அரபு மொழி சுவனவாதிகளின் மொழியா.?

கேள்வி : சுவனத்தின் மொழி அரபுமொழியா? மேலும் சுவனவாதிகளின் மொழி எது என்பதை அறிய விரும்புகின்றோம்?


பதில் : அல்குர்ஆனிலோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ சுவனவாதிகளின் மொழி இதுதான் என்பது ஒரு விடயங்களும் கூறப்பட்டில்லை. மேலும் அது தொடர்பாக வந்துள்ள சில ஹதீஸ்களும் , ஸஹாபாக்களின் கூற்றுக்களும் ஆதாரமற்றதாகவே காணப்படுகின்றன.
ابن عباس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( أحبوا العرب لثلاث : لأني عربي ، والقرآن عربي ، وكلام أهل الجنة عربي ).
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “மூன்று விடயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில் நான் அரபியாக இருக்கின்றேன், அல்குர்ஆனும் அரபியில் உள்ளது மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபியாகும்.”(ஆதாரம் : அத்தபரானீ அல்அவ்ஸத், அல்ஹாகிம், ஷுஅபுல் ஈமான் பைஹகீ)
மேற்கூறப்பட்ட ஹதீஸை இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் : ‘இட்டுக்கட்டப்பட்டது’ என்கிறார்கள். இமாம் அத்தகபீ : ‘இட்டுக்கட்டப்பட்டதாக நினைக்கின்றேன்’. இமாம் அல்பானீ : ‘இட்டுக்கட்டப்பட்டது’ என அஸ்ஸில்ஸிலா அழ்ழஈபா (இலக்கம்160)இல் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “அவ்வாறே மதீன் என்று அறிமுகமான அபூஜஃபர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்ஹாபிழ் அல்கூபீ (எங்களுக்கு அறிவித்தார்) அல்அலா பின் அம்ர் அல்ஹனபீ (எங்களுக்கு அறிவித்தார்) யஹ்யா பின் ஸைத் அல்அஷ்அரீ (எங்களுக்கு அறிவித்தார்) இப்னு ஜுரைஜ் – அதாஉ – இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; றஸுல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நான் மூன்று விடயங்களுக்காக வேண்டி அரபுகளை விரும்புகின்றேன். ஏனெனில், நான் அரபியாவேன், அல்குர்ஆனும் அரபாகும், மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபாகும்.”

இந்த ஹதீஸ் ‘ஹஸன் தரத்தில் அமைந்தது’ என்று அல்ஹாபிழ் அஸ்ஸலபீ அவர்கள் கூறினார்கள். என்றாலும், ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை வைத்து ஹஸன் என்று கூறினாரா? அல்லது ஹதீஸ் ஆய்வாளர்களின் வழியில் ‘மதன்’ எனப்படும் ஹதீஸின் உள்ளடக்கத்தை வைத்து ஹஸன் என்று கூறினாரா? என்பதைப் பற்றித் தெரியாது. மேலும், மேற்கூறப்பட்ட ஹதீஸை அபுல் பரஜ் பின் அல்ஜௌஸி அவர்கள் “மௌலூஆத் (இட்டுக்கட்டப்பட்டது) எனும் நூலில் மேற்குறிப்பிட்டுள்ளார்கள்.

அஸ்ஸஃலபீ கூறினார்கள் : எந்தவித அடிப்படையும் கிடையாது. இப்னு ஹிப்பான் கூறினார்கள் : ‘யஃயா பின் ஸைத்’ என்பவர் உறுதியானவர்களிடமிருந்து பிரட்டப்பட்டவைகளை அறிவிப்பவர். எனவே, இதனைக்கொண்டு ஆதாரமெடுப்பது முடியாது. அல்லாஹ்வே அறிந்தவன்.” (நூல் : இக்திழாஉ அஸ்ஸிராதில் முஸ்தகீம் – 1/158)
அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நான் அரபியாவேன், அல்குர்ஆனும் அரபியாகும், மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபியாகும்” என்றார்கள். (ஆதாரம் அத்தபரானீ பில் அவ்ஸத்) இமாம் அல்பானீ அவர்கள் தனது அஸ்ஸில்ஸிலா அழ்ழஈபா (இலக்கம்161) இல் இது ‘இட்டுக்கட்டப்பட்டது’ என்கிறார்கள்.
இவைகளிலிருந்து விளங்குவது என்னவென்றால், சுவனவாதிகள் பேசக்கூடிய மொழி இதுதான் என்பதை தெளிவுபடுத்தக்கூடிய எந்தவித சரியான ஆதாரங்கள் இல்லை என்பதுதான். எனவே, இதனைப் பற்றிய விடயம் அல்லாஹ்விடம் மாத்திரமே இருக்கின்ற வேலையில் இப்படியான விடயங்களில் ஆழ்ந்து தேடுவதை விட மௌமாக இருப்பதுடன், மறுமையில் பயன்தரக்கூடிய விடயங்களில் எங்களை மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்வது ஏற்றதாகும்.
ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களிடம் வினவப்பட்டது : நாளை மறுமையில் மனிதர்கள் எதன் மூலம் பேசுவார்கள்? அல்லாஹுத்தஆலா அவர்களை அரபு மொழியினாலா பேசுவான்? அத்துடன் நரகவாதிகளின் மொழியாக பாரசீக மொழியும் , சுவனவாதிகளின் மொழியாக அரபு மொழியும் என்று கூறப்படுவது சரியானதா?
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள் : “ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அத்தினத்திலே மனிதர்கள் எந்த மொழியில் பேசுவார்கள் என்றும், உயர்வுக்குரிய இறைவனின் பேச்சை எந்தமொழியில் செவிமடுப்பார்கள் என்றும் அறியப்படாததாகும். ஏனெனில், இது சம்பந்தமாக அல்லாஹ்வோ அவனின் தூதரோ எந்தவிடயங்களையும் எங்களுக்கு அறிவிக்கவில்லை. அத்துடன் நரகவாதிகளின் மொழி பாரசீகமொழி மற்றும் சுவனவாதிகளின் மொழி அரபுமொழி என்பதும் ஆதாரபூர்வமற்றதாகும். மேலும் இது தொடர்பாக ஸஹாபாக்களுக்கு மத்தியில் எந்தவித சச்சரவுகளும் நிகழ்ந்ததாக நாங்கள் அறியமாட்டோம். மாறாக அவர்கள் அனைவரும் இதனைப்பற்றி விட்டுவிட்டார்கள். ஏனெனில் இப்படியான விடயங்களை பேசுவது தேவையற்ற பேச்சாகக் கருதினார்கள்.
என்றாலும் இது தொடர்பாக பிற்பட்ட காலத்தில் வந்தவர்களுக்கு மத்தியிலேயே பலதரப்பட்ட முரண்பாடுகள் நிகழ்ந்தன. அவர்களில் சிலர் கூறினர் : அவர்கள் அரபுமொழியில் பேசிக்கொள்வார்கள். இன்னும் சிலர் கூறினர் : நரகவாதிகள் பாரசீக மொழியிலேயே பதிலளிப்பார்கள். ஏனெனில் நரகிலே அதுதான் அவர்களுடைய மொழியாகும். இன்னும் சிலர் கூறினர் : சுவனவாதிகள் அரபுமொழியிலேயே பேசுவார்கள்.
மேற்கூறப்பட்ட அனைத்து கூற்றுக்களுக்கும் எந்தவித ஆதாரங்களும் அறிவுபூர்வமானதோ, சொல் ரீதியிலான ஆதாரத்தன்மை வாய்ந்ததோ கிடையாது. மாறாக இவைகள் அனைத்தும் வெறுமையான கூற்றுக்கள் மாத்திரமே. தூய்மையான அல்லாஹுத்தஆலா ஒருவன் மாத்திரமே அறிந்தவனாக இருக்கின்றான் அவனே மிகவும் தீர்ப்பளிக்கக் கூடியவனுமாவான்.” (நூல் : மஜ்மூஉல் பதாவா – 4/299)
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே

                                                                                              தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget