October 2019

மனித வாழ்விற்கு அத்தியவசியமான ஐந்து அம்சங்களைப் பாதுகாக்கும் விதமாக எமது மார்க்கம் அமைந்துள்ளது என்று எமது உலமாக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்தவிதத்தில் ஒருவரின் மார்க்கம், உயிர், பரம்பரை, புத்தி, செல்வம் ஆகியன பாதுகாக்கப்படும் முகமாக எமது மார்க்கத்திலுள்ள அனைத்து ஏவால் விலக்கல்களும் அமைந்துள்ளன.    
அவற்றுள் புத்தி என்ற அம்சம் பிரதான இடத்தை வகிக்கின்றது. அது நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டால் தான் ஏனைய நான்கு அம்சங்களும் சீர்பெறுகின்றன. மாறாக, ஒருவரிடத்தில் சரிவரப் புத்தி காணப்படாத போது அவரிடத்தில் மார்க்கம் காணப்படுமிடத்து அம்மார்க்கத்திற்கு எவ்விதப் பெறுமதியும் இருக்காது. அதேபோன்றுதான் உயிர், பரம்பரை, செல்வம் ஆகியனவும் புத்தியற்றவரிடத்தில் சரியான பயனைக் கொடுக்காது.  
இதனால் தான் மார்க்கம் வணக்கவழிபாடுகள் கடமையாவதற்குப் பிரதான அளவுகோலாகப் புத்தியை அடையாளப்படுத்துகின்றது.
இஸ்லாம் பலவாறான அமைப்புக்களில் புத்தியைப் பாதுகாக்க முயற்சி செய்தாலும் புத்தியை மழுங்கடிக்கச் செய்கின்ற போதைப் பொருட்களின் பரிமாற்றம் பரவலாக எம்சமுகத்திற்கு மத்தியில் காணப்படுகின்றது.
போதைதரும் பொருட்களின் உபயோகம் எம் சமுகத்திற்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது தார்தாரியர்களுடைய காலத்திலாகும் என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ‘அல்பதாவா அல்குப்றா’ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
போதைப்பொருட்களின் தாக்கத்தை நல்லமுறையில் அவதானிக்கக்கூடிய ஒருவர் அவை மனித வாழ்வின் மிகமுக்கியமான அடிப்படைகள் ஐந்திற்கும் வேட்டுவைக்கக் கூடியனவாகக் கண்டு கொள்வான்.
உண்மையில் போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்களைப் பொருத்தளவில் அவர்கள் தம்முடைய மார்க்க சட்டதிட்டங்களைப் பொறுப்படுத்தாதவர்களாகவும் தம்மீதுள்ள கடமைகள், பொறுப்புக்கள் ஆகியவற்றை சரிவர உணராதவர்களாகவும் அல்லாஹ்வை வழிப்படுகின்ற விடயத்தில் ஆர்வமற்றவர்களாகவும் அவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் சற்றும் அவனை அஞ்சாதவர்களாகவும் காணப்படுகிறார்கள். இந்நிலை அவர்களுடைய மார்க்க வாழ்க்கையைப் பாதிக்கின்றது ஈற்றில் அதுவே அவர்களுடைய மறுமை வாழ்க்கையை வீணடிக்கக்கூடியதாகவும் அமைந்துவிடுகின்றது.
அதேநேரத்தில் இவ்வுலக வாழ்வில் அவர்கள் சராசரி மனிதனிடத்தில் காணப்பட வேண்டிய சீரான சிந்தனை, பொறுப்புணர்ச்சி, ஆளுமை, ரோஷம் போன்றவற்றை இழந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இத்தகையவர்கள் எதார்த்தத்தில் மரணத்தை விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு மத்தியில் விளையாட்டுப் பொருட்களாகப் பரிதவிக்கின்றார்கள்.
போதையை உண்டாக்கக் கூடிய பொருட்கள் அனைத்தும் ஹராமானதாகும். அவை சிறிதளவு போதையை உண்டாக்கக் கூடியனவாக இருந்தாலும் சரியே!
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் விசுவாசங் கொண்டோரே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டுள்ளவைகளான சிலைகளும், குறிபார்க்கும் (சூதாட்ட) அம்புகளும் (ஆகிய இவையாவும்) ஷைத்தானுடைய செயலிளுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, இவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!’ (அல்மாயிதா: 90)
நபியவர்கள் கூறினார்கள்: ‘சிறிதளவு மற்றும் பெரிதளவு போதையை உண்டாக்கக்கூடிய அனைத்தும் ஹராமானதாகும்.’ (அபூதாவுத்)
நாம் எப்போதும் நல்ல உணவையே பரிமாற வேண்டும் என்ற நோக்கில் மார்க்கம் எமக்குச் சிறந்த உணவு வகைகளை இனங்காட்டியுள்ளது. அவைகளைத்தான் நாம் என்றும் தேர்ந்தெடுத்துப் பரிமாற வேண்டும்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்.’ (அல்அஃராப்: 157)
அல்லாஹ் எமக்குத் தந்த உயிரைப் போக்கிக் கொள்வதற்கு எமக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு போக்கிக் கொள்வது பெரும்பாவங்களில் ஒன்றாகக் கருதப்படும். போதைப் பொருட்களின் உபயோகத்தால் மனிதன் தன்னுடைய உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொள்கின்றான்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘(உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்!’ (அல்பகறா: 195)
மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்ட மாத்திரத்திலேயே போதையைத் தராவிட்டாலும் உடம்புக்கு ஒரு வகையான உள்ளுணர்வை ஏற்படுத்தக்கூடியனவாக உள்ளன. அத்தகைய பொருட்களை உபயோகிப்பதும் மார்க்கத்தில் ஹராமானதாகும்.
‘போதையை உண்டுபன்னக்கூடியவை, உள்ளுணர்வை ஏற்படுத்தக்கூடியவை அனைத்தையும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்’ என உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அபூதாவுத்)
மேற்கூறப்பட்ட ஹதீஸில் இடம்பெறும் ‘முபத்திர்’ என்ற சொல்லுக்கு இமாம் அல்ஹத்தாபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கம் கூறும்போது உடல் உருப்புக்களில் ஒரு வகையான உட்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அது போதையின் உருவாக்கத்திற்கு ஆரம்பப் படிக்கல்லாக விளங்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்கள். மேலும், இப்படியான பொருட்கள் தடைசெய்யப்பட்டதன் நோக்கம் மக்கள் போதைதரும் பொருட்களின் பால் நாட்டம் கொள்ளாமல் இருப்பதற்காகும் என்றும் கூறியுள்ளார்கள்.
இவ்விடயம் குறித்து ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: ‘எவ்வித போதையையோ புத்தி மழுங்கலையோ உண்டுபன்னாத பன்ஜ் என்ற பொருளைப் பரிமாறுவது எச்சரிக்கைக்காகத் தண்டனை வழங்கப்பட வேண்டிய விடயமாகும்’ என்கிறார்கள். (அல்பதாவா அல்குப்றா)
மேலும், போதைவஸ்துக்களாவன அவற்றின் இறுதிப்பேற்றை அடிப்படையாகக் கொண்டு ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதைப் பின்வரும் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
‘நிச்சயமாக அல்லாஹ் மதுபானத்தை அதனுடைய பெயரை அடிப்படையாக வைத்து ஹராமாக்கவில்லை. மாறாக, அதனுடைய இறுதி முடிவை அடிப்படையாக வைத்தே ஹராமாக்கியுள்ளான். எனவே, மதுபானத்தின் இறுதி முடிவைப்போன்ற முடிவை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொரு பானமும் ஹராமானதாகும்.’ (தாரகுத்ணி)
மேலும், இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: ‘திராட்சையின் இலையில் இருந்து செய்யப்படும் ஹஷீஷா என்று அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருள் ஹராமாக்கப்பட்டதாகும். மதுபானம் குடிப்பவருக்குக் கசையடி கொடுக்கப்படுவது போன்று இதனை உபயோகிக்கின்றவருக்கும் கசையடி கொடுக்கப்பட வேண்டும். மற்றொரு புறத்தில் இது மதுபானத்தைவிட மிக மோசமானதாக உள்ளது. நிச்சயமாக இது புத்தியையும் சராசரி மனிதனிடத்தில் காணப்படும் இயல்பு நிலையையும் பாதிப்படையச் செய்யும். இதன் காரணமாக ஈற்றில் ஒருவர் பெண்களின் குணாதிசயங்களைக் கொண்டவராகவும் ரோஷமற்றவராகவும் மாறிவிடுவார். இன்னும் இதுவல்லாத கெடுதிகளும் இதன் மூலம் உண்டாகும்.’ (அஸ்ஸியாஸா அஷ்ஷரஇய்யா)
இமாம் அஸ்ஸன்ஆனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: ‘எந்த ஒன்றில் போதையை உண்டாக்கக்கூடிய தன்மை காணப்பட்டாலும் அதனை உபயோகிப்பது ஹராமானதாகும். அது குடிக்கும் வகையைச் சேர்ந்ததாக இல்லாமல் இருந்தாலும் சரியே!’ என்கிறார்கள். (ஸுபுலுஸ் ஸலாம்)
போதைவஸ்துக்களின் உபயோகம் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை அவதானிக்கையில் அவை மனித வாழ்க்கையை சீர்கெடுக்கக்கூடியனவாகவும் சமுகத்திற்குப் பல பாதிப்புக்களை விளைவிக்கக்கூடியனவாகவும் மார்க்க சட்டதிட்டங்களுடன் நேருக்குநேர் மோதக்கூடியனவாகவும் காணப்படுகின்றன.
எனவே, மனித வாழ்விற்கு பேராபத்தாக விளங்கக் கூடிய இப்போதைப்பொருட்களின் உபயோகத்திற்கு முடிவுகட்டுவது எமது பாரிய பொறுப்பாகும். மார்க்க அறிவைச் சுமந்த மேதைகள் தமது உபன்னியாசங்களின் போது அவசியம் இதுபற்றி சமுகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் என்ற அடிப்படையில் போதைப்பொருட்களின் உபயோகத்தைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். அத்தோடு இத்தகைய தீய பழக்கவழக்கங்களை உடையவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கி அவர்களைச் செம்மைப்படுத்த வேண்டும்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: ‘மதுபானம் அருந்துதல், ஹஷீஷா அல்லது பன்ஜ் சாப்பிடுதல் போன்ற ஹராமாக்கப்பட்டவை மூலம் தனது புத்தியை நீக்கிக்கொள்ளக்கூடியவர்கள் இழிவுக்கும் தண்டனைக்கும் உரியவர்களே!……’ (மஜ்மூஉல் பதாவா)
மேலும் இமாமவர்கள் கூறும்போது: ‘போதையை ஏற்படுத்தக் கூடியவை ஹராமானவையாகும் என்பதை நம்பிக்கைகொண்ட ஒரு முஸ்லிம் அதனில் நின்றும் சிறிதளவை அல்லது பெரிய அளவை பரிமாறினால் மதுபானம் குடித்தவருக்கு வழங்கப்படும் தண்டனையான 80 கசையடிகள் அல்லது 40 கசையடிகள் அவருக்கும் வழங்கப்படவேண்டும்.’ (அல்பதாவா அல்குப்றா)
எனவே, மேற்கூறப்பட்ட உபதேசத்தை சிரமேற்கொண்டு ஆவண செய்வதற்கு அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் புரிவானாக!

                 ஆக்கம்:– மௌலவி அபூஹுனைப் ஹிஷாம் இப்னு தௌபீக் (மதனி)

நாம் பெற்றெடுத்த பிள்ளையை நாலு பேர் போற்றிப் புகழ்வதையும் நல்ல விதமாக பேசுவதையும் விரும்புகிறோம். ஒரு பிள்ளையின் நல்லநடத்தைப் பற்றி கதைக்கப்படும் போதெல்லாம் அங்கே பெற்றோரைப் பற்றியும் கதைப்பார்கள். அதே பிள்ளையை கெட்ட விதமாக பேசும் போதும் பெற்றோரைப் பற்றியும் இழிவாகக் கதைப்பார்கள். காரணம் அந்தப்பிள்ளையின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு முதலிடத்தைப் பெருகிறது.
‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே
என்றான் ஒரு கவிஞன்.  
எந்தக் குழந்தையும் அல்லஹ்வை ஏற்றவனாகவே பிறக்கிறது. அவனை யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ நெருப்பு வணங்கியாகவோ மாற்றுவது பெற்றோர்தான் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
பெறாறோரின் வளர்ப்பில்தான் ஒரு பிள்ளையின் எதிர்காலமே தங்கியிருக்கிறது. எனவே பிள்ளையின் வளர்ப்பில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் என்ன? இஸ்லாம் கூரும் விதத்தில் நல்ல சாலிஹான பிள்ளையாக வளர்ததெடுப்பது எப்படி? என்ற அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும்.
செல்வாக்கு செலுத்தும் காரணிகள்.
குழங்தை வளர்ப்பில் பிரதானமாக செல்வாக்கு செலுத்தும் காரணிதான் கர்ப்பக்காலம். மணம்முடித்து குழங்தையை சுமந்து கொள்ளக்கூடியதாக உடல் உள முதிச்சியுடையவளாக தாய் இருக்க வேண்டும்.
கர்ப்ப க்காலத்தில் போதிய போசாக்குகளும்- விட்டமின்களும்- மனஅமைதியான சூழலும் கணவனின் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை.
மனஅழுத்தஙகளைவிட்டும் தவிர்த்தல் வேண்டும.;
கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நோய்களை விட்டும்-அதன்விபரீதங்களைவிட்டும்- தூரமாகியிருத்தல் வேண்டும்.
இன்னிலையில் ஒரு தாய் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக இருப்பதோடு அதன் வளர்ச்சியும்; பாதிப்பற்றதாக இருக்கும்.
தந்தையிடம் கானப்படும் பரம்பரை அழகு

பால் வினை நோய்கள் போதைப் பொருள் சிகரட்; புகைத்தல், மது அருந்துதல் போன்ற பாவனை குழந்தை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அக்குழ்தை நோயுள்ளதாக வளர்வதற்கு வாய்ப்புண்டு.
பிறப்பின் பின் காரணிகள்:-
குழந்தை பிறந்த பின் அக் குழந்தையின வளர்ச்சியில் பின் வரும் காரணிகள் செல்வாக்கு செலுத்தும்.
தாய் சேய் உறவு பெற்றோர் உறவு
வீட்டுச் சூழல்
சமூகச் சூழல்
பெற்றோர் பிள்ளையுடன் அன்புடன் நடக்க வேண்டும். கடின சுபாவத்துடன் அதிகாரத் தோரனையுடன் நடக்கும் போது பெற்றோரை விட்டும் தூரமாகி பெற்றோரிடம் கிடைக்காத அன்பை வீட்டுக்கு வெளியே தேடிச்செல்லும். இதனால் நாளடைவில் அப்பிள்ளை கெட்ட பழக்கங்களுக்கும் சகவாசங்களுக்கும் ஆளாகி சமூக விரோதியாக உருவாகி விடும் அபாயம் உள்ளது.
பிள்ளைகளுடன் மனசு விட்டு பேசும் போது அப்பிள்ளை தனக்குரிய எல்லாப்பிரச்சினைகளையும் ஒளிவு மறைவின்றி சொல்லிக் கொள்ளும். தன்னுடைய பேச்சைப் பெற்றோர் காது கொடுத்து கேட்கிறார்கள் என்ற நிலையை உனர்ந்தால் தான் பிள்ளை அதிகமான நேரங்களை வீட்டில் செலவிடும். இல்லையேல் வீதியில் நின்று வீன் வம்பை வளர்க்கும்.
பிள்ளைகளுடன் பேசுவதும் கொஞ்சுவதும் ஒரு வணக்கம் இபாதத் தான்.
நபி (ஸல); அவர்கள் தன்னுடைய பேரக்குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி முத்தமிடுவதைப் பார்த்த ஒரு ஸஹாபி அல்லஹ்வின் தூதரே எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள் நான் அவர்கள் யாரையும் முத்தமிடுவதில்லை எனக கூறனார். அப்போது நபியவர்கள் மக்ளுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான் என்றார்கள்.
பிள்ளைகளுடன் இருந்து பேசுவதற்கும் பொழுது போக்குவதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
சுகாதார மற்றும் போசாக்கான உணவுகளை வழங்க வேணடும். வீட்டில் படிப்பதற்கான ஒரு இடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். அந்த இடத்தில் பாடசாலை மற்றும் குர்ஆன் மத்ரசா வரவழைn உபகரணங்களை வைப்பதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.
வீட்டில் சின்னதாக ஒரு புத்தக சாலையை ஏற்படுத்திக கொடுப்பதோடு வாசிப்பதற்கான நேரத்தையும் ஒதிக்கக் கொடுக்க வேண்டும்.
போதிய தூக்கமும் ஓய்வும் வழங்க வேண்டும். இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வைக்காமல் டிவி மற்றும் சினிமாக்களைப பார்த்து தூக்கத்தையும் பண்பாட்டையும் நாசப்படுத்தாமல் தூங்கவைக்க வேண்டும். அப்போதுதான் காலையில் நேரத்துடன் எழுந்து சுபஹ் தொழுது சுறுசுறுப்பாக பாடசாலை செல்ல வாய்பாக இருக்கும்.
எந்தவொன்றையும் நேரத்திற்கு செய்வதற்கும் நேர்த்தியாக செய்வதற்கும் காட்டிக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் உறவினர்களை வரவேற்கவும் உபசரிக்கவும் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தவும் பழக்க வேண்டும்.
சொந்தக்காரர்களை இனபந்துக்களை அடையாளம் காட்டி அவர்களுடைய வீடுகளுக்கும் அழைத்துச் செல்லவும் வேண்டும்.
வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் அதற்குரிய இடத்தில் வைப்பதற்கும் பிறர் வீட்டுக்கு சென்றால் அங்குள்ளவர்களின் பொருட்களை தளபாடங்களை அப்புறப்படுத்தாமலும் நடந்துகொள்ளும் ஒழுங்குகளை படித்துகொடுக்க வேண்டும்.
வீட்டுக்குள் வரும் போதும் பிறர் வீட்டிக்குள் நுழையும் போதும் வீட்டில் உள்ளவர்களின் அறைகளுக்கு செல்லும் முன்பும் வெளியிலிருந்து ஸலாம் கூறி அனுமதி கேட்டுக்கொணடு செல்லவேண்டிய பண்பை கற்றுக்கொடுக்கவேண்டும்.
சாப்பிடும் ஒழுங்குமுறை ஆடை அணியும் ஒழுங்குமுறை மலசலகூடம் போகும் ஒழுங்குமுறை அந்நேரங்களில் ஓதும் துஆக்கள்ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.
பிள்ளையின் ஆரம்ப பாடசாலை வீடு என்பதையும் அந்தப்பாடசாலையின் ஆசிரியர் தாய் தந்தை என்பதையும் மறந்து விடக்கூடாது.
பெற்றோர்கள் எப்போதும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு முன்னால் பெற்றோர் சண்டைபிடிப்பதோ தர்க்கம்பண்ணுவதோ தவிர்க்க வேண்டும். அல்லது பிரிந்து சென்று வாழ்வதோ பிள்ளை வளர்ப்பில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி உளவியல் ரீதியான பாதிப்பற்கு ஆளாகிவிடும் என்பதை பெற்றோர் புரிந்திருத்தல் வேண்டும்.
பிள்ளைகளின் தவருகளை சுட்டிக்காட்டும்போது ஒரு இடத்தில் உட்காரவைத்து அன்பாக பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும். அந்தப் பிள்ளை என்ன தவரு செய்துள்ளது என்பதை புரிய வைக்கும்விதமாக எடுத்துக்காட்டினால் தான் மீன்டும் அத்தவறை செய்யாமல் தவி ர்ந்து கொள்ளும்.
தந்தையுடைய உழைப்பை எப்போதும் பிள்ளைகள் கவனிப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சம்பாத்தியததை பறந்றி தாய் கவனம் செலுத்த வேண்டும். ஹராம் ஹலால் என்றால் என்ன? நன்மை தீமை என்றால் என்ன? என்பதை பிள்ளைக்கு புரிய வைக்க வேண்டும்.
சின்ன பிள்ளையாகிய ஹஸன் (ரழி) அவர்கள் ஸதகா பொருளாக வந்த ஈத்தம் பழ மொன்றை எடுத்து சாப்பிட்ட போது நபி (ஸல); அவர்கள் உடனே அத கூடாது. அது எங்களுக்கு ஹராமானது தடுக்கப்பட்டது. துப்பி விடு துப்பி விடு எனக் கூறினார்கள்.
சின்னப் பிள்ளைதானே என்று கவனயீனமாக இருந்தால் நாளடைவில் அந்தப் பிள்ளை தொடர்ந்து ஹராமான அல்லது தவரான காரியத்தை செய்து கொண்டே இருக்கும். உடனே அந்தந்தப்பை அடையாளம் காட்டி கொடுக்க வேண்டும். பிள்ளைகளைக் கண்டிக்கின்ற போது உடல் உள பாதிப்புகள் ஏற்படாதவாறும் சொல்லாலும் செயலாலும் நடந்து கொள்ள வேண்டும்.
பெற்றோருக்காக துஆ செய்கின்ற பிள்ளைகளாக வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தன்னுடைய தாய்; தந்தையருக்கு துஆ செய்யாத துஆ செய்ய தெரியாத பிள்ளைகளே இன்றைக்கு அதிகம் காணமுடிகிறது. வாப்பா இறந்து விட்டார் என்று சொன்னால் உடனே பிள்ளை பள்ளிக்குப் போய் வாப்பாவை குளிப்பாட்டி கபன் செய்து தொழுவித்து துஆ செய்து அடக்கம் செய்ய நாலுபேரை பணம் கொடுத்து அழைத்து வருவதை சாதாரணமாக காண முடிகிறது. தான் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளை கடைசி நேரத்தில் பயனில்லாமல் போனதைப் பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. இந்த நிலைக்கு யார் காரணம் என்று பெற்றோர் நினைக்க வேண்டும்.
மரனித்துப் போன தாய் தந்தைக்கு துஆ செய்யக்கூட தெரியாத அளவுக்கு இன்னுமொருவர் பணத்துக்காக வந்து ஏதோ சில வார்த்தைகளை துஆ என்ற பெயரில் சொல்லி விட்டு போகின்ற அளவுக்கு கேவலமாக போனது ஏன்?
ஒரு மனிதன் மரனித்து விட்டால் அவனுடைய எல்லா செயல்களும் நின்று விடுகின்றன ஆனால் மூன்றே மூனறு விடயங்கள் மட்டும் (கூலி)கிடைத்துக் கொணடிருக்கும்.
அவன் உயிரோடு இருக்கும் போது கொடுத்த ஸதகதுல் ஐhரியா
மக்கள் பயன்பெரும் வகையில் விட்டுச்சென்ற கல்வி அறிவு
அவனுக்கு துஆ செய்கின்ற ஸாலிஹான பிள்ளை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்.முஸ்லிம்
பெற்றோரின் மரனத்திற்குப் பின் ஒரு பிள்ளை துஆ செய்யக் கூடியதாக வளர்த்து இருந்தால் அதுதான் ஸாலிஹான பிளளை. அப்படியான ஒரு பிள்ளையை பெற்றோர் வளர்த்து எடுத்தால் அவர்கள்தான் பாக்கிய சாலிகள்.
நபிமார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு மார்க்கத்தை படித்து கொடுத்த முறையை பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் செல்லித்தருகிறான். இப்றாஹீம் நபி தன்னுடைய மரணத்தருவாயில்; செய்த வசீயத் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனுக்கு இணையாக்காதீர்கள் என்றும் 2,132
லுக்மான் (அலை) தன்னுடைய மகனுக்கு கற்றுக் கொடுத்த மார்க்க மற்றும் ஒழுக்க மாண்புகளையும் 3 33 குர்ஆன் குறிப்பிடுகிறது.
எனவே அமல்களை நாசப்படுத்தக் கூடிய ஷிர்க் பற்றி முதலில் போதிக்க வேண்டும். அல்லஹ்வைப பற்றியும் அல்லஹ்வுடைய இறுதித் தூதர் பற்றியும் தெளிவாக படித்துக் கொடுக் வேண்டும். அல்குர்ஆன் பற்றியும் அல்ஹதீஸ் பற்றியும் புரிய வைக்க வேண்டும்.
புனித தீனுல் இஸ்லாத்திற்காக தங்களையே அர்ப்பனித்த ஸஹாபாக்கள் இமாம்கள் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பயத்தை ஏற்படுத்தி கோழைகளாக வளர்க்காமல் சத்தியத்திற்காக உண்மைக்காக பேராடுகின்ற அர்ப்பனிக்கின்ற சிறந்த முஸ்லிம்களாக வளர்க்க வேண்டும்.
பிள்ளைகள் வீட்டுச் சூழலிலும் சமூக சூழலிலும் யாருடன் பழகுகிறான் அவனுடைய நன்பர்கள் யார்? நட்பு எப்படிப்பட்டது? பழக்க வழக்கம் எப்படிப்பட்டது?
நாளாந்த செயல்பாடுகளிள் தெனபடும் மாற்றங்கள் என்ன?
பாடசாலைகளில் மத்ரசாக்களில் நடந்து கொள்ளும் முறை எப்படி?
படிப்பில் ஆர்வம் உள்ளவனா? எந்த பாடத்தில் ஆர்வம் காட்டுகிறான்? எந்த பாடத்தை வெருக்கிறான்? படிக்கின்ற மொழியில் தெளிவு இருக்கின்றதா?
குறும்புத்தனம் காட்டியவன் அமைதியாக இருப்பது ஏன்?
அமைதியாக இருந்த பிள்ளை குறும்புத்தனம் காட்டுவது ஏன்? ஏன்பன போன்ற விடயங்களை கண்டிப்பாக பெற்ரோர் அவதானம் செலுத்த வேண்டும்.
பிள்ளையைப் பெற்றெடுப்பதில் உள்ள ஆசை அந்த பிள்ளையை ஒழுக்கமுள்ள பண்பாடுள்ள பிள்ளையாக வளர்த்தெடுப்பதிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோரின் இம்மை மறுமை வாழ்வுக்கு பயனுள்ள பிள்ளையாக இருக்கும்.

                                                            மெளலவி எம். எஸ். எம் இம்தியாஸ் யூசுப் ஸலபி

ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவத்தின் மூலம் ‘பிக்ஹ்” சட்ட முடிவுகளை எடுக்கலாம் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் இச்சம்பவத்தின் மூலம் பெறவேண்டிய சில பண்பாட்டுப் பயிற்சிகளைப் பார்ப்போம்.
1. கனி இருக்கக் காய் கவர்தல்:
கனி இருக்க காய் கவர்தல் நன்றன்று என்பார்கள். மரத்தில் நல்ல கனி இருக்கும் போது எதற்காக காயைப் பறிக்க வேண்டும்? இதே போன்றுதான் இனிய சொல் இருக்கும் போது கடுமையான, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
ஆயிஷா(ரலி) அவர்கள் தனது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றியது பற்றிக் கூறும் போது எனது தேவையை நிறைவு செய்த போது என மூடலாகக் கூறுகின்றார்கள். அருவருப்பான விடயங்களை மூடலாகவும் நாகரிகமாகவும் முன்வைக்க வேண்டும். அசிங்கமான அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்க்க வேண்டும். நபியவர்களும் நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விரும்பியுள்ளார்கள். எமது குழந்தைகளை சின்ன வயதில் இருந்தே இதற்கு நாம் பழக்க வேண்டும்.
02. தவறு விட்டவர்கள் மீது தப்பெண்ணம் கொள்ளாதிருத்தல்:
மனிதன் இயல்பில் தவறு விடக் கூடியவன். அடுத்தவர் விடும் தவறுகளுக்கும் ஏதாவது காரண காரியங்களைக் கற்பித்து அவர்களை நியாயம் காண முற்பட வேண்டும். நாம் நமது தவறுகளுக்கும் அடுத்தவனைக் காரணம் காட்டி தப்பித்துவிடும் மனநிலையில் வாழ்ந்து வருகின்றோம். ஆயிஷா(ரலி) அவர்களின் பல்லக்கை ஒட்டகத்தில் ஏற்றி வைப்பவர்கள் உள்ளே ஆயிஷா(ரலி) அவர்கள் இல்லை என்பதை அறியாமல் பல்லக்கை எடுத்து வைத்து விட்டார்கள்.
இதை வைத்து ஆயிஷா(ரலி) அவர்கள் அவர்களைக் குறை காணவில்லை. அந்த நாலு பேருக்கும் மூளை இல்லையா? உள்ளே ஆள் இருக்கிறாரா? இல்லையா? என்று தூக்கும் போது வித்தியாசம் விளங்காதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் தான் சின்னப் பிள்ளை, அப்போது நாம் மெலிந்திருந்தோம். அதனால் பல பேர் சேர்ந்து தூக்கும் போது பாரத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது என அவர்களின் தவறுக்கான காரணத்தைக் கற்பித்து அவர்கள் மீது தப்பெண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றார்கள். இது ஒரு நல்ல பண்பாடாகும்.
வீட்டில் கணவன் தவறு செய்யும் போது தனது தவறுக்கு மனைவியின் இந்தச் செயல்தான் காரணம் என கணவனும் இவ்வாறே மனைவியும் பேசுவதுதான் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறே மனைவியும் நடந்து கொள்கின்றாள். நிர்வாகிகளும் இப்படியே நடந்து கொள்கின்றனர். இது மாற வேண்டிய வழிமுறையாகும்.
03. அந்நியர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு:
அந்நியர்கள் என்றால் மாற்று மதத்தினர் என்பது அர்த்தம் அல்ல. மஹ்ரம் இல்லாத உறவுடையவர்களுடன் நடந்து கொள்ளும் உயரிய ஒழுக்க முறை இங்கே கற்பிக்கப்படுகின்றது.
ஸப்வான் இப்னு முஅத்தல்(ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களைக் கண்ட போது இருவரும் பேசவில்லை. அவர் சத்தமாக இன்னாலில்லாஹ் என்றார். இது ஒன்றே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. என்ன நடந்தது? எப்படி ஆனது? இப்போது என்ன செய்யலாம் என்று மசுரா நடத்தவில்லை.
அவர் ஒட்டகத்தைப் படுக்கவைத்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் ஏறியதும் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்து சென்றார். ஆயிஷா(ரலி) அவர்களும் அவரைக் கண்டதும் முகத்தை மூடிக் கொண்டார்கள். அவர்களும் பேச்சுக் கொடுக்கவில்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அந்நிய ஆண்-பெண் உரையாடல்கள் நீடிப்பதும் சமூக வலைத்தளங்களில் தொடர்புகளை மேற்கொள்வதும் தேவையற்ற பிரச்சினைகளையும் பித்னாக்களையும் ஏற்படுத்தும் இக்காலகட்டத்தில் இது ஒரு முக்கியமான பண்பாட்டுப் பயிற்சியாகும்.
04. கடைசியில் கண்காணித்தல்:
நபி(ஸல்) அவர்கள் பயணங்கள் மேற்கொண்டு ஓரிடத்தில் தங்கினால் அந்த இடத்தில் இருந்து செல்லும் போது இறுதியில் ஏதேனும் விடுபட்டுள்ளதா? எனப் பார்ப்பதற்காக வேண்டி ஒருவரை நியமிப்பார்கள். இது ஒரு நல்ல வழிகாட்டலாகும்.
வீட்டிலிருந்து வெளியேறும் போது வீட்டுக் கதவுகள் முறையாக மூடப்பட்டுள்ளதா? மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதா? தேவையான ஏதேனும் ஒரு பொருள் விடுபட்டுள்ளதா? எனப் பார்க்க ஒருவரைப் பொறுப்பாக்க வேண்டும். சில வேளை பயணத்திற்குத் தயாராகி, பயணப் பொதிகளை வாகனத்தில் ஏற்றாமல் இடைவழியில் திரும்பி வரும் நிலை ஏற்படுகின்றது.
‘நீ எடுத்திருப்பாய்;’ என நான் நினைத்தேன் என ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இதற்குப் பொறுப்பாக ஒருவரை நியமிப்பது தேவையற்ற பிரச்சினைகளையும் சங்கடங்களையும் தவிர்ப்பதற்கு உதவும்.
05. முஸ்லிமைப் பாதுகாத்தல்:
மிஸ்தஹ்(ரலி) அவர்களது தாய் தனது மகன் மிஸ்தஹைத் திட்டினார்கள். அவர் அவருடைய மகனைத் திட்டுகின்றார். இதில் நமக்கென்ன வந்துவிடப் போகின்றது என்று ஆயிஷா(ரலி) அவர்கள் நினைக்கவில்லை. ஒரு பத்ர் ஸஹாபியைத் திட்டுகின்றீர்களா? என எதிர்த்துக் கேட்கின்றார்கள். ஒரு முஸ்லிமை அடுத்தவர் திட்டினாலோ குறை கூறினாலோ ஏன் அப்படிச் செய்கின்றீர்கள் என அடுத்தவர் கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும் போது இந்தப் பழக்கம் குறையும். அதை விட்டு விட்டு ஒத்து ஊதுவது போல் செயற்படக் கூடாது.
06. சோதனைகளின் போது:
எந்தமாதிரியான சோதனைகள் ஏற்பட்டாலும் இன்னாலிலாஹ் எனக் கூற வேண்டும். மரணச் செய்தியைக் கேட்டால்தான் இன்னாலில்லாஹ் கூற வேண்டும் என்பது தவறான எண்ணமாகும். ஆயிஷா(ரலி) அவர்களைத் தனிமையில் கண்டதும் சப்வான்(ரலி) அவர்கள் ‘இன்னாலிலாஹ்….’ கூறியுள்ளதிலிருந்து இதை விளங்கலாம்.
07. பொறுமை:
சோதனைகளின் போது பொறுமை கொள்வது போற்றத்தக்க பண்பாகும். ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு மாத காலம் சோதிக்கப்பட்டார்கள். அழுது கண்ணீர் வற்றிவிட்டது என்ற நிலையிலும் அவர்கள் பொறுமையைக் கைவிடவில்லை.
பொறுமையே அழகானது. நீங்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன் என்பதே அவர்களது பதிலாக இருந்தது. எனவே, சோதனையின் போது பொறுமையும் அல்லாஹ்விடம் உதவி தேடும் உயரிய பண்பும் அவசியமாகும்.
08. ஆலோசனை:
பிரச்சினைகள் வரும் போது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அறிவும் அனுபவமும் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது ஏற்றமானதாகும்.
இவ்வாறே இந்த சம்பவம் பல்வேறுபட்ட அகீதா விடயங்களையும் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை, பத்ர் ஸஹாபாக்கள் தனிச்சிறப்புமிக்கவர்கள் போன்ற அகீதா அடிப்படைகளையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து படிப்பினையாகப் பெறலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் எமது வாழ்வை அமைத்துக் கொள்ள அருள் புரிவானாக! சந்திப்பார்கள்!
                                                  
                                                                                          அஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி

புனித தீனுல் இஸ்லாத்திற்காக தங்களையே அர்ப்பனித்த ஸஹாபாக்கள் இமாம்கள் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பயத்தை ஏற்படுத்தி கோழைகளாக வளர்க்காமல் சத்தியத்திற்காக உண்மைக்காக பேராடுகின்ற அர்ப்பனிக்கின்ற சிறந்த முஸ்லிம்களாக வளர்க்க வேண்டும்.பல நவீன மூட நம்பிக்கைகள் மற்றும் பழம் மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசப்பட்டு நம்மிடையே பரப்பப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு நாடு, மொழி, கல்வி வாழ்க்கை முறை என்ற பேதமில்லாமல் உலகம் முழுவதும் எதோ ஒன்றை சிலர் கேள்வியின்றி நம்பத் தொடங்குகின்றனர். அதுவும் சமூக ஊடகங்கள், செவி வழிச் செய்திகள், நம்பகமற்ற மதவாதிகள், புத்தகங்கள், பேச்சாளர்கள் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்வது முறையான ஒன்றல்ல.மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளாந்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும்.
சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள்.
அந்தடிப்படையில் தொழுகையில் காணப்படுகின்ற பகுதிகளாக ருகூஃ மற்றும் ஸுஜூத் போன்றவைகள் காணப்படுகின்றன. இவைகளில் என்ன அவ்ராதுகள் ஓத வேண்டுமென்பதற்காக சில அவ்ராதுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்திருக்கிறார்கள்.
சில மக்களுக்கு அந்த அவ்ராதுகள் பாடமில்லாதவைகளாக இருக்கலாம். அல்லது பாடமாக இருந்தாலும் அதில் தவறுகள் விட்டு விட்டு பாடமாக இருந்தால் அவர்கள் அத்தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாக்கத்தினை இந்தயிடத்தில் பதிவு செய்கிறேன்.
ருகூஃ, ஸுஜுதுகளில் ஓத வேண்டிய அவ்ராதுகள்:-
  • முதலாவது துஆ:
عن حذيفة رضي الله عنه :
أنه صلى الله عليه وسلم كان يقول في ركوعه : ( سبحان ربي العظيم ، وفي سجوده : سبحان ربي الأعلى ) رواه مسلم والترمذي 
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அழீம்’ ( سبحان ربي العظيم ) என்றும், ஸுஜுதுகளில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ ( سبحان ربي الأعلى ) என்றும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம், திர்மிதி)
இந்த அவ்ராதுகளை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாசித்துப் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் சில மக்கள் ருகூஃவுடைய நேரத்தில் ஸுப்ஹான ரப்பியல் அழீம் வபி ஹம்திஹி என்றும் ஸுஜூதுடைய நேரத்தில் ஸூப்ஹான ரப்பியல் அஃலா வபி ஹம்திஹி என்றும் “வபி ஹம்திஹி” என்ற சொல்லை இந்தயிடத்தில் மேலதிகமாக ஓதுகின்றனர். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நேரங்களில் வபி ஹம்திஹி என்ற வார்த்தையினை சேர்க்கவில்லை என்ற செய்தியினை இந்த ஹதீஸின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
  • இரண்டாவது துஆ:
وعن علي رضي الله عنه :
أن رسول الله صلى الله عليه وسلم كان يقول إذا ركع : ( اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت ، خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي ، وإذا رفع قال : اللهم ربنا لك الحمد ملء السماوات ومل ء الأرض وملء ما بينهما وملء ما شئت من شئ بعد ، وإذا سجد قال : اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت ، سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين ) رواه مسلم .
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிற்குச் சென்றால் ‘அல்லாஹும்ம லக ரகஃது வபிக ஆமன்து வலக அஸ்லம்து ஹஷஆ லக ஸம்ஈ வபஸரீ வமுஹ்ஹி வ அழ்மி வ அஸபீ’ என்றும் ருகூவிலிருந்து எழும்பினால் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வமில்அல் அர்ழி மா பைனஹுமா வமில்அமா ஷிஃத மின் ஷைஇன் பஃத்’ என்றும் ஸுஜூதுக்கு சென்றால் ‘அல்லாஹும்ம லக ஸஜத்து வபிக ஆமன்து வலக அஸ்லம்து ஸஜத வஜ்ஹிய லில்லதி ஹலககு வஸவ்வரகு வஷக்க ஸம்அஹு வபஸரஹு தபாரகல்லாஹு அஹ்ஸனுல் ஹாலிகீன்’ என்றும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்” (முஸ்லிம்)
  • மூன்றாவது துஆ
وعن عائشة رضي الله عنها قالت :
كان النبي صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده : ( سبحانك اللهم ربنا وبحمدك ، اللهم اغفر لي ) رواه البخاري .
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிலும் ஸுஜூதிலும் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம இஃபிர்லி’ என்று ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்” (புஹாரி)
ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிலும் ஸுஜூதிலும் ஓதிய இது போன்ற துஆக்களை நாமும் ஹதீஸ்களில் வந்தது போன்று ஓதி அல்லாஹ்வுடைய அன்பை பெற்றுக் கொள்வோமாக!
தொகுப்பு:பர்ஹான் அஹமட் ஸலபி

போதைப் பொருள் பாவனை நாடளாவிய மட்டத்தில் மோசமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கான கடும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. இருந்த போதிலும் நாளாந்தம் போதைப்பொருள் பாவனை குறித்த செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன.
உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் எல்லாம் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன. ஆனால் ஹெரோயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்று வரையிலும் பெரும் இலாபம் தரும் தொழிலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
உலகளாவியரீதியில் அதிகரித்துவரும் போதைப்பபொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
போதைப் பொருள் பாவனை ஓர் இஸ்லாமிய நோக்கு

ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸுரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:
”விசுவாசிகளே! மதுபானமும் சூதாட்டமும் விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”
”மதுபானத்தின் மூலமும் சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவும் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா?”
அல்லாஹுதஆலா இந்த இரு வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ஷிர்க்குடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளான். அறுவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான். மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான். மேலும் இவை இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகள் என, உறவுகள் அறுக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும் தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான். மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ் விளக்குகின்றான்.
இந்த அல்குர்ஆன் வசனங்களை நபித் தோழர்கள், இறைவிசுவாசிகள் எதிர்கொண்ட விதம் அற்புதமானது. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர் அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள். வீதிகளில் இருந்த மதுபானப் பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.
இஸ்லாம் மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். எனவே, ஒரு பானம் எந்தப் பொருளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சேர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது ஹராமாகக் கொள்ளப்படும்.
ஒரு முறை நபியவர்களிடம் தேன், அல்லது பார்லி அல்லது கோதுமை முதலானவற்றில் தயாரிக்கப்படும் ஒருவகை மதுபானம் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், சொற் சுருக்கத்துடனும் பொருட் செறிவுடனும் பின்வருமாறு கூறினார்கள்:
‘போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ‘கம்ர்’ எனும் மதுபானமாகும். அனைத்து ‘கம்ரும்’ ஹராமாகும்.’ (முஸ்லிம்)
மேலும் அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள் மட்டுமன்றி குறைவாகப் போதையைக் கொடுப்பவையும் ஹராமானவையாகும். இது பற்றி நபி மொழி ஒன்று பின்வருமாறு கூறுகின்றது.
அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமாகும்’ (அஹ்மத், அபூதாவுத், திர்மிதி). இந்த வகையில் மதுபானம் போன்றவற்றில் ஓரிரு மிடர்கள் அருந்துவதும் ஹராமானதாகவே கொள்ளப்படும்.
மதுபானம் அருந்துவது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் மதுபானம் வடிக்கவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது. மதுபானம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அதனை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பத்துப் பேரை சபித்தார்கள் (திர்மிதி)
அதிகரித்த போதைவஸ்து பாவனையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

வீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள் போதை பாவனைக்கு ஆளாகுகின்றார்கள். தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் “ஸ்டைலை” பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது. வீட்டில் வைபவங்களின் போது பியர் மற்றும் மது பாவிக்கப்படும்போது பிள்ளைகள் அவற்றின் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் தொடர்ந்தும் பழகிக் கொள்ள முனைகின்றனர். சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை பயன்பாட்டில் இருக்குமாயின் அவர்கள் இலகுவில் போதைக்கு ஆளாகிவிடுவார்கள்.
குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர் சரி சமமான அன்பு பாசம் காட்டி அரவணைக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை வளர விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் மன முறிவை போக்க போதையை பயன்படுத்தி தீர்வு காண முனைகின்றனர்.
பொது வாழ்வில் ஏற்படும் போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை

சவால்களை சந்திக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை நாடுகின்றனர். பரீட்சையில் தோல்வி, போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி, படிக்க முடியாத பிரச்சினை எனும்போது அவற்றுக்கு தீர்வாக போதையினை பயன்படுத்துகின்றனர்.
மேலே கூறப்பட்ட காரணிகளுக்கு உடந்தையாக மீடியா செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே மீடியா முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.

காதல் தோல்வி, குடும்பத் தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு சிகரட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது.
இலங்கையில் போதைப் பொருள் நுகர்வின் நிலை

இலங்கையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதிகளவிலான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் ஆபத்தான போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரசபையின் (National Dangerous Drugs Control Board) அறிக்கை தெரிவிக்கின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் இலங்கையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு நிரந்தரமாக அடிமையாகியுள்ளதாக தேசிய போதைத் தடுப்பு சபை எச்சரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே இப்பாவைனை சடுதியாக அதிகத்திருப்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 29,790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். கடந்த ஒரு சில வருடங்களில் சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப்பொருள் பாவனை மீண்டும் நாட்டில் தலை தூக்கிவருவதாகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
உலக அளவில் சுமார் 140 மில்லியன் குடிகாரர்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. குடியை எடுத்தால் உலக அரங்கில் இலங்கைக்கு 4 ஆவது இடம் கிடைத்திருக்கிறது. இலங்கையில் தனி மனித மது பாவனை 4 லீற்றராக இருக்க, அதுவே ஆணுக்கு 15.2 லீற்றராக உள்ளது.
சமூக வறுமையுடன் கூடிய அவல வாழ்க்கையை மறக்க குடி ஒரு தீர்வாகக் கையாளப்படுகின்றது. குடி சமூகப் பிரச்சனைக்கு வடிகாலாகின்றது. இதன் விளைவாக நகர்புற குடிசைப் பகுதிகளில் 43 சதவீதமானவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பெருந் தோட்டப் பகுதியில் இது 55 சதவீதமாக உள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இது தவிர இதற்காக அவர்கள் சராசயாக செலவழிக்கும் பணம் நாளொன்றுக்கு 950 1000 ரூபா என்று மதிப்படப்பட்டுள்ளது.
போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர். இவர்களுல் பலர் பல் கலைகழகம், உயர்தர, சாதாரணதர மாணவர்களாவர். 45% திருமணமானவர்கள். இதில் 50% இல் 69% ஆனவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கையின் மொத்தக் குற்றச் செயல்களில் 38 சதவீதமானவை மது பாவனையால் ஏற்படுகின்றது. அதாவது போதையினால் ஏற்படுகின்றது. கடந்த ஆண்டில் நடந்த மொத்த வாகன விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2800 ஆகும். இதில் 90 சதவீதமானவை மதுவினால் நடந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் கொலை, பாலியல் வன்முறை, விபச்சாரம் போன்றவை தேசிய பண்பாகி கொடிகட்டிப் பறக்கின்றது.
போதைப் பொருள் பாவனையில் இலங்கையில் முதலாம் இடமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது. இது 71% ஆக காணப்படுகின்றது. இரண்டாவதாக கம்பஹா மாவட்டம் உள்ளது. இது 22% ஆக காணப்படுகின்றது. மேல் மாகாணமே முதலிடத்தில் காணப்படுகின்றது. 600 000 இற்கு மேற்பட்டவர்கள் கஞ்சா பாவிப்பவர்கள். நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஹெரொயின் எனும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
தென்னிலங்கையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசமெங்கும் போதைப் பொருள் பாவனை காரணமாக சமூகம் பேரழிவைச் சந்திக்கும் நிலையே காணப்படுகிறது.
ஹெரோயின், கொக்கேன் போன்ற சர்வதேச போதைவஸ்துகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் தமக்கு அவற்றை வாங்குவதற்கு பணம் கிட்டாத போது திருட்டுச் சம்பவங்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்ளில் அதற்காக கொலை வெறியர்களாக மாறும் நிலை கூட ஏற்படுகின்றது.
தென்னிலங்கையைப் போன்று வட-கிழக்கிலும் போதைப் பொருள் பாவனை கூடிக் கொண்டே போகின்றது. அதுவும் இளம் பருவத்தினரே அதிகமாக போதைக்கு அடிமையாக வருகின்றனர். கிழக்கில் மறைமுகமாக இடம்பெற்று வந்த போதைப் பொருள் பாவனை இன்று வெளிப்படையாகவே இடம்பெற்றுவருவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மாவா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் சில பாடசாலை மாணவிகளும் ‘மாவா’ என்பதில் சிக்கியுள்ளமையாகும்.
வடக்கிலும் போதைவஸ்துப் பாவனை அதிகரித்து வருகின்றது. வடபுலத்தில் போதைப் பொருட்களை தாராளமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதொரு நிலைமை உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
தலைநகரிலும் கிராமப் புறங்களிலும் முக்கியமாக பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு அண்மித்த இடங்களில் மறைமுகமான விதத்தில் மாணவர்களுக்கு போதை வஸ்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் நகரம், கிராமம், வீதிக்கு வீதியென சகல இடங்களிலும் போல் இன்று போதைப் பொருட்கள் கிடைக்கக் கூடிய நிலையையே காண முடிகிறது.
பொதுவாக இலங்கையில் ஹெரோயின், கஞ்சா, அபின், மர்ஜுவானா ஆகிய நான்கு போதை தரும் பொருட்களே பாவனையிலுள்ளன. இவற்றை 12 சதவீதமானோர் ஊசி மூலமே ஏற்றிக் கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெவிக்கின்றன.
போதையால் ஏற்படும் உடல் , உள பாதிப்புகள்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டே உள்ளனர். சாராயம் அருந்துதல் மற்றும் போதை மருந்துகள் உட்கொள்வதால் போதை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களுடைய விழிப்புணர்வை தொலைப்பது மட்டுமன்றி உடல் நலத்தை கெடுத்து அவர்களை அழித்து விடுகிறது. போதை பொருள் பாவனையால் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து கொண்டே செல்கின்றனர்.
மது, போதை வஸ்து மற்றும் சிகரெட்டினால் உடலின் அநேக தொகுதிகள் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. ஈரல் நிரந்தர பாதிப்பிற்குள்ளாவதால் உடலின் நஞ்சகற்றல் தொழிற்பாடு, குருதியுறைதலிற்கு அவசியமான பதார்தங்களின் தொகுப்பு என்பன இடம்பெறுதல் தடைப்பட்டு போய்விடுகிறது. உடலில் நச்சுப்பதார்தங்களின் சேர்க்கையால் இவ் நச்சுப்பதார்தங்களே பல தொகுதிகளில் அல்லது உடலுறுப்புக்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கிறது.
இன்றைய இளைஞர்கள் இவ்வாறான விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதனால் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியிருத்தல், உளச்சோர்வுக்குள்ளாகல் நித்திரையின்மை போன்ற உளரீதியான பாதிப்புக்களுக்கு நாளடைவில் உள்ளாகின்றனர்.
இதனால் குடும்பத்தில் வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, பிள்ளைகளின் பராமரிப்பு பிரச்சினைகள், விபத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன.
அதே போன்று தான் சிகரெட் மதுபானம் ஆகியனவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான போதைப் பொருட்களாகவுள்ளன. பொதுவாக போதைப் பொருட்களை உபயோகிப்போர் அதன் மூலம் ஒரு வித இன்ப உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்பம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கே நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் கோபமடைதல் நினைவாற்றலில் குறைபாடு போன்ற குணங்களை கொண்டவர்களாக மாறுவர் என தெவிக்கப்படுகிறது.
போதைவஸ்துப் பாவனையும், புனர்வாழ்வும்

இலங்கையில் 12 சதவீதமான போதைப் பொருள் பாவனையாளர்கள் ஊசி மூலமே போதையேற்றுவதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இவர்கள் குடும்பப் பிரச்சினை, கல்வியில் தோல்வியடைதல், வேலையின்மை, காதல் தோல்வி மற்றும் கூடாத சகவாசம் போன்ற பல காரணங்களுக்காக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளன. இந்த போதைப் பொருட்கள் கடந்த ஆண்டுகளில் இலங்கையில் பரவ ஆரம்பித்தாக தெவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் 1 டு, 3 மில்லியன் ரூபா பெறுமதியானது. இதில் 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக் கொள்ள முடியுமாம். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
உலக போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான அறிக்கையின் புள்ளிவிபரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெரோயின் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உள்ளனராம்.
புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சதாயத்தை பாதுகாப்பது என்ற நோக்கிலே அரசாங்கங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. என்ற போதும் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இப் பாவனையை தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லை. எனவே இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகிறது.
மேற்கத்திய நாடுகளில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தற்போது சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் வீதம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றமை துரதிஷ்டமானதாகும். இதற்குக் காரணம் மேலைத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனமையாகும்.
ஒட்டு மொத்த சதாயத்தையும் பாதிக்கவல்ல இந்த போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக போதைப் பொருள் கடத்தலுக்காக சில நாடுகள் மரண தண்டனையையும் சட்டமாகப் பிரயோகித்து வருகின்றன.
மது பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களாக இலங்கை பொலீஸ் திணைக்களம், பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மது வரித் திணைக்களம், சிறைச்சாலைகள், சுங்கவரித் திணைக்களங்கள், அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன.
இதே போல் இலங்கையில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்காக போதைத் தடுப்பு பணியகம் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த முறைகேடான பழக்கத்தை முற்று முழுதாக ஒழிக்க அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
இந்த போதைப் பொருள் பாவனை சிறுபராயத்திலியே ஏற்பட்டு விடுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் தனிமையை விரும்பினால் அடிக்கடி பணம் கேட்டால், படிப்பில் நாட்டம் குறைந்தால் நடத்தைகளில் மாற்றம் தெரிந்தால் வழக்கத்திற்கு மாறாக நடவடிக்கை தென்படுமாயின் அவர்களை சற்று கூர்ந்து அவதானிப்பது சிறந்தது.
முக்கியமாக இன்றைய இளம் சதாயத்தினர் இணையதளத்தை தங்கள் உலகமாகக் கருதி வாழ்வதால் அடிக்கடி அவர்கள் பார்க்கும் இணைய தளங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டும். இவற்றைத்தவிர சிறுவயதிலிருந்தே கற்றலில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தல் பத்திரிகை வாசித்தல் விளையாடுதல் இறைவழிபாடு செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல் சிறந்தது. இதன் மூலம் எங்கள் குழந்தைகளை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.
மாறாக அவர்கள் யாராயினும் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள் எனின் மருத்துவர்களினதும் உள வளத்துணையாளர் களினதும் ஆலோசனைப்படி செயலாற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும். இது அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் வழி சமைக்கும்.
புகைத்தல் பாவனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது போன்று போதைப் பொருள் பாவனையையும் தடுக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இருக்கும் சட்டத்தை கடுமையாக்குவதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
பொலிஸார், பொது மக்கள் தொடர்பு செயற்பட்டுத் திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாயச் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும்.
ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்கையை பணயம் வைக்கும் இளைய சதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது நம் அனைவரதும் கடைமையாகும். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதை பொருள் பாவனையில்லாத சமூகத்தை உருவாக்குவோம்.
                                                                                            அஷ்ஷேஹ் எம்.ஐ அன்வர் (ஸலபி)-

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget