போதைவஸ்துக்களை விட்டும் எமது சமுகத்தை பாதுகாப்போம்.!

மனித வாழ்விற்கு அத்தியவசியமான ஐந்து அம்சங்களைப் பாதுகாக்கும் விதமாக எமது மார்க்கம் அமைந்துள்ளது என்று எமது உலமாக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்தவிதத்தில் ஒருவரின் மார்க்கம், உயிர், பரம்பரை, புத்தி, செல்வம் ஆகியன பாதுகாக்கப்படும் முகமாக எமது மார்க்கத்திலுள்ள அனைத்து ஏவால் விலக்கல்களும் அமைந்துள்ளன.    
அவற்றுள் புத்தி என்ற அம்சம் பிரதான இடத்தை வகிக்கின்றது. அது நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டால் தான் ஏனைய நான்கு அம்சங்களும் சீர்பெறுகின்றன. மாறாக, ஒருவரிடத்தில் சரிவரப் புத்தி காணப்படாத போது அவரிடத்தில் மார்க்கம் காணப்படுமிடத்து அம்மார்க்கத்திற்கு எவ்விதப் பெறுமதியும் இருக்காது. அதேபோன்றுதான் உயிர், பரம்பரை, செல்வம் ஆகியனவும் புத்தியற்றவரிடத்தில் சரியான பயனைக் கொடுக்காது.  
இதனால் தான் மார்க்கம் வணக்கவழிபாடுகள் கடமையாவதற்குப் பிரதான அளவுகோலாகப் புத்தியை அடையாளப்படுத்துகின்றது.
இஸ்லாம் பலவாறான அமைப்புக்களில் புத்தியைப் பாதுகாக்க முயற்சி செய்தாலும் புத்தியை மழுங்கடிக்கச் செய்கின்ற போதைப் பொருட்களின் பரிமாற்றம் பரவலாக எம்சமுகத்திற்கு மத்தியில் காணப்படுகின்றது.
போதைதரும் பொருட்களின் உபயோகம் எம் சமுகத்திற்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது தார்தாரியர்களுடைய காலத்திலாகும் என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ‘அல்பதாவா அல்குப்றா’ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
போதைப்பொருட்களின் தாக்கத்தை நல்லமுறையில் அவதானிக்கக்கூடிய ஒருவர் அவை மனித வாழ்வின் மிகமுக்கியமான அடிப்படைகள் ஐந்திற்கும் வேட்டுவைக்கக் கூடியனவாகக் கண்டு கொள்வான்.
உண்மையில் போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்களைப் பொருத்தளவில் அவர்கள் தம்முடைய மார்க்க சட்டதிட்டங்களைப் பொறுப்படுத்தாதவர்களாகவும் தம்மீதுள்ள கடமைகள், பொறுப்புக்கள் ஆகியவற்றை சரிவர உணராதவர்களாகவும் அல்லாஹ்வை வழிப்படுகின்ற விடயத்தில் ஆர்வமற்றவர்களாகவும் அவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் சற்றும் அவனை அஞ்சாதவர்களாகவும் காணப்படுகிறார்கள். இந்நிலை அவர்களுடைய மார்க்க வாழ்க்கையைப் பாதிக்கின்றது ஈற்றில் அதுவே அவர்களுடைய மறுமை வாழ்க்கையை வீணடிக்கக்கூடியதாகவும் அமைந்துவிடுகின்றது.
அதேநேரத்தில் இவ்வுலக வாழ்வில் அவர்கள் சராசரி மனிதனிடத்தில் காணப்பட வேண்டிய சீரான சிந்தனை, பொறுப்புணர்ச்சி, ஆளுமை, ரோஷம் போன்றவற்றை இழந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இத்தகையவர்கள் எதார்த்தத்தில் மரணத்தை விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு மத்தியில் விளையாட்டுப் பொருட்களாகப் பரிதவிக்கின்றார்கள்.
போதையை உண்டாக்கக் கூடிய பொருட்கள் அனைத்தும் ஹராமானதாகும். அவை சிறிதளவு போதையை உண்டாக்கக் கூடியனவாக இருந்தாலும் சரியே!
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் விசுவாசங் கொண்டோரே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டுள்ளவைகளான சிலைகளும், குறிபார்க்கும் (சூதாட்ட) அம்புகளும் (ஆகிய இவையாவும்) ஷைத்தானுடைய செயலிளுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, இவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!’ (அல்மாயிதா: 90)
நபியவர்கள் கூறினார்கள்: ‘சிறிதளவு மற்றும் பெரிதளவு போதையை உண்டாக்கக்கூடிய அனைத்தும் ஹராமானதாகும்.’ (அபூதாவுத்)
நாம் எப்போதும் நல்ல உணவையே பரிமாற வேண்டும் என்ற நோக்கில் மார்க்கம் எமக்குச் சிறந்த உணவு வகைகளை இனங்காட்டியுள்ளது. அவைகளைத்தான் நாம் என்றும் தேர்ந்தெடுத்துப் பரிமாற வேண்டும்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்.’ (அல்அஃராப்: 157)
அல்லாஹ் எமக்குத் தந்த உயிரைப் போக்கிக் கொள்வதற்கு எமக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு போக்கிக் கொள்வது பெரும்பாவங்களில் ஒன்றாகக் கருதப்படும். போதைப் பொருட்களின் உபயோகத்தால் மனிதன் தன்னுடைய உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொள்கின்றான்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘(உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்!’ (அல்பகறா: 195)
மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்ட மாத்திரத்திலேயே போதையைத் தராவிட்டாலும் உடம்புக்கு ஒரு வகையான உள்ளுணர்வை ஏற்படுத்தக்கூடியனவாக உள்ளன. அத்தகைய பொருட்களை உபயோகிப்பதும் மார்க்கத்தில் ஹராமானதாகும்.
‘போதையை உண்டுபன்னக்கூடியவை, உள்ளுணர்வை ஏற்படுத்தக்கூடியவை அனைத்தையும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்’ என உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அபூதாவுத்)
மேற்கூறப்பட்ட ஹதீஸில் இடம்பெறும் ‘முபத்திர்’ என்ற சொல்லுக்கு இமாம் அல்ஹத்தாபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கம் கூறும்போது உடல் உருப்புக்களில் ஒரு வகையான உட்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அது போதையின் உருவாக்கத்திற்கு ஆரம்பப் படிக்கல்லாக விளங்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்கள். மேலும், இப்படியான பொருட்கள் தடைசெய்யப்பட்டதன் நோக்கம் மக்கள் போதைதரும் பொருட்களின் பால் நாட்டம் கொள்ளாமல் இருப்பதற்காகும் என்றும் கூறியுள்ளார்கள்.
இவ்விடயம் குறித்து ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: ‘எவ்வித போதையையோ புத்தி மழுங்கலையோ உண்டுபன்னாத பன்ஜ் என்ற பொருளைப் பரிமாறுவது எச்சரிக்கைக்காகத் தண்டனை வழங்கப்பட வேண்டிய விடயமாகும்’ என்கிறார்கள். (அல்பதாவா அல்குப்றா)
மேலும், போதைவஸ்துக்களாவன அவற்றின் இறுதிப்பேற்றை அடிப்படையாகக் கொண்டு ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதைப் பின்வரும் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
‘நிச்சயமாக அல்லாஹ் மதுபானத்தை அதனுடைய பெயரை அடிப்படையாக வைத்து ஹராமாக்கவில்லை. மாறாக, அதனுடைய இறுதி முடிவை அடிப்படையாக வைத்தே ஹராமாக்கியுள்ளான். எனவே, மதுபானத்தின் இறுதி முடிவைப்போன்ற முடிவை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொரு பானமும் ஹராமானதாகும்.’ (தாரகுத்ணி)
மேலும், இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: ‘திராட்சையின் இலையில் இருந்து செய்யப்படும் ஹஷீஷா என்று அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருள் ஹராமாக்கப்பட்டதாகும். மதுபானம் குடிப்பவருக்குக் கசையடி கொடுக்கப்படுவது போன்று இதனை உபயோகிக்கின்றவருக்கும் கசையடி கொடுக்கப்பட வேண்டும். மற்றொரு புறத்தில் இது மதுபானத்தைவிட மிக மோசமானதாக உள்ளது. நிச்சயமாக இது புத்தியையும் சராசரி மனிதனிடத்தில் காணப்படும் இயல்பு நிலையையும் பாதிப்படையச் செய்யும். இதன் காரணமாக ஈற்றில் ஒருவர் பெண்களின் குணாதிசயங்களைக் கொண்டவராகவும் ரோஷமற்றவராகவும் மாறிவிடுவார். இன்னும் இதுவல்லாத கெடுதிகளும் இதன் மூலம் உண்டாகும்.’ (அஸ்ஸியாஸா அஷ்ஷரஇய்யா)
இமாம் அஸ்ஸன்ஆனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: ‘எந்த ஒன்றில் போதையை உண்டாக்கக்கூடிய தன்மை காணப்பட்டாலும் அதனை உபயோகிப்பது ஹராமானதாகும். அது குடிக்கும் வகையைச் சேர்ந்ததாக இல்லாமல் இருந்தாலும் சரியே!’ என்கிறார்கள். (ஸுபுலுஸ் ஸலாம்)
போதைவஸ்துக்களின் உபயோகம் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை அவதானிக்கையில் அவை மனித வாழ்க்கையை சீர்கெடுக்கக்கூடியனவாகவும் சமுகத்திற்குப் பல பாதிப்புக்களை விளைவிக்கக்கூடியனவாகவும் மார்க்க சட்டதிட்டங்களுடன் நேருக்குநேர் மோதக்கூடியனவாகவும் காணப்படுகின்றன.
எனவே, மனித வாழ்விற்கு பேராபத்தாக விளங்கக் கூடிய இப்போதைப்பொருட்களின் உபயோகத்திற்கு முடிவுகட்டுவது எமது பாரிய பொறுப்பாகும். மார்க்க அறிவைச் சுமந்த மேதைகள் தமது உபன்னியாசங்களின் போது அவசியம் இதுபற்றி சமுகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் என்ற அடிப்படையில் போதைப்பொருட்களின் உபயோகத்தைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். அத்தோடு இத்தகைய தீய பழக்கவழக்கங்களை உடையவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கி அவர்களைச் செம்மைப்படுத்த வேண்டும்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: ‘மதுபானம் அருந்துதல், ஹஷீஷா அல்லது பன்ஜ் சாப்பிடுதல் போன்ற ஹராமாக்கப்பட்டவை மூலம் தனது புத்தியை நீக்கிக்கொள்ளக்கூடியவர்கள் இழிவுக்கும் தண்டனைக்கும் உரியவர்களே!……’ (மஜ்மூஉல் பதாவா)
மேலும் இமாமவர்கள் கூறும்போது: ‘போதையை ஏற்படுத்தக் கூடியவை ஹராமானவையாகும் என்பதை நம்பிக்கைகொண்ட ஒரு முஸ்லிம் அதனில் நின்றும் சிறிதளவை அல்லது பெரிய அளவை பரிமாறினால் மதுபானம் குடித்தவருக்கு வழங்கப்படும் தண்டனையான 80 கசையடிகள் அல்லது 40 கசையடிகள் அவருக்கும் வழங்கப்படவேண்டும்.’ (அல்பதாவா அல்குப்றா)
எனவே, மேற்கூறப்பட்ட உபதேசத்தை சிரமேற்கொண்டு ஆவண செய்வதற்கு அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் புரிவானாக!

                 ஆக்கம்:– மௌலவி அபூஹுனைப் ஹிஷாம் இப்னு தௌபீக் (மதனி)

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget