காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்

மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கெண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார் என ஹதீஸ்கள் கூறுகின்றன.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.” (புகாரி: 6103, 6104)
எனவே, பத்வா கொடுக்கும் விடயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் பத்வா கொடுக்கும் முப்திகளாக, நீதிபதிகளாக இல்லாமல் அழைப்புக் கொடுக்கும் தாயிகளாக இருக்க வேண்டும்.
அநியாயம் செய்தவன் அநியாயக்காரன். ஷிர்க் செய்தவன் முஷ்ரிக். குப்ர் செய்தவன் காபிர்… என்று சிந்திக்கின்றனர். சில நேரங்களில் சிலர் செய்யும் செயல்களை வைத்து மாத்திரம் நாம் இப்படித் தீர்ப்புக் கூற முடியாது. அப்படி தீர்ப்புக் கூறத் தடையான சில அம்சங்கள் இருக்கலாம். அதை அறியாமல் தீர்ப்புக் கூறினால் நாம் குற்றவாளியாகலாம். இது குறித்த சில ஆதாரங்களையும் அடிப்படைகளையும் நோக்குவோம்.
1. யா அல்லாஹ்! நீ எனது அடிமை:
பாலைவனத்தில் ஒட்டகம் காணாமல் போன ஒருவர் ஒட்டகத்தைக் கண்ட போது, ‘யா அல்லாஹ் நீ எனது அடிமை’ நான் உனது எஜமான்’ என்று மகிழ்ச்சிப் பெருக்கால் தவறாகக் கூறுகின்றார். (சுருக்கம்- ஸஹீஹ் முஸ்லிம்: 2747)
இவர் கூறிய வார்த்தை கொடியது. அல்லாஹ்வைத் தனது அடிமை என்கின்றார். தன்னை அல்லாஹ்வின் எஜமான், கடவுள் என்கிறார் இது மிகப்பெரும் ‘குப்ர்’ குற்றமாக இருந்தாலும் தவறுதலாகச் சொன்னது என்பதால் அவரை நபியவர்கள் காபிராகக் காட்டவில்லை. எனவே, தவறுதலாக ஒரு செயலைச் செய்தவருக்கு அதை அறியாமல் காபிர் பட்டம் கொடுத்தால் நாம்தான் குற்றவாளியாகுவோம்.
2. நபிக்கு ஸஜ்தா செய்தவர்:
ஸஜ்தா என்பது மிக முக்கியமான இபாதத்தாகும். இதை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு ஸஜ்தா செய்வது ஷிர்க்கான விடயமாகும்.
“முஆத்(ரலி) அவர்கள் யமனில் இருந்து வந்த போது நபி(ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள். அப்போது, ‘முஆதே இது என்ன?’ என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர், ‘நான் யமனுக்குச் சென்ற போது அவர்கள் தமது தலைவர்களுக்கு ஸஜ்தா செய்வதைப் பார்த்து உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும் என ஆசை கொண்டேன்’ எனக் கூறினார். அதற்கு, ‘இவ்வாறு செய்ய வேண்டாம்’ என நபியவர்கள் தடுத்தார்கள்.”  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ப்(ரலி) நூல்: இப்னுமாஜா: 1853
இங்கு அவர் செய்தது ஷிர்க்கான செயல்தான். ஆனால், நபியவர்களுக்குச் செய்யும் வணக்கமாகக் கருதி அவர் அதைச் செய்யவில்லை. அதை அவர் மரியாதையாகக் கருதித்தான் செய்தார். நபியவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறினாலும் செய்தவரை முஷ்ரிக் என்று கூறவில்லை. அவர் வேறு தஃவீல் விளக்கத்துடன் செய்துள்ளதால் அவர் அந்தப் பட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றார்.
3. குப்ராகவோ, ரித்தத்தாகவோ இதைச் செய்ய வில்லை:
அலி(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “என்னையும் சுபைர் மற்றும் மிக்தாத்(ரலி) ஆகியோரையும் அழைத்த நபியவர்கள் குறித்த ஓர் இடத்தைக் கூறி அங்கே ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கின்றது. அதை எடுத்து வாருங்கள் எனக் கூறினார்கள். நாம் குறித்த இடத்திற்குச் சென்ற போது அங்கே ஒரு பெண் இருந்தாள். கடிதம் பற்றிக் கேட்கப்பட்ட போது மறுத்தாள். நீ தராவிட்டால் ஆடைகளைக் களைந்தாவது எடுப்போம் என மிரட்டிய போது அவள் தனது தலைமுடிக்குள் இருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள். அதில் ஹாதிப் இப்னு அபீ பல்தா(ரலி) அவர்கள் மூலம் மக்கத்துக் குறைஷிகளின் சிலருக்கு நபி(ஸல்) அவர்கள் தொடர்பான சில தகவல்கள் எழுதப்பட்டிருந்தன.
கடிதத்தைப் பார்த்த நபியவர்கள் ஹாதிப்(ரலி) அவர்களை அழைத்து, ‘ஹதிபே! இது என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே அவசரப்படாதீர்கள். மக்காவில் இருக்கும் எனது உறவினர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நான்தான் இதைச் செய்தேன். நான் இதை குப்ராகவோ, என் மார்க்கத்தில் இருந்து முர்தத்தாகிச் செல்லும் விதத்திலோ இஸ்லாத்தின் பின் குப்ரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்திலோ செய்யவில்லை என்று கூறினார். 

அதற்கு நபியவர்கள் அவர் கூறியது உண்மைதான் என்றார்கள். உமர்(ரலி) அவர்கள் இந்த முனாபிக்கின் தலையைக் கொய்து விடுகின்றேன் விடுங்கள் என்று கூறிய போது, ‘இல்லை. இவர் பத்ரில் பங்குபற்றியவர். அல்லாஹுதஆலா பத்ர்வாசிகளை நோக்கி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். உங்களை நான் மன்னித்துவிட்டேன் என்று கூறியுள்ளது உங்களுக்குத் தெரியாதா” என்றார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி) – நூல்: அஹ்மத் 600)
அவர் செய்த செயல் குப்ரானது. ஆனால், அவரது நோக்கம் குப்ரோ குப்ரை அங்கீகரிப்பதோ அல்ல. உலக நோக்கத்திற்காக செய்துள்ளார். குப்ருக்கு உதவும் ஒரு செயலை இஸ்லாத்திற்கு பாதிப்பை உண்டுபண்ணும் ஒரு செயலை அந்த நோக்கம் இல்லாமல் குப்பார்களிடம் இருந்து தனது குடும்பத்தைப் பாதுகாக்கும் எண்ணத்தில் செய்தார். எனவே, அது குப்ராகவோ ரித்தத்தாகவோ பார்க்கப் படவில்லை. குற்றமாகப் பார்க்கப்பட்டது. அந்தக் குற்றமும் அவர் பத்ர் ஸஹாபி என்பதால் மன்னிக்கப்பட்டுவிட்டது.
எனவே, குப்ரான செயல் செய்தவரைக் கூட உடனடியாக காபிர் என்று கூறிவிட முடியாது. அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். நோக்கம், மதம் சார்ந்ததாக இல்லாமல் உலகப் பாதுகாப்பு சார்ந்ததாக இருந்தால் செயல் குற்றமானதாக இருந்தாலும் குப்ருடைய நிலைக்குச் செல்லாது. சில வேளை செயல் குப்ராக இருந்தாலும் இந்தச் செயல் குப்ரானது என்று கூறலாம். அதைச் செய்தவரின் காரணத்தை அறியாவிட்டால் குறித்த நபரைக் காபிர் எனக் கூற முடியாது.
இங்கு இன்னொரு விடயமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அவரின் செயற்பாடு குப்ரானது என்பதால் அவரைப் பார்த்து முனாபிக் என்று சொன்ன உமர்(ரலி) அவர்களை நபியவர்கள் கண்டிக்கவில்லை. எனவேதான் இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், தகுந்த காரணத்தினால் அல்லது அறியாமல் அப்படிக் கூறியவர் காபிராகிவிடுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். உமர்(ரலி) அவர்கள் அறியாமல் கூறியதால்தான் ‘உமரே! உமக்கென்ன தெரியும்?’ என்று கேட்டார்கள். அவர் தெரியாமல் சொன்னதால் அவரும் கண்டிக்கப்படவில்லை. (புகாரி)
4. நிர்ப்பந்தமும் நிறைந்த ஈமானும்:
முஷ்ரிக்குகள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைப் பிடித்து சித்திரவதை செய்தனர். அவர் நபியவர்களைத் திட்டுமாறும், அவர்களது கடவுள்கள் குறித்து நல்லவிதமாகக் கூறுமாறும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இறுதியில் அவர்கள் கூறிய பிரகாரம் செய்து விட்டார். இது குறித்து அவர் நபியவர்களிடம் வந்து கூறினார். அதற்கு நபியவர்கள், ‘உன் உள்ளம் எப்படி இருந்தது’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘ஈமானில் நிரம்பியிருந்தது’ என்றார். அதற்கு நபியவர்கள் இதன் பிறகும் அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் நீயும் இப்படிச் செய்துவிட்டு தப்பி வரலாம் என்று கூறினார்கள். (ஹதீஸின் கருத்து) (நூல்: ஹாகிம்- 3362, பைஹகி: 2531)
இது குறித்து பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.
“எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் அவரின் உள்ளம் நம்பிக்கையால் அமைதி பெற்ற நிலையில், அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதின் காரணமாக அவனை (வாயளவில்) நிராகரிக்கிறாரோ (அவர் மீது குற்றமில்லை.) எனினும், எவர்கள் மன நிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.” (16:106)
இந்த வசனம் நிர்ப்பந்த நிலையில் உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருக்கும் நிலையில் தம்மைத் தற்காத்துக் கொள்ள குப்ரை செய்தவர் காபிராகமாட்டார் என்பதாகக் கூறுகின்றது. எனவே, குப்ரான செயலைச் செய்த ஒருவரை உடனே காபிர் எனக் கூறிவிட முடியாது. அவர் ஏதேனும் நிர்ப்பந்தத்தில் செய்தாரா?, அவரது உள்ளத்தின் நிலை என்ன என்பது குறித்தெல்லாம் ஆராய்ந்தே இந்த முடிவை அதற்குரியவர்கள் செய்ய வேண்டும்.
5. பூரண தெளிவற்ற நிலை:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! அவன் என்னைத் தண்டிப்பதாக இருந்தால், உலக மக்களில் யாவருக்கும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்துவிடுவான்’ என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார். 

(அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, ‘நீ எதற்காக இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்’ என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.”
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)  நூல்: (புகாரி: 7506, முஸ்லிம் 24-2756, முஅத்தா: 51
இந்த மனிதருடைய செயற்பாடு குப்ருடையது. தன்னை இப்படி எரித்துவிட்டால் அல்லாஹ் எழுப்ப மாட்டான் என்று அவர் எண்ணியது போன்ற ஒரு தோற்றமும் இதில் இருக்கின்றது. அதாவது, அவர் அல்லாஹ்வை நம்பியுள்ளார். மறுமையை, சுவர்க்கம், நரகத்தையும் நம்பியுள்ளார். அல்லாஹ் மீதான அச்சமும் அவரிடம் இருந்துள்ளது. ஆனால், அல்லாஹ்வின் “குத்ரத்” எனும் ஸிபத்தை அவர் முழுமையாக சரியாக விளங்காமல் இருந்திருக்க வேண்டும். இந்த வகையில் அவர் மன்னிக்கப் பட்டிருக்கலாம். “எனவே, அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணை யாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.” (2:22)
“நீங்கள் அறிந்து கொண்டே சத்தியத்தை அசத்தியத்துடன் கலக்கவோ, சத்தியத்தை மறைக்கவோ வேண்டாம்.” (2:42)
“உங்கள் பொருட்களை உங்களுக்கிடையில் (ஒருவருக் கொருவர்) தவறான வழியில் உண்ணாதீர்கள். மேலும் நீங்கள் தெரிந்து கொண்டே (பிற) மனிதர்களின் பொருட்களின் ஒரு பகுதியை பாவமான முறையில் உண்பதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை லஞ்சமாகக் கொண்டு செல்லாதீர்கள்.” (2:188)
“வேதத்தையுடையோரே! நீங்கள் அறிந்து கொண்டே ஏன் சத்தியத்தை அசத்தியத்துடன் கலந்து சத்தியத்தை மறைக் கின்றீர்கள்? ” (3:71)
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதங்களுக்கும் மோசடி செய்யாதீர்கள்.” (8:27)
தெரிந்து கொண்டு செய்யும் போது அந்தக் குற்றத்தின் வீரியம் கூடுகின்றது. இவர் அல்லாஹ்வின் ஸிபத்தைத் தெரிந்து கொண்டு எதையும் மறுக்கவில்லை. அந்த ஸிபத்தைப் பூரணமாக விளங்காமல் இருந்துள்ளார். அத்துடன் அவர் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் தான் பேசுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை முழுமையாகப் புரியாமல் கூட பேசியிருக்கலாம்.
இவரின் இந்தச் செயலை விமர்சன ரீதியில் பார்த்தால் அவர் எரித்து சாம்பலை தண்ணீரிலும் காற்றிலும் கலந்து விட்டால் அல்லாஹ்வால் தன்னை எழுப்ப முடியாது என நம்பியுள்ளார். இப்படி அல்லாஹ்வை நம்பியவர் முஸ்லிமாக இருக்க முடியாது என்று கூற முடியும். ஆனால், அவரது எண்ணம் என்ன என்பது எமக்குத் தெளிவாகத் தெரியாமல் இந்த சொல்லுக்கு இதுதான் அர்த்தம். இந்தக் கூற்றுக்கு இதுதான் அர்த்தம் என நாமாக தப்ஸீர் எடுத்து தஃவீல் செய்து குப்ர் பட்டம் வழங்க முடியாது.
எனவே, காபிர், முஷ்ரிக், முனாபிக், முப்ததிஃ… என்றெல்லாம் பத்வா கொடுப்பது அனைவரும் கையிலெடுக்கும் சாதாரண விடயமல்ல. இது நின்று நிதானித்து தீர்க்கமான பார்வையுடன் பல நிபந்தனைகளைக் கடந்து எடுக்கப்பட வேண்டிய முடிவாகும். அதையும் அதற்குத் தகுதியானவர்கள் செய்வார்கள். நாம் சத்தியத்தின் பக்கம் அழைப்பவர்களாக இருப்போம். தீர்ப்புக் கூறுவதை அதற்கே உரியவர்களிடம் விட்டு விடுவோம். தாயிகளாக இருப்போம். மாறாக காழிகளாக, முப்திகளாக செயற்படாமல் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.
தெரிந்து கொண்டு செய்யும் போது அந்தக் குற்றத்தின் வீரியம் கூடுகின்றது. இவர் அல்லாஹ்வின் ஸிபத்தைத் தெரிந்து கொண்டு எதையும் மறுக்கவில்லை. அந்த ஸிபத்தைப் பூரணமாக விளங்காமல் இருந்துள்ளார். அத்துடன் அவர் அல்லாஹ்வின்மீதுள்ள அச்சத்தால் தான் பேசுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை முழுமையாகப் புரியாமல் கூட பேசியிருக்கலாம்.
இவரின் இந்தச் செயலை விமர்சன ரீதியில் பார்த்தால் அவர் எரித்து சாம்பலை தண்ணீரிலும் காற்றிலும் கலந்து விட்டால் அல்லாஹ்வால் தன்னை எழுப்ப முடியாது என நம்பியுள்ளார். இப்படி அல்லாஹ்வை நம்பியவர் முஸ்லிமாக இருக்க முடியாது என்று கூற முடியும். ஆனால், அவரது எண்ணம் என்ன என்பது எமக்குத் தெளிவாகத் தெரியாமல் இந்த சொல்லுக்கு இதுதான் அர்த்தம். இந்தக் கூற்றுக்கு இதுதான் அர்த்தம் என நாமாக தப்ஸீர் எடுத்து தஃவீல் செய்து குப்ர் பட்டம் வழங்க முடியாது.
                                                                    அஷ்சேஹ்  S.H.M. இஸ்மாயில் ஸலபி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget