இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம்.!

01.நீர் எதையும் தர்மம் செய்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரிலிருந்தே அதை ஆரம்பி! [புகாரி 1427]

02. அபூதல்ஹா(ரழி) மிகப்பெரும் செல்வந்தர். மஸ்ஜிதுன்நபவிக்கு எதிரிலிருந்த ‘பீருஹா’ தோட்டம் அவருக்குரியது. நபியவர்கள் அங்கே சென்று அதிலுள்ள சுவைநீரை அருந்துவது வழக்கம்.

‘உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து இறைவழியில் செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடையமுடியாது!’ என்ற வசனம் [03 : 92] அருளப்பட்டவுடன் அபூதல்ஹா நபியவர்களிடம் சென்று எனது சொத்துக்களில் ‘பீருஹா’ தோட்டமே எனக்கு மிகப்பிரியமானது. இனி இது இறைவனுக்கானது! இதன் நன்மையை அவனிடமே எதிர்பார்க்கிறேன்! நாயகமே! நீங்கள் விரும்பியபடி இதைப் பயன்படுத்தலாம்!’ என்றார்.
 
‘அது அதிக லாபம் தரும் செல்வமே! அதை உமது நெருங்கிய உறவினருக்கு நீர் தர்மமாக வழங்குவதே எனது விருப்பம்!’
‘நாயகமே! அவ்வாறே செய்கிறேன்’ எனக் கூறி, தம் உறவினர், தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுத்தார் அபூதல்ஹா .[புகாரி 2318]

03. ஒருமுறை நபியவர்கள், ‘பெண்களே! தர்மம்செய்யுங்கள்’ என்றார்கள். நான் எனது கணவர் அப்துல்லாஹ் (ரழி), எனது அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கு செலவழிப்பவளாக இருந்தேன். எனவே எனது கணவரிடம், இது தர்மமாகுமா என நபியவர்களிடம் கேட்டு வாருங்கள் என்றேன்.

அவர், நீயே கேள் எனக்கூற, நான் நபியவர்களிடம் செல்ல, அங்கே ஓர் அன்ஸாரிப்பெண். அவரது சந்தேகமும் அதுவே. அங்கிருந்த பிலாலிடம் (ரழி) நான், இது குறித்து நபிவர்களிடம் கேளுங்கள்; ஆனால், நாங்கள் யார் என்பதைச் சொல்ல வேண்டாம் என்றோம். உடனே அவர் நபிவர்களிடம் சென்று கேட்டபோது  அவர்கள், ‘அவ்விருவரும் யார்’ எனக் கேட்டார்கள். அவர் ‘ஸைனப்’ எனக்கூற, நபியவர்கள் ‘எந்த ஸைனப்’ எனக் கேட்க, பிலால் ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார்.

உடனே நபியவர்கள், ‘ஸைனபுக்கு இரு நன்மை உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்த நன்மை; மற்றொன்று தர்மம் செய்த நன்மை’ எனக் கூறினார்கள். [ஸைனப் (ரழி), புகாரி 1466]

04. நபியே! உங்களது நெருங்கிய உறவினரை எச்சரியுங்கள் எனும் குர்ஆன் (26 : 214) வசனம் அருளப் பெற்றபோது நபியவர்கள் ‘ஸஃபா’ மலை மீதேறி நின்று, குறைஷிக் குலத்தவரை பெயர் சொல்லி அழைக்க, அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் அனைவரும் வந்தனர்.

‘இந்த மலையின் பின்புறம் குதிரைப்படை ஒன்று உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என நான் கூறினால், என்னை நீங்கள் நம்புவீர்களா?’ ‘நிச்சயம் நம்புவோம்; ஏனெனில், உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் கண்டதில்லை!’

‘அப்படியானால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்!’ அங்கிருந்த அபூலஹப், ‘நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்றுகூட்டினாய்’ என்றான். அப்போதே ‘அபூலஹபின் கரங்களும் அவனும் நாசமாகட்டும்!’ என்ற 111 ஆவது அத்தியாயம் இறங்கியது. [புகாரி 4770]

05. ‘நபியே! உங்களது நெருங்கிய உறவினரை  எச்சரியுங்கள்’ எனும் திருக்குர்ஆன் (26 : 214)  வசனம் இறங்கியபோது, நபியவர்கள் எழுந்து,
‘குறைஷி சமூகமே! உங்கள் உயிர்களை இறைவனுக்கு வழிபடுவதன்மூலம் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துமனாஃபின் மக்களே! எனது பெரிய தந்தை அப்பாஸ் அவர்களே! எனது அத்தை ஸஃபியாவே! உங்களை இறைவனிடமிருந்து சிறிதளவும் என்னால் காப்பாற்றமுடியாது.

மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! தருகிறேன். ஆனால், இறைவனிடமிருந்து, உன்னை என்னால் சிறிதளவும் காப்பாற்றமுடியாது’ என்றார்கள். [புகாரி 4771]

06. நபி (ஸல்) அவர்களது பெரியதந்தை அபூதாலிபுக்கு மரணவேளை நெருங்கியபோது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் இருக்க, நபியவர்கள் வந்து,  ‘பெரிய தந்தையே! வணங்கத்தகுந்தவன் இறைவனைத்தவிர வேறெவருமில்லை என கூறுங்கள்.’ என்றார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் உமய்யாவும், ‘அபூதாலிபே! உங்கள் தந்தை  அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீங்கள் துறக்கப் போகிறீர்கள்’ என்றனர்.

இவ்வாறு நபியவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்த அபூதாலிப் கடைசியாக, ‘நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே மரணிக்கிறேன்’ என்று கூறியதோடு கலிமா கூறவும் மறுத்துவிட்டார்.

நபியவர்கள், ‘பெரிய தந்தையே! உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்!’ என்றார்கள்.

அப்போதுதான், ‘இணைவைப்போர், நகரவாசிகள் என்பது நன்கு தெளிவான பிறகும் – அவர்கள் நெருங்கிய உறவினரானாலும் – அவர்களுக்காகப் பாவமன்னிப்புக்கோர இறைத்தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை’ எனும் இறைவசனம் [09 :113] அருளப்பட்டது. [புகாரி 1360]

                                                      அஷ்சேஹ். ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget