July 2019

  குர்ஆன் அல்லாதவற்றைக் கொண்டு ஓதிப்பார்ப்பது, தாயத்துகள் அணிவது, தலையணை மந்திரம் ஆகியவை ஷிர்க்காகும். ( அறிவிப்பவர்:- இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: அஹ்மத், அபூதாவுத் )

  • விஷகடிகளுக்கு ஓதிப்பார்க்க நபி(ஸல்) அனுமதித்துள்ளனர். ( அறிவிப்பவர்: -ஆயிஷா (ரழி) நூல்: புகாரி-5741, முஸ்லீம் )
  • நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது  “குல்ஹுவல்லாஹு அஹது, குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்நாஸ்” ஆகிய சூராக்களை ஓதி தமக்குத் தாமே ஊதிக்கொண்டார்கள். நோய் கடுமையானபோது அவற்றை நான் ஓதி அவர்கள் மீது ஊதிவிட்டேன். மேலும் அவர்களது கைக்கு மட்டும் இருக்கும் பரக்கத்தின் காரணமாக‌, அவர்களது கையாலேயே அவர்களுக்குத் தடவிவிட்டேன் ( அறிவிப்பவர்: -ஆயிஷா(ரழி) நூல்: புகாரி-5735, முஸ்லீம் )
  • நபி (ஸல்) அவர்கள் தமது சில மனைவிமார்களுக்கு ஓதிப்பார்ப்பார்கள். அப்போது, 
اللَّهُمَّ ربَّ النَّاسِ، أَذْهِب الْبَأسَ ، واشْفِ ، أَنْتَ الشَّافي لا شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ ، شِفاءً لا يُغَادِرُ سقَماً
“அல்லாஹும்ம ரப்பன்நாஸ் அத்ஹிபில் பஃஸ்,வஸ்ஃஃபீஹ், வ அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லாலா ஷிஃபாவுக ஷிஃபா அன் லாயுகாதிரு ஸகமா” என ஓதி தம் வலதுகையால் தடவுவார்கள் ( அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள் நூல் புஹாரி-5742 )
(பொருள்: இறைவா! மனிதர்களின் இரட்சகனே! துன்பத்தைப் போக்கி எந்த நோயையும் விட்டுவிடாமல் நிவாரணமளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிக்ககூடியவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறெதும் நிவாரணமாகாது )
பயன்கள்:-
 1. குர் ஆனைக் கொண்டும் ஹதீஸ்களில் வந்திருக்கின்ற துஆகளைக் கொண்டும் ஓதிப்பார்க்க மார்க்கம் அனுமதித்துள்ளது.
 2. குர் ஆன் அல்லாதவற்றைக் கொண்டும் ஹதீஸ்களில் வராத து ஆக்களைக் கொண்டும் ஓதிப் பார்ப்பது தடுக்கப்பட்டிருக்கின்றது.
 3. அல்லாஹ்வை விடுத்துமற்றவர்களை அழைக்கின்ற து ஆக்களைக் கொண்டு ஓதிப்பார்ப்பது மிகப்பெரும் ஷிர்க்காகும்.
 4. ஒரு மனிதன் தனக்குத் தனே குல் அவூது பிரப்பில்ஃபலக், குல் அவூது பிரப்பின் நாஸ் ஆகிய சூராக்களைக் கொண்டு ஓதிப் பார்த்துக் கொள்ள மார்க்கம் அனுமதித்துள்ளது. அடுத்தவரை ஓதிப்பார்க்கச் சொல்லக் கூடாது

01.நீர் எதையும் தர்மம் செய்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரிலிருந்தே அதை ஆரம்பி! [புகாரி 1427]

02. அபூதல்ஹா(ரழி) மிகப்பெரும் செல்வந்தர். மஸ்ஜிதுன்நபவிக்கு எதிரிலிருந்த ‘பீருஹா’ தோட்டம் அவருக்குரியது. நபியவர்கள் அங்கே சென்று அதிலுள்ள சுவைநீரை அருந்துவது வழக்கம்.

‘உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து இறைவழியில் செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடையமுடியாது!’ என்ற வசனம் [03 : 92] அருளப்பட்டவுடன் அபூதல்ஹா நபியவர்களிடம் சென்று எனது சொத்துக்களில் ‘பீருஹா’ தோட்டமே எனக்கு மிகப்பிரியமானது. இனி இது இறைவனுக்கானது! இதன் நன்மையை அவனிடமே எதிர்பார்க்கிறேன்! நாயகமே! நீங்கள் விரும்பியபடி இதைப் பயன்படுத்தலாம்!’ என்றார்.
 
‘அது அதிக லாபம் தரும் செல்வமே! அதை உமது நெருங்கிய உறவினருக்கு நீர் தர்மமாக வழங்குவதே எனது விருப்பம்!’
‘நாயகமே! அவ்வாறே செய்கிறேன்’ எனக் கூறி, தம் உறவினர், தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுத்தார் அபூதல்ஹா .[புகாரி 2318]

03. ஒருமுறை நபியவர்கள், ‘பெண்களே! தர்மம்செய்யுங்கள்’ என்றார்கள். நான் எனது கணவர் அப்துல்லாஹ் (ரழி), எனது அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கு செலவழிப்பவளாக இருந்தேன். எனவே எனது கணவரிடம், இது தர்மமாகுமா என நபியவர்களிடம் கேட்டு வாருங்கள் என்றேன்.

அவர், நீயே கேள் எனக்கூற, நான் நபியவர்களிடம் செல்ல, அங்கே ஓர் அன்ஸாரிப்பெண். அவரது சந்தேகமும் அதுவே. அங்கிருந்த பிலாலிடம் (ரழி) நான், இது குறித்து நபிவர்களிடம் கேளுங்கள்; ஆனால், நாங்கள் யார் என்பதைச் சொல்ல வேண்டாம் என்றோம். உடனே அவர் நபிவர்களிடம் சென்று கேட்டபோது  அவர்கள், ‘அவ்விருவரும் யார்’ எனக் கேட்டார்கள். அவர் ‘ஸைனப்’ எனக்கூற, நபியவர்கள் ‘எந்த ஸைனப்’ எனக் கேட்க, பிலால் ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார்.

உடனே நபியவர்கள், ‘ஸைனபுக்கு இரு நன்மை உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்த நன்மை; மற்றொன்று தர்மம் செய்த நன்மை’ எனக் கூறினார்கள். [ஸைனப் (ரழி), புகாரி 1466]

04. நபியே! உங்களது நெருங்கிய உறவினரை எச்சரியுங்கள் எனும் குர்ஆன் (26 : 214) வசனம் அருளப் பெற்றபோது நபியவர்கள் ‘ஸஃபா’ மலை மீதேறி நின்று, குறைஷிக் குலத்தவரை பெயர் சொல்லி அழைக்க, அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் அனைவரும் வந்தனர்.

‘இந்த மலையின் பின்புறம் குதிரைப்படை ஒன்று உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என நான் கூறினால், என்னை நீங்கள் நம்புவீர்களா?’ ‘நிச்சயம் நம்புவோம்; ஏனெனில், உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் கண்டதில்லை!’

‘அப்படியானால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்!’ அங்கிருந்த அபூலஹப், ‘நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்றுகூட்டினாய்’ என்றான். அப்போதே ‘அபூலஹபின் கரங்களும் அவனும் நாசமாகட்டும்!’ என்ற 111 ஆவது அத்தியாயம் இறங்கியது. [புகாரி 4770]

05. ‘நபியே! உங்களது நெருங்கிய உறவினரை  எச்சரியுங்கள்’ எனும் திருக்குர்ஆன் (26 : 214)  வசனம் இறங்கியபோது, நபியவர்கள் எழுந்து,
‘குறைஷி சமூகமே! உங்கள் உயிர்களை இறைவனுக்கு வழிபடுவதன்மூலம் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துமனாஃபின் மக்களே! எனது பெரிய தந்தை அப்பாஸ் அவர்களே! எனது அத்தை ஸஃபியாவே! உங்களை இறைவனிடமிருந்து சிறிதளவும் என்னால் காப்பாற்றமுடியாது.

மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! தருகிறேன். ஆனால், இறைவனிடமிருந்து, உன்னை என்னால் சிறிதளவும் காப்பாற்றமுடியாது’ என்றார்கள். [புகாரி 4771]

06. நபி (ஸல்) அவர்களது பெரியதந்தை அபூதாலிபுக்கு மரணவேளை நெருங்கியபோது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் இருக்க, நபியவர்கள் வந்து,  ‘பெரிய தந்தையே! வணங்கத்தகுந்தவன் இறைவனைத்தவிர வேறெவருமில்லை என கூறுங்கள்.’ என்றார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் உமய்யாவும், ‘அபூதாலிபே! உங்கள் தந்தை  அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீங்கள் துறக்கப் போகிறீர்கள்’ என்றனர்.

இவ்வாறு நபியவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்த அபூதாலிப் கடைசியாக, ‘நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே மரணிக்கிறேன்’ என்று கூறியதோடு கலிமா கூறவும் மறுத்துவிட்டார்.

நபியவர்கள், ‘பெரிய தந்தையே! உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்!’ என்றார்கள்.

அப்போதுதான், ‘இணைவைப்போர், நகரவாசிகள் என்பது நன்கு தெளிவான பிறகும் – அவர்கள் நெருங்கிய உறவினரானாலும் – அவர்களுக்காகப் பாவமன்னிப்புக்கோர இறைத்தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை’ எனும் இறைவசனம் [09 :113] அருளப்பட்டது. [புகாரி 1360]

                                                      அஷ்சேஹ். ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ

ஹஜ்ஜுக்கான காலங்களாக, ஷவ்வால், துல்கஃதா, துல் ஹிஜ்ஜா ஆகிய மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  ஒருவர் ஷவ்வால் மாதத்தில் இருந்து துல்ஹஜ் பிறை எட்டுவரை தனது ஹஜ்ஜுக்காக தன்னைத் தயார் படுத்தலாம். அதேவேளை உம்ராவிற்கென கால நிர்ணயம் கிடையாது. ஹஜ்ஜுடன் இணைந்து செய்யப்படும் உம்ராவாக இருப்பின் அதை மேற்குறிப்பிட்ட மாதங்களிலேயே நிறைவேற்ற வேண்டும். (விபரம் பின்னர் தரப்படும்).
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ مَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ – البقرة : 197
ஹஜ்(ஜுக்குரிய காலம்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.  ஆகவே எவர் அவற்றில் (தன்மீது) ஹஜ்ஜைக் கடைமையாக்கிக் கொண்டாரோ அவர் (ஹஜ் கடமைக்குள் பிரவேசத்த பின்னர்) உடலுறவு கொள்வதோ, தீய செயல்கள் புரிவதோ, வீண்தர்க்கம் செய்வதோ கூடாது. (அல்பகரா. வச:197).
மேற்படி திருமறை வசனத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒருவர் மேற்கூறப்பட்ட மாதங்களில் தலைப்பிறை தென்பட்டது முதல் துல் ஹஜ் எட்டுவரையிலும் உள்ள காலப்பகுதியில் ஹஜ் செய்வதற்காக தன்னைத் தயார் படுத்திக் கொண்டு மக்கா செல்லமுடியும் என்பதை விளங்கலாம்.
இஹ்ராமில் நுழைவதற்கான (மீகாத்) எல்லைகள்
மேற் கூறப்பட்ட கடமையினை நாம் நிறைவு செய்வதற்காக அல்லாஹ்வின் தூதரால் நமக்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஹஜ், அல்லது உம்ராவிற்காக அவற்றைக் கடந்து செல்வோர் இஹ்ராம் அணியாது அந்த எல்லைகளைக் கடந்து செலல்லக்கூடாது என்ற உத்தரவாதமும் அவர்களால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.  அதையும் மீறி ஒருவர் செல்வாராயின் இஹ்ராம் அணிந்து செல்லாத குற்றத்திற்காக அவர் ஃபித்யா- எனப்படும் குற்றப்பரிகாரம்- நிறைவேற்றுவது அவசியமாகும். (அவற்றைப் பற்றி பின்னர் கவனிப்போம்)
மதீனா வழியாகச் செல்வோர் ‘துல்ஹுலைபா” விலிருந்தும், எகிப்து, ஜோர்தான் போன்ற நாடுகளில் இருந்து பணயமாகி ‘ஜித்தா” வழியாகச் செல்வோர் ‘ஜுஹ்ஃபா” (தற்போதய ராபிஹ்) எல்லையில் இருந்தும், எமன், மற்றும் அதன் வழியாக வருவோர், ‘எலம்லம்” (தற்போதைய (ஸஃதிய்யா) எல்லையில் இருந்தும் ‘தாயிஃப்” வழியாக வருவோர் தாயிபிலுள்ள ‘அஸ்ஸைலுல் கபீர்” என்றழைக்கப்படும் ‘கர்னுல் மனாஸில்” எல்லையில் இருந்தும் ஈராக்கிலிருந்து வருவோர் ‘தாது இர்க்” (தற்போதய லரீபா) எனும் எல்லையில் இருந்தும், ‘ஹஜ்” அல்லது ‘உம்ரா” விற்கான நிய்யத் செய்து ‘இஹ்ராம்” ஆடை அணிந்து செல்ல வேண்டும்.  

இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட எல்லை (மீகாத்)களாகும்.  ஹஜ் அல்லது உம்ரா செய்யும் ஒருவர் இஹ்ராம் அணியாது இவைகளைக் கடக்கக் கூடாது.  எல்லைகளுக்கு உட்பட்டோர் அவர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்தும், மக்காவாசிகள் மக்காவில் இருந்தும் இஹ்ராம் அணிவர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்கள் புகாரி முஸ்லிம்).
எல்லைகளுக்கு உட்பட்டோர், மற்றும் மக்காவாசிகளின் எல்லை.
وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ – متفق عليه 
‘எல்லைகளுக்கு உட்பட்டோர் தாம் இருக்கும் இடத்தில் இருந்தும், மக்காவாசிகள் மக்காவில் இருந்தும் இஹ்ராம் அணிவர் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்கள் புகாரி, முஸ்லிம்).
மேற் கூறப்பட்ட எல்லைகளுக்குள் வசிப்போர் தமது வதிவிடங்களை எல்லையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  வேறு எல்லைகளுக்குச் சென்று அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வர வேண்டிய அவசியம் இல்லை ” என்பதை புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெறும் நபிமொழிகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு :- ‘தன்யீம்” எனப்படும் இடம் ஹரம் எல்லைக்கு அப்பால் இருக்கின்றது.  அது மக்காவாசிகளின் உம்ராவிற்கான எல்லை என அறிஞர்கள் குறிப்பிடுவதற்கு அமைவாக மக்காவாசிகளாக இருப்போர் தமது எல்லையாகவும் கொள்ளலாம்.
அதே நேரம் இஹ்ராமுடைய நிலையில் மாதவிடாய் ஏற்பட்டு ‘தவாஃப்” மற்றும் ‘ஸஃய்” செய்ய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருந்த பெண்கள் குளித்து, தூய்மையாகிய பின்பு தன்யீமில் இப்போதுள்ள ‘மஸ்ஜித் ஆயிஷா” பள்ளியில் இருந்து தமது விடுபட்ட உம்ராவிற்கான கடமையை முழுமைப்படுத்த இஹ்ராம் அணிவதற்கான கட்டாயக எல்லையாகக் கொள்ள வேண்டும்.
ஹஜ் மாதங்களில் உம்ரா செய்யலாம்
ஜாஹிலிய்யா அறியாமைக்கால மக்கள் ஹஜ் மாதங்களில் உம்ராச் செய்வதை பூமியில் நிகழும் பெரும் பாவங்களில் ஒன்றாகக்கருதினர். மட்டுமின்றி, முஹர்ரம் என்ற புனித மாதத்தை ‘ஸஃபர்” மாதமாக மாற்றியமைத்த அவர்கள் அந்த ஸபரில் தாம் விரும்பியதைச் செய்து வந்தார்கள்.  தமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக
إِذَا بَرَا الدَّبَرْ وَعَفَا الْأَثَرْ وَانْسَلَخَ صَفَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ اعْتَمَرْ – متفق عليه
(ஒட்டகத்தின்) நோய் நீங்கி, (அதன் மீதுள்ள பயணத்) தடயங்களும் அழிந்து (முஹர்ரம் என்ற ) ஸஃபர் மாதமும் கழிந்தால் ‘உம்ரா” செய்பவரின் உம்ரா செல்லுபடியாகும் எனக் கூறுவர். (ஆதார நூல்: முஸ்லிம்). முஹர்ரம் என்ற ஸஃபர் மாதமும் கழிந்த பின்னால் உம்ராச் செய்பவரின் உம்ராவே செல்லுபடியாகும் என்பதே இதன் பொருளாகும்.
இது ஜாஹிலிய்யா அறியாமைக்கால மக்களின் நம்பிக்கையே தவிர இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை அல்ல என்பதை மேற்படி நபிமொழியில் இருந்து விளங்கலாம். இந்த நம்பிக்கையை தகர்த்து எறிவதற்காகவே நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ்ஜில் உம்ராச் செய்தார்கள்.
… قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً – متفق عليه
நபிகள் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக துல்ஹஜ் பிறை நான்காவது தினத்தில் (மக்கா) வந்திருந்திருந்த போது நபித்தோர்களின் ஹஜ்ஜை தமத்துஆக (உம்ராவாக) மாற்றும்படி பணித்தார்கள். (பார்க்க: புகாரி, முஸ்லிம்).

‘ஹஜ்” மாதங்களில் ‘உம்ரா” செய்கின்ற ஒருவர் கட்டயாம் ஹஜ் செய்ய வேண்டும், இல்லையெனில் உம்ராச் செய்வது கூடாது என முஸ்லிம்கள் கூறுவதும் இந்த நம்பிக்கையை ஒத்ததாகும்.
தமத்துஃ :
எல்லையில் இஹ்ராம் அணியும் ஒருவர் உம்ராவிற்காக மாத்திரம் நிய்யத் செய்து, தவாஃப் முடித்து, பின் ‘ஸஃய்” (தொங்கோட்டம் ஓடுதல்) ஆகிய கடமைகளை முடித்து தலையையும் மழித்து, இஹ்ராத்தையும் களைந்து, சாதாரண நிலைக்கு வருவதாகும்.  பின்னர் துல்ஹஜ் பிறை எட்டில் ஹஜ்ஜுக்காக மீண்டும் நிய்யத் செய்து, தனது ஹஜ் கடமையை தொடர்வதாகும்.
சுருக்கமாகக் கூறினால் ஹஜ் மாதத்தில் ஒருவர் உம்ரா செய்வது எனலாம்.  தனது இயல்பு நிலையில் சுதந்திரமாக செயல்படுவதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ‘தமத்துஃ” என்ற சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் “கிரான்” :
எல்லையில் இஹ்ராம் அணியும் ஒருவர் ஹஜ்ஜுக்காகவும், உம்ராவிற்காகவும் சேர்த்து நிய்யத் செய்து, தவாஃப், ஸஃய் (தொங்கோட்டம் ஓடுதல்) ஆகிய கடமைகளை முடித்த பின், தலையையும் மழிக்காது, இஹ்ராத்தையும் களையாது தனது ஹஜ் கடமையை தொடர்வதோடு, துல்ஹஜ் பிறை பத்திலுள்ள கடமைகளை முடித்த பின்னர் இயல்பான நிலைக்கு வருவதாகும். ஹஜ்ஜும், உம்ராவும் இணைத்து செய்யப்படுவதால் இது ‘கிரான்” என அழைக்கப்படுகின்றது.
ஹஜ் ‘இஃப்ராத்” :
ஒருவர் ஹஜ்ஜுக்காக மாத்திரம் நிய்யத் செய்து, தவாஃப், மற்றும் ஸஃய் (தொங்கோட்டம் ஓடுதல்) ஆகிய கடமைகளை முடித்து, தலையையும் மழிக்காது, இஹ்ராத்தையும் களையாது ஹாஜி ஒருவர் தனது ஹஜ் கடமையை மாத்திரம் தொடர்வதால் அது ‘இஃப்ராத்” எனக் கூறப்படுகின்றது. இதில் பலிப்பராணி கொடுப்பது கடமை இல்லை. இவ்வகைகள் பற்றி பின்வரும் நபி மொழி உறுதி செய்கின்றது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ (متفق عليه)
நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக நாம் புறப்பட்டுச் சென்றோம்.  உங்களில் யார் ஹஜ்ஜுக்காகவும், உம்ராவிற்காகவும் (இஹ்ராம் அணிந்து) தல்பியா கூற விரும்புகிறாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்.  அதே நேரம் யார் ஹஜ்ஜுக்காக மாத்திரம் (இஹ்ராம் அணிந்து) தல்பியா கூற விரும்புகிறாரே அவரும் அவ்வாறு செய்து கொள்ளவும்,  உம்ராவிற்காக மாத்திரம் யார் (இஹ்ராம் அணிந்து) தல்பியா கூற விரும்புகிறரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறாhர்கள். (புகாரி, முஸ்லிம்).
இவைகளுக்கு மத்தியில் காணப்படும் வேறுபாடுகள்
‘கிரான்” முறைப்படி செய்பவர் ஹஜ்ஜுக்காகவும், உம்ராவிற்காகவும் சேர்த்து நிய்யத் செய்த காரணத்தால் அவர் (தாஃபுல் குதூ முடன்) முதல் தவாஃபுடன் செய்த ஸஃய் ஹஜ்ஜுக்காக போதுமானதாகும்.  இதே வழிமுறையை இஃப்ராத் முறைப்படி ஹஜ் செய்தவரும் கடைப்பிடிப்பார்.
இவர்கள் இருவரும் பிறை பத்தில் மற்றொரு ‘தவாஃப்” செய்ய வேண்டும். ஸஃய் ஏற்கெனவே செய்துள்ளதால் மீண்டும் ஸஃய் செய்ய வேண்டிய கடமை இல்லை.  இந்த தவாஃப் ‘தவாபுல் இபாழா” எனப்படும்.  இவர்கள் இருவருக்கும் தவாஃபுல் குதூம் தவறிவிடுமானால் அதில் தவறில்லை.
இதற்கு ஆதாரமாக உர்வா பின் முளர்ரிஸ் (ரழி) அவர்களின் செய்தியை ஆதாரமாகக் கொள்ளலாம் என உஸைமீன் (ரஹ்) அவர்கள் ஷரஹுல் மும்திஃ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
அதே நேரம், ‘தமத்துஃ” முறையில் ‘ஹஜ்” செய்தவர் ஆரம்ப தவாஃபுடன் செய்த ‘ஸஃய்” அவரது உம்ராவிற்கான ஸஃயாக கொள்ளப்படும்.  அதனால் அவர் பிறை பத்தில் தவாஃபுல் இஃபாழாவுடன், ஸஃயும் செய்ய வேண்டும்.  இவர் பலிப்பராணி (குர்பானி) கொடுப்பது கடமையாகும்.  அதே போன்று, கிரான் அடிப்படையில் செய்தவரும் ஹத்ய் என்ற பலிப்பிராணி கொடுப்பது கடமையாகும்.
குறிப்பு: நம்நாட்டு ஹாஜிகள் தமத்துஃ முறையை அதிகம் பேணுவர். அதுவே சிறந்த முறையுமாகும். அதனால் அது பற்றி விரிவாக இங்கு நோக்குவோம்.
இஹ்ராம் அணிவதற்கு முன் செய்யவேண்டிய காரியங்கள்.
குளிப்பு: மாதத்தீட்டு, பிரசவத்தீட்டு போன்ற உபாதைகளால் குளிப்பு கடமையான பெண்கள், உடலுறவு உறக்கம் போன்றவற்றால் குளிப்புக் கடமையான ஆண், பெண்கள் அனைவரும் குளிப்பது கடமையாகும். குறிப்புக் கடமையில்லாத மற்றவர்கள் விரும்பினால் குளிக்கலாம். விரும்பாவிட்டால் குளிக்காது விட்டுவிடலாம்.
மனதால் நிய்யத் செய்து இஹ்ராம் அணிதல்
இஸ்லாத்தின் சகல அமல்களுக்கும் உள்ளத்துடன் தொடர்பு இருப்பது போன்று ஹஜ், உம்ராவிற்கும் தொடர்பு இருக்கிறது. எல்லையை அடைந்ததும் உம்ராவிற்கான எண்ணத்தை மனதில் இருத்தி, اَللّهُمَّ لَبَّيْكَ عُمْرَةًநாவினால் ‘அல்லாஹும்ம லெப்பை(க்)க உம்ரதன்”
அல்லாஹ்வே! உனக்காக உம்ராவை நிறைவேற்றுகிறேன்” என தல்பியாக் கூறிக் கொள்ளல்.
பயணம் தடைப்படுவதை அஞ்சினால்… 
உம்ராப் பயணம் செல்லும் போது சில தடங்கல்கள் ஏற்பட்டு, அதனால் உம்ராவை நிறைவு செய்ய முடியாது போகும் என்ற நிலை ஏற்படுவதை ஒருவர் அஞ்சினால் அவர் உம்ராவிற்கான நிய்யத் செய்யும் போது
اللَّهُمَّ إنْ حَـبَسَنـيْ حَـابِسٌ فَمَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي
‘அல்லாஹும்ம இன்ஹஃபஸனீ ஹாஃபிஸுன் ஃப மஹல்லீ ஹைது ஹஃபஸ்தனீ என மனதால் நினைத்துக் கொள்ளல்.
பொருள்: ‘அல்லாஹ்வே! எந்த இடத்தில் என்னை நீ தடுக்கின்றாயோ அதுவே எனது (இஹ்ராத்தைக் களையும்) இடமாகும். (முஸ்லிம்)
இவ்வாறு செய்வதால்… ?
இவ்வாறு ஒருவருக்கு தடங்கல் ஏற்படும் இடத்தில் முடியை மழித்து, அல்லது குறைத்துக் கொள்ளலாம். இவர் ‘ஹத்ய்” எனப்படும் பலிப்பிராணியை பலி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உம்ராவை மறுமுறை ‘கழா”ச் செய்ய வேண்டும்.
அவ்வாறு கூறாத ஒருவருக்கு தடங்கல் ஏற்பட்டு, இஹ்ராத்தை களைய வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ‘ஹுதைபியா” உடன்படிக்கை ஆண்டில் பலிப்பிராணியை கொடுத்து, தமது தலைகளை மழித்து, பின் இஹ்ராத்தை கழைந்தது போன்று செய்ய வேண்டும். முடியுமாயின் உம்ராவை மறு ஆண்டு ‘கழா”ச் செய்தது போன்று கழாவும் செய்ய வேண்டும்.
இஹ்ராத்திற்காக சுன்னத் தொழுகை இல்லை.
இஹ்ராத்திற்கென ஒரு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்யவில்லை என்பதாலும், ஒரு வணக்கத்தை நாமாக கண்டுபிடிக்க முடியாது என்பதாலும் இஹ்ராத்திற்கென விஷேட தொழுகை ஏதும் இல்லை என்பதாலும் இவ்வாறு கூறுகின்றோம்.
சிலர் ஹஜ்ஜுக்கு வழி அனுப்புவோரை பாங்கு கூறி வழி அனுப்புகின்றனர்.  இதுவும் மார்க்கத்தில் இல்லாத புதிய வழிமுறையாகும்.
தொழுவதால், பாங்கு சொல்வதால் என்ன பிரச்சினை நன்மைதானே என நாமாக முடிவு செய்யும் அதிகாரம் நமக்கில்லை.
444  حَدَّثَنَا قَبِيصَةُ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ أَبِى رَبَاحٍ  شَيْخٌ مِنْ آلِ عُمَرَ  قَالَ : رَأَى سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ رَجُلاً يُصَلِّى بَعْدَ الْعَصْرِ الرَّكْعَتَيْنِ يُكْثِرُ فَقَالَ لَهُ. فَقَالَ : يَا أَبَا مُحَمَّدٍ أَيُعَذِّبُنِى اللَّهُ عَلَى الصَّلاَةِ؟ قَالَ : لاَ وَلَكِنْ يُعَذِّبُكَ اللَّهُ بِخِلاَفِ السُّنَّةِ. (سنن الدارمي -/ المكتبة الشاملة)
ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) என்ற தாபியீ அவர்கள் அஸருக்குப் பின்னால் அதிகமதிகம் தொழும் மனிதர் ஒருவரை அவதானித்தார்கள். அவரிடம் (கூற வேண்டியதைக்) கூறினார்கள். அம்மனிதர்: அபூ முஹம்மத் அவர்களே! தொழுவதால் அல்லாஹ் என்னை தண்டிப்பானா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள், இல்லை. எனினும் நீ சுன்னா (நபிவழிக்கு) முரணாக செய்வதற்காக உன்னை அவன் தண்டிப்பான் எனக் கூறினார்கள்.(ஆதாரம்: தாரமி)
வணக்க வழபாடுகளை நாமாக கண்டுபிடிக்க முடியாது என்பதை இந்த அறிஞரின் கூற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இஹ்ராம் அணிந்து மதீனாவின் எல்லையைக் கடப்போர் கவனத்திற்கு:
மதீனாவின் எல்லையிலுள்ள ‘துல்ஹுலைஃபா” பள்ளிவாசல் ‘வாதில் அகீக்” எனும் புனித பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நபிகள் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக அவ்விடத்தில் நிய்யத் செய்து அதைக் கடக்க முற்பட்ட போது வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து,
صحيح البخاري –  صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ
‘இந்தப் புனித ஓடையில் தொழுவீராக” எனக் கூறினார்கள். (புகாரி). என்ற ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு மதீனாவின் எல்லையில் இருந்து ‘இஹ்ராம்” அணியும் ஒருவர் ‘துல்ஹுலைஃபா” பள்ளியில் இரண்டு ரகஅத்துக்கள் தொழ வேண்டும்.
வேறு எல்லையில் இருந்து செல்வோர் இந்த இரு ரகஅத்துக்களையும் தொழ வேண்டியதில்லை. மதீனா எல்லைக்கென வந்துள்ள ஹதீஸை அனைத்து எல்லைக்கும் பொதுவான ஹதீஸாகக் கொள்ள முடியாது
இன்ஷா அல்லாஹ் தொடரும்..

                                                                              எம். ஜே. எம். ரிஸ்வான் (மதனி)

பணம் தூயவழியில் பெறப்பட்டதா? என பரிசோதனை செய்தல். தூய முறையில் பெறப்பட்ட பணத்திலே ஹஜ் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் அருட்பாக்கியம் பெற்ற மக்களைத்தவிர ஏனையோர் இந்த விஷயத்தில் தமது பொருளீட்டல் முறைபற்றி பரிசோதிக்க வேண்டியர்களே! பிற மனிதர்களிடம் சுரண்டப்பட்ட பணங்கள் மீட்டப்படல் வேண்டும்.  அநீதி இழைக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இனியும் இவ்வாறான பாவங்கள் பக்கம் மீள்வதில்லை என உறுதிபூண வேண்டும்.
அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுதல்.   
அல்லாஹ்வுக்காக அல்லாது பிறருக்காக செய்யப்படும் வணக்கங்களின் முதல் நிலையில் புனித ஹஜ் ஆகிவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது.  ஹாஜியார், ஹாஜி, ஹாஜிம்மா, ஹாஜியானி, அல்ஹாஜ் போன்ற நாமங்கள் சமுதாயத்தில் பவணி வருவதைப்பார்த்தால் ஹாஜிகளின் முகஸ்துதியின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளலாம்.  ஹாஜிகள் வீடுவீடாகச் சென்று மன்னிப்புக்கோரும் போதும், பள்ளிகளில் ஹஜ்ஜுக்கான முஸாபஹா செய்கின்ற போதும் தற்பெருமை அற்றவர்களாக இருப்பார்களா?
“ஹஜ்” மற்றும் ‘உம்ரா” பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன், وأَتِمُّواْ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّهِ‘ஹஜ்ஜையும், உம்ராவையும், அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள்” என்று குறிப்பிடுகிறது. ஒருவர் இக்கடமையினை அல்லாஹ்வுக்காகவே நிறைவு செய்ய வேண்டும் என்பதை இது உணர்த்தவில்லையா?
நபி வழிமுறை பற்றி அறிந்து செயற்படுதல்.
இதில்தான் ஒரு ஹாஜியின் ஹஜ்ஜின் திருப்தி தங்கியுள்ளது.  இதில் அதிகமானோர் குறைவு செய்வதையே அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொருவரும் தான் கொண்ட கொள்கை, அல்லது மத்ஹபு அடிப்படையில் மக்களை ஹஜ் செய்ய பயிற்றுவிக்கிறார்களே அன்றி மாநபியின் வழியில் பயிற்றுவிக்கப்படுவதாக அறியோம்.
நபி (ஸல்) அவர்கள் செய்தது ஒரேயொரு ஹஜ்ஜுதான்.  ஆனால் அதில் நூற்றுக்கணக்கான வழிமுறைகள் பதிவு செய்யப்படடிருப்பதை பார்க்கின்ற போது நமது ஹாஜிகளை வழி நடத்தும் முகவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ – صحيح مسلم
இறுதி ஹஜ்ஜின் போது மக்களிடம், ‘நீங்கள் உங்கள் ஹஜ்ஜுக்கான வணக்க முறைகளை (என்னில் இருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
நபியைப் போன்று ‘ஹஜ்” செய்ய வேண்டியதன் அவசியத்தை நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த பின்வரும் நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.
…أَخْبِرْنِي عَنْ حَجَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِيَدِهِ فَعَقَدَ تِسْعًا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَثَ تِسْعَ سِنِينَ لَمْ يَحُجَّ ثُمَّ أَذَّنَ فِي النَّاسِ فِي الْعَاشِرَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجٌّ فَقَدِمَ الْمَدِينَةَ بَشَرٌ كَثِيرٌ كُلُّهُمْ يَلْتَمِسُ أَنْ يَأْتَمَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَعْمَلَ مِثْلَ عَمَلِهِ – مسلم


முஹம்மத் பின் அலி பின் ஹஸன் என்பவர் ஜாபிர் (ரழி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கேட்டார்.  அதற்கு அவர்கள், (ஹிஜ்ரத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காக) ஒன்பது முறை தனது கையை (விரல்களை) மடக்கிக் காட்டி, ஒன்பது ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் ‘ஹஜ்” செய்யாது இருந்தார்கள்.  (ஹிஜ்ரி) பத்தாவது வருடம்தான் ‘ஹஜ்” செய்யப்போவதாக மக்களுக்கு அறிவிப்பு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிடவும், அவர்கள் அமல் செய்வது போன்று அமல் செய்யவும் (மதீனாவை நோக்கி) பெரும்திரளான மக்கள் வந்து சேர்ந்தனர் … (முஸ்லிம்).
எனக் குறிப்பிடும் ஜாபிர் (ரழி) அவர்களின் மேற்படி செய்தியை அவதானித்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வாறு ஹஜ் செய்தார்களோ அதே போன்று ஹஜ் செய்வதாலேயே அதன் பரிபூரண நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். என்பதை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் விளங்கிய காரணத்தினால்தான் பெரும் திரளான மக்கள் ‘ஹஜ்” செய்வதற்காக மதீனாவில் நபியுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பதை விளங்கலாம்.
இதை விடுத்து, ‘நமது மத்ஹபே நமக்குப் புகலிடம்” என்ற நிலையில் ‘மத்ஹப்” சார்ந்த மௌலவிகள் தமது ஹாஜிகளுக்கு குழப்பமான கருத்துக்களை போதிப்பதால் நபி வழிக்கு முரணான பல வழிமுறைகள் அப்புனித பூமியில் அரங்கேற்றப்படுவதை பார்க்கிறோம்.  அந்த நிலை மாறுவதற்காக ஹஜ்ஜில் நபியின் வழிமுறை பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.
ஹஜ்ஜின் அவசியம்.
ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.  மக்காவில் இருக்கும் புனித கஃபா ஆலயத்தையும், அங்குள்ள புனித இஸ்லாமியசின்னங்களை பிரதானப்படுத்தியும் மேற்கொள்ளப்படும் இவ்வணக்கத்தை, அவ்வில்லம் சென்று நிறைவேற்ற சக்தியும், வசதியும் பெற்ற, வயது வந்த ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் அவசியம் ஒரு தடவை மிகவிரைவாக நிறைவேற்றுவது கடமையாகும்.
وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ – آل عمران : 97
மனிதர்களில் அல்லாஹ்வின் (இல்லத்திற்கு சென்றுவர) வசதி பெற்றோர் அவ்வில்லத்தை ஹஜ் செய்வது அவர்கள் மீது கடமையாகும். (அத்: ஆலுஇம்ரான். வச: 97)
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ – متفق عليه
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. (அவை) உண்மையாக வணங்கப்படுவதற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு லயாரும் இல்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும்,  தூதருமவார்கள், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகியனவாகும்.(புகாரி, முஸ்லிம்).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا – مسلم
எமக்கு பிரசங்கம் நிகழ்த்திய நபி (ஸல்) அவர்கள் ‘மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான்.  ஆகவே விரைந்து ஹஜ் செய்யுங்கள்” என கட்டளையிட்டார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).
மேற்படி கடமையினை ஒருவர் திடகாத்திரமாகவும்,  உடல்வலிமையோடும் இருக்கின்ற போது செய்கையில் அலாதியான திருப்தி அடைவார். காலம் தாழ்த்தி, வயதான பின்னர் செய்கின்ற போது ஏதோ கடமை முடிந்து விட்டதுதானே என பெருமூச்சு விடுவார் அவ்வளவுதான்.  அதனால் விரைந்து இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.
ஹஜ்ஜின் சிறப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ – متفق عليه
ஒரு உம்ரா, மறு உம்ரா வரையுள்ள சிறுபாவங்களுக்குப் பரிகாரமாகும்.  அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனமாகும்.  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்: புகாரி , முஸ்லிம்).
… أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ – مسلم
‘இஸ்லாம்” அதற்கு முன்னால் உள்ள பாவங்களை அழித்துவிடும், ‘ஹிஜ்ரத்” அதற்கு முன்னர் உள்ள பாவங்கைள அழித்துவிடும், ‘ஹஜ்” அதற்கு முன்னருள்ள பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ், உம்ராவின் சிறப்பை எடுத்துக் கூறும் ஆதாரபூர்மான பல நபி மொழிகள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் விரிவை அஞ்சி இந்த ஹதீஸுடன் போதுமாக்கிக் கொள்வோம்.
வருடந்தோறும் ஹஜ் செய்வது கடமையா?
வாழ்நாளில் ஒரு தடைவ ஹஜ் செய்வதே கடமை.  வருடாவருடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின்வரும் நபிமொழியின் மூலம் உறுதி செய்யலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ – مسلم
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.  அதில் மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கி உள்ளான். ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள் எனக் கூறினார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! வருடந்தோறுமா ? (செய்யவேண்டும்)? ஏனக் கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள் எதுவும் பேசாது, அவர் மூன்று தடவைகள் கேட்கும் வரை மௌனமாக இருந்து விட்டு,  ‘நான் ஆம் (கடமைதான்) எனக் கூறினால் அது கடமையாகி விடும்,  நீங்கள் அதனை நிறைவு செய்ய சக்தி பெறமாட்டீர்கள்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
இயலாத பெற்றோருக்காக பிள்ளைகளின் ஹஜ்
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ سَأَلَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ جَمْعٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَمْسِكُ عَلَى الرَّحْلِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ (بخاري) وفي رواية له :- وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ – متفق عليه
‘ஹஸ்அம்” கோத்திரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, ஹஜ் அல்லாஹ்வின் அடியார்கள் மீதுள்ள அவனது கடமையாக இருக்கின்றது.  எனது தந்தை வாகனத்தில் அமர முடியாத அளவு முதியவராக இருக்கின்றார். ஆகையால் அவருக்காக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?” எனக் கேட்டார். ‘ஆம். அவருக்காக நீ ஹஜ் செய்து கொள்” என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (புகாரி,)புகாரியின் மற்றொரு அறிவிப்பில், இது ‘ஹஜ்ஜத்துல் வதா” வில் நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது நடை பெற்றதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிபந்தனை ஒருவர் தனது பெற்றோருக்காக, அல்லது உறவினர்களுக்காக ஹஜ் செய்வதாயின் அவர் முதலாவதாக தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ قَالَ مَنْ شُبْرُمَةُ قَالَ أَخٌ لِي أَوْ قَرِيبٌ لِي قَالَ حَجَجْتَ عَنْ نَفْسِكَ قَالَ لَا قَالَ حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ – أبوداود
ஒருமனிதர் ‘லைப்பைக்க -அன்- ஷுப்ருமா” இது ‘ஷுப்ருமா என்பவருக்கான” ஹஜ், எனக் கூறியபோது ‘யார் அந்த ஷுப்ருமா என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அவர், ‘எனது சகோதரர், அல்லது உறவினர் எனப் பதில் கூறினார்.  நீ உனக்காக ஹஜ் செய்து விட்டாயா?” எனக் கேட்டார்கள். ‘இல்லை” என்றதும் (முதலில்) உனக்காக ஹஜ் செய், பின்வருங்காலங்களில் ஷுப்ருமாவிற்காக ஹஜ் செய் எனக் கூறினார்கள்.(அபூதாவூத்)
மஹ்ரமின்றி ஒருபெண்ணோ, அல்லது பல பெண்களோ தனித்து ஹஜ்ஜுக்காக செல்ல முடியுமா? 

ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் பிரதான கடமைகளில் ஒன்றாகும். அதனை ஒரு ஆண் தனிமையாக நிறைவேற்ற அனுமதி இருப்பது போன்று ஒரு பெண் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை.
عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ امْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً وَاكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا قَالَ ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ – متفق عليه
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தனது உரையில், ‘அந்நிய ஒரு பெண்ணுடன் எந்த ஒரு ஆணும் தனித்திருக்க வேண்டாம்”, மஹ்ரம் (மணம் முடிக்க மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவர், அல்லது கணவர்) உடனே அன்றி பயணம் செய்ய வேண்டாம் எனக் கூறியதை செவிமடுத்த ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன, இன்ன போர்களில் கலந்து கொள்ள வேண்டும் எனப் பதியப்பட்டிருக்கிறேன், எனது மனைவியோ ஹஜ் செய்வதற்காக புறப்பட்டு சென்று விட்டார் என்றார். ‘உடன் திரும்பிப் போய், உனது மனைவியுடன் ஹஜ் செய்” எனப் பணித்தார்கள். (புகாரி, முஸ்லிம்).

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றி தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறுகின்றோம்.
இதற்கு தவறான வியாக்கியானம் செய்யும் ஷாஃபிமத்ஹபைச் சார்ந்தோர் ‘நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்” என வாதிடுகின்றனர்.  ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா என்ற வாதப்பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் ‘மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம்.  ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதையே நாம் சரியான கருத்தாகவும் கொள்கின்றோம்.
ஐயம்: ஹஜ்குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக் கொள்வதற்காக, தமது வசதிக்காக பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.  உண்மையில் இக்கூற்றிற்கு அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின் பெயரால் எழுதப்பட்டுள்ள கருத்துக்களும் ஒரு காரணமே!
மேலும், குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒருபடி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு ‘அதிய்யே அல்ஹீரா என்ற நகரைப்பார்த்திருக்கிறாயா? நான் அதைப்பார்த்தில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன் எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டகத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந்தனியே) தவாஃப் செய்வாள்.  அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்.” (புகாரி 3328) 

எனக் கூறிய அதிய் பின் ஹாதிம் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக் கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காக தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.
விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித்தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.?  நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவுமா இந்தக்காலத்துப் மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா !!!
அதி பின் ஹாதிம் (ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம், பீதி அற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது.  நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடை பெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக்கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.
மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதிய் (ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது.  இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய் (ரழி) அவர்கள் இது பற்றிக்குறிப்பிடுகின்ற போது, ‘ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்”, என குறிப்பிடுகிறார்கள்.(புகாரி).
இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக்காலத்தை ஒப்பிடலாமா என்றால், அனைவரும் இல்லை! என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.
ஐயம். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கி பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காக செல்வதை எவ்வாறு தவறாகக் கொள்ள முடியும் ?
தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித்தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை.  அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்துவைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது.  அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத்தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக் கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
தமது மனைவியர் மாற்றானுடன் புன்முருவல் பூப்பதையே விரும்பாத இம்மேதாவிகள், மாற்றான் மனைவி தனது குரூப்பில் இணைந்து ஹஜ் செய்வதை அனுமதிக்கிறார்கள் என்றால் அதில் உலகியல் இலாபமின்றி வேறு என்னதான் இருக்க முடியும்?
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
                                                                           எம். ஜே. எம். ரிஸ்வான் (மதனி)

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget