நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்

வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித்தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷிஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இதுகுறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக
இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“ஷிஆக்கள் யஹுதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் கூறுவார்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று கிறிஸ்தவர்களிடம் கேட்கப்பட்டால் இயேசுவின் தோழர்கள் என்பார்கள். உங்கள் மார்க்கத்தில் கெட்டவர் யார்? என ஷிஆக்களிடம் கேட்கப்பட்டால் முஹம்மதின் தோழர்கள் என அவர்கள் பதில் கூறுவார்கள்.
நபித்தோழர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்குமாறு இவர்கள் ஏவப்பட்டார்கள். ஆனால், இவர்கள் அவர்களைத் திட்டுகின்றனர்.” (அல்மவ்லூஆத் 1/339)
இந்த வழிகேடர்களும் நபித்தோழர்களை குறை காண்பவர்களும் சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் கூட தமது தவறான வாதத்திற்கு வலு சேர்க்க முன்வைப்பதைக் காணலாம். இந்த வகையில் எடுத்துக் காட்டப்படும் சில வசனங்களை இங்கே உதாரணத்திற்காகத் தருகின்றோம்.
1. வியாபாரத்தை நாடினார்கள் “வியாபாரத்தையோ அல்லது வீணானதையோ கண்டால், உம்மை நின்றவராக விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் சென்றுவிடுகின்றனர். அல்லாஹ்விடத்தில் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்ததாகும். உணவளிப்போரில் அல்லாஹ் மிகச்சிறந்தவன் என (நபியே!) நீர் கூறுவீராக!” (62:11)
நபி(ஸல்) அவர்கள் குத்பா (வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் மேடை உபதேச) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது சிரியாவிலிருந்து வியாபாரக் குழுவினர் வந்தார்கள். இதை அறிந்த நபித்தோழர்கள், பொருட்கள் வாங்குவதற்காக எழுந்து சென்றார்கள். அதுகுறித்தே இந்த வசனம் இறங்கியது. இந்த செயற்பாடு தவறு என்றாலும் முதன்முதலில் நடந்தது. குத்பாவுடைய நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது என்ற சட்டம் இதன் பின்னர்தான் அருளப்பட்டது.

அவர்கள் எழுந்து செல்வது மார்க்க ரீதியில் அப்போது தடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படித் தடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் போகும் போது போகாதீர்கள் என நபியவர்கள் தடுத்திருப்பார்கள். நபியவர்கள் தடுக்காததிலிருந்து அதுவரை அது தடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அறியலாம். இஸ்லாத்தில் தடுக்கப்படாத ஒன்றைச் செய்ததற்காக அவர்கள் மீது குறை கூற முடியாது.
2. முனாபிக்குகள் (நயவஞ்சகர்கள்) குறித்த வசனங்கள் “உங்களைச் சூழவுள்ள கிராமப்புற அரபிகளில் நயவஞ்சகர்களும் உள்ளனர். மேலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகத்தில் ஊறித்திளைத்தோர் உள்ளனர்.
(நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர். நாம் அவர்களை நன்கறிவோம். அவர்களை நாம் இருமுறை தண்டிப்போம். பின்னர் கடுமையான வேதனையின் பால் அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (9:101)
இதுபோன்ற, முனாபிக்குகள் பற்றிக்கூறும் ஏராளமான வசனங்களை எடுத்து அவற்றை நபித்தோழர்களுடன் இணைத்து வாதிடக்கூடிய வழிகேடர்களும் உள்ளனர். முனாபிக்குகளையும் முஃமின்களையும் ஒன்றுபோல் பார்ப்பவர்கள் மிகப்பெரும் அநியாயக்காரர்களே! முனாபிக்குகள் முஃமின்கள் கூட்டத்தில் அடங்க மாட்டார்கள்.
“நிச்சயமாக, ‘நாங்கள் உங்களைச் சார்ந்தவர்களே’ என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்கின்றனர். அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். எனினும் அவர்கள் பயந்த சமூகமாக இருக்கின்றனர்.” (9:56)
அந்த முனாபிக்குகள் சத்தியம் செய்து கூறியும் கூட அவர்கள் முஃமின்களாக (இறை நம்பிக்கையாளர்களாக) அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், இந்த வழிகேடர்கள் முஃமின்களைக் கொண்டு போய் அவர்களுடன் சேர்க்கப்பார்க்கின்றனர்.
3. போரில் வெருண்டோடிய ஸஹாபாக்கள்: “இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத்தன்மை உடையவன்.” (3:155)
உஹதுப் போரின் போது ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையில் நபித்தோழர்களில் சிலர் போர்க் களத்தை விட்டும் வெருண்டோடினர். இது மார்க்க ரீதியில் பெரும் குற்றமாகும். நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தியைக் கேட்டதும் அவர்கள் நிலைகுலைந்துபோயினர். அனால் போர்க்களத்தை விட்டும் வெருண்டோடினர். அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டதாகக் கூறியிருக்கும் போது அதை மறந்துவிட்டு குறித்த செயலை வைத்து நபித்தோழர்களைக் குறைகாண்பது அல்லாஹ்வின் மன்னிப்பை அலட்சியம் செய்யும் போக்காகவே இருக்கும்.
உஹதுப் போரில் ஏற்பட்டது போன்று ஒரு பதட்ட நிலை ஹுனைன் போரின் போதும் ஏற்பட்டது. நபித்தோழர்கள் அதிலும் களத்தை விட்டும் ஓடும் நிலையை அடைந்தார்கள். அதுபற்றி குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். “பின்னர் அல்லாஹ் அவனது தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தனது அமைதியை இறக்கினான். மேலும், நீங்கள் காணாத படைகளையும் இறக்கி, நிராகரித்தோரைத் தண்டித்தான். இதுவே நிராகரிப்பார்களுக்குரிய கூலியாகும்.”(9:26)
இங்கே அல்லாஹுதஆலா, அவர்களின் தவறைச் சொல்லிவிட்டு அதன் பின்னும் அவர்கள் முஃமின்கள் என்கின்றான். அவர்கள் மீது அமைதியை இறக்கியதாகக் கூறுகின்றான். இப்படிக் கூறிய பின்னர் அவர்கள் மீது குறை காண்பவன் குர்ஆனை மதிப்பவனாக இருக்க முடியாது.
“அவனே நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அவர்களது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக அமைதியை இறக்கி வைத்தான்.
மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன . அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.” “நம்பிக்கையாளர்களான ஆண்களையும் பெண்களையும் சுவனச்சோலைகளில் அவன் நுழைவிப்பதற்காக (இவ்வாறு செய்தான்.) அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். மேலும், அவன் அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் போக்கி விடுவான். மேலும், இது அல்லாஹ்விடத்தில் மகத்தான வெற்றியாக இருக்கிறது”(48:4&5)
“நிராகரித்தோர், தமது உள்ளங்களில் அறியாமைக்கால வைராக்கியத்தை ஏற்படுத்தி இருந்தபோது, அல்லாஹ் தனது தூதரின் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தனது அமைதியை இறக்கி வைத்தான். மேலும், பயபக்தியின் வார்த்தையை அவர்களுக்குக் கட்டாயப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடைவர்களாகவும் அதற்குரியவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ்யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” ( 48:26)
இந்த வசனங்களில் தெளிவாகவே அவர்களது ஈமான் பற்றியும் அவர்களுக்கு வழங்கப்படும் சுவனம் பற்றியும் கூறப்படும் போது அவர்களை எப்படிக் குறை காண முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு நபித்தோழர்களைக் குறை காண அவர்கள் எடுக்கும் குர்ஆன் வசனங்களை எடுத்துக் கொண்டால் அது அவர்களுக்கே முரணாக அமைந்திருப்பதைக் காணலாம். நபித்தோழர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
அல்லாஹ்வின் “ரிழா” திருப்தியைப் பெற்றவர்கள். இந்த முடிவை மாற்ற முடியாது. மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை அல்லாஹ்வே மன்னித்துவிட்ட பின்னர் அவற்றை எடுத்து வைத்து விமர்சனம் செய்து நபித்தோழர்களைக் குறைத்துக் காட்ட முற்படுபவர்கள் வழிகேடர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
                                                                                     அஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget