சூரிய கிரகண தொழுகை தொழும் முறைகள்

ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள்.
அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அந்த தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி, தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
சூரிய,சந்திர கிரகணங்களின் பின்னணி…
ஒவ்வொரு கால கட்டத்திலும் சில மக்களின் அறியாமையினால் தவறான செய்திகளை பரப்புவது வழமையானதாகும்.
நபியவர்கள் காலத்தில் நபியவர்களின் மகன் இறந்த சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்வு நடந்ததினால், நபியவர்களின் பிள்ளையின் மரணத்திற்காக தான் இது நிகழ்தது என்று கூறினார்கள்.
அதே போல இது நடப்பதால் ஆட்சியாளருக்கு கேடு.அல்லது நாட்டிற்கு இது நடக்கும் அது நடக்கும் என்று சிலர் தனது மடமையை வெளிக்காட்டுவார்கள்.
யாருடைய இறப்பிற்காகவோ, அல்லது பிறப்பிற்காகவோ இது நடப்பது கிடையாது. அல்லது இதனால் நல்லது அல்லது கெட்டது என்பதும் கிடையாது.
“சூரியனை மையமாகக் கொண்டு, சூரிய குடும்பத்தில் உள்ள பூமி உட்பட எல்லாக் கோள்களும் சுழன்று வருகின்றன. இவ்வாறு சுழன்று வரும் போது, சூரியனுக்கும், பூமிக்கும் இடையே பூமியின் துணைக் கோளான சந்திரன் குறுக்கே வரும். அப்போது சூரியனின் ஒளி தற்காலிகமாக மறைந்து விடும்.இதையே சூரிய கிரகணம் எண்பர்.
சுற்றுப்பாதையில் வரும் போது, எந்த அளவிற்குச் சூரியனை சந்திரன் மறைக்குமோ அந்த அளவிற்கு முழு சூரிய கிரகணம், அல்லது பாதி சூரிய கிரகணம் ஏற்படுவதுண்டு.
இதைப் போன்றே சுழற்ச்சி முறையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி குறுக்கிடும் போது, சந்திரனின் ஒளி தற்காலிகமாக தடைப்படும் இதையே சந்திர கிரகணம் எண்பர்.  அல்லாஹ் மிக அறிந்தவன்.
கிரகண தொழுகை முறைகள்…
(01) இந்த தொழுகை கூட்டாக தொழுவிக்கப்பட வேண்டும்.
(02) ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே நேரத்தில் தொழுவிக்கப்பட வேண்டும்.
(03) முதலில் தொழுகையும், இரண்டாவது குத்பாவும் நிகழ்த்தப் பட வேண்டும்.
(04) இந்த தொழுகைக்கான பகிரங்க அறிவித்தல் (அழைப்பு) கொடுக்கப்பட வேண்டும்.
(05) இந்த இரண்டு ரக்அத் தொழுகையில் நான்கு ருகூஃகளும், நான்கு ஸஜ்தாக்களும் செய்ய வேண்டும்.
(06) அல்லது இந்த இரண்டு ரக்அத் தொழுகையில் ஆறு ருகூகளும், நான்கு ஸஜ்தாக்களும் செய்ய வேண்டும்.
(07) அல்லது இந்த இரண்டு ரக்அத் தொழுகையில் எட்டு ருகூகளும், நான்கு ஸஜ்தாக்களும் செய்ய வேண்டும்.
(08) கிரகண தொழுகையில் ருகூஃவில் மட்டும் மாற்றம் செய்ய வேண்டும்.
தொழுகையின் விளக்கமும் ஆதாரங்களும்
இரண்டு ரக்அத்துகளில் நான்கு ருகூஃ என்றால் முதலாவது ரக்அத்தில் சூரா பாதிஹா ஓதி விட்டு, அதன் பின் நீண்ட சூரா ஓத வேண்டும். அதன் பின் ருகூஃ நீண்ட நேரம் செய்ய வேண்டும். பிறகு நிலைக்கு வந்து ஸஜ்தாவிற்கு சென்று விடாமல் மீண்டும் நிலையில் நின்று பாதிஹாவை தவிர்த்து ஏற்கனவே ஓதிய சூராவை விட சற்று குறைத்து நீண்ட நேரம் ஓத வேண்டும். 

அதன் பிறகு ருகூஃ நீண்ட நேரம் செய்ய வேண்டும். அதன் பிறகு நிலைக்கு வந்து வழமைப் போன்று ஸஜ்தாவிற்கு செல்ல வேண்டும். நீண்ட ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். 

அடுத்த இரண்டாவது ரக்அத்திலும் அவ்வாறே செய்ய வேண்டும். அதாவது முதல் ரக்அத்தில் இரண்டு ருகூஃகளும், இரண்டாவது ரக்அத்தில் இரண்டு ருகூஃகளும் செய்ய வேண்டும் என்பதை விங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு மரணம், கப்ர், மறுமை, நரகம், சுவனம் அனைத்தையும் உள்ளடக்கியதாக நினைவுப் படுத்தி குத்பா (உபதேசம்) செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை புகாரி- 1051லும், முஸ்லிம்-1662லும் விரிவாக காணலாம்.
அடுத்ததாக இரண்டு ரக்அத்துகளில் ஆறு ருகூஃ, மற்றும் நான்கு ஸஜ்தாக்கள் என்றாலும் மேற்ச் சுட்டிக் காட்டிய படியே தொழ வேண்டும். அதாவது முதல் ரக்அத்தில் அடுத்தடுத்து தொடராக மூன்று ருகூஃகளும், இரண்டாவது ரக்அத்தில் மூன்று ருகூஃகளும் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை முஸ்லிம்- 1652ல் விரிவாக காணலாம்.
அடுத்ததாக இரண்டு ரக்அத்துகளில் எட்டு ருகூஃ, மற்றும் நான்கு ஸஜ்தாக்கள் என்றாலும் மேற்ச் சுட்டிக் காட்டிய படியே தொழ வேண்டும். அதாவது முதல் ரக்அத்தில் அடுத்தடுத்து தொடராக நான்கு ருகூஃகளும், இரண்டாவது ரக்அத்தில் நான்கு ருகூஃகளும் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை முஸ்லிம்- 1660ல் விரிவாக காணலாம்.
குறிப்பாக நீங்கள் தொழுவிப்பதற்கு முன் எத்தனை ருகூஃகளை கொண்ட தொழுகையை தொழுவிக்கப் போகிறோம் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்திக் கொள்ளவும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் நம்மை பொருந்திக் கொள்வானாக !

                                                                   மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget