September 2019

அரசியல் வாதிகள் முதல் பாமர குடிமக்கள் வரை அனைவரும் இன்று இந்த ‘ தனிநபர் வழிபாடு’ , என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் , சிறந்த எழுத்தாளர்கள் இன்னும் நல்ல சிந்தனையாளர்கள் என்று யாரும் இதில் விதி விலக்கு இல்லை,
என் தலைவர் கூறிவிட்டார், எனது ஆசிரியர் சொல்லி விட்டார்,எனது இயக்கம் இவ்வாறு கூறிவிட்டது என்று தங்களின் அறிவு கண்களை மூடி ஏன் , எதற்காக என்று எந்த பகுத்தறிவும் இல்லாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது , தன் தலைவனோ அல்லது தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அறிஞர்கள் சொன்னால் தான் இறை கட்டளைகளை கூட நம்புவர் ,
அந்தளவுக்கு அவர்களின் தனி நபர் வழிபாடு அவர்களை சத்தியத்தை விட்டும் தூரமாக்கி விட்டது ,
வெள்ளை காகம் பறக்கிறது என்று அவர்களின் அறிஞர்களால் கூறப்பட்டால் ஆம் என்று முன்மொழிவார்கள்,
அதுபோல இறைவனால் விலக்கப்பட்ட ஹராமை அவர்கள் அறிஞர் பெருமக்கள் ஹலால் என்று சொன்னால் கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றும் செம்மறி ஆட்டுமந்தைகள் ,
ஆனால் நமது ஸலஃபு ஸாலிஹீன்களாகிய சத்திய சஹாபாக்களின்  பாதையில் நடந்து சென்ற சங்கையான இமாம்கள் நமக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள்,
இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் தங்களின் ” பிதாயா வன் நிஹாயா“, என்ற புத்தகத்தில்” எனது ஆத்மீக குருவாகிய ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களுக்கும் சில மார்க்க    சட்டதிட்டங்களை தொகுத்தெடுத்த விடயங்களில் சில சருக்குதல்கள் உள்ளன”  என்று  கூறுகிறார்கள்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் ஆசிரியரான இமாம் மாலிக் , இமாம் அபூஹனீஃபா தனக்கு முந்திய கால அறிஞராகஇருந்தாலும் அவர்களுடைய சிலஆய்வுகளை விமர்சனம் செய்துள்ளார்கள் அவர்களுக்கு மாற்றமான தன்னுடைய ஆய்வுகளை  இமாம் ஷாஃபி அவர்கள் தனது புத்தகமாகிய “அர்ரிஸாலாவில் “, பதிவு செய்திருக்கிறார்கள்.
இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின்உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும்.  அவன் ஒருகட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும்விஷப் பாம்பு இருக்கிறது. அவன் அறியாதநேரத்தில் அவனைத் தீண்டி விடும். (இதுபோன்று தான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத்தேடுபவனை அக்கல்வி அவன் அறியாதவிதத்தில் அவனை வழிதவறச் செய்து விடும்.

                                  -நூல் : மத்கல் – இமாம் பைஹகீ (பாகம்: 1, பக்கம்: 211)
*ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும்பின்பற்று!
ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸைஅறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம், நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் “எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து  ஒரு ஹதீஸ் அ அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப்பிடிக்கவில்லையோ (அப்போது)  என்னுடைய அறிவு மழுங்கி விட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்’ என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள்.

                                            -நூல் : முஹ்தஸர் அல்முஅம்மல்  (பாகம்: 1 பக்கம்: 57)
*தவறு இல்லாத நூல்கள் இல்லை!
ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள். “நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறை வைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ்” அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமானமுரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்’ என்று தன்திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்தப்புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்துதவறானது. நபிவழி தான் சரியானதுஎன்பதாகும்)
                                                -நூல் : முஹ்தஸர் அல்முஅம்மல் (பாகம்: 1 பக்கம்: 57)
ஆனால் இன்று இஸ்லாத்தை  தான்  பின்பற்றும் அறிஞர்களின் கருத்துகளில் மட்டுமே நாம் தேடுகிறோம் , இஸ்லாமிய மூல ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும் .
இஸ்லாம் இதை வேறிலேயே கிள்ளி எறிகிறது , தனி நபரை பின்பற்ற ஒரு அளவு கோளை வைத்திருக்கிறது,
அதுதான் பகுத்தறிவான இஸ்லாமிய ஆதாரங்கள் ,  என்னை பின்பற்றுவதாக இருந்தால் நான் ஆதாரங்கள் தரும் வரை நீர் என்னிடம் கேட்க கூடாது என்று இறை நேசர் கிளிர் (அலை) நபி மூசா ( அலை) அவர்களுக்கு சொன்னார்கள் அதைத்தான் அல்குர்ஆன் நமக்கு ஒரு வழிகாட்டலாக பின் வரும் வசனத்தில் குறிப்பிடுகிறது

قَالَ فَاِنِ اتَّبَعْتَنِىْ فَلَا تَسْــٴَــلْنِىْ عَنْ شَىْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَـكَ مِنْهُ ذِكْرًا

(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.

                                                                                                       அல்குர்ஆன்-  18:70
                               உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி.

ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸுரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:மதுபானம் அருந்துவது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் மதுபானம் வடிக்கவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது. மதுபானம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அதனை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பத்துப் பேரை சபித்தார்கள் (திர்மிதி)முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது.
அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (புஹாரி:1167),(முஸ்லிம்:714)
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் “தஹிய்யதுல் மஸ்ஜித் விரும்பத்தக்க தொழுகையாகும் என்ற கருத்தில் உலமாக்கள் ஏகோபித்த கருத்தில் இருக்கிறார்கள். அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களது தடையுடன் சம்பந்தப்படுத்தி தெளிவாக வருகின்ற நபிமொழியின் மூலம் காரணமில்லாமல் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழாமல் உட்காருவதானது வெறுக்கத்தக்க செயலாகும்” (மஜ்மூஃ : 3/544)
இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கூறினார்கள் “பத்வா வழங்கக்கூடிய உலமாக்கள் இந்த இடத்தில் வருகின்ற ஏவலானது சுன்னத்தை தெளிவுபடுத்துவதாகும் என்ற கருத்தில் ஏகோபித்த நிலைப்பாட்டில் இருக்கின்றனர். வெளிப்படையாக சட்டம் கூறக்கூடிய சாரராரைத் தொட்டும் இமாம் இப்னு பதால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதனை வாஜிபான தொழுகை என கூறியிருக்கிறார்கள்…” (பத்ஹுல் பாரி: 1/538, 539),(அல் மஹல்லா: 2/7)
இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்களிடம் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையினுடைய சட்டம் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது, “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்” இன்னுமொரு அறிவிப்பில், “அவர் இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும்” என்ற வார்த்தைக்கு ஏற்ப யார் பள்ளிக்கு சுத்தமான நிலையில் நுழைகிறாரோ அவர் இரண்டு ரக்அத்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது சுன்னத்தாகும்.
இந்த சுன்னாவினை ளுஹாவுடைய நேரமாக இருந்தாலும் அல்லது ளுஹர், அஸர், மஃரிப் என்று எந்த நேரமாக இருந்தாலும் தொழுதுகொள்ளலாம். அந்த நேரம் தொழுவதற்கு தடுக்கப்பட்ட அஸருடைய நேரமாக இருந்தாலும் பிரச்சினை கிடையாது. இந்த தொழுகையை எந்த நேரமாக இருந்தாலும் அதில் தொழுவது மார்க்கம் சொல்லித் தந்த வழிகாட்டலாகும். ஆகவே இந்த தொழுகையானது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்”
(binbaz.org.sa எனும் இணையத்தில் இருந்து சுருக்கமாக.)
பத்வா அல் லஜ்னதுத் தாயிமா என்ற நூலில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையின் சட்டம் பற்றி
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது, “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்” என்ற பொதுவான கட்டளைக்கு ஏற்ப, எந்த நேரமாக இருந்தாலும் பள்ளிக்கு நுழைகின்ற ஒவ்வொருவர் மீதும் இத் தொழுகை சுன்னத்தான ஒன்றாகும். (பதாவா அல்லஜ்னதுத் தாயிமா: 7/137)
இப்படி உலமாக்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டத்தை தெளிவாக கற்றுத் தந்திருக்கிறார்கள்.
இன்னும் சில சாரார் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை வாஜிபான ஒன்றாகும் என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா செய்து கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் வந்து தொழாமல் உட்கார்ந்து விடுகிறார். அவரைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போதே அவரை எழும்பி தொழுமாறு கூறி விடுகிறார்கள்.
இந்த செய்தியை வைத்து தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை கடமையான ஒன்றுதான் என தங்களுடைய வாதத்தை நிரூபித்து காட்டுகிறார்கள்.
அதே போன்று இது சுன்னத்தான தொழுகைதான் என்று சொல்லக்கூடிய சாரார், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் மரணிக்கின்ற காலம் வரைக்கும் செய்த ஒவ்வொரு குத்பா உரையின் போதும் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை தொழாதவர்களாக மிம்பரிலெல்லாம் இருந்தார்கள் என்று ஒரு செய்தியை ஆதாரம் காட்டுகிறார்கள்.
அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் முன்னால் வந்து உட்கார்ந்து விடுகிறார். இன்னுமொரு மனிதர் வெட்கத்தினால் பின்னால் உட்காருகிறார். இன்னுமொரு மனிதர் அந்த இடத்தை புறக்கணித்து செல்கிறார். இந்த செய்தி நீளமானதாக இருந்தாலும் இந்த மூன்று மனிதர்களும் உட்காரும் போது தொழுதார்கள் என்று எந்த கிடையாது. இவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்க்கவும் இல்லை என்று கூறி தங்களுடைய வாதத்தை கூறுகின்றனர்.
எனவே எப்படி சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை கடமையானதுதான் என்று சொல்லப்படக்கூடிய கருத்து வலுவான ஒன்றுதான். என்றாலும் நெருக்கமான கருத்து இத் தொழுகையானது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இது பற்றிய சரியான அறிவு அல்லாஹ்விடத்திலே இருக்கிறது.” (மஜ்மூஃல் பதாவா: 14/354)
இதே போன்று இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்களிடத்தில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையின் சட்டம் பற்றி கேட்கப்பட்ட போது அதற்கு இமாமவர்கள் சில உலமாக்கள் சொல்லக் கூடிய நியாயங்களை எல்லாம் சொல்லி விட்டு இறுதியாக
“நானும் ஆரம்பத்தில் வாஜிப் என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தேன். பின்னர் பரீட்சித்துப் பார்த்து விட்டு அது சுன்னத்தான தொழுகைதான் என என்னுடைய கருத்தை மாற்றி விட்டேன். என்னிடம் ஒருவர் இது வாஜிபான தொழுகைதான் என்று கூறினால் அதற்கு எதிராக நான் நிராகரிக்கவுமாட்டேன்” என்று கூறியுள்ளார்கள். (ar.islamway.net என்ற இணையதளத்தில் கடைசி வரியில்)
ஆகவே ஒட்டுமொத்தமாக வந்திருக்கின்ற இந்த செய்திகளை எல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது இதனை வேண்டுமென்றே விடுவது வெறுக்கத்தக்க செயலாகும். மேலும் எப்படி பர்ளான கடமைகளை கரிசனை காட்டி செய்வோமோ அதனைப் போன்று கரிசனை காட்டப்பட வேண்டிய வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.
எனவே இத்தொழுகையை கடமையை நிறைவேற்றுவது போன்று சரிவர நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
அல்லாஹு அஃலம்
                                                              தொகுப்பு:பர்ஹான் அஹமட் ஸலபி

உணவு, உடை, உறைவிடம் எவ்வாறு மனித வாழ்வின் அடிப்படையாக அமைந்துள்ளதோ, அவ்வாறே பாதுகாப்பும், அச்சமற்ற வாழ்வும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
எந்த நாட்டிலெல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் முஸ்லீம் சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரங்கள் நசுக்கப்படுவதும், அவர்கள் சார்ந்திருக்கின்ற மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாத சூழலும், சொந்த ஊரிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்படுவதும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், தீவிரவாதத்தின் பெயரால் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
இதற்கான நிரந்தர தீர்விற்கு மார்க்கத்தின் வழிகாட்டல் என்ன என்பது குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்:
என்றைக்கு இஸ்லாம் இந்த மண்ணில் நபிமார்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டதோ, அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த நபிமார்களும், நபிமார்களை பின்பற்றிய முஸ்லீம்களும் மிகக் கடுமையான துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு குர்ஆன், சுன்னா முழுக்க நிறைய சான்றுகள் உள்ளன.
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன;
“அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்
“நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) {2:214}
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.{3:186}
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.{8:30}
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும், கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.{22:40}
நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான், பொய்யர்களையும் அறிவான்.{29:2,3}
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.{85:8}
கப்பாப் இப்னு அல்அரத்(ரழியல்லாஹுஅன்ஹு) அறிவித்தார்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி “எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?“ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார்.

 பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அந்தக் கொடுமையானது, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) “ஸன்ஆவிலிருந்து “ஹள்ரமவ்த்“ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்“ என்றார்கள் {நூல்: புகாரி 6943}
இது போன்ற வசனங்களும், நபிமொழிகளும் இந்த உலகில் உண்மை முஸ்லீம்களாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எதிரிகளின் மூலம் பல்வேறு விதமான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை எடுத்தியம்புகிறது.
கனிகள் நிறைந்த மரம்தான் கல்லடிபடும் என்பதற்கேற்ப இஸ்லாத்தின் அபார வளர்ச்சியை சகித்துக் கொள்ளாதவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மூலம் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் ஒழித்து விடலாம் என எண்ணுகிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி முஸ்லீம்களுக்கே!!! {85:8}
முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.{30:47}
நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல் தூதர்களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.{40:51}
இது போன்ற வசனங்கள் முஸ்லீம்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளன.
பசியிலிருந்து விடுதலை பெற, பயத்திலிருந்து விடுதலை பெற நிரந்தர தீர்வு என்ன?:
ஆட்சி அதிகாரத்தினால் இதற்கான தீர்வை அடைய முடியும் என இஸ்லாமிய இயக்கங்கள் பகல் கனவு காண்கின்றனர்.
இதற்காக தங்களின் முழு உழைப்பையும், பொருளாதாரத்தையும் செலவிடுகின்றனர்.
மார்க்கம் காட்டித்தராத அடிப்படையில் வீதியில் இறங்கி போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
இதன் மூலம் பெரிதாக எதையும் இவர்களால் சாதிக்க இயலவில்லை என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றாக அமைகின்றது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட எத்தனையோ நாடுகளில் இஸ்லாம் புறந்தள்ளப்பட்டு முஸ்லீம்கள் ஆட்சி செய்கின்றனர்.
அங்கெல்லாம் இன்றளவும் தற்கொலைப்படை தாக்குதல் மூலம் அப்பாவி மக்களின் இரத்தங்கள் ஓட்டப்பட்டு, மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர்.
இந்தியாவை முஸ்லீம்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதில் முகலாயர்களின் ஆட்சி 300 ஆண்டுகாலம்.
ஒரு சிலரைத்தவிர பல ஆட்சியாளர்களால் இஸ்லாத்திற்கோ, முஸ்லீம்களுக்கோ எவ்வித நன்மையையும் ஏற்படவில்லை.
அக்பர் என்ற மன்னன் ‘தீனே இலாஹி’ என்ற புது மதத்தை தோற்றுவித்தான்.
ஷாஜஹான் தனது மனைவிக்கு தாஜ்மஹால் என்ற நினைவுச் சின்னத்தை எழுப்பினான். இன்றும் அங்கு சமாதி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இன்னும் சில மன்னர்கள் கோயில்களை கட்டியும், குளங்களை வெட்டியும் கோயில்களுக்கு நிலங்களை மானியமாக வழங்கியும் ஆட்சி செய்தார்கள்.
எல்லாவிதமான வசதி வாய்ப்புகள் இருந்தும் பல மன்னர்கள் ஹஜ் என்ற புனிதக் கடமையை கூட நிறைவேற்றவில்லை.
இஸ்லாமும் இஸ்லாத்தின் அஸ்திவாரமான ஓரிறைக் கொள்கையும் புறந்தள்ளப்பட்டு ஆட்சி செய்த காரணத்தினால் அவர்கள் கட்டிச் சென்ற சில கட்டிடங்களைத் தவிர இஸ்லாத்திற்கோ வருங்கால முஸ்லிம் சமூகத்திற்கோ இவர்களால் எவ்வித நன்மையையும் ஏற்படுத்த இயலவில்லை.
இன்னும் சில நவீன சிந்தனையாளர்கள், இஸ்லாமிய இளைஞர்கள் உயர்கல்விகளை கற்று, அரசுத்துறைகளில் பணியாற்றுவதன் மூலம் இந்த சமூகம் பாதுகாப்பையும், வெற்றியையும் அடைய முடியும் என கருதுகின்றனர்.
இதிலும் எவ்வித உண்மையும் இல்லை. காரணம் கடந்த காலங்களில் குடியரசுத்தலைவர் போன்ற உயர்பதவிகளில் அங்கம் வகித்தவர்கள் தங்களை தான் ஒரு இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்தவே தயங்கியதோடு மட்டுமல்லாமல் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டதோடு பல இடங்களில் பகவத் கீதையை மேற்கோள் காட்டினார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
எனவே எங்கெல்லாம் இஸ்லாமும் இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையும் புறக்கணிக்கப்படுகிறதோ, அதன் மூலம் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பும், நிம்மதியும் ஏற்படப்போவதில்லை என்பதே எதார்த்த உண்மை.
இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையை பின்பற்றுவதிலும், பிரச்சாரம் செய்வதிலுமே இந்த சமூகம் பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெற முடியும்.
உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை – அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்.{6:81}
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழியல்லாஹுஅன்ஹு ) அறிவித்தார்:
“நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்” எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், “எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது,” இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது. {புகாரி: 4629}
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவும் மற்றும் வாழ்க்கைப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.{16:112}
மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில், அவ்வூர்வாசிகள் அல்லாஹ்வை வணங்கி வழிபடாமல், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல், அல்லாஹ்விற்கு இணைவைத்த காரணத்தினால், அல்லாஹ்வின் பாதுகாப்பு அகற்றப்பட்டு, பசியையும், பயத்தையும் அனுபவிக்குமாறு செய்தான்.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரைப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்து நிராகரிக் கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.{24:55}
இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.{106:3}
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.{106:4}
மேலே கூறப்பட்டுள்ள வசனங்களின் மூலம், முஸ்லீம்கள் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டிய முறைப்படி முழுமையாக ஈமான் கொள்வதுடன், அவனை மட்டும் வணங்கி வழிபட்டு (ஷிர்க்) இணைவைப்பு என்ற அசுத்தத்தை தங்களது ஈமானில் கலக்காமல், ஸாலிஹான நற்செயல்கள் செய்பவர்களுக்கே ஆட்சி அதிகாரத்தை வழங்குவதாகவும், மார்கத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதாகவும், பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை அளிப்பதாகவும் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான்.
இது நம்மை படைத்த அல்லாஹ்வின் வாக்குறுதி…அரசியல்வாதிகளின் பொய்யான, போலியான வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும் முஸ்லீம்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைக்க வேண்டாமா?
இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.{30:6}
எனவே படித்தவர்கள்,பாமரர்கள், ஏழைகள், பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள்… என அனைவருக்கும் இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையையும் எத்திவைப்பதன் மூலம் மனித உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
ஆட்சி மாற்றம் தானாகவே ஏற்படும் இன்ஷா அல்லாஹ்…
                                                                                          தொகுப்பு: மௌலவி யாஸிர் பிர்தொஸி

2.அல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும்ஒழுங்கு
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلاَ أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا من حديث المُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَتَّى تَرِمَ، أَوْ تَنْتَفِخَ قَدَمَاهُ) صحيح البخاري (135 – 6)
நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய இரு பாதங்களும் வீங்குகின்றளவு இரவில் நின்று வணங்குபவராக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். அல்லாஹ் உங்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே எனக் கேட்டபோது, நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பக் கூடாதா எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) | நூல்:புகாரி, முஸ்லிம்
இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:
1. அல்லாஹ்வுக்காக அடிமைத்துவத்தை காண்பிப்பது அடியானின் மிக உயர்ந்த அந்தஸ்தினையும் கண்ணியத்தையும் காட்டக் கூடியதாக இருக்கும். அல்லாஹ்வுக்குக்கட்டுப்பட்டு தன்னுடைய அடிமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதில்தான் அடியானின் பூரணத்துவமும் அமையப் பெற்றிருக்கிறது.
தன்னுடைய ரப்புக்காக அடிமைத்துவத்தை அடியான் காண்பிக்கின்ற போதெல்லாம் அவனது பூரணத்துவம் அதிகரித்து அந்தஸ்தும் உயர்வடைகிறது. (இதற்கு மாறாக) அல்லாஹ்வின் அடிமைத்துவத்திலிருந்து விடுதலை பெறுவதில்தான் பூரணத்துவம் உள்ளது என எவன் கருதுகிறாரோ அவன் படைப்புகளில் மிக அறிவீனனும் வழிகேடனுமாவான். அல்லாஹ்வுக்குரிய அடியானாக அவன் இருக்கவில்லையானால் மற்றவர்களுக்கே அடிமையாக இருக்கிறான் என்பது அர்த்தமாகும்.
2. அல்லாஹ் தன்னுடைய நபிமார்களின் அடிமைத்துவம் (அல்லாஹ் வுக்குகட்டுப்பட்டு இருந்ததைப்) பற்றி குர்ஆனில் பலஇடங்களில் குறிப்பிட்டுள்ளான். இது அடிமைத்துவத்தின் உயர் அந்தஸ்தினையும் அதன் சிறப்பினையும் காட்டுகின்ற ஆதாரங்களாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَاذْكُرْ عِبَادَنَا إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ أُولِي الْأَيْدِي وَالْأَبْصَارِ
(நபியே!) வலிமையும் அறிவும் மிக்க எமது அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோர் குறித்தும் நீர் நினைவுகூர்வீராக. (38:45)
وَاذْكُرْ عَبْدَنَا دَاوُودَ ذَا الْأَيْدِ إِنَّهُ أَوَّابٌ
இன்னும் வலிமை மிக்க எமது அடியார் தாவூதை நீர் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் அதிகம் (மன்னிப்புக் கோரி அல்லாஹ்வின்பால்) மீள்பவராக இருந்தார். (38:17)
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ
அவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமூகத்தாரும் பொய்பித்தனர். அவர்கள் எமது அடியாரைப் பொய்பித்து பைத்தியக்காரர் என்று கூறினர். மேலும் அவர் அச்சுறுத்தப்பட்டார். (54:9)
3. தன்னுடைய (கட்டளைக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயலாற்றிய)நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய அடிமைத்துவப் பண்பை மிக உயர்ந்த நிலையில் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அதில்:
தஃவாவின் நிலை
وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் (முஹம்மத்) அல்லாஹ்வை அழைப்பதற்காக நின்றபோது (ஜின்களாகிய)அவர்கள் (செவியுறும் ஆர்வத்தால்) அவரிடம் கூட்டமாக நெருங்கி வருகின்றனர். 72:19
வஹி இறங்கிய நிலை
فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى
(அல்லாஹ்) வஹியை அறிவித்ததை அவனின் அடியார்(  முஹம்மது)க்கு அவர் (ஜிப்ரீல்) அறிவித்தார். (53:10)
(இஸ்ரா) இராவழிப் பயணம்
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்று புறச் சூழலை நாம் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறு செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறு பவன், பார்ப்பவன். (17:1)
4.அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே (இபாதத்) வணக்கம் புரிந்து அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே மனு,ஜின்கள் படைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
மனு, ஜின்களை என்னை வணங்குவதற்காக அன்றி நான் படைக்கவில்லை. (51:56)
இவ்வசனத்தில் ‘‘என்னை வணங்குவதற்காக என்று அல்லாஹ் குறிப்பிடுவது (வணக்கங்களின் மூலம்) என்னை ஒருமைப்படுத்துவது என்பதாகும். எனவே ஒவ்வொரு வணக்கத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. இதுவே தவ்ஹீதுல் உலுஹிய்யா என்பதன் அர்த்தமாகும். இக்கொள்கைக்காகவே அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பி வேதங்களையும் இறக்கி வைத்தான்.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
அல்லாஹ்வை வணங்குங்கள். மேலும் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) தாகூத்தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (16:36)
அல்லாஹ்வைத் தவிர யாரும் அழைக்கப்படக் கூடாது. அல்லாஹ்விடமேயன்றி யாரிடமும் பாதுகாப்பு கோரக் கூடாது. அல்லாஹ்வுக்கேயன்றி (எவருக்கும்) அறுத்துப் பலியிடப்படக் கூடாது. அல்லாஹ்வுக்கேயன்றி நேர்ச்சை செய்யப்படக் கூடாது. உண்மையாகவே அல்லாஹ்வுக்கேயன்றி (எவருக்கும்) அஞ்சப்படக் கூடாது. இதுவே கலிமதுத் தவ்ஹீத் எனும் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் அர்த்தமாகும்.
5. இபாதத் என்பதற்கு மார்க்க ரீதியான வரையறை யாதெனில்,
“அடியானின் வெளிப்படையான உள்ரங்கமான சொல்களிலும் செயல்களிலும் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற அவன் விரும்புகின்ற அனைத்து காரியங்களையும் உள்ளடக்கின்ற பொதுவான வார்த்தையே இபாதத் எனப்படும்” (நூல்: மஜ்மூஉ பத்வா 10-149).
 • தவ்ஹீதின் பால் அழைப்பு விடுத்தல்
 • ஷிர்க்கை தடுத்தல்
 • துஆ கேட்டல் – திக்ரு செய்தல்
 • அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல்
 • அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுதல்
 • அவனது அருளில் ஆசை கொள்ளுதல்
 • அவனது தண்டனையை அஞ்சுதல்
 • தொழுதல் – ஸகாத் கொடுத்தல் – நோன்பு பிடித்தல் – ஹஜ் செய்தல்
 • இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் முனாபிக்குகள் (எதிர்த்து வரும்போது அவர்களுடன்) ஜிஹாத் செய்தல்
 • பெற்றோருக்கு நன்மைபுரிதல்
 • இரத்த பந்தங்களை அண்டி நடத்தல்
போன்ற அத்தனை விடயங்களும் “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற வார்த்தையில் உள்ளடங்கியுள்ளது.
6. அடிமைத்துவத்திற்கான மூன்று கடமைகள் உள்ளன. அக்கடமைகளின்றி எந்த வணக்கமும் வணக்கமாக அமையாது.
முதலாவது: அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வது.அல்லாஹ்வின் மீதுள்ள நேசத் துடனே அவனை வணங்கப்படக் கூடியவனாக ஏற்பதும், மற்றவர்கள் மீதுள்ள நேசத்தை விட அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தை முற்படுத்துவதும் கடமையாகும்.
இரண்டாவது: அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வது. அல்லாஹ்; மீதுள்ள அச்சத் துடனே அவனை வணங்கப்படக் கூடியவனாக ஏற்பதும் இம்மை-மறுமையில் அவனது தண்டனைப் பற்றி அஞ்சுவதும் கடமையாகும்.
மூன்றாவது: அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பது. அல்லாஹ்விடமுள்ள கொடை மற்றும் பாவமன்னிப்புக்கான கூலியின் மீது ஆதரவு வைத்து, அவனை வணங் கப்படக் கூடியவனாக ஏற்பதும் கடமையாகும்.
7. இபாதத்களில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்வது பெரும் இணைவைப்பாகும். உதாரணமாக துஆ கேட்பது, பாதுகாப்புக் கோருவது, அறுத்துப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது, சிரம் பணிவது போன்ற இபாதத்களில் ஒன்றை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்வதாகும்.
“அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவம் எது? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ் உன்னை படைத்திருக்கும்போது அவனுக்கு இணையாக ஒன்றை ஆக்குவதாகும்” எனக் கூறினார்கள் என இப்னு மஸ்ஊத் (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் கூறுகிறான்:
فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர் களை ஏற்படுத்தாதீர்கள். (2:22)
8. உள்ளத்தாலும் நாவினாலும் உறுப்புகளாலும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவது கடமையாகும். அதன் கருத்தாவது:
அல்லாஹ்வுடைய அடியானின் நாவில் அல்லாஹ் அருள் புரிந்ததற்கான அடையாளமாவது, அவன் அல்லாஹ்வை புகழ்வதும் அவனது அருளை ஏற்றுக்கொள்வதுமாகும். அவனது உள்ளத்தில் அருள்புரிந்ததற்கான அடையாளமாவது, உள்ளத்தால் அந்த அருளை அவன் ஏற்றுக்கொள்வதும் அருள் புரிந்தவனான அல்லாஹ்வை நேசிப்பதுமாகும். உறுப்புகள் மீது அருள்புரிந்ததற்கான அடையாளமாவது, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வழிப்பட்டு நடப்பதாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் 2-254)
இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) கூறுகிறார்கள்: நன்றி செலுத்துதல் ஐந்து அடிப்படைகள் மீது நிறுவப்பட்டுள்ளது. நன்றி செலுத்துபவன் நன்றி செலுத்தப் படக்கூடியவனான அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதலும் அவனை நேசித்தலும், அவனுடைய அருட்கொடைகளை ஏற்றுக் கொளளுதலும், அவனைப் புகழ்தலும், அவன் வெறுக்கின்றவற்றில் அவைகளை பயன்படுத்தாமல் இருப்பதுமேயாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் 2-254)
9. உள்ளும் புறமும் அல்லாஹ் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற நிலையே வணக்கத்தின் மிக உயர்ந்த நிலையாகும்.
“இஹ்ஸான்” என்றால் என்ன என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “அல்லாஹ்வை நீர் பார்ப்பதுபோல் அவனை வணங்க வேண்டும். அவனை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்” எனக் கூறி னார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என எவர் உணர் கிறாரோ அவர் தன் வணக்கத்தை தூய்மையாகவும் பூரணத்துவத்துடனும் இஹ் லாஸுடனும் செய்வார். மேலும் மக்கள் அவரை அவதானிப்பதையோ பொறுப்படுத் துவதையோ கருத்திற் கொள்ள மாட்டார்.
                                                                                             அஷ்சேஹ் M.S.M. இம்தியாஸ் ஸலபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget