குர்ஆனில் காபிர்களை கண்ட இடத்தில் கொல்ல சொல்கிறதா? பாகம்-01

இஸ்லாம் மார்க்கம் குறித்து பலவகையான விமர்சனங்களும் தாக்குதல்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அதில் ஒன்று தான் 'காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுமாறு' குர்ஆன் தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டாகும்.   
இக்குற்றச் சாட்டின் மூலம் இஸ்லாத்தை பயங்கரவாத மிலேச்சத்தனமான மார்க்கமாக சித்தரிப்பதும் குர்ஆனை பயங்கரவாத போதனையாக காண்பிப்பதும் இவர்களது நோக் கமாகும்.
ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கண்டு சகிக்காதவர்கள் இக்குற்றச்சாட்டை பலங்காலமாக கூறி வருகின்றனர். அமெரிக்காவின் மீது தொடுக்கப்பட்ட 9 \11பயங்கரவாதச் செயலை நினைவூட்டல் நிகழ்வுக்கான ஏற்பாட்டின் போது ஒரு கிறிஸ்தவ போதகர் குர்ஆனை எரிக்க வேண்டும் இது பயங்கரவாதத்தை போதிக்கிறது என்று கூறினார். நெதர்லாந்து பாராளுமன்ற அமைச்சர் ஒருவரும் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்று கூறினார். இப்படி பலரும் கூறியதுண்டு.
இவர்களது இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் கட்ட விழ்த்து விடப்பட்டிருந்த போதும்- அதிக விளம்பரங்கள் செய்த போதும்- கூட ஐரோப்பாவில் நாளுக்கு நாள் இஸ்லாம் வளர்கிறது. மக்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் எந்த காபிரையும் கொல்லவுமில்லை பயமுறுத்தி இஸ்லாத்திற்குள் அழைக்கவுமில்லை.
ஒன்றுக்கும் உதவாமல்போன இப்பிரச்சாரத்தையே இப்போது எமது நாட்டிலுள்ள ஒருசிலர் பரப்பிவருகின்றனர். குர்ஆனை தடை செய்யவேண்டும் என்றும் கோஷ மிடுகிறார்கள்.
இஸ்லாம், 
எதிர்க்கப்டும போது மக்களின் உள்ளங்களில் விதைக்கப்படுகின்றது.
தடுக்கப்படுகின்ற போது வளர்க்கப்படுகின்றது.
அடக்கப்படுகின்றபோது ஆராயப்படுகின்றது
விமர்சிக்கப்படுகின்ற போது அலசப்படுகின்றது.
பயமுறுத்தப்படுகின்ற போது வாசிக்கப்படுகின்றது.
ஓரம் கட்டப்பட வேண்டும் எனும் போது ஒத்துக் கொள்ளப்படுகின்றது.
இது தான் வரலாற்று உண்மை. மேலும் எவர்கள் எதிர்ப்பலைகளை அசைத்து விட்டர்களோ இறுதியில் அவர்களே மனம் மாறி இஸ்லாத்தை தழுவிவிடுகிறார்கள்.
நாம் வாழும் நாட்டில் முஸ்லிமல்லாத நண்பர்களின் எந்தவொரு வீட்டுக்கும் இதுகாலவரை இஸ்லாத்தை கொண்டுப் போய் சேர்ததில்லை. அவர்களுடன் சகஜமாக பழகினோம் சக வாழ்வை மேற்கொண்டோமே தவிர இஸ்லாத்தை எத்திவைக்க வில்லை. அது பற்றி கலந்துரையாட வில்லை.
தற்போது அந்த ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இஸ்லாம் மற்றும் குர்ஆன் சம்பந்தமான உரையாடலுக்கான வாய்ப்பு திறந்து விடப் பட்டுள்ளது. இவர்களின் எதிர்பிரச்சாரத்தின் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளது. மக்கள் குர்ஆனை படிக்கவும் விளக்கம் கேட்கவும் தொடங்கி விட்டார்கள். இப்படி தான் இஸ்லாம் பேசும் பொருளாக ஆளும் மார்க்கமாகவும் மாறியது.
இஸ்லாம் பலாத்காரத்தை பிரயோகிக்கும் மார்க்கமல்ல முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு வேற்றுமை பாராட்டுமாறு போதிக்கும் மார்க்கமுமல்ல. மாறாக அவர்களது மதக் கொள்கைகளை மதித்து அன்பு கருணைக் காட்டி நீதி நியாயத்துடன் நடந்து கொள்ளுமாறு பணிக்கின்றது. குர்ஆனின் இப்போதனைகளை கவனத்தில் கொள்ளாது ‘’காபிர்களை கண்ட இடத்தில் கொல்ல சொல்லும் '' வேதமாக குர்ஆனை விமர்சிக்கின்றார்கள்.
இந்த உலகில் குர்ஆன் 1400 வருடங்களுக்கு மேலாக மக்களின் பாவனையில் உள்ளது கோடிக்கணக்கான மக்கள் குர்ஆனை படிக்கிறார்கள். பின்பற்றுகிறார்கள். இஸ்லாத்தின் வாழ்வுமுறையை குர்ஆனிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். குர்ஆனின் போதனை களுக்கு அப்பால் எந்த முஸ்லிமும் வாழ்வதில்லை.

உண்மை இவ்வாறு இருக்கையில் முஸ்லிமல்லாதவர்களுடன் வஞ்சனையுடன் நடந்த கொள்ளுங்கள். அவர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று குர்ஆன் கூறுவதாகக் கூறும் செய்தி இவர்களுக்கு எப்படி வந்தது?
இலங்கை திருநாட்டுக்கு வியாபாரிகளாக முஸ்லிம்கள் வந்தார்கள் மன்னர்களின் மனம் வென்றார்கள் போர்களிலும் பங்கெடுத்தார்கள். இங்குள்ள பெண்களை மணந்தார்கள். நாட்டின் பலபகுதிகளிலும் குடியேறினார்கள். சுதந்திரத்திற்காக உழைத்தார்கள். அன்று முதல் இன்றுவரை நல்லிணக்கத்துடன் அல்லவா வாழ்கிறார்கள். காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்ற ஆணைஇருந்திருந்தால் அதற்கேற்றவகையில் அல்லவா உலகம் பூராவுமுள்ள முஸ்லிம்கள் செயற்பட்டிருப்பார்கள்.
இஸ்லாம் பலாத்காரத்தை பிரயோகிக்கும் மார்க்கமல்ல முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு வேற்றுமை பாராட்டுமாறு போதிக்கும் மார்க்கமுமல்ல. மாறாக அவர்களது மதக் கொள்கைகளை மதித்து அன்பு கருணைக் காட்டி நீதி நியாயத்துடன் நடந்து கொள்ளுமாறு பணிக்கின்றது.
உண்மையில் இஸ்லாத்தை ஏற்காத காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டளையிடும் எந்ததொரு வசனமும் குர்ஆனில் எங்கும் இல்லை. இவர்கள் தங்களது கூற்றை நிரூபிக்க-

குர்ஆனின் 2ம் அத்தியாயத்தின் 191ம் வசனத்தையும்
4ம் அத்தியாயத்தின் 89 வசனத்தையும்
9ம் அத்தியாயத்தின் 5ம் வசனத்தையும் காண்பிக்கிறார்கள்.
இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை புரிந்து கொள்ள முன் குர்ஆன் பற்றிய ஒரு குறிப்பபை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து 23 வருடங்கள் இறங்கியது. கால சூழ்நிலமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப ஓரிரு வசனங்களாக இறங்கியதே தவிர மொத்தமாக ஒரே சந்தர்ப்பத்தில் இறங்கியவையல்ல. அந்த வசனங்களை ஒழுங்குப்படுத்தி தொகுத்து ஒவ்வொரு அத்தியாயமாக நபி(ஸல்) அவர்கள் அமைத்துத் தந்தார்கள்.
ஒரு அத்தியாயத்தில் குறிப்பிடும் செய்தி முன்னுள்ள வசனத்தின் தொடராகவும் பின்னால் வரும் வசனங்களின்தொடராகவும் அமையும் அதுபோல் அவ்வசனத்தின் குறிப்பு அதே அத்தியாயத்தின் இன்னுமொரு இடத்தில் அல்லது வேறொரு அத்தியாயத்தின் மற்று மொரு பகுதியில் விரிவாக இடம் பெறும்.
குர்ஆனின் வசனங்களை புரிந்து கொள்ள முற்படும் போது அந்த வசனங்கள் எங்கே எப் போது எந்தச் சூழலில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டன. அந்த வசனம் குறிப்பிட்ட நிகழ்வுக்கு அல்லது சமூகத்திற்கு மாத்திரம் அருளப்படடதா அல்லது எல்லா சமூகத்திற்குரியதாக அருளப்பட்டதா? வசனத்தில்இடம் பெறும் வார்த்iதைகள் மற்றும் வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த வியாக்கியானம் என்ன? நடைமுறைப் படுத்திய முறை என்ன? குர்ஆனை நடைமுறைப்படுத்திய நபித்தோழர்கள் அந்த செய்திகளை (வசனங்களை) எப்படி புரிந்து கொண்டார்கள்.
மேலும் இதில் முதலில் இறங்கிய வசனம் எது? அதற்கு மேலதிக விளக்கமாக இறங்கிய வசனம் எது? முதலில் வந்த சட்டத்தை மாற்றி விட்டு கடைசியாக வந்த சட்ட வசனம் எது? என்பன போன்ற அடிப்படைகளை அறிந்து தான் குர்ஆனை அணுகவேண்டும். மே லோட்டமாகப் பார்த்து புரிந்து கொள்ள முற்பட்டால் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனை மனதில் கொண்டு இவர்கள் முன்வைக்கும் வசனங்களுக்கான விளக்கங்களை பார்ப்போம்.

                                                விளக்கம் தொடரும் இன்ஷாஅல்லாஹ்

           அஷ்சேஹ் எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget