ஒரு நோன்பில் இரு நிய்யத்துக்கள்

பெண்கள் ஷவ்வால் மாத சுன்னத்தான ஆறு நோன்புகளை நோற்கும் போது, தாம் கழா செய்ய வேண்டிய ரமழான் மாத நோன்பிற்கான நிய்யத்தையும் சேர்த்துக்கொள்ளலாமா?  

அல்லாஹ்வின் திருப்பெயரால் இன்றளவில் எம்மில் சில பெண்கள் ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்பிற்கான நிய்யத்தையும், தாம் கழா செய்ய வேண்டிய ரமழான் மாத நோன்பிற்கான நிய்யத்தையும் சேர்த்து ஒரு நாளிலே நோன்பு நோற்று வரும் சூழலைக் காண்கிறோம்.

அதாவது, இங்கு நோன்பு எனும் இபாதத்-வணக்கம் இரு நிய்யத்களைக்கொண்டு நிறை வேற்றப்படுகின்றன.

இவ்வாறு நோன்பு எனும் வணக்கத்தை இரு நிய்யத்களைக்கொண்டு நிறைவேற்றுவதானது மார்க்கத்திலே செல்லுபடியாகுமா.? இப்படியான வணக்கத்திற்கு நம் மார்க்கத்தில் வழிகாட்டல்கள் ஏதும் உண்டா.? என தொகுத்தளிப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

அந்த வகையில், அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு எனும் வணக்க வழிபாட்டிற்கு இரண்டு நிய்யத்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு எம்மால் எந்த ஒரு சான்றையும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஷவ்வால் மாத சுன்னத்தான ஆறு நோன்புகள், அரபா நோன்பு மற்றும் ஆஷூரா தாசூஆ நோன்புகள் போன்ற தனியாக சிறப்பித்துக்கூறப்பட்ட நோன்புகள்- இவையனைத்தும் பிரிதோர் கடமையான நோன்புடன் இணைக்கும் ரீதியில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.\

ஆனால் நபி[ஸல்] அவர்கள் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தொழுகை மற்றும் ஹஜ் போன்ற வணக்கவழிபாடுகளிலே இரு நிய்யத்களை ஒன்று சேர்ப்பதற்கு வழிகாட்டியிருப்பதை ஹதீஸ்களிலே காணக்கூடியதாக உள்ளது. இதை அடிப்படையாக வைத்து நோன்பையும் அவ்வாறு நோற்கலாம் தானே என வினா எழுப்பின்- இங்கு நாம் ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டிய முக்கியமானதோர் அம்சம் இருக்கிறது.

அதாவது, நமது மார்க்கத்தில் வணக்கம் சார் விடயங்களைப்பொறுத்த வரையில்[الأمور التعبدية]- நபி[ஸல்] அவர்கள் அவற்றை எவ்வாறு நிறைவேற்றினார்களோ, அவை அவ்வாறே நிறைவேற்றப்படும். அது பிரிதோர் வணக்கத்தோடு ஒப்பிடப்பட[கியாஸ்] மாட்டாது.

இதையே இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் பின்வரும் கோட்பாட்டினுள் வரையறுத்து வைத்திருக்கின்றனர். لا قياس في العبادات

வணக்கவழிபாடுகளில் [குறித்ததொரு வணக்கம் பிரிதோர் வணக்கத்தோடு] ஒப்பிடுதல் என்பதே கிடையாது.

ஆக, நாம் இரு நிய்யத்களை ஒன்று சேர்த்து வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுவதாயின் அது நபி[ஸல்] அவர்கள் எப்படியான சந்தர்ப்பங்களில் அதற்கு வழிகாட்டினார்களோ அதனோடு நின்று கொள்ள வேண்டும். அது அல்லாத பிற சந்தர்ப்பங்களில் அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்தும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்பினது நிய்யத்தோடு சேர்த்து கழா நோன்புக்குமான நிய்யத்தையும் இணைத்து நோன்பு நோற்பதென்பது நபி[ஸல்] அவர்கள் காண்பிக்காத ஒரு அம்சமாகும்.

நாம் அன்றாடம் செய்யும் இபாதத்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் ஆதரவு வைப்பவர்களாக இருந்தால் அதிலே நாம் நபிகளாரை முன்பாதிரியாக எடுத்து நடப்பது மிக முக்கிய அம்சமாகும்.

அல்லாஹ் தஆலா எம் நல்லறங்களை அங்கீகரித்து அதற்குரிய பூரண கூலிகளை வழங்குவானாக!
அல்லாஹ் மிக அறிந்தவன்!

                                                                     மௌலவியா:- இஹ்ஸானா ஷரயியா.


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget