பெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்.!

(புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!)
மனிதன் பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை பலவிதமான இன்னல்களையும், சோதனைகளையும் சந்திக்கின்றான். பொருளாதாரத்தில் சோதனை, வியாபாரத்தில் சோதனை, அதிகமான செல்வங்கள் வழங்கப்பட்டு சோதனை, வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமலும் சோதனை,  சந்ததிகளை அதிகமாக வழங்கி அதில் சோதனை, சந்ததிகளை இழந்தும் சோதனை, உடன் பிறப்புக்களிடையே விரிசல் ஏற்பட்டு சோதனை,  சொத்துப்பங்கீட்டில் துரோகங்கள் இழைக்கப்பட்டு சோதனை, இரத்த பந்தங்களுக்கிடையே மனவருத்தங்கள் ஏற்பட்டு சோதனை, சிறு வயதிலேயே தாய் – தந்தையை இழந்து அனாதையாகச் சோதனை இப்படி சோதனைகளைப் பல படித்தரங்களில் சந்திக்கும் மனிதனின் வாழ்வையும் –  மரணத்தையும் இறைவன் ஏற்படுத்தியது அதில் வெற்றிபெறுவோர் யார் என்று சோதிப்பதற்காகத்தான்.
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், வாழ்வையும் – மரணத்தையும் படைத்தான்; மேலும், அவன் (யாவையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்:67:02)
படித்தவன் முதல் பாமரன் வரை மனிதன் சந்திக்கும் சோதனைகளிலேயே அவனுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது فتنة النساء பெண்கள் மூலம் ஏற்படும் சோதனைகளும் – குழப்பங்களுமாகும். இறையச்சம் நிறைந்தவராக எண்ணப்பட்டவரும், சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றவரும், மக்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பவரும், கல்வியைப் போதித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்குபவரும், மருத்துவம் செய்து நோயாளிகளைக் குணப்படுத்துபவரும், சறுக்கி விழுந்து வழியறியாது போவதும் பெண்கள் மூலம் ஏற்படும் சோதனையில்தான்!
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
பெண்கள், ஆண் மக்கள், பெருவாரியான தங்கம் மற்றும் வெள்ளிக் குவியல், கண்கவர் குதிரைகள், கால்நடைகள், வேளாண் நிலங்கள், உள்ளிட்ட ஆசைப் பொருட்களை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவையாவும் இவ்வுலக வாழ்வின் (அற்ப) சுகமேயாகும். ஆனால் அழகிய உறைவிடம் அல்லாஹ்விடமே உள்ளது. (அல்குர்ஆன்:03:14)
மனிதன் இவ்வுலகில் ஆண் மக்களையும், தங்கம், வெள்ளி, வாகனம், நிலங்கள் போன்றவற்றை விரும்புகின்றான். மனிதன் இவ்வுலகில் நேசிக்கும் حُبُّ الشَّهَوٰتِ ஆசைப் பொருளாகவும் இவைகளை இறைவன் ஆக்கியுள்ளான் இதில் முதலாவது பெண்கள்.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது இதை அபூசயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(முஸ்லிம்:5292)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்)” என்று காணப்படுகிறது.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஆண்களுக்குப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை. (உஸாமா இப்னு ஸைத்(ரலி) ( புகாரி:5096).
இந்த இரண்டு  நபிமொழிகளிலும் பெண்கள் மூலம் ஏற்படும் குழப்பங்களையும், சோதனைகளையும் முன்னறிவிப்பாக அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சமூகத்திற்கு எச்சரிகை செய்துள்ளார்கள்.فاتقوا الدنيا، واتقوا النساء இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இந்த இரண்டு வார்த்தைகளின் வீரியத்தைச் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டும்.
இந்த உலகத்தின் சோதனையின் அளவுக்குப் பெண்களின் சோதனைகள் கடுமையாக இருக்கும், தான் சந்திக்கும் இந்த முழு உலகத்தின் சோதனைகளை ஒரு முஃமின் எதிர்கொள்ளச் சிரமப்படும் அளவுக்குப் பெண்களின் சோதனைகளையும், குழப்பங்களையும் எதிர்கொள்ளச் சிரமப்படுவான்!  பெண்களின் சோதனைகளும், குழப்பங்களும் இந்த உலகத்தில்தான் நிகழ்கின்றது என்றாலும் உலகத்தின் சோதனைகளுக்கு நிகராகப் பெண்களின் சோதனைகள் இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளவேண்டும்.
சமூகத்தில் நிகழும் சோதனைகளிலேயே மிகவும் கடுமையானது பெண்கள் மூலம் ஏற்படும் சோதனைதான். அதேபோன்று இனிமையானதும் பசுமையானதுமான அல்லாஹுவின் இந்த உலகப்படைப்புகளில் மனிதனுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆக்கப்பட்டதில் முதலாவதும் பெண்களைத்தான்.
மனிதனுக்கு எதில் அதிக கவர்ச்சியும், மோகமும் உள்ளதோ அதில் சோதனையும் – குழப்பங்களும் சேர்ந்தே இருக்கும். இனிமையையும், பசுமையையும் கண்டு மோகங்கொள்ளும் மனிதன், தான் ஒரு பொறுப்பாளர் தனது பொறுப்பைப்பற்றி இறைவன் விசாரிப்பான் என்பதை மறந்துவிடுகின்றான்.
நாங்கள் நரகத்திற்கே போகமாட்டோம், அப்படியே எங்களில் சிலர் நரகத்திற்குச் சென்றாலும் மிகவும் அற்ப நாட்களில் நரகத்திலிருந்து மீண்டு நாங்கள் சுவர்க்கத்திற்கு வந்துவிடுவோம்! என்று இறுமாப்புகொண்ட பனீஇஸ்ராயீல்களின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹுவும் அவனது ரசூலும் (ஸல்) பனீஇஸ்ராயீல்களின் வரலாற்றை நமக்குத் தந்துள்ளனர்.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் பனீஇஸ்ராயீல் சமுதாயத்தில் ஏற்பட்ட குழப்பத்தை இங்கு எச்சரிக்கை செய்கின்றார்கள்.
பனீஇஸ்ராயீல்களின் சமூகத்தில் பெண்கள் மூலம் ஏற்பட்ட குழப்பங்களில் முதலாவது ”அவர்கள் தங்களுக்குள் அழகுபடுத்திக்கொள்வதில் போட்டிப்போட்டனர், ஒரு பெண் உயரமாகவும் அழகாகவும் இருந்தால், குள்ளமாக இருப்பவள் அழகுசாதனங்களைப் பயன்படுத்தி உயரமானவளின் அழகுக்குச் சமமாகத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு அந்நிய ஆண்கள் இருக்கும் சபையில் தோற்றமளிப்பாள். 
அத்துடன் தனது கைகளில் வாசனைத் திரவியங்களை வைத்திருந்து அந்த சபையில் வெளிப்படுத்துவாள், இப்படியாக மானக்கேடான வரம்பு மீறிய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டனர்…, இவ்வாறு அவர்களில் குழப்பங்கள் தோன்றி ஆண்களை மிகைக்கும் அளவுக்கு அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்று இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த  فتنة النساء  பெண்களின் குழப்பங்களையும், சோதனைகளையும் ஒரு முஃமின் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்துப் பார்ப்போம்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget