அல்லாஹ்வினுடைய றஹ்மத்தை அறிந்து கொள்வோம்…!

உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையை பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள வேணடுமென்பதில் அதிக கரிசனை காட்டுவான்.
அந்த வகையில்தான் ஒரு முஃமினின் இலட்சியம், நோக்கங்களில் மிகப் பிரதானமானது வானம் பூமியை விட விசாலமான சுவனத்தை அடைவதாகும். இந்த சுவனத்தை அடைவதாக இருந்தால் உண்மையில் நாம் செய்கின்ற அமல், இபாதத்கள் மட்டும் போதாதாகும். சுவனம் நுழைவதாக இருந்தால் அல்லாஹ்வுடைய றஹ்மத் கிடைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் ஹதீஸ்கள் மூலமாகவும் அறியலாம்.
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து உங்களில் ஒருவர் தான் செய்த அமல்கள் மூலமாக சுவனம் நுழையமாட்டார். அல்லாஹ்வுடைய றஹ்மத் இருந்தாலே தவிர என்ற கருத்தில் கூறிய போது அல்லாஹ்வுடைய தூதரே நீங்களும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் நுழைய முடியாதா என்று ஸஹாபாக்கள் கேட்க நானும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் முடியாது என்று நபியவர்களே கூறினார்களென்றால் நானும் நீங்களும் கட்டாயமாக இது பற்றி சிந்திக்க வேண்டும்.
அந்த ஸஹாபாக்களது வாழ்வைப் பற்றி நாம் நாளாந்தம் அறிந்து கொண்டே இருக்கிறோம். அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வுக்காக தங்களது சொத்து செல்வங்களையெல்லாம் இழந்தார்கள். தங்களது சொந்த பந்தங்களை இழந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தங்களுடைய உயிரையும் துச்சமாக மதித்தவர்கள். அந்த ஸஹாபாக்களுக்கே இந்த நிலையென்றால் நானும் நீங்களும் எந்தளவு இந்த விடயத்தில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். எனவே அல்லாஹ்வுடைய றஹ்மத் பற்றிய சிறு அறிவு எமக்கு அவசியமாகும். எனவே இந்த தலைப்பை சில உப தலைப்புகளைக் கொண்டு அவதானிப்போம்.
01) அல்குர்ஆன் றஹ்மத் என்று எவைகளை அடையாளப்படுத்துகின்றது.
முதலாவது வசனம் 

{قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون}
“அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும் அவனுடைய கருனை கொண்டுமுள்ளதாகும். ஆகவே அவர்கள் அதைக் கொண்டு சந்தோஷமடையட்டும்.இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றை விட மிகச் சிறந்தது என்று நபியே நீர் கூறுவீராக” (10:58)

இவ்வசனத்துக்கு உலமாக்கள் விளக்கம் சொல்லும் போது இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் அல்குர்ஆனையே குறிக்கின்றது என்ற கருத்தில் விளக்கம் சொல்லி இருக்கின்றார்கள். ஏனெனில் அல்குர்ஆனது நாம் அறியாத விடயங்களை எமக்கு கற்றுத் தருகின்றது. எமக்கு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் எம்மை நரகை விட்டும் பாதுகாக்கின்றது. எனவே அல்குர்ஆன் அல்லாஹ்வின் மாபெரும் றஹ்மத்தாகும்.
இரண்டாவது வசனம்
{قل ياعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله}
“வரம்பு மீறி தவறு செய்த என்னுடைய அடியார்களே நீங்கள் அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்” (39:53)

இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் பாவமன்னிப்பு, தவ்பா ஏற்றுக் கொள்ளப்படுதல் என்ற அர்த்தங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு மனிதன் தவறுகள் செய்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்கின்ற போது அல்லாஹ் அவனது றஹ்மத்தினால் அவைகளை அப்படியே அழித்து விடுகிறான்.
மூன்றாவது வசனம்
{إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي}
“நிச்சயமாக உள்ளங்கள் பாவங்கள் பால் சாயக்கூடியதாகும். என்னுடைய இரட்சகன் அன்பு காட்டியவர்களைத் தவிர” (12:53)
இந்த வசனம் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றுடன் தொடர்புடையதாகும். அரசரின் மனைவி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தவறான அழைத்ததன் பிற்பாடுதான் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த செய்தியைக் குறிப்பிட்டார்கள்.
எனவே ஒரு மனிதன் பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுவதும் அல்லாஹ்வின் றஹ்மத்தில் உள்ளதாகும்.
நான்காவது வசனம்
{إن رحمت الله قريب من المحسنين}
“அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு சமீபத்தில் இருக்கிறது” (07:56)

இந்த இடத்தில் வருகின்ற றஹ்மத் என்பது நன்மை கூலி என்ற அர்த்தங்களில் இடம்பெற்றிருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
ஐந்தாவது வசனம்
{ذكر رحمت ربّك عبده زكريا}
“இது உமது இரட்சகன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு புரிந்த அருள் பற்றி நினைவு கூர்வதாகும்.” (19:02)

இந்த வசனம் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதியவராக இருந்தும் பிள்ளை கிடைக்காத சந்தர்ப்பத்தில் இறைவனிடம் தனக்கு ஒரு பிள்ளையை தருமாறு பிரார்த்தித்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அன்பளிப்பாக வழங்கி அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். எனவே நாம் கேட்கின்ற பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் அல்லாஹ்வுடைய றஹ்மதில் உள்ளதாகும்.
ஆறாவது வசனம்
{ أولئك يرجون رحمة الله}
“அவர்கள் அருளின் பக்கம் ஆதரவு வைப்பார்கள்” (02:218)

இத்திருமறை வசனத்தில் வருகின்ற றஹ்மத் என்ற பதம் சுவனம், கூலி என்ற கருத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட திருமறை வசனங்களிலும் இதுவல்லாமல் இன்னும் சில வசனங்களில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் பல்வேறுபட்ட அர்த்தங்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வர்த்தங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து விளங்குவதாயின் அல்லாஹ்வுடைய றஹ்மத் என்பது இறைவனிடமிருந்து கிடைக்கின்ற எல்லாவிதமான சிறப்புகள், அபிவிருத்திகளையும் குறிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக
வாழ்கின்ற காலப்பகுதியில் அல்லாஹ்வுடைய றஹ்மதை சரியான முறையில் பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..

                                                                                M.F.பர்ஹான் அஹமட் ஸலபி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget