முஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.!

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 09:36) 
முஹர்ரம் மாதம் புனிதமிக்க மாதம்
முஹர்ரம் என்பது இஸ்லாமிய வருடக்கணிப்பின் முதல் மாதம் ஆகும். இம்மாதத்தைப் பற்றி அருளாளன் அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது,
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை;” (அல்குர்ஆன் 09:36) எனக் கூறுகின்றான்.
அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என அல்லாஹ்வின் திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.
மேலும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’(அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- -3197)
மேலும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘ரமழான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2157)
இவ்வளவு சிறப்பும், புனிதமுமிக்க முஹர்ரம் மாதத்தில் ஏதாவது விஷேட வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களோ எமக்கு கற்றுத் தந்துள்ளார்களா? என நோக்குவோம்.
இஸ்லாமியப் பெருநாட்கள் இரண்டு மாத்திரமே
‘சிறந்த இரண்டுநாட்களை (பெருநாட்களாக) அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். அவை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு ப் பெருநாள் ஆகிய இருநாட்களாகும்.(அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்:நஸயீ- 1735, அஹ்மத்-11773)
மேற்படி நபிமொழி இஸ்லாத்தில் பெருநாட்கள் இரண்டுதான். முஹர்ரம் என்றொரு பெருநாள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ஆஷுரா நோன்பின் பிண்ணனி இம்மாதத்தைப் புனிதப்படுத்துவதற்காக அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒரேயொரு தனித்துவமான வணக்கம் முஹர்ரம் 9,10 ல் நோன்பு நோற்பதாகும்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த போது யூதர்கள் ஒருநாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் – அதாவது ஆஷுராவுடைய (முஹர்ரம் 10 ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் – யூதர்கள் இது மாபெரும் நாள். மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு மிக நெருக்கமானவன் என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3397, ஸஹீஹ் முஸ்லிம்-2083)
முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாஸுஆ, ஆஷுரா நோன்பினைத் தவிர வேறு எவ்விதமான வணக்கங்களிலும் ஈடுபடவில்லை. மேலும் பிறை 10ல் மாத்திரம் நோன்பு நோற்பது கூடாது. மாறாக, பிறை ஒன்பதிலும், பத்திலும் நோன்பு நோற்க வேண்டும்.
ஆஷுராவின் சிறப்புகள்
‘முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூகதாதா அல்அன்சாரி (ரழி)நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2151)
‘ஆஷூரா எனும் இந்த (முஹர்ரம் 10ஆம்) நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை! (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2151)
ஆஷுராவும் அனாச்சாரங்களும்
அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் போதிக்க வேண்டிய மார்க்க அறிஞர்கள் ஆஷுராவின் பெயரால் அரங்கேற்றுகின்ற அனாச்சாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஊருக்கு ஊர் விதம்விதமான வணக்கவழிபாடுகளை அரங்கேற்றப்படுவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். மேலும் ஆஷுராவின் பெயரால் மிம்பர் மேடைகளிலும், சொற்பொழிவுகளும் பல்வேறு கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன.
அல்லாஹ் வானம், பூமியைப் படைத்தது, முதன் முதலாக பூமியில் மழையைப் பொழிவித்தது. மேலும் ஆதம் (அலை) அவர்கள் தொடக்கம் ஈஸா (அலை) அவர்கள் வரை ஒவ்வொரு நபிமார்களின் வாழ்விலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஆஷுரா தினத்திலேயே நடந்ததாக் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் பேருதவியால் தௌஹீத் எழுச்சியின் காரணமாக ஆஷுராவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அனாச்சாரங்கள் பல ஊர்களில் வழக்கொழிந்து போனாலும் சில பிரதேசங்களில் இன்றும் உலமாக்களால் இவை அரங்கேற்றப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.
ஆஷுரா ஏன்?
இஸ்லாமிய வரலாற்றில் ஆஷுரா நாளில் இரு நேர் எதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று- நபி மூஸா (அலை) அவர்களும், அவர்களுடைய சமூகத்தவர்களும் பிர்அவ்ன் எனும் கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றப்பட்டமை. மற்றையது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டமை ஆகிய சோகமான நிகழ்வாகும்.
இவ்விரு நிகழ்வுகளில் நாம் ஆஷுரா நோன்பு நோற்பது ஹுஸைன் (ரழி) கொல்லப்பட்டதற்காகத்தான் என இன்றுவரை எம்மில் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஆஷுரா நோன்பிற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற காரணம் மூஸா (அலை) அவர்களும், அவர்களுடைய சமூகத்தவர்களும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டதேயாகும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆஷுராவும் சீர்கெட்ட ஷீஆக்களும்
ஷீஆக்கள் என்போர் ஆஷுரா தினத்தை மிகத்துக்ககரமான நாளாக ஆக்கிக் கொண்டு, அன்றைய தினம் தம்மைத் தாமே வருத்திக் கொள்ளக்கூடிய மிக மோசமான செயல்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம், ஆஷுரா தினத்தில்தான் ஹுஸைன் (ரழி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்பட்டார்கள் என்பதாகும். இப்படியான நேரங்களில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்க இந்த சீர்கெட்ட ஷீஆக்களோ ஆஷுரா தினத்தில் ஒப்பாரி வைப்பது, மாரடித்துக் கொள்வது, ஹுஸைன் மௌலூதூ போன்ற பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றி வருகின்றனர். இவைகள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) மிக வன்மையாகக் கண்டித்த காரியங்களாகும்.
எனவே, முஹர்ரம் மாதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள புதுவழிகளில் அனைத்திலிருந்தும் விலகி நபிவழியின் அடிப்படையில் நடப்பதற்கு அருளாளன் அல்லாஹ் அருள்பாலிப்பானாக!
                                                                                                            சகோ- S.L.M. அர்ஷாத்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget