வீட்டின் ஸ்தீரத் தன்மையில் உள்ள பலவீனம் அல்ல. அங்கே யாரும் யாரையும் நம்ப முடியாது. உறவுகளே அழிவுகளுக்கு வழியாகும். சிலந்தியின் இந்த இயல்புகள் சிலந்திகள் பற்றிய நீண்ட கால ஆய்வுகள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டதாகும். இதைக் குர்ஆன் கூறியுள்ளது என்றால் சிலந்தியையும் இந்த உலகையும் படைத்த படைப்பாளன் அவன். அவன் ஒருவனே இறைவன் என்பதற்கான அத்தாட்சியாகவும் ஆதாரமாகவும் அமைகின்றது.
ஷிர்க்கும் சிலந்தி வலையும்:
பிற வீட்டுக்குச் சென்றால் விருந்தாளியாகலாம் சிலந்தி வீட்டுக்குச் செல்பவர்கள் அதற்கு விருந்தாவார்கள். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் வழியைச் செய்கின்றார்கள். ஷிர்க் எனும் சிலந்தி வலையில் சிக்குபவர்கள் நரகில் விழுவார்கள்.
ஷிர்க் செய்பவர்களுக்கும், செய்யப்படுபவர் களுக்கும் இடையில் உள்ள உறவு முறிந்துவிடும். இங்கு நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவர்கள் மறுமையில் உங்கள் எதிரியாவார்கள். என்னைத் தானே அழைத்தார்கள் என உங்கள் மீது அன்பு காட்டப் போவதில்லை.
இங்கே நீங்கள் யா முஹியத்தீன் என அவரை அழைக்கலாம். மறுமையில் அவர் அழைத்தவர்களுக்கே எதிராகத்தான் இருப்பார்.
‘நீங்கள் அவர்களை அழைத்தாலும் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் செவியேற்றாலும் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள். மறுமை நாளில் உங்களின் இணைவைப்பை அவர்கள் நிராகரித்தும் விடுவார்கள். யாவற்றையும் அறிந்தவனைப் போன்று எவரும் உமக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (35:14)
நல்லடியார்களை நாம் அழைத்திருந்தால் அவர்கள் மறுமையில் அதை மறுத்து விடுவார்கள். என்னை அழையுங்கள் எனக் கூறி இவர்கள் அவர்களை அழைத்திருந்தால் இருவரும் நரகத்தில் காலங் கழிக்க வேண்டியதுதான்.
‘அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் நாளில், ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? மேலும், இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கூறுவார்கள்.”
“மேலும், ‘எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” என்று கூறுவர்.”
‘எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கு வழங்குவாயாக! இன்னும் அவர்களை நீ பெருமளவில் சபிப்பாயாக” (என்றும் கூறுவர்.)” (33:66-68)
நல்லவர்கள் தங்களை அழைக்குமாறு கூறாமல் அழைக்கப்பட்டிருந்தால் அழைத்தவர்கள் மாட்டிக் கொள்வார்கள்| அவர்கள் தப்பி விடுவார்கள். தங்களை மக்கள் அழைப்பதை அனுமதித்தவர்களை அழைத்திருந்தால் இரு சாராருக்கும் அழிவுதான். இங்கே அவ்லியாக்களை மரியாதையுடன் அழைத்தவர்கள் மறுமையில் மறு பக்கம் மாறி விடுவார்கள்.
‘எங்கள் இரட்சகனே! ஜின்களிலும் மனிதர்களிலும் எம்மை வழிகெடுத்தோரை எமக்குக் காட்டுவாயாக! அவ்விரு சாராரும் தாழ்ந்தோரில் ஆகுவதற்காக எமது பாதங்களின் கீழ் அவர்களை நாம் ஆக்குவோம்” என நிராகரித்தோர் கூறுவர்.”(41:29)
இந்த உதாரணத்தை நல்ல முறையில் சிந்தித்தால் முஃமின்களுக்கு அது மேலும் ஈமானை அதிகரிக்கும் என்பதை இதனூடாக நாம் புரிந்து கொள்ளலாம். ஷிர்க் எனும் சிலந்தி வலையில் மாட்டிக் கொள்ளாமல் எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோமாக!

                                                       
                                                                               அஷ்சேஹ்  இஸ்மாயில் ஸலபி 

கேள்வி : சுவனத்தின் மொழி அரபுமொழியா? மேலும் சுவனவாதிகளின் மொழி எது என்பதை அறிய விரும்புகின்றோம்?


பதில் : அல்குர்ஆனிலோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ சுவனவாதிகளின் மொழி இதுதான் என்பது ஒரு விடயங்களும் கூறப்பட்டில்லை. மேலும் அது தொடர்பாக வந்துள்ள சில ஹதீஸ்களும் , ஸஹாபாக்களின் கூற்றுக்களும் ஆதாரமற்றதாகவே காணப்படுகின்றன.
ابن عباس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( أحبوا العرب لثلاث : لأني عربي ، والقرآن عربي ، وكلام أهل الجنة عربي ).
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “மூன்று விடயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில் நான் அரபியாக இருக்கின்றேன், அல்குர்ஆனும் அரபியில் உள்ளது மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபியாகும்.”(ஆதாரம் : அத்தபரானீ அல்அவ்ஸத், அல்ஹாகிம், ஷுஅபுல் ஈமான் பைஹகீ)
மேற்கூறப்பட்ட ஹதீஸை இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் : ‘இட்டுக்கட்டப்பட்டது’ என்கிறார்கள். இமாம் அத்தகபீ : ‘இட்டுக்கட்டப்பட்டதாக நினைக்கின்றேன்’. இமாம் அல்பானீ : ‘இட்டுக்கட்டப்பட்டது’ என அஸ்ஸில்ஸிலா அழ்ழஈபா (இலக்கம்160)இல் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “அவ்வாறே மதீன் என்று அறிமுகமான அபூஜஃபர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்ஹாபிழ் அல்கூபீ (எங்களுக்கு அறிவித்தார்) அல்அலா பின் அம்ர் அல்ஹனபீ (எங்களுக்கு அறிவித்தார்) யஹ்யா பின் ஸைத் அல்அஷ்அரீ (எங்களுக்கு அறிவித்தார்) இப்னு ஜுரைஜ் – அதாஉ – இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; றஸுல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நான் மூன்று விடயங்களுக்காக வேண்டி அரபுகளை விரும்புகின்றேன். ஏனெனில், நான் அரபியாவேன், அல்குர்ஆனும் அரபாகும், மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபாகும்.”

இந்த ஹதீஸ் ‘ஹஸன் தரத்தில் அமைந்தது’ என்று அல்ஹாபிழ் அஸ்ஸலபீ அவர்கள் கூறினார்கள். என்றாலும், ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை வைத்து ஹஸன் என்று கூறினாரா? அல்லது ஹதீஸ் ஆய்வாளர்களின் வழியில் ‘மதன்’ எனப்படும் ஹதீஸின் உள்ளடக்கத்தை வைத்து ஹஸன் என்று கூறினாரா? என்பதைப் பற்றித் தெரியாது. மேலும், மேற்கூறப்பட்ட ஹதீஸை அபுல் பரஜ் பின் அல்ஜௌஸி அவர்கள் “மௌலூஆத் (இட்டுக்கட்டப்பட்டது) எனும் நூலில் மேற்குறிப்பிட்டுள்ளார்கள்.

அஸ்ஸஃலபீ கூறினார்கள் : எந்தவித அடிப்படையும் கிடையாது. இப்னு ஹிப்பான் கூறினார்கள் : ‘யஃயா பின் ஸைத்’ என்பவர் உறுதியானவர்களிடமிருந்து பிரட்டப்பட்டவைகளை அறிவிப்பவர். எனவே, இதனைக்கொண்டு ஆதாரமெடுப்பது முடியாது. அல்லாஹ்வே அறிந்தவன்.” (நூல் : இக்திழாஉ அஸ்ஸிராதில் முஸ்தகீம் – 1/158)
அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நான் அரபியாவேன், அல்குர்ஆனும் அரபியாகும், மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபியாகும்” என்றார்கள். (ஆதாரம் அத்தபரானீ பில் அவ்ஸத்) இமாம் அல்பானீ அவர்கள் தனது அஸ்ஸில்ஸிலா அழ்ழஈபா (இலக்கம்161) இல் இது ‘இட்டுக்கட்டப்பட்டது’ என்கிறார்கள்.
இவைகளிலிருந்து விளங்குவது என்னவென்றால், சுவனவாதிகள் பேசக்கூடிய மொழி இதுதான் என்பதை தெளிவுபடுத்தக்கூடிய எந்தவித சரியான ஆதாரங்கள் இல்லை என்பதுதான். எனவே, இதனைப் பற்றிய விடயம் அல்லாஹ்விடம் மாத்திரமே இருக்கின்ற வேலையில் இப்படியான விடயங்களில் ஆழ்ந்து தேடுவதை விட மௌமாக இருப்பதுடன், மறுமையில் பயன்தரக்கூடிய விடயங்களில் எங்களை மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்வது ஏற்றதாகும்.
ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களிடம் வினவப்பட்டது : நாளை மறுமையில் மனிதர்கள் எதன் மூலம் பேசுவார்கள்? அல்லாஹுத்தஆலா அவர்களை அரபு மொழியினாலா பேசுவான்? அத்துடன் நரகவாதிகளின் மொழியாக பாரசீக மொழியும் , சுவனவாதிகளின் மொழியாக அரபு மொழியும் என்று கூறப்படுவது சரியானதா?
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள் : “ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அத்தினத்திலே மனிதர்கள் எந்த மொழியில் பேசுவார்கள் என்றும், உயர்வுக்குரிய இறைவனின் பேச்சை எந்தமொழியில் செவிமடுப்பார்கள் என்றும் அறியப்படாததாகும். ஏனெனில், இது சம்பந்தமாக அல்லாஹ்வோ அவனின் தூதரோ எந்தவிடயங்களையும் எங்களுக்கு அறிவிக்கவில்லை. அத்துடன் நரகவாதிகளின் மொழி பாரசீகமொழி மற்றும் சுவனவாதிகளின் மொழி அரபுமொழி என்பதும் ஆதாரபூர்வமற்றதாகும். மேலும் இது தொடர்பாக ஸஹாபாக்களுக்கு மத்தியில் எந்தவித சச்சரவுகளும் நிகழ்ந்ததாக நாங்கள் அறியமாட்டோம். மாறாக அவர்கள் அனைவரும் இதனைப்பற்றி விட்டுவிட்டார்கள். ஏனெனில் இப்படியான விடயங்களை பேசுவது தேவையற்ற பேச்சாகக் கருதினார்கள்.
என்றாலும் இது தொடர்பாக பிற்பட்ட காலத்தில் வந்தவர்களுக்கு மத்தியிலேயே பலதரப்பட்ட முரண்பாடுகள் நிகழ்ந்தன. அவர்களில் சிலர் கூறினர் : அவர்கள் அரபுமொழியில் பேசிக்கொள்வார்கள். இன்னும் சிலர் கூறினர் : நரகவாதிகள் பாரசீக மொழியிலேயே பதிலளிப்பார்கள். ஏனெனில் நரகிலே அதுதான் அவர்களுடைய மொழியாகும். இன்னும் சிலர் கூறினர் : சுவனவாதிகள் அரபுமொழியிலேயே பேசுவார்கள்.
மேற்கூறப்பட்ட அனைத்து கூற்றுக்களுக்கும் எந்தவித ஆதாரங்களும் அறிவுபூர்வமானதோ, சொல் ரீதியிலான ஆதாரத்தன்மை வாய்ந்ததோ கிடையாது. மாறாக இவைகள் அனைத்தும் வெறுமையான கூற்றுக்கள் மாத்திரமே. தூய்மையான அல்லாஹுத்தஆலா ஒருவன் மாத்திரமே அறிந்தவனாக இருக்கின்றான் அவனே மிகவும் தீர்ப்பளிக்கக் கூடியவனுமாவான்.” (நூல் : மஜ்மூஉல் பதாவா – 4/299)
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே

                                                                                              தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

பெண்கள் ஷவ்வால் மாத சுன்னத்தான ஆறு நோன்புகளை நோற்கும் போது, தாம் கழா செய்ய வேண்டிய ரமழான் மாத நோன்பிற்கான நிய்யத்தையும் சேர்த்துக்கொள்ளலாமா?  

அல்லாஹ்வின் திருப்பெயரால் இன்றளவில் எம்மில் சில பெண்கள் ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்பிற்கான நிய்யத்தையும், தாம் கழா செய்ய வேண்டிய ரமழான் மாத நோன்பிற்கான நிய்யத்தையும் சேர்த்து ஒரு நாளிலே நோன்பு நோற்று வரும் சூழலைக் காண்கிறோம்.

அதாவது, இங்கு நோன்பு எனும் இபாதத்-வணக்கம் இரு நிய்யத்களைக்கொண்டு நிறை வேற்றப்படுகின்றன.

இவ்வாறு நோன்பு எனும் வணக்கத்தை இரு நிய்யத்களைக்கொண்டு நிறைவேற்றுவதானது மார்க்கத்திலே செல்லுபடியாகுமா.? இப்படியான வணக்கத்திற்கு நம் மார்க்கத்தில் வழிகாட்டல்கள் ஏதும் உண்டா.? என தொகுத்தளிப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

அந்த வகையில், அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு எனும் வணக்க வழிபாட்டிற்கு இரண்டு நிய்யத்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு எம்மால் எந்த ஒரு சான்றையும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஷவ்வால் மாத சுன்னத்தான ஆறு நோன்புகள், அரபா நோன்பு மற்றும் ஆஷூரா தாசூஆ நோன்புகள் போன்ற தனியாக சிறப்பித்துக்கூறப்பட்ட நோன்புகள்- இவையனைத்தும் பிரிதோர் கடமையான நோன்புடன் இணைக்கும் ரீதியில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.\

ஆனால் நபி[ஸல்] அவர்கள் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தொழுகை மற்றும் ஹஜ் போன்ற வணக்கவழிபாடுகளிலே இரு நிய்யத்களை ஒன்று சேர்ப்பதற்கு வழிகாட்டியிருப்பதை ஹதீஸ்களிலே காணக்கூடியதாக உள்ளது. இதை அடிப்படையாக வைத்து நோன்பையும் அவ்வாறு நோற்கலாம் தானே என வினா எழுப்பின்- இங்கு நாம் ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டிய முக்கியமானதோர் அம்சம் இருக்கிறது.

அதாவது, நமது மார்க்கத்தில் வணக்கம் சார் விடயங்களைப்பொறுத்த வரையில்[الأمور التعبدية]- நபி[ஸல்] அவர்கள் அவற்றை எவ்வாறு நிறைவேற்றினார்களோ, அவை அவ்வாறே நிறைவேற்றப்படும். அது பிரிதோர் வணக்கத்தோடு ஒப்பிடப்பட[கியாஸ்] மாட்டாது.

இதையே இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் பின்வரும் கோட்பாட்டினுள் வரையறுத்து வைத்திருக்கின்றனர். لا قياس في العبادات

வணக்கவழிபாடுகளில் [குறித்ததொரு வணக்கம் பிரிதோர் வணக்கத்தோடு] ஒப்பிடுதல் என்பதே கிடையாது.

ஆக, நாம் இரு நிய்யத்களை ஒன்று சேர்த்து வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுவதாயின் அது நபி[ஸல்] அவர்கள் எப்படியான சந்தர்ப்பங்களில் அதற்கு வழிகாட்டினார்களோ அதனோடு நின்று கொள்ள வேண்டும். அது அல்லாத பிற சந்தர்ப்பங்களில் அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்தும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்பினது நிய்யத்தோடு சேர்த்து கழா நோன்புக்குமான நிய்யத்தையும் இணைத்து நோன்பு நோற்பதென்பது நபி[ஸல்] அவர்கள் காண்பிக்காத ஒரு அம்சமாகும்.

நாம் அன்றாடம் செய்யும் இபாதத்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் ஆதரவு வைப்பவர்களாக இருந்தால் அதிலே நாம் நபிகளாரை முன்பாதிரியாக எடுத்து நடப்பது மிக முக்கிய அம்சமாகும்.

அல்லாஹ் தஆலா எம் நல்லறங்களை அங்கீகரித்து அதற்குரிய பூரண கூலிகளை வழங்குவானாக!
அல்லாஹ் மிக அறிந்தவன்!

                                                                     மௌலவியா:- இஹ்ஸானா ஷரயியா.


திருமணம் என்ற சொல்லுக்கு அரபு பாிபசையில் நிகாஹ் (النِّكَاح) மற்றும் ஸவாஜ் (الزَّوَاج) என்ற பதங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. என்றாலும் இரண்டு சொற்களுக்கிடையில் வேறுபாடு இருக்கின்றன. அந்த அடிப்படையிலேயே அல்குா்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அஸ்ஸவாஜ் ( الزَّوَاج) என்ற சொல் திருமண ஒப்பந்தம் நடைபெற்று, கணவன் மனைவி இருவருக்கு மத்தியிலும் தாம்பத்திய உறவு நடைபெற்று, திருமணவாழ்வு என்பது உறுதியாக நிலைபெற்றதையே குறிப்பதற்கு அல்குா்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் :
كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ [الدخان : 54]
பொருள்:இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். (அத்தியாயம் அத்துஹான் , வசனம் 54)
மேலும் கூறுகிறான்; 
فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا [الأحزاب : 37]
பொருள்: ஆகவே ஸைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; (அத்தியாயம் அல்அஹ்ஸாப் , வசனம் 37)
அந்நிகாஹ் (النِّكَاح) என்ற சொல் திருமணத்தின்பால் இருக்கின்ற விருப்பத்தையும், நாட்டத்தையும் பற்றி குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் அது (திருமணம்) உறுதி செய்யப்பட முன்னா்.
அந்த அடிப்படையில் அல்லாஹ் தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் :
قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ [القصص : 27]
பொருள்: (அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன்.” (அத்தியாயம் அல்கஸஸ் , வசனம் 27)
மேலும் கூறுகிறான்;
وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ [النساء : 22]
பொருள்:(இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்.” (அத்தியாயம் அந்நிஸா , வசனம் 22)
எனவே, நிகாஹ்ஸவாஜ் ஆகிய இரு சொற்களுக்கும் தமிழில் திருமணம் என்று மொழிபெயா்த்தாலும் அவைகளுக்கு மத்தியில் நுணுக்கமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!

                                                                                        தமிழில்: றஸீன் அக்பர் (மதனி)

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget