யார் பாரம்பரிய முஸ்லிம்கள்.?

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் “ நீயா ? நாநா ? நிகழ்ச்சி போல நாங்கள் தான் பரம்பரை முஸ்லிம்கள் மற்றவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் கிடையாது அவர்களை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சாரார் பகிரங்கமாக மகஜரை அதிகாரிகளிடம் கையளித்து சந்தோசம் அடைந்து வருகிறார்கள். ?
தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி ஆகிய இந்த மூன்று அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தையும், வஹாபிகளையும் தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வஹாபி சபை அதை தடை செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள், எனவே தடை செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம் அல்லாத உயர் அதிகாரிகளிடமும், ஒரு சில அந்நிய மத குருமார்களிடமும் போட்டுக் கொடுத்து, எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று உயிர் பிச்சை கேட்பது போல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். 
“ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதையாக இவர்களின் கதை உள்ளது. ?
இலங்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சினையின் மூலம் யார் உண்மையான முனாபிக்குகள் ( நயவஞ்சகர்கள்) என்பதை அல்லாஹ் உலகத்திற்கு தெளிவாக எடுத்து காட்டி விட்டான். அல்ஹம்து லில்லாஹ் !
ஒரு சிலர் இந்த பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி எந்த குற்றமும் செய்யாத பிறரை, பழி வாங்கும் எண்ணத்தில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்து, நாங்கள் தான் முனாபிக்குள் என்று நிரூபித்து கொண்டார்கள்.
நபியவர்கள் உயிரோடு இருந்த போது நாங்களும் முஸ்லிம்கள் என்று சில நயவஞ்கர்கள் தன்னை இஸ்லாம் என்ற ஆடையால் மறைத்து இருந்தனர்.
அதை நபியவர்களுக்கு அல்லாஹ் காட்டி கொடுத்திருந்தான். அதனால் தான் அபூ ஹூதைபா (ரலி) அவர்களிடம் சில முனாபிக்குகளுடைய பெயர் பட்டியலை நபியவர்கள் கொடுத்து வைத்திருந்தார்கள்.
ஆனால் . நபி (ஸல்)அவர்கள் மரணித்த சமயம் சிலர் இஸ்லாத்தை விட்டு (முர்தத்துகளாக) வெளியேறினார்கள். உண்மையான முனாபிக்குகளை ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் காட்டிக் கொடுத்தான். அதை தான் இலங்கையிலும் இப்போது அல்லாஹ் காட்டி கொடுத்து விட்டான்.
“அமைச்சர் இடம் இந்த மகஜரை கையளித்த தரீக்கா சகோதரர்கள், நாங்கள் தான் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் ?
பொதுவாக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் மட்டும் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு வந்தார்கள், இப்போது பாரம் பரிய முஸ்லிம்கள் என்றும் கூறுகிறார்கள். தரீக்கா என்ற அமைப்பிற்குள் பல தரீக்கா பிரிவினர்கள் இருக்கிறார்கள். அவர்களே அவர்களை மாறி, மாறி தவறாக விமர்சனம் செய்து கொள்வார்கள். ஆனால் அனைவரும் நாங்கள் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்றும் சொல்லிக் கொள்வார்கள், அதே போல ஏனைய ஜமாஅத்தார்களும் நாங்கள் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.
எனவே உண்மையான பாரம்பரிய முஸ்லிம்கள், மற்றும் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் யார் என்பதை தெளிவுப்படுத்துவதோடு, இந்த இரண்டு பெயர்கள் இருந்தால் தான் சரியான முஸ்லிம்கள். இல்லாவிட்டால் அவர்கள் முஸ்லிம்கள் கிடையாது என்ற தவறான சிந்தனையை இந்த தொடர் தலைப்பின் மூலம் தெளிவுப் படுத்த உள்ளேன். இன்ஷா அல்லாஹ் 

பொதுவாக ஒவ்வொரு சாராரும் தங்களுக்கு என்று ஒவ்வொரு பெயரை வைத்துள்ளனர். அதாவது தப்லீக் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், ஜமாஅத்தே இஸ்லாமியனர், இன்ன, இன்ன தரீக்காவாதியினர் என்று வைத்துக் கொண்டு நாங்கள் தான் சரி மற்றவர்கள் பிழை என்று குற்றம் சாட்டி சண்டைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு பெயர்கள் முக்கியமல்ல, செயல்பாடுகள் (அமல்கள்) தான் முக்கியமாகும் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். மறுமை விசாரணையின் போது தப்லீக் ஜமாஅத்தினர் எல்லாம் இந்த பக்கமாக நில்லுங்கள், தவ்ஹீத் ஜமாஅத்தினர் எல்லாம் அந்த பக்கம் நில்லுங்கள். ஜமாஅத்தே இஸ்லாமியர்கள் எல்லாம் இந்த பக்கம் நில்லுங்கள், இன்ன, இன்ன தரீக்காவாதிகள் எல்லாம் அந்த, அந்த பக்கம் நில்லுங்கள் என்று இறைவன் சொல்லப் போவது கிடையாது.
நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இரண்டு அணியினர் பிரிக்கப் படுவார்கள். நல்லவர்கள் அணியில், யாரெல்லாம் நபியவர்கள் காட்டித் தந்த அமல்களை செய்தார்களோ அவர்கள் இருப்பார்கள்.
உலகத்தில் தாங்களாகவே வைத்த அந்த, அந்த பெயர்களை வைத்து யாருக்கும் சுவர்க்கம் கிடைக்காது. ஜமாஅத்தின் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மார்கத்தை சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தால் மறுமையில் வெற்றி பெற முடியும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜமாஅத் பெயர்களைப் பொருத்தவரை உலகத்திற்கு ஓர் அடையாளமே தவிர மறுமைக்கான வெற்றியின் அடையாளம் கிடையாது.
அது போல பாரம்பரிய முஸ்லிகள், மற்றும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிகள் என்று பெயர் போட்டால் மட்டும் தான் முஸ்லிம்கள், இல்லா விட்டால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று நினைப்பதும் தவறாகும்.
அதே நேரம் இந்த பாரம்பரிய முஸ்லிகள், மற்றும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிகள் என்ற பெயருக்கு யார் பொருத்தமானவர்கள் என்பதை நபியவர்களின் சுன்னாக்களை ஹதீஸ் கிதாபுகளில் இருந்து எடுத்துக் காட்டும் போது அதிமானவர்கள் தெளிவாக விளங்கி தங்களை சீர் படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.
தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி, இந்த மூன்று ஜமாஅத்துகளைப் பற்றியும் சுருக்கமாக சில செய்திகளை முதலில் விளங்கிக் கொள்வோம்.
தவ்ஹீத் என்றால் இறைவனான அல்லாஹ் ஒருவன் மட்டுமாகும், அவனைத் தவிர வேறு யாரையும் இறைவனாக வணங்கக் கூடாது. சகல வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்த வேண்டும். இணை என்ற அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத எந்த பாவத்தையும் செய்து விடக் கூடாது. இப்படி அல்லாஹ்வுக்கு மட்டும் சகல காரியங்களையும் செய்து, அல்லாஹ்வை ஓர்மை படுத்துவதே தவ்ஹீதாகும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் இந்த தவ்ஹீத் கொள்கையை அடிப்படையாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். நான் தவ்ஹீத் இல்லை என்றால் அல்லாஹ்வை மறுத்ததாக அமைந்து விடும்.
தவ்ஹீத் என்ற வார்த்தை யாருக்கும் சொந்தம் கிடையாது. அனைவருக்கும் பொது உடமையாகும்.
அடுத்ததாக தப்லீக் என்றால் எத்தி வைத்தல். அதாவது நபி (ஸல்) அவர்கள் சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள் வஹியின் ஊடாக மக்களுக்கு மார்க்கத்தை எத்தி வைத்தார்கள். இது தான் தப்லீக்காகும்.
நான் தப்லீக் இல்லை என்றால் நபியை மறுத்ததாக போய் விடும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் தப்லீக் என்ற பணியை அடிப்படையாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
அது போல ஜமாத்தே இஸ்லாமி என்றால் இஸ்லாமிய கூட்டமைப்பாகும்.
முஸ்லிம்கள் எப்போதும் கூட்டமைப்பாகவே இருக்க வேண்டும். பிரிந்து இருக்க கூடாது என்று இஸ்லாம் பல இடங்களில் வலிறுருத்தி கூறுகிறது.
நான் ஜமாஅத்தே இஸ்லாமில் இல்லை என்றால், இஸ்லாத்திற்கு மாற்றமான அமைப்பில் இருப்பதாக அமைந்து விடும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் அவர் ஜமாஅத்தே இஸ்லாம் என்ற கூட்டமைப்பின் அடிப்படையை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
எனவே அல்லாஹ்வை ஏற்ற எந்த நாட்டு முஸ்லிமாக இருந்தாலும் இந்த மூன்று அம்சங்களும் ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் இருக்க வேண்டும்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் தப்லீக் என்றால் நாமாக சில விசயங்களை அமைத்துக் கொண்டு அதை மட்டும் தான் செயல் படுத்த வேண்டும் என்பது தப்லீக்கல்ல,
மாறாக நபி (ஸல்) அவர்கள் வஹி செய்தி மூலமாக எத்தி வைத்த செய்திகளை கூட்டல், குறைத்தலின்றி பிறருக்கு எத்தி வைப்பதாகும்.
அது போல இஸ்லாமிய கூட்டமைப்பு என்றால், நாமாக நமக்கு தோதுவாக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இது தான் இஸ்லாமிய கூட்டமைப்பு என்று சொல்ல முடியாது.
மாறாக நபியவர்கள் கூட்டமைப்பிற்காக எப்படி வழி காட்டினார்களோ, அப்படி அமைப்பதாகும்.
தவ்ஹீதும், பிரச்சினைகளும்…?
தவ்ஹீத் என்ற உடன் ஒவ்வொருவரும் பிழையான கருத்தை கொடுத்து, இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்ற தப்பான கருத்தை திணித்து வருகிறார்கள்.
ஆனால் தவ்ஹீத் தான் நபியவர்களிடம் இருந்து உலகத்திற்கு வந்த உண்மையான அடிப்படை கொள்கையாகும்.
அதை எடுத்து மக்களுக்கு சொல்பவர்கள் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று பெயர் வைத்துள்ளனர்.
தவ்ஹீத்வாதிகளை வெறுக்க வைப்பதற்காக இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை,இவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று சில கயவர்கள் குளிர் காய்ந்து கொண்டு, இவர்கள் சவூதி கொள்கையை பின் பற்றுகிறார்கள், அப்துல் வஹாபுடைய கொள்கையை பின் பற்றுகிறார்கள். என்று மார்க்க அறிவின்றி சொல்லித்திரியக் கூடிய அவல நிலையை நாம் கண்டு வருகிறோம்.
இருந்தாலும் இறைவனுடைய ஜோதியை ஊதி அணைக்க முடியாது என்றடிப்படையில் இந்த சத்திய மார்க்கம் எழுச்சிப் பெற்று, மேலெந்து வருகிறது.
“சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும் என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில், யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நபியவர்கள் காட்டித் தந்த இந்த அடிப்படை கொள்கையை யாராலும் அழிக்க முடியாது.
மார்க்கம் என்ற பெயரில் இடையில் வந்த அத்தனை தவறான கொள்கைகளும் வந்த வழியிலேயே சருகுகளாக திரும்பி சென்று விடும். அல்லாஹ் திருப்பி விடுவான்.
சவூதியை பின் பற்றும் தவ்ஹீத்வாதிகள்…?
இறால் தனது தலையில் அசுத்தத்தை வைத்துக் கொண்டு இருப்பதைப் போல, தவ்ஹீத்வாதிகளின் மீது குற்றம் சுமத்துவோர் தன்னிடத்தில் பிழையான கொள்கையை வைத்துக் கொண்டு, பல குற்றச் சாட்டுகளை வேண்டும் என்று திணிக்கிறார்கள்.
அவற்றில் ஒன்று தான் இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டாகும். உண்மையில் எந்த தவ்ஹீத்வாதியும் சவூதியையோ, வேறு எந்த நாட்டையோ பின்பற்றுவது கிடையாது. குர்ஆனையும், ஹதீஸையும் தான் பின்பற்றுகிறார்கள் என்பது உலகம் கண்ட உண்மையாகும்.
இவர்கள் வேண்டும் என்று அபாண்டமாக தவ்ஹீத்வாதிகளின் மீது பொய் சொல்லி, பொய் சொல்லியே தனது பிழையான கொள்கையில் இருந்தவர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஏற்பட்ட பாரிய சரிவை தாங்கிக் கொள்ள முடியாததினால் தான், இப்படி பல குற்றச் சாட்டுகளின் மூலம் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.
தனக்கு தானே இவர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உலகில் உள்ள எந்த தவ்ஹீத்வாதியும் ஒரு அமலை செய்யும் போது அதற்கு ஆதாரமாக சவூதி என்றோ, அல்லது வேறு நாட்டையோ காட்டுவது கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் சவூதிக்கு மாற்றம் தான் செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு சவூதியில் ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்குகள் சொல்கிறார்கள். ஆனால் இங்கு தவ்ஹீத் பள்ளிகளில் நபிவழியின் அடிப்படையில் இமாம் மிம்பருக்கு ஏறியப்பின் ஒரு பாங்கு தான் சொல்லப்படுகிறது.
இப்ப சொல்லுங்கள் நாங்கள் சவூதியை பின் பற்றுகிறோமா ?அல்லது நபி வழியை (ஹதீஸை) பின் பற்றுகிறோமா ?
மாற்று கருத்தில் இருப்பவர்களே நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள். உங்களை உங்களது மௌலவிமார்களும், வழிகாட்டிகளும் உங்களை பிழையான கொள்கையின் பக்கம் வழிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் தொடராக வெளி வர இருக்கும் இந்த கட்டுரைகளை படித்து முடிக்கும் போது நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.
நீங்கள் உண்மையை விளங்கி இது காலம் வரை இருந்த அந்த பிழையான கொள்கையில் இருந்து விடுபடுவதற்கு இது ஓர் அறிய சந்தர்ப்பமாகும்.
மேலும் சவூதியில் ரமலான் காலங்களில் தராவீஹ் தொழுகை இருபத்தி மூன்று ரக்அத்துகள் தொழுவிக்கிறார்கள், ஆனால் இங்கு மொத்தமாக பதினொரு ரக்கத்துகள் தொழுவிக்கிறார்கள். இப்ப சொல்லுங்கள் நாங்கள் சவூதியை பின் பற்றுகிறோமா ? அல்லது நபி வழியை (ஹதீஸை) பின் பற்றுகிறோமா ?
ஏன் வீணாக பொய் சொல்லி பாவத்தை தேடிக் கொள்கிறீர்கள்.?
இப்படி சொல்வதினால் எங்களுக்கு நஷ்டம் கிடையாது. எங்களுக்கு இலாபம் தான். நீங்கள் சொல்லும் பொய்களை உங்கள் மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி சத்தியத்தை விளங்க வைக்கும் சந்தர்ப்பத்தை தருகிறீர்கள்.
அதனால் தான் காலம், காலமாக கொள்கை ரீதியான சரிவை நீங்கள் கண்டு வருகிறீர்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.!
இவர்கள் சவூதியை பின் பற்றுகிறார்கள் என்று எதை வைத்து புலம்கிறார்கள் என்றால், பார்த்தீர்களா சவூதியில் நெஞ்சின் மீது கை கட்டுகிறார்கள், அத்தஹியாத்தில் விரல் அசைக்கிறார்கள், என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
ஆனால் இவர்கள் ஹதீஸைப் பற்றி (மார்க்க) அறிவில்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
நாங்கள் எந்த அமலை செய்தாலும் ஏதாவது ஹதீஸ் கிதாபிலிருந்து தான் ஆதாரம் காட்டுவோமே தவிர, வெறுமனே அவர் சொன்னார், அல்லது இவர் சொன்னார், அல்லது அப்படி சொல்லப்பட்டிருக்கிறது, அல்லது இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று மொட்டையாக சொல்ல மாட்டோம்.
மேலும் நாங்கள் செய்யும் அமலுக்கான ஆதாரங்கள் ஹதீஸ் கிதாபுகளில் இல்லை என்றால், ஹதீஸ் கிதாபில் அப்படி கிடையாது என்று பகிரங்கமாக சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொல்ல மாட்டார்கள், சொன்னால் மாட்டிக் கொள்வது மட்டும் அல்ல நபியின் மீதே இட்டுக் கட்டியவர்களாக ஆகிவிடுவார்கள்.
எனவே தான் தந்திரமாக சவூதியை பின் பற்றுகிறார்கள். அப்படி, இப்படி என்று சொதப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர் வழியை காட்ட வேண்டும்.
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என்பது ஹதீஸாகும்.
அதை நாங்கள் நடைமுறைப் படுத்துகிறோம். ஆனால் இந்த ஹதீஸை நீங்கள் மறுத்து, நாங்கள் நபியவர்கள் தொழுதது போல தொழ மாட்டோம். எங்கள் மூதாதையர்களை எவ்வாறு கண்டோமோ அப்படி தான் தொழுவோம் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். ?
இப்ப சொல்லுங்கள் நாங்கள் நபியை பின் பற்றி, அதன் படி தொழுகிறோமா ? நீங்கள் நபியை பின் பற்றி அதன் படி தொழுகிறீர்களா ?
எனவே நபியை பின் பற்றும் நாங்கள் தான் சரியான கொள்கையின் அடிப்படையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ் ! இதை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்று தான் ஆக வேண்டும். இது சம்பந்தமான இமாம்களோடு சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்களையும், இமாம்கள் எதை சரிகாண்கிறார்கள் என்ற விசயங்களையும் இன்ஷா அல்லாஹ் தொடராக அடுத்தடுத்த தொடர்களில் தொகுத்து தரவுள்ளேன்.

                                                                                    மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget